Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் விவகாரம் : எதிர்ப்பு பேரணியில் பா.ஜ. கூட்டணி கட்சி

மம்தா பானர்ஜி

நாடு முழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. அவற்றுக்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 8-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பால், கடந்த ஒரு வாரமாக, மக்கள் வங்கிகளின் முன் காத்துக் கிடக்கிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மம்தா பானர்ஜி நடத்திய பேரணியில் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா பங்கேற்றது.

ரூபாய் நோட்டு விவகாரம், இன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. மக்களின் அவதி குறித்தும், இயல்பு நிலையைக் கொண்டு வர வலியுறுத்தியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில், இன்று டெல்லியில் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்றன.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாகச் சென்றனர்.

பா ஜ கூட்டணிகுடியரசுத் தலைவல் மாளிகைக்கு வெளியே எதிர்க்கட்சிகளின் தலைவர்களுடன் செய்தியாளர்களுக்கு மம்தா பானர்ஜி பேட்டியளித்தார்.
"நாடு முழுவதும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியிருப்பது குறித்து, குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறினோம்.  நாட்டில் இயல்புநிலையை ஏற்படுத்த, மத்திய அரசை பிரணாப் முகர்ஜி வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். இப்பிரச்னை தொடர்பாக, நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர உள்ளோம். வாராக்கடன் காரணமாக என்.பி.ஏ எனப்படும், செயல்படாமல் இருக்கும் சொத்துகளின் மதிப்பு, கடந்த சில மாதங்களில் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதுபற்றி எந்த விசாரணையும் நடத்தவில்லை. மத்திய அரசின் ரூபாய் நோட்டு விவகாரம் அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது நிதி தொடர்பான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இயல்பு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம். கறுப்புப் பணத்துக்கு எதிராக, உரிய முறையில் திட்டமிட்டு செயல்படுவதுடன், மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய  முன்வரவேண்டும். ஏ.டி.எம் என்றால், எல்லா நேரத்திலும் பணம் என்ற நிலை மாறி, எப்போதும் காலியான நிலை என்றாகி விட்டது" என்று மம்தா பானர்ஜி கடுமையாக சாடினார்.

மம்தா பானர்ஜியுடன், காங்கிரஸ், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான சிவசேனா, தேசிய மாநாட்டுக் கட்சி, ஆவாஸ்-இ- பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பேரணியில் கலந்து கொண்டு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். வங்கிகளில் பணம் எடுப்பதற்கு சிரமப்படும் மக்களுக்கு காங்கிரஸ் எம்.பி.-க்கள் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தலைநகர் டெல்லியில் வங்கிகளின் முன் வரிசையில் காத்திருந்த மக்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்தார். எது எப்படியானாலும், வங்கிகளில் மக்கள் காத்துக் கிடக்கும் நிலை, இன்னும் 10 நாட்களுக்காவது நீடிக்கும் என்பதில் ஐயமில்லை!

- சி. வெங்கட சேது

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ