Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘ மு.க.ஸ்டாலினை வாசன் சந்தித்தபோது நடந்தது என்ன?' - த.மா.கா ஞானதேசிகன் நேர்காணல்

கில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும், 1996-ல் தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவருமான மறைந்த ஜி.கே. மூப்பனாருக்கு நெருக்கமாக இருந்தவர்....

மூப்பனாரின் புதல்வரும்,  மத்திய கப்பல் துறை முன்னாள் அமைச்சருமான ஜி.கே. வாசன் தலைமையில் மீண்டும் தொடங்கப்பட்ட த.மா.கா-வின் துணைத் தலைவராக பதவி வகித்து வரும் B.S.ஞானதேசிகனிடம்  விகடன் இணைய இதழுக்காக கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்..

"திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், கரூர் ஆகிய தொகுதிகளில் த.மா.கா போட்டியிடாது என்று ஏற்கெனவே அறிவித்துள்ளீர்கள்? உள்ளாட்சித் தேர்தலில் த.மா.கா-வின் வியூகம் என்ன?"

"3 தொகுதிகளில் போட்டியிட மாட்டோம் என்று எங்கள் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மனு அளிக்கலாம் என ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதன்படி, கட்சியினரும் அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், அதற்குள் உயர் நீதிமன்ற தடை வந்தது. உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் எப்போது நடைபெற்றாலும் த.மா.கா. போட்டியிடும். அதில் எந்த மாற்றமும் இல்லை".

"உள்ளாட்சித் தேர்தலில் த.மா.கா, வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா?"

"தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் த.மா.கா. தனித்துப் போட்டியிடும் என்று, ஏற்கெனவே ஜி.கே. வாசன் அறிவித்து விட்டாரே !".

"தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினை, ஜி.கே. வாசன் சந்தித்தது ஏன்? அப்போது கூட்டணி குறித்து ஏதும் பேசப்பட்டதா?"

"மு.க.ஸ்டாலினை வாசன் சந்தித்தது மரியாதை நிமித்தமானது. இதுபோன்ற சந்திப்பின்போது, வேறுசில விஷயங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். சந்திப்பு குறித்து இரு தலைவர்களுமே மகிழ்ச்சி தெரிவித்தனர். கூட்டணி குறித்து பேசப்பட்டதற்கான வாய்ப்புகள் இல்லை".

"தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், முதல்வரின் துறை பொறுப்புகள், ஓ.பி.எஸ்-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், மாநில அரசின் செயல்பாடு எப்படி உள்ளது?"

"பொதுவாகவே ஒரு முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், பல்வேறு நிர்வாக முடிவுகள் எடுப்பது தாமதமாகத்தான் செய்யும். எனினும் அரசின் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஜி.எஸ்.டி, உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல் போன்ற நடவடிக்கைகளில் மாநில அரசு இணைந்துள்ளது".

"முதல்வர் மருத்துவமனையில் உள்ளபோது, ஜி.எஸ்.டி போன்ற விஷயங்களில் மாநில அரசுக்கு மத்திய அரசின் நெருக்குதல் உள்ளதாகக் கருதுகிறீர்களா?"

"அப்படி நான் கருதவில்லை. மத்திய அரசு, மாநில அரசுகளை நெருக்குதல் மூலம் பணிய வைக்கும் காலம் எல்லாம் இப்போது இல்லை. மத்திய பா.ஜ.க அரசைப் பொறுத்தவரை, அ.தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர்களின் தயவு அவர்களுக்கு அவசியம். மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, மத்திய அரசு மிரட்டி பணிய வைப்பது என்பது சாத்தியமில்லாதது". 

"தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சு.திருநாவுக்கரசர்  பொறுப்பேற்றுள்ளார். அவரது செயல்பாடு குறித்து..?"

"திருநாவுக்கரசரைப் பொறுத்தவரை, அவர் அ.தி.மு.க-வில் அமைச்சராக இருந்த காலத்திலேயே எனக்கு நன்றாகத் தெரியும்.  என்னுடைய நல்ல நண்பர்.  தவிர, சட்டக்கல்லூரியில் எனது ஜுனியர். காங்கிரஸ் கட்சியில் அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் செயல்படுகிறார் ".

"ஜி.கே. மூப்பனார் ஏற்கெனவே தொடங்கிய த.மா.கா., பின்னர் தாய்க் கட்சியான காங்கிரசுடன் இணைந்தது. மீண்டும் அதுபோன்று, காங்கிரஸ் கட்சியுடன் த.மா.கா இணையும் வாய்ப்பு உள்ளதா?"

"நாங்கள் மட்டுமல்ல; காங்கிரஸில் இருந்து பிரிந்துசென்று, தனிக்கட்சி தொடங்கிய பலரும் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்த வரலாறு ஏற்கெனவே உண்டு. குமரி அனந்தன், பா.ராமச்சந்திரன் என பலரைக் குறிப்பிடலாம். அப்போது இருந்த காலகட்டம் மாதிரியே மீண்டும் ஏற்படும் என்று இப்போது கூறி விடமுடியாது. அன்றைக்கு இருந்த சூழ்நிலை அப்படி. மேலும், காங்கிரஸ் கட்சியுடன் இணைவோமா என்பது குறித்து முடிவு எடுக்கும் நிலைப்பாடு என்னுடையதல்ல. த.மா.கா.-வைப் பொறுத்தவரை செயற்குழு, பொதுக்குழு உள்ளது. எந்த முடிவானாலும், அவை கூட்டப்பட்டே எடுக்கப்படும்".

"மத்தியில் பா.ஜ.க அரசின் 2 ஆண்டுகால செயல்பாடு பற்றி...?"

"காங்கிரஸ் ஆட்சியின்போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் பெயரை மட்டுமே மாற்றிக் கொண்டு, தற்போதைய மத்திய அரசு தாங்கள் கொண்டுவந்த திட்டம் போன்று செயல்படுத்துகிறது.  இப்போது நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்களுக்கு காங்கிரஸ் அரசே அடித்தளம் அமைத்தது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், தேசிய நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், ஜி.எஸ்.டி, ஆதார் அட்டை திட்டம் எல்லாமே காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டுவரப்பட்டதுதான். 

 பா.ஜ.க அரசைப் பொறுத்தவரை அதிகமாகப் பேசுகிறார்கள். விளம்பரத்துக்கு அதிகம் செலவிடுகிறார்களே தவிர, செயல்பாடு மிகக் குறைவு. அமைச்சரவைக் கூட்டு தத்துவப்படி, 'எல்லோரும் பேச வேண்டும். ஒரே கருத்தை பேச வேண்டும்' என்பதுதான். உதாரணத்துக்கு, பொது சிவில் சட்டம் குறித்து வெங்கய்ய நாயுடு ஒரு கருத்தை தெரிவிக்கிறார். இதே பிரச்னையில்,  பா.ஜ.க-வின் மற்ற தலைவர்கள் எல்லாம் அதற்கு மாறான வேறு கருத்தை தெரிவிக்கிறார்கள். மக்கள் மத்தியில் ஏதாவது பிரச்னை உருவானால், 'அது, பா.ஜ.க கருத்து அல்ல; அவர்களின் தனிப்பட்ட கருத்து' என்று கூறி மக்களை குழப்புகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் காக்கிறார் ".

"நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி-தே.மு.தி.க.வுடன் இணைந்து போட்டியிட்டீர்கள். 3 தொகுதி தேர்தல் புறக்கணிப்பு, உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற பயணத்தில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சியின் நிலை....?"

"நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. இப்போதே அதுபற்றிக் கூறத் தேவையில்லை. அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது".

"த.மா.கா-வின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து..?"

"சென்னையில் நேற்றுகூட கட்சியின் துணை அமைப்புகளின்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகம் முழுவதும் கட்சியின் வளர்ச்சிக்காக, குறிப்பிட்ட இடைவெளியில், பல்வேறு விஷயங்கள் குறித்த கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மகளிர் அணி, இலக்கிய அணி, இளைஞர் அணி என பல்வேறு அணியினர் தமிழகம் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய கட்சிப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. கட்சியை மேலும் வளர்க்கத் தேவையான திட்டங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே த.மா.கா-வைப் பொறுத்தவரை, இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது".

"சமுதாய வளர்ச்சிக்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு உங்களது கருத்து என்ன?"

"எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி அல்லது சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, அரசியலில் முக்கியப் பங்கு வகிப்போர், மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் சற்றே கவனம் செலுத்தி, பிரச்னைகளுக்கு, தங்களின் அதிகார எல்லைக்கு உட்பட்டு, இயன்றவரை தீர்வு காண, முனைப்புடன் செயல்பட்டாலே, நாட்டில் முன்னேற்றம் தானாக ஏற்படும் என்பது எனது கருத்து. அதுவே, ஐயா ஜி.கே. மூப்பனாரிடம் நான் கற்றுக் கொண்ட அரசியல். அவரது வழியில் த.மா.கா. தொடர்ந்து நடைபோடுகிறது" என்று தெரிவித்து நிறைவு செய்தார் ஞானதேசிகன்.

த.மா.கா-வின் சிறப்பான எதிர்காலத்துக்கு நாமும் வாழ்த்துவோம்!

- சி. வெங்கட சேது.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close