Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூபாய் விவகாரம்: மத்திய அரசு பிடிவாதம்! எதிர்க்கட்சிகள் ஏமாற்றம்!

நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில், ரூபாய் நோட்டுகள் பிரச்னையை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக திட்டமிட்டு உள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், நாளை தொடங்கவிருக்கும் நிலையில், மத்திய அரசின் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், நாடு முழுவதும் மக்கள் ஏ.டி.எம்-களில் பணம் கிடைக்காமல் அவதிப்படும் பிரச்னையை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கவுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் நாடு முழுவதும் நீடித்து வரும் பணத் தட்டுப்பாடு, ஏ.டி.எம் மையங்கள் செயல்படாதது உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்ப முடிவு செய்துள்ளன.

மத்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளப்போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபூரில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற தனது அரசின் அறிவிப்பை சில அரசியல் கட்சிகள் குறைகூறி வருவதற்கு கண்டனம் தெரிவித்தார். தனது முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள சில சக்திகள், தனக்கு மிரட்டல் விடுத்தாலும், அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்கத் தயார் என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் கிளப்பும் எந்தப் பிரச்சினையானாலும் அதனை விவாதிக்கத் தயார் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் சில்லரை கிடைக்காமல் அவதிப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பணத்தட்டுப்பாடு என்பது, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களையும் விட்டுவைக்கவில்லை. தவிர, தலைநகர் டெல்லியில் மத்திய அரசு உயர் அதிகாரிகள், துறை செயலர்கள் அலுவலகம் அமைந்துள்ள நார்த் பிளாக், சவுத் பிளாக் கட்டடங்களில் அமைந்துள்ள ஏ.டி.எம். மையங்களிலும் இதே நிலைமைதான். பணம் நிரப்பி ஓரிரு மணி நேரத்தில் ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் தீர்ந்து விடுவதாகத் தெரிவிக்கின்றனர் அதிகாரிகள்.


பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் குறைந்தது 4 மணி நேரம் வரை காத்திருந்து, பணத்தைப் பெறும் நிலை உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மட்டுமல்லாது, முன்னாள் ராணுவத்தினருக்கான ஒரு பதவி ஒரு ஓய்வூதியம், ஜம்மு-காஷ்மீர் விவகாரம், காவிரிப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதுதொடர்பாக, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில், அவரது வீட்டில் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர்.

நாடாளுமன்றம் கூடுகிறது என்றாலே, வழக்கமான எதிர்க்கட்சிகளின் கூச்சல்-முழக்கங்கள், அவையை முற்றுகையிடுதல்,. நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்றவை இயல்பாகவே நடைபெறும். தற்போது, அதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதால், வழக்கம்போல் அவை கூடியதும் எதிர்க்கட்சிகளின் அமளியை சொல்லவே தேவையில்லை. நாடாளுமன்றம் வரை சென்றாலும், பணத் தட்டுப்பாடு பிரச்னையில் மக்கள் படும் அவதி அடுத்த ஒரு மாதத்திற்கு தொடர்கதை என்பது தான் நிதர்சனம்.

-சி. வெங்கட சேது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close