Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வைகோ மீதான பிரேமலதா கோபத்துக்கு இது தான் காரணமா...?

க்கள் நலக் கூட்டணியில் இருந்து விஜயகாந்த் வெளியேறி ரொம்ப நாளாகி விட்டது. ஆனாலும், அந்த கூட்டணிக்குள் அமுங்கி இருந்த முட்டல் மோதல்கள் இப்போது வெளிவரத் தொடங்கிவிட்டது. வைகோவை கண்டித்து பிரேமலதா பேசியது சரியா? தவறா? என்று அந்தக் கூட்டணித் தலைவர்களுக்கு இடையே பட்டிமன்றம் நடக்கிறது.

மக்கள் நலக் கூட்டு இயக்கத்தை முதல் முதலில் முன்மொழிந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன். இந்தக் கூட்டு இயக்கத்தில் மார்க்ஸிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த நான்கு கட்சிகளின் தலைவர்கள்தான் அடிக்கடி சந்தித்துப் பேசி, 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக மக்கள் நலக்கூட்டு இயக்கத்தை, ‘மக்கள் நலக்கூட்டணி’ என்று மாற்றினர்

அப்போது, சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க எந்தப் பக்கம் போகும் என்று பெரிய விவாதமே நடந்து கொண்டிருந்தது. தி.மு.க-வுடன் கூட்டுச் சேருமா? தனித்து நிற்குமா? என்பதெல்லாம் முடிவாகாத காலம் அது. அந்தச் சூழ்நிலையில், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் வைகோ-விடம் சொல்ல அவரும் இந்த கூட்டணியில் விஜயகாந்த்தைச் சேர்க்க ஓகே சொல்லிவிட்டார். ‘தே.மு.தி.க சேர்ந்தால் மக்கள் நலக்கூட்டணி வெற்றி உறுதி’ என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அதன் அடிப்படையில் விஜயகாந்த்-ஐ சந்தித்தனர்.

அவரும் மக்கள் நலக்கூட்டணிக்கு வரச்  சம்மதம் தெரிவித்தார். அதோடு, ‘முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும்’ என்று ஒரு கண்டிஷன் போட்டார். இதுபற்றி மறுபடியும் மக்கள் நலக்கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசினர். அப்போதுதான், முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் என்றும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ என்றும் முடிவானது. இதை அதிகாரபூர்வமாகவும் அறிவித்தனர். பின்னர், அவர்களுக்கு இடையே தொகுதிப் பங்கீடு குறித்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியது. இந்நிலையில், அ.தி.மு.க கைவிரித்து விட்டதால் த.மா.கா, மக்கள் நலக்கூட்டணியோடு சேர்ந்தது. அதன் பின்னர், இவர்களின் தேர்தல் பிரசார மேடைகளில், ‘மக்கள் நலக்கூட்டணி-தே.மு.தி.க-த.மா.கா அணி’ என்றுதான் விளம்பரங்கள் செய்தனர்

சட்டமன்றத் தேர்தலில் இந்த அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. அதோடு இந்த கூட்டணி முடிந்துவிட்டது என்று பேச்சுக்கள் எழுந்தது. ஆனால், இந்த கூட்டணி தொடர வேண்டும் என்று திருமாவளவன் பகிரங்கமாகக் கேட்டுக் கொண்டார். ஆனால், அரசியல் நிகழ்வுகள் அதுபோல இல்லை. ஆகஸ்ட் 25-ம் தேதி விஜயகாந்த் பிறந்தநாள் அன்று அவரது வீட்டுக்கே சென்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடினர். சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய பல்வேறு நிகழ்வுகளில் தே.மு.தி.க, த.மா.கா கட்சிகள், மக்கள் நலக்கூட்டணியில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியே இருந்தன. உள்ளாட்சி தேர்தல் பேச்சுவார்த்தைகளிலும் தி.மு.க-வை நோக்கி த.மா.கா போனது. தே.மு.தி.க தன் நிலைப்பாட்டை வெளிப்படையாகச் சொல்லாமல் இருந்தது. பின்னர், தனியாக வேட்பாளர்களை அறிவித்தது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் தங்களது தொகுதி பங்கீடுகளை இறுதி செய்து அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்பால் உள்ளாட்சித் தேர்தல்  தள்ளிவைக்கப்பட்டு விட்டது. காவிரிப் பிரச்னையில் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள்தான் டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை அக்போடர் 22-ம் தேதி சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். விஜயகாந்த், ஜி.கே.வாசன் கட்சிகளின் பிரதிநிதிகள் யாரும் இந்தச் சந்திப்பில் இடம்பெற வில்லை.  

சமீபத்தில் வைகோ அளித்த பேட்டி ஒன்றில், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் தி.மு.கவோடு போய் இருக்கலாமே என்று பலர் என்னிடம் கேட்டார்கள். விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக நீங்கள் சொன்னது தவறு என்றும் அதனால் உங்கள் இமேஜ் போய்விட்டது என்று சொல்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால் எந்த சூழ்நிலையில் அந்த முடிவு எடுக்கபட்டது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் விஜயகாந்த் வந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும் என்றார்கள். அப்போது நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, முதல்வர் வேட்பாளாராக அறிவித்தால்தான் கூட்டணிக்கு வருவோம் என்றார். நான் யோசித்தேன். நாம் வெற்றி பெறவேண்டும் என்றால் இதுதான் முடிவு என்று சரி என்று சொன்னேன்’’ என்றார்

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பிரேமலதா விஜயகாந்த் “தே.மு.தி.க-வை தேடி வைகோ வந்தாரே தவிர நாங்கள் போகவில்லை. அவர் நேரத்துக்கு ஒன்று பேசுவார். அவர் பேசியது குறித்து அவர்தான் விளக்கம் சொல்ல வேண்டும்” என்று சொல்லி இருந்தார். இதற்கு பதில் அளித்த வைகோ “நான் கொடுத்த பேட்டியை பிரேமலதா சரியாகப் புரிந்து கொள்ளவில்லை” என்று  மறுமொழி  கொடுத்துள்ளார். இந்த நிலையில் வைகோவின் பேட்டி குறித்து மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் வட்டாரத்தில் பேசியபோது, ‘‘விஜயகாந்த் மீது வைகோ உள்பட எங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்கள். சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் தே.மு.தி.க-வும் த.மா.கா-வும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்கள். ஆனால், நாங்கள் 4 கட்சிகளும்தான் மக்கள் நலக்கூட்டணியை நடத்தி வருகிறோம். நாங்கள்தான் இந்த அணியின் நிரந்தர உறுப்பினர்கள். இந்தக் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; போகலாம். வைகோ பேசியவுடன் நாங்கள் எங்கள்  ஆட்சேபனைகளைத் தெரிவித்து விட்டோம். அதற்கு பிறகும் தே.மு.தி.க-வுக்கு இந்தக் கோபம் தேவையற்றது’’ என்கிறார்கள். ஆனால் தே.மு.தி.க-வில் வைகோவுக்கு எதிராக பதிலடி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விஜயகாந்த் வெளியேறி ரொம்ப நாள் ஆகிவிட்டது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close