Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்கிறதா விஜய் மக்கள் இயக்கம்?

 


கரூர் : தமிழகத்தில் நடக்கும் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு விஜய் மக்கள் இயக்கம் ரகசிய ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு ரஜினி, கமல் உள்ளிட்டோர் எந்த குறையும் சொல்லாமல், வெகுவாக பாராட்டியிருந்த நிலையில், 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை ஆதரித்த அதே நேரத்தில், மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை வெளிப்படையாக சொன்ன நடிகர் விஜய்யின் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தனி இயக்கம், தனி கொடி என கிட்டத்தட்ட அரசியல் கட்சிக்கான அடையாளங்களோடு இயங்கி வரும் விஜய் மக்கள் இயக்கம், தேர்தலின்போது கட்சிக்கு ஆதரவு கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. ஆதரவு கொடுத்து, விஜய் ரசிகர்கள் தி.மு.க.வுக்கு வேலையும் பார்த்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க.வை ஆதரிக்கவும், புதுவை மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதியில் அ.தி.மு.க.வையும் ஆதரிக்கவும் முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இயக்க கொடி, பெயரை பயன்படுத்தாமல் ரகசிய ஆதரவாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர்.

விஜய் தனது 35-வது பிறந்தநாள் விழாவின்போது, தனது மன்றதுக்குக்கென்று தனிக்கொடி வெளியிட்டார். தொடர்ந்து அடுத்த வருடமே,விஜய் நற்பணி இயக்கம் என்பதை விஜய் மக்கள் இயக்கம் என்று மாற்றி, அரசியலுக்கு நுழைய அடிப்போட்டார். இதற்கு பின்னே இருந்து இஞ்ச் பை இன்சாக காய் நகர்த்தியது அவரது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால்,விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பதை விரும்பாத ஜெ, அவரது படங்கள் வெளிவருவதற்கு ஏகப்பட்ட முட்டுக்கட்டை போட்டதாக சொல்லப்பட்டது. தலைவா, துப்பாக்கி, கத்தி போன்ற படங்களுக்கு எழுந்த இமாலய பிரச்னைகளும் அதனால்தான் என்பதாக சொலப்பட்டது. தலைவா பட பிரச்னையை தீர்க்க அப்போது கொடநாட்டில் தங்கி இருந்த முதல்வரை பார்க்கப் போய், கேட்டிலேயே திருப்பி அனுப்பப்பட்ட அவமான நிலையையும் சந்தித்தார் விஜய்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது,'விருப்பம்போல ஓட்டுபோடலாம். யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம்' என்று அறிக்கை விட்டார். ஆனால், மறைமுகமாக அ.தி.மு.கவை காலி பண்ணும்விதமாக தி.மு.க கூட்டணிக்கு வேலை பார்க்க சொல்லி சிக்னல் கொடுத்தார் விஜய். இதனால்,கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒருசில மாவட்ட நிர்வாகிகளை தவிர, இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற ஓப்பன் பிரசாரமே செய்தனர்.

இந்நிலையில்தான்,வரும் 19-ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கு மறுதேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிலைப்பாடு குறித்து முக்கிய நிர்வாகிகளிடம் பேசினோம். "தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொகுதிகளிலும் மக்கள் இயக்கம் மறைமுகமாக தி.மு.கவை ஆதரிக்கிறது. நெல்லித்தோப்பில் அ.தி.மு.க கூட்டணியை ஆதரிக்கிறது" என்றனர் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்.

இதுசம்மந்தமாக நம்மிடம் பேசிய தேர்தல் நடக்கும் தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "இப்போ விஜய் ஒவ்வொரு மாவட்டத் தலைவர், இளைஞரணித் தலைவர், மாவட்ட இதர பிரிவு நிர்வாகிகள், நகர,ஒன்றிய நிர்வாகிகளை  சென்னைக்கு அழைத்து தன்னோடு ஸ்டில் எடுத்து வருகிறார். அவர் இந்த தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என நேரடியாக சொல்லவில்லை. இயல்பாகவே விஜய் ரசிகர்கள் தி.மு.க. அனுதாபிகளாக இருப்பார்கள். விஜய் மக்கள் இயக்க தூத்துக்குடி மாவட்டத் தலைவரான பில்லா ஜெகன், தி.மு.கவிலும் அந்த மாவட்டத்தில் இளைஞரணியில் மாவட்ட பொறுப்பில் இருக்கிறார். நடுவில் அ.தி.மு.க. இளைய தளபதிக்கு நெருக்கடி கொடுத்ததால்,2011ல் அ.தி.மு.கவை ஆதரிக்க வேண்டிய சூழல். ஆனால்,கடந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியை ஆதரிக்க சொல்லி சிக்னல் கிடைத்ததால்,அந்த கூட்டணி வெற்றிக்கு வெளிப்படையாக தமிழகம் முழுக்க பிரசாரமே போனோம்.

ஆனால்,இப்போ சூழல் கொஞ்சம் மோசமாக இருப்பதால், முதல்வர் வேறு மருத்துவமனையில் இருப்பதால், எங்க இளையதளபதி 'நீங்க என்ன நினைக்கிறீர்களோ, அதை செய்யுங்கள். ஆனால்,என் பெயரையோ, மன்ற பெயரையோ, கொடியையோ பயன்படுத்தகூடாது'னு  சொல்லிட்டார்.
அதனால்,கரூர் மாவட்ட தலைவர் மதி, தஞ்சை மாவட்டத் தலைவர் விஜய்சரவணன், மதுரை மாவட்டத் தலைவர் தங்கபாண்டியன் ஆகியோர் பேசி, அந்தந்த தொகுதி தி.மு.க வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்கும்படி மக்கள் இயக்க மாவட்ட, நகர, ஒன்றிய,கிளைக்கழக நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருக்காங்க. கடந்த தேர்தலில் எடுத்த அதே 'தி.மு.க ஆதரவு' என்ற தேர்தல் நிலைப்பாட்டை எடுக்கும்படி சொல்லி இருக்கிறார்கள்," என்றனர்.

இதுதொடர்பாக தஞ்சை தஞ்சை மாவட்டத் தலைவர் விஜய் சரவணனிடம் பேசினோம். "எங்க தலைமை யாரையும் ஆதரிக்கச் சொல்லலை. ஆனா, நான், மதுரை, கரூர் மாவட்டத் தலைவர்கள் மூன்று பேரும் கடந்தமுறை என்ன நிலை எடுத்தோமோ,அந்த நிலையில் தொடர்வது அப்படீன்னு  முடிவு பண்ணி இருக்கோம். ஆனால், யாருக்கும் வெளிப்படையான பிரசாரம் பண்ணமாட்டோம்" என்றார்.

புதுவை, நெல்லித்தோப்பு தொகுதியில் அ.தி.மு.க.வை விஜய் மக்கள் இயக்கம் ஆதரிப்பதாக சொல்லப்படுகிறது. "விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த்,முன்பு காங்கிரஸ்காரராக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது புஸ்ஸி தொகுதியில் நின்று எம்.எல்.ஏ ஆனவர். அதன்பிறகு,எங்க அமைப்புக்கு வந்தபிறகு,ரெங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் அனுதாபியாக மாறினார். இந்தமுறை,அங்கே ரெங்கசாமி அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு கொடுத்திருப்பதால், இவரும் நெல்லித்தோப்பு தொகுதி மக்கள் இயக்க நிர்வாகிகளை அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கும்படி சொல்லி இருக்கிறார்," என்கிறார்கள்.

இது தொடர்பாக  விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் புஸ்ஸி ஆனந்திடம் பேசினோம்.  "நான் இளையதளபதி பக்கம் இருக்கேன். அதனால்,நெல்லித்தோப்பில் அ.தி.மு.கவை ஆதரிக்க நான் சொன்னதா சொல்ற தகவல் பொய்யான தகவல். எங்க அமைப்புக்கும், இந்த தேர்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மத்தப்படி, நான்கு தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை,இளைய தளபதி விஜய் மக்கள் இயக்க பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமல் அவரவர் விருப்பபடி யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு, ஓட்டளிக்க அனுமதி கொடுத்திருக்கிறோம். ஆனால், நான் தனிப்பட்ட முறையில் எங்கேயும் இவர்களை ஆதரியுங்கள் என சொல்லவில்லை," என்றார்.

- துரை.வேம்பையன்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ