Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்டாலினும், அ.தி.மு.க. பேச்சாளர் படையும்..! கலகலக்கும் அரவக்குறிச்சி !

 

கரூர் : இடைத்தேர்தல் பரபரப்பு உச்சத்தை எட்டத்துவங்கியிருக்கிறது. தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று அரவக்குறிச்சியில் பிரசாரத்தைத் துவக்க உள்ள நிலையில், அதற்கு ஈடு கொடுக்க அ.தி.மு.க. பேச்சாளர் படையை களம் இறக்கி விடப்பட... அரவக்குறிச்சி தொகுதி கலகலக்கிறது.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கும், புதுவையில் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்கள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் உடல்நலமின்றி இருப்பதால் இருவரும் பிரசாரத்துக்கு வருவதற்கான வாய்ப்பில்லை. இதையடுத்து, அ.தி.மு.க. சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் லோக்சபா துணைத் தலைவர் தம்பித்துரை தலைமையில் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, எம்.ஆர்.விஜய பாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் நேரு தலைமையில் தி.மு.க.வினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா கடந்த இரு தினங்கள் அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தார்.

இந்நிலையில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார். அ.தி.மு.க.வில் உட்கட்சியில் உள்ள மோதல் போக்கு உள்ளிட்ட காரணங்களால் ஏற்கெனவே அ.தி.மு.க. சற்று சோர்ந்திருக்கும் நிலையில், ஸ்டாலின் தனது பிரசாரத்தில் மணல் கொள்ளை பிரச்னை, அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி மீதான சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினால் அது பெரும் பின்னடைவாக இருக்கும் என அ.தி.மு.க.வினர் கருதுகின்றனர்.

இதையடுத்து இதை ஈடு கொடுக்க, அவரது குற்றச்சாட்டுகள் எடுபடாமல் போக வைக்கவும் அ.தி.மு.க சார்பாக நாஞ்சில் சம்பத்,சி.ஆர்.சரஸ்வதி, ராமராஜன், குண்டு கல்யாணம், சிங்கமுத்து, எடப்பாடி பழனிச்சாமி என்று ஒட்டுமொத்த ஸ்டார் பேச்சாளர்கள் பட்டாளத்தையும் களத்தில் இறக்கவிட்டிருக்கிறார்  செந்தில்பாலாஜி.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அ.தி.மு.க.வினர்,  "இந்தமுறை எப்படியும் ஜெயிச்சுடனும்ங்கிற வெறியில இருக்கார் செந்தில்பாலாஜி. அப்போதான் அதளபாதாலத்தில் கிடக்கும் தனது அரசியல் வாழ்க்கை சீராகும் என்று நினைக்கிறார். ஆனால், இன்னொருபக்கம் இவர் எம்.எல்.ஏ ஆகிவிட்டால், தனது மாவட்டச் செயலாளர் பொறுப்பு மற்றும் தான் வகிக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பொறுப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்று நினைக்கும் விஜயபாஸ்கர், செந்தில்பாலாஜிக்கு எதிராக மறைமுகமாக உள்ளடி வேலைகள் பார்த்து வருகிறார். மறுபுறம் முன்பகை காரணமாக தம்பிதுரையும் பெரிய அளவில் ஒத்துழைக்க முடியாமல் போக.. இதை எல்லாம் மீறி ஜெயிக்கணும்னு களத்துல இறங்கி இருக்கார் செந்தில்பாலாஜி.

இந்நிலையில் ஸ்டாலினின் பிரசாரம் எந்த வகையிலும் தனக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இன்று ஒரே நாளில் பேச்சாளர்கள் படையை இறக்கி விட்டுள்ளார். ஸ்டாலின் பிரசாரமும், பேச்சும் எடுபடாத அளவுக்கு பிரசாரம் செய்ய, நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, ராமராஜன், குண்டு கல்யாணம், சிங்கமுத்து உள்ளிட்ட பேச்சாளர்கள் மற்றும் அமைச்சர் பட்டாளத்தை  களத்தில் இறக்கி இருக்கிறார் .

செந்தில்பாலாஜிக்கு எதிர்ப்பு அதிகமா இருக்கும் பகுதிகளில்தான் முதலில் ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்கி, அடுத்தடுத்த பகுதிகளுக்கு போகிறார். அவரது பேச்சு மக்களிடம் எடுபடாத அளவுக்கு அவர் பேசி போனபிறகு, நாஞ்சில் சம்பத், ராமராஜன், சி.ஆர்.சரஸ்வதி என்று மூவரையும் அதே பகுதியில் பிரசாரம் செய்யவதே திட்டம்," என்றனர்.

இடைத்தேர்தல் சூடு பிடிக்கத்துவங்கி விட்டது.

- துரை.வேம்பையன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ