Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமிஷன் வாங்கி அனுமதி கொடுத்தவர்கள், மீத்தேன் தடைக்கு உரிமை கொண்டாடுவதா? தி.மு.க.வுக்கு எதிராக சீறிய சீமான்

கரூர் : "மீத்தேன் திட்டத்தை அமல்படுத்த கமிஷன் வாங்கி, அனுமதி கொடுத்தது தி.மு.க.ஆனால் இப்போது மீத்தேன் தடைக்கு கலைஞரும், அவரின் மகனும் உரிமை கொண்டாடுகிறார்கள்," என சீமான் பேசினார்.

இன்னும் சில தினங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரவக்குறிச்சி தேர்தல் களத்தில் சூடு பறக்கிறது. ஸ்டாலின், பிரேமலதா, ஜி.கே.மணி, அமைச்சர்கள் வரிசையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பிரச்சாரம் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அரவிந்த் குருசாமிக்கு வாக்கு சேகரித்து அவர் பேசினார்.

 "ஆள்கிற கட்சி, ஆண்ட கட்சின்னு தமிழ்நாட்டை கூறு போட்டு வித்த காசை கொண்டாந்து இறக்கி,தேர்தல்ல ஓட்டை வாங்குறாங்க. நீங்களும் அதை விக்கிறீங்க. அது எவ்வளவு கேவலம். மாற்றம் என்பது வார்த்தை அல்ல. அது செயல். ஆத்துல தண்ணி இல்லைன்னு முன்பு பிரச்னை வந்துச்சு. இப்ப ஆறே இல்லைன்னு ஆயிட்டு. சோற திங்கலாம்,பாவிங்க ஆறுகளையே தின்னுட்டாங்க. தமிழ்நாட்டில் 32 ஆறுகள் செத்துப் போச்சு. ஆத்துல மணல் இல்லைன்னா,ஆறு செத்து போயிரும்.

தி.மு.க வேட்பாளர் கே.சி.பி மணல் அள்ளுறார்ன்னு சொல்றாங்க. அவர் வெறும் கையாள். முதலாளிகள் மேலிடத்தில் இருக்காங்க. கலைஞர் ஆட்சியில் இருந்தப்ப அவருக்கு இவர் கோடிகோடியா பங்கு கொடுத்தார். முதலமைச்சர் அம்மா இங்க பிரச்சாரத்திற்கு வந்தப்ப,'மணல் அள்ளினா கடுமையாக தண்டனை கிடைக்கும். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சி,கைது பண்ணுவோம்'ன்னாங்க. ஆனால்,மணல் அள்ளுறவங்களுக்கு எதிரா போராடுறவங்களை தான் கைது பண்றாங்க.

தமிழ்நாட்டில் ஏதாச்சும் வளர்ச்சி உண்டா?. எல்லாத்துலயும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கமிஷன் வாங்கிட்டு மாநிலத்தை கூறு போட்டு விற்கிறாங்க. கலைஞர் ஆட்சியிலும் மணல் அள்ளுறாங்க, இந்த அம்மா ஆட்சியிலும் மணல் கொள்ளை போகுது. ஆட்சி அதிகாரமே மணல் திருட்டை முன் நின்று நடத்துது. கடவுளே சரியில்லாதப்ப பூசாரியை குறை சொல்லி என்ன புண்ணியம்?!.

கீழடியில் 2500 வருஷதுக்கு முன்னாடி நம் முன்னோர்கள் வாழ்ந்த நாகரீக,வரலாற்று சின்னங்களை பாதுகாக்க இரண்டே இரண்டு ஏக்கர் நிலம் கேட்கிறான் அதை இந்த அம்மையாரால் வாங்கி தரமுடியவில்லை. ஆனால்,அதானிக்குழுமத்திற்கு நாலாயிரத்து ஐநூறு ஏக்கர் நிலங்களை சல்லிரேட்டுக்கு இந்த அரசு வாங்கி கொடுத்து,அமைச்சர்கள் பிழைக்க வழி பண்றாங்க. காரணம் கமிஷன்.

இரண்டு கட்சிகளும் கமிஷன் வாங்குறதுல ஒத்துமையா இருக்காங்க. காவிரியில தண்ணீர் பெற்று தர முடியாதவங்க,சாராய ஆலைகளை இரு தரப்பும் நடத்தி,தமிழனை குடிச்சுட்டு சாவுன்னு சொல்றாங்க. கலைஞர் ஆட்சியில் அந்தம்மாவுக்கு வேண்டியவங்க ஆலைகளில் இருந்து சாராயத்தை டாஸ்மாக்குல சப்ளை பண்றாங்க. இந்தம்மா ஆட்சியில் அவரோட ஆளுங்க நடத்துற ஆலையில இருந்து சாராயம் போவுது. அவங்ககுள்ள அப்படி ஒரு அன்டர்ஸ்டான்டிங். எல்லாம் கமிஷன்தான் காரணம். ஆனால்,வெளியில ஆளுங்கட்சி,எதிர்கட்சின்னு சண்டை. இப்படி நம்மளை முட்டாளாக்கி முட்டாளாக்கி ஐம்பது வருஷம் தமிழ்நாட்டை வித்து பிழைப்பு நடத்துது இரண்டு கட்சிகளும்.

டெல்டாவையே பாலைவனமாக்க பார்த்த மீத்தேன் திட்டத்திற்கு இப்போ தடை போட்டிருக்காங்க. உடனே,கலைஞரும், ஸ்டாலினும், 'நாங்க கொடுத்த அழுத்தத்தால்தான் மத்திய அரசு அதற்கு தடை விதிச்சுருக்கு'ன்னு கூச்சமே இல்லாம பொய் சொல்றாங்க. இருநூறு கோடி கமிஷன் வாங்கிட்டு,இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுத்து கையெழுத்து போட்டது அவங்கதான். இப்போ பிளேட்டை மாத்துறாங்க. தமிழன்னா எதையும் மறந்துடுவான்ங்கிற தைரியத்துலதான அப்படி பொய் சொல்றாங்க.  நம்மாழ்வார் சட்டை போடாத உடம்போடு ஊர் ஊரா போய்,தெரு தெருவா நின்னு பேசி மீத்தேன் தீமையை எதிர்த்து மக்களை திரட்டி போராடியதன் விளைவே,இப்போ அந்த திட்டத்திற்கு தடை கிடைச்சிருக்கு. இப்போ கலைஞரும், அவரின் மகனும் மீத்தேன் தடைக்கு உரிமை கொண்டாடுறாங்க.

இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சிகள்ல தமிழ்நாட்டுல கூடங்குளம் கொண்டு வர முடியுது, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க இடம் ஒதுக்க முடியுது. ஆனால்,எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர இடம் இல்லையாம்?. என்ன ஒரு மோசமா ஆட்சி," என பேசினார்.

சீமான் பேசி முடித்த பின்னர் அவசர அவசரமாக நாம் தமிழர் கொடி, பதாகைகள் எல்லாம் அகற்றப்பட்டு, தி.மு.க.வின் கொடி, ஸ்டாலின் படங்களோடு துவங்கியது ஸ்டாலின் கூட்டம்.


- துரை.வேம்பையன்,

படங்கள்: தே.தீட்ஷித்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close