Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தலைவர் பொறுப்புக்கு ராகுல் தயார்...!' - க்ரீன் சிக்னல் கொடுத்ததா காங்கிரஸ் காரியக் கமிட்டி?

காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையேற்காமல் நடைபெற்றுள்ளது. கட்சியின் துணைத் தலைவரும், சோனியா காந்தியின் புதல்வருமான ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கடைசி நேரத்தில் உடல்நலக்குறைவால் சோனியா காந்தியால் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெற்ற பேரணியின்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பேரணியை பாதியிலேயே ரத்துசெய்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்கள் ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் வீடு திரும்பினார்.

இந்த நிலையில், டெல்லியில் இன்று சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், துணைத் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே. ஆண்டனி, ப.சிதம்பரம் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இன்றைய கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்படலாம் என்றும், அதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்படலாம் என்று பரவலாக மூத்த தலைவர்கள் தெரிவித்திருந்தனர். காரியக் கமிட்டி கூட்டத்தில் ராகுல்காந்தியை தலைவராக நியமித்து, சோனியா காந்தியே அதனை அறிவிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரால் பங்கேற்க இயலாமல் போனது

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாரதிய ஜனதாவும், காங்கிரசும் செயல்பட்டு வருகின்றன. இதற்கு ஏதுவாக உத்தரப்பிரதேசத்தில் தற்போது ஆட்சியில் உள்ள சமாஜ்வாடி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பூசல் அம்மாநில அரசியலில் இப்போதே தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ரத யாத்திரையை ஏற்கெனவே தொடங்கி உள்ளது.

இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இக்கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய ராகுல், பா.ஜ.க-வையும், பிரதமர் மோடியையும் கடுமையாக தாக்கிப் பேசினார். "மத்தியில் பா.ஜ.க. தற்போது அதிகாரத்தில் உள்ள காலம், இருள்சூழ்ந்த நீண்ட வரலாற்றை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க தெரிவிக்கும் கருத்துகளை மறுப்போர், அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள், நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களை பா.ஜ.க ஆளும் மாநில அரசுகள் காற்றில் பறக்க விட்டுள்ளன. பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கான ஒரு பதவி ஒரு ஓய்வூதிய பிரச்னை, இந்திய எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறலை கையாண்ட விதம், ஜம்மு-காஷ்மீர் பதற்றம் போன்ற பிரச்னைகளை மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியாகக் கையாளத் தவறி விட்டது" என்று ராகுல் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் உள்கட்சித் தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவெடிப்பதற்காக இக்கூட்டம் நடைபெற்றது. வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் காங்கிரஸ் உள்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  ராகுல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தவிர, வரும் 16-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்தும், இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக மூத்த தலைவர் ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பிலும இருந்த நிலையில், அவர் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்பதற்கு இன்னும் ஓராண்டு காலம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த ஒரு ஆண்டுக்கு சோனியாவே நீடிக்கும் வகையில், காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. எனினும் ராகுல், கட்சித் தலைவர் பதவியை ஏற்க வேண்டுமானால், அது சோனியாவும், ராகுலும் சேர்ந்து முடிவெடுத்தால் போதுமானது என்பதே காங்கிரஸ் முக்கியத் தலைவர்களின் கருத்தாக உள்ளது.

எப்படியானாலும், காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பது உறுதி!

-சி. வெங்கட சேது

எடிட்டர் சாய்ஸ்

MUST READ