Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பூ மழை கொட்டுவதும், ஆரத்தி தட்டு சுற்றுவதும் இப்படித்தான்... புதுவை தேர்தல் கலாட்டா !

புதுச்சேரி: புதுவை நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி எங்கு சென்றாலும் அவருக்கு பூ மழை பொழிகிறது. அடுத்தடுத்த வீடுகளில் ஆரத்தி எடுக்கிறார்கள். அவருக்கு அத்தனை செல்வாக்கா என கேட்கிறீர்களா? இந்த கட்டுரையை படியுங்கள்.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் என தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தாலும், புதுவை மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கான தேர்தல் அரசியல் முக்கியத்துவம் கொண்டதாக மாறியுள்ளது. புதுவையின் முதல்வராக இருக்கும் நாராயணசாமி, அந்த பதவில் தொடர முடியுமா?, இல்லையா? என்பதை தீர்மானிக்கிற தேர்தலாக இது மாறிப்போயுள்ளது.

இந்த முக்கியத்துவத்துக்கு ஏற்ப பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத தொகுதியாகவும் நெல்லித்தோப்பு தொகுதி இருந்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே காரில் இருந்த தேசிய கொடியை கழற்றி வைத்து விட்டு பிரச்சாரத்தை துவங்கி விட்டார் நாராயணசாமி.

தான் முதல்வர் பதவியில் தொடரலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் என்பதால், யார் வந்தாலும் வராவிட்டாலும் காலை 6.30 மணிக்கே பிரச்சாரத்தை துவக்கி விடுகிறார் நாராயணசாமி. நாராயணசாமி செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு பயங்கர வரவேற்பு. ஆரத்தி எடுப்பதும், மலர் தூவி வரவேற்பதும் என அவருக்கு கொடுக்கும் வரவேற்புகள் ஆச்சரியமூட்டின.

இத்தனைக்கும் நாராயணசாமி இந்த தொகுதியைச் சேர்ந்தவர் அல்ல. பின்னர் எப்படி இவருக்கு இவ்வளவு ஆதரவு என விசாரித்தோம். பூ, தேங்காய், பழம், சால்வைனு வரவேற்புக்கே ஏகப்பட்ட செலவு செய்யறீங்களே என அப்பகுதி மக்கள் சிலரிடம் கேட்டால், "நாங்க எதுவும் செலவு பண்றதில்லை. இது முழுக்க முழுக்க அவங்களே செலவு செய்யறது தான்' என அதிர்ச்சி கொடுத்தனர்.

இது தொடர்பாக மேலும் விசாரித்தோம். ஒரு பகுதியில் பிரச்சாரத்துக்கு செல்கிறார் என்றால் அதற்கு முந்தைய தினமே 10-ல் 4 வீடுகளுக்கு தேங்காய், வாழைப்பழம், கற்பூரம் உள்ளிட்ட பொருட்களுடன் ஒரு எவர்சில்வர் தட்டை கொடுத்து விடுகிறார்கள். இது ஆரத்தி எடுப்பதற்காக. ஆரத்தி தட்டு தராத வீடுகளுக்கு இரண்டு சால்வைகளை இவர்களே கொடுத்து நாராயணசாமிக்கும், ஜான்குமாருக்கும் போடச்சொல்கிறார்கள்.

இது தவிர சாமந்தி பூக்களை மூட்டை மூட்டையாக வாங்கி, அதை பிளாஸ்டிக் பைகளில் போட்டு பிரச்சாரத்துக்கு செல்லும் தெருக்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கொடுத்த விடுகிறார்கள். நாராயணசாமி வாக்கு சேகரிக்க வரும்போது மாடியில் இருந்து அவர்கள் மீது பூவைத் தூவச் சொல்கிறார்கள். ஆரத்தி எடுப்பதில் துவங்கி பூ மழை பொழிவது வரை அனைத்துக்கும் பேட்டாவும் கொடுக்கப்படுகிறதாம்.

இவை எல்லாவற்றுக்கும் காரணம் ஜான் குமார் தான் என்கிறார்கள். ஜான் குமார் தனது பலத்தை காட்ட இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்வதாக சொல்லப்படுகிறது.

எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு !

- ஜெ.முருகன்,

படங்கள்: அ.குரூஸ்தனம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ