Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வறுமைக்குத் தன்னையும் தம்மக்களையும் பறிகொடுத்துத் தெய்வமான நல்லதங்காள்!

நல்லதங்காள் பற்றி தெரியாதவர்கள் தமிழகத்தில்  இருக்க வாய்ப்பில்லை. கதையாக, பாடலாக, திரைப்படமாக தமிழகம் முழுவதும் உயிர்ப்போடு வலம் வந்து கொண்டிருக்கும் மங்கை.  

நல்லதங்காள்

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகில் அர்ச்சுனாபுரம் என்ற ஓர் அழகிய கிராமம். மா, தென்னை, வாழை, பாக்கு, தேக்கு என எத்திசையில் பார்த்தாலும் பசுமை. வானம் பொய்க்காத வளமான பூமி. இந்த ஊருக்கு இன்னோர் அடையாளமும் உண்டு. நல்லதங்காள் பிறந்த ஊர். 

நல்லதங்காள் பிறந்தது 15-ம் நூற்றாண்டில். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி. நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பி தான் தங்கையைச் செல்லமாக வளர்த்தார். மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு நல்லதங்காளைக் மணம் முடித்துக் கொடுத்தார். கல்யாணம் ஆகும்போது நல்லதங்காளுக்கு ஏழு வயது. காசிராஜன் நல்லதங்காளுக்கு நிறைய பரிசப் பணம் கொடுத்தார். சித்திரை மாதம் கல்யாணம் நடந்தது.  செல்வக் கல்யாணம்.

அன்னை நல்லதங்காள் கோயில்

‘பனைமரம் பிளந்து பந்தக்கால் நட்டார்கள்...

தென்னைமரம் பிளந்து தெருவெல்லாம்  பந்தல் இட்டார்கள்...

நல்லதம்பி தங்கச்சிக்கு நிறைய சீதனங்கள் கொடுத்தான்...

வேலி நிறைய வெள்ளாடுகள்...

பட்டி நிறைய பால்மாடுகள்...

மோர் கடைய முக்காலி பொன்னால்...

அளக்குற நாழி பொன்னால்...

மரக்கால் பொன்னால்...'

இன்னமும் சீதனங்கள் நிறைய உண்டு. சொல்லிக்கொண்டே போகலாம். கல்யாணம் முடிந்தது. விருந்துச் சாப்பாடும் முடிந்தது. 

நல்லதங்காளும் காசிராஜனும் மானாமதுரைக்குப் புறப்பட்டார்கள்.

நல்லதங்காளுக்கு அண்ணனைப் பிரிய மனம் இல்லை.

நல்லதங்காள் குழந்தைகள்

‘அழுதுபுரண்டு அழுதாள்.

ஆபரணம் அற்று விழ...

முட்டி அழுதாள்.

முத்துமணி அற்று விழ...’

நல்லதம்பி தங்கச்சிக்கு ஆறுதல் சொன்னான். ஒருவழியாக நல்லதங்காள் மானாமதுரைக்குப் புறப்பட்டுப் போனான்,

நல்லதம்பிக்கு ஒரு மனைவி உண்டு. அவள் பெயர் மூளிஅலங்காரி. அவள் கொடுமைக்காரி. நல்லதங்காள் போன பிறகு நல்லதங்காளைப் பார்க்க நல்லதம்பி ஒரு தடவை கூட மானாமதுரை போகவில்லை. அதற்கு மூளி அலங்காரிதான் காரணம்.

நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. நான்கு ஆண்கள், மூன்று பெண்கள். பிள்ளை குட்டிகளுடன் அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள். இதெல்லாம் கொஞ்ச காலம்தான்.

மானாமதுரையில் மழை இல்லை. 12 வருடமாக வயல்களில் விளைச்சல் இல்லை. மக்கள் பசியால் வாடினார்கள். பட்டினியால் தவித்தார்கள்.

‘பஞ்சமோ பஞ்சம்,

மரக்கால் உருண்ட பஞ்சம்

மன்னவரைத் தோற்ற பஞ்சம்

நாழி உருண்ட பஞ்சம்

நாயகரைத் தோற்ற பஞ்சம்

தாலி பறிகொடுத்து

கணவரைப் பறிகொடுத்து

கைக்குழந்தை விற்ற பஞ்சம்’

இப்படி மக்கள் பஞ்சத்தில் செத்தார்கள். நல்லதங்காள் வீட்டையும் பஞ்சம் விடவில்லை.  தாலி தவிர மற்றது எல்லாம் நல்லதங்காள் விற்றாள். குத்தும் உலக்கை, கூடை, முறம்கூட விற்றுவிட்டாள். எல்லாம் விற்றும் பஞ்சம் தீரவில்லை. குழந்தைகள் பசியால் துடித்தன.

நல்லதங்காள் யோசித்து யோசித்துப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் பிள்ளைகள் பசியால் செத்துப் போகும் என்று பயந்தாள். ஒரு முடிவு எடுத்தாள். அண்ணன் வீட்டுக்குப் பிள்ளைகளுடன் கொஞ்ச நாள் போய் இருக்கலாம் என்று. 

காசிராஜனிடம் தன் முடிவைச் சொன்னாள். காசிராஜன் நல்லதங்காள் சொன்ன முடிவை ஒப்புக்கொள்ளவில்லை.

"அடி பெண்ணே! வாழ்ந்து கெட்டுப்போனால் ஒரு வகையிலும் சேர்க்கமாட்டார்கள். கெட்டு நொந்துபோனால் கிளையிலும் சேர்க்கமாட்டார்கள். கைகொட்டிச் சிரிப்பார்கள். நீ போக வேண்டாம். கஷ்டம் வருவது சகஜம். நாம் தாக்குப்பிடித்து நிற்க வேண்டும். சாணி எடுத்தாவது தப்பிப் பிழைப்போமடி! வேலி விறகொடித்து விற்றுப் பிழைப்போமடி" என்று காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளிடம் பலவாறு சொன்னாள்.

காசிராஜன் சொன்னதை நல்லதங்காள் கேட்கவில்லை. இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைத்தாள்.

நல்லதங்காள் கோயில் முகப்பு

‘சந்தனம் தொட்ட கையால் நான்

சாணி தொட லாகுமோ!

குங்குமம் எடுக்கும் கையால் நான்

கூலி வேலை செய்யலாகுமோ’

என்று சொல்லி நல்லதங்காள் அழுதாள்.

இதற்கு மேல் நல்லதங்காளை சமாதானப்படுத்த முடியாது என்று காசிராஜன் தெரிந்துகொண்டான். "சரி போய்வா, பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்" என்று சொல்லி வழியனுப்பி வைத்தான்.

நல்லதங்காள் பிள்ளைகளைப் பாசத்தோடு அழைத்தாள். "வாருங்கள் பிள்ளைகளா! உங்கள் மாமன் வீட்டுக்குப் போவோம். அங்கே திண்பதற்கு தேங்காய் கிடைக்கும், மாங்காய் கிடைக்கும், ஓடி விளையாட மான் கிடைக்கும்" என்று சொல்லி அழைத்தாள். பிள்ளைகள் ஆசை ஆசையாகப் புறப்பட்டன.

நல்லதங்காளும் பிள்ளைகளும் மானாமதுரையில் இருந்து அர்ச்சுனாபுரத்துக்கும் புறப்பட்டு வந்தார்கள். காடு மலையெல்லாம் தாண்டி வந்தார்கள். வனாந்திரங்களைக் கடந்து வந்தார்கள்.

அர்ச்சுனாபுரம் பக்கம் வந்துவிட்டார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு நடக்கமுடியவில்லை. ’பசி...பசி’ என்று கத்தினார்கள். அழுதார்கள்.

அந்த நேரம் பார்த்து நல்லதம்பி அந்தப் பக்கம் படை பரிவாரங்களோடு வேட்டையாட வந்தான். வந்த இடத்தில் நல்லதங்காளையும் பிள்ளைகளையும் பார்த்தான்.

அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

நல்லதம்பி

‘குதிரை அரிதாச்சோ

குடி இருந்த சீமையிலே!

பல்லக்குதான் பஞ்சமோ

பத்தினியே உனக்கு!

கால்நடையாய் வர

காரணம் ஏன் தங்கச்சி?’

என்று அழுது புலம்பினான்.  நல்லதங்காள் தன் வீட்டு நிலைமைகளைச் சொன்னான். நல்லதம்பி அவளைத் தேற்றினான். "சரி தங்கச்சி... நம் வீட்டுக்குப் போ. தெற்கு மூலையில் தேங்காய் குவிந்திருக்கும். வடக்கு மூலையில் மாங்காய் குவிந்திருக்கும். காட்டு யானை வாசலில் கட்டி இருக்கும்... காராம் பசுவும் உண்டு. போ தங்கச்சிப் போ! போய்ப் பிள்ளைகளுடன் பசியாறி இரு" என்று நல்லதம்பி சொன்னான். 

நல்லதங்காள் அண்ணன் இல்லாத வீட்டுக்கும் போகத் தயங்கினாள்.  ‘அண்ணா! நீயும் கூட வா!’ என்று அண்ணனைக் கூப்பிட்டாள்.

"அம்மா நல்லதங்காள்... நீ முதலில் போ. உன் அண்ணி மூளி அலங்காரி உன்னையும் பிள்ளைகளையும் நன்றாக கவனித்துக்கொள்வாள். நான் பின்னால் வருகிறேன். சீக்கிரம் வந்துவிடுவேன்.  உன் பிள்ளைகளுக்கு விளையாட புள்ளிமான் கொண்டு வருவேன்" என்று சொல்லி சமாதானப்படுத்தினான்.

நல்லதங்காள் அண்ணன் வீட்டுக்கு அரைமனதுடன் புறப்பட்டாள். அப்போது மூளி அலங்காரி  வீட்டு மாடியில் இருந்தாள்.

நல்லதங்காளும் பிள்ளைகளும் பசியோடு தன் வீடு வருவதைப் பார்த்து விட்டாள். வேகமாக இறங்கி வந்தாள். கதவுகளை இறுக்கிக் கதவை அடைத்தாள். ஈர மண் போட்டு அடைத்தாள். சோற்றுப்பானையை ஒளித்து வைத்தாள். பழந்துணி ஒன்றை உடுத்திக்கொண்டாள். முகத்தில் பத்துப் போட்டு மூலையில் படுத்துக்கொண்டாள்.

நல்லதங்காள் வந்தாள். ”அண்ணி... அண்ணி” என்று ஆசையாகக் கூப்பிட்டு கதவைத் தட்டினாள். கதவு திறக்கவில்லை.

”கால் கடுக்குது அண்ணி... கதவைகத்திற, ‘தண்ணீர்..  தண்ணீர் ’ என்று தவிக்குறான் பாலகன். ‘அன்னம்... அன்னம்...’ என்று சொல்லி அலையுறான் பாலகன். புத்திரர் பசியாற கதவைத் திறவாயோ?” என்று அழுது அழுது கூப்பிட்டாள்.  அதற்கும் கதவு திறக்கவில்லை. நல்லதங்காளுக்கு கோபம் வந்தது.

”நான் பத்தினியானால் கதவு திறக்கட்டும்” என்று கட்டளையிட்டாள். கதவுகள் திறந்தன. பிள்ளைகள் உள்ளே ஓடினார்கள். சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒரு பண்டமும் இல்லை. மூளி அலங்காரி படுத்திருந்த இடத்தில் தேங்காயும், மாங்காயும் குவிந்து கிடந்தன.

ஓடிச்சென்று ஒரு பிள்ளை தேங்காயை எடுத்தது. தாவிச் சென்று ஒரு பிள்ளை மாங்காயைக் கடித்தது. மூளி அலங்காரி விருட்டென்று எழுந்தாள். மாங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம்  மாங்காயில் அழுகல் மாங்காய் ஒன்று எடுத்துக் கொடுத்தாள். தேங்காயைப் பறித்துப் போட்டாள்.  ஆயிரம் தேங்காயில் அழுகல் தேங்காய் ஒன்று எடுத்துக்கொடுத்தாள். பார்த்தாள் நல்லதங்காள். மனம் பதறினாள். ‘அண்ணி என் மக்களின் பசியை ஆத்துங்க’ என்று கெஞ்சினாள்.

மூளி அலங்காரி, ஏழு வருசம் மக்கிப்போன கேப்பையைக் கொடுத்தாள். திரிப்பதற்கு உடைந்த திருகையைக் கொடுத்தாள். உலை வைக்க ஓட்டைப் பானையைக் கொடுத்தாள். நல்லதங்காள் பொறுமையாகக் கேப்பையை திருகையில் போட்டு அரைத்தாள்.

எப்படியோ கஷ்டப்பட்டு கஞ்சி காய்ச்சினாள். ஈரமட்டைகளை வைத்து எரித்தாள். ’கூழும் கொதிக்கணும், குழந்தை பசியாறணும்’ என்று தெய்வங்களை வேண்டிக் கொண்டாள்.

ஒரு வழியாகக் கஞ்சி கொதித்தது. ஆனால் பிள்ளைகள் கஞ்சியைக் குடிக்கப்போகும் நேரத்தில் மூளி அலங்காரி வந்தாள். பானையைத் தட்டிவிட்டாள். பானை உடைந்தது, கூழ் வழிந்து ஓடியது. பிள்ளைகள் அதை வழித்துக் குடித்தார்கள்.

நல்லதங்காளுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்கவில்லை. இனியும் அவமானப்பட வேண்டாம், செத்துவிடலாம் என்று முடிவு எடுத்தாள்.

பிள்ளைகளைக் கூப்பிட்டு தெருவில் இறங்கினாள். வீதியில் நடந்தாள். அவளைப் பார்த்தவர்கள் பரிதாபப்பட்டார்கள். சாப்பிடுவதற்கு தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள்.

‘பச்சரிரி குத்தித் தாரோம்

பாலும் கலந்து தாரோம்!

பாலரும் நீயும்

பசியாறிப் போங்க!’

என்று கூப்பிட்டார்கள். நல்லதங்காள் மறுத்துவிட்டாள்.

 

‘அரச வம்சம் நாங்கள்

அண்டை வீட்டில்

தண்ணீர் குடிக்க மாட்டோம்.’

என்று சொல்லிவிட்டாள்.

காட்டு வழியே பிள்ளைகளைக் கூட்டிப் போனாள். பாழும் கிணறு தேடிப் போனாள். அண்ணன் வந்தால் அடையாளம் தெரியட்டும் என்று ஆவாரம் செடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே போனாள்.

நல்லதங்காளும் பிள்ளைகளும் நெடுந்தூரம் வந்துவிட்டார்கள். ஒரு கிணறும் காணோம். அப்போது சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து நல்லதங்காள் கேட்டாள்.

’தண்ணீர் தாகமப்பா. தண்ணீர் குடிக்கனும், பாழும் கிணறு இருந்தால் பார்த்துச் சொல்லுமப்பா" என்று கேட்டாள். ஒரு சிறுவன் ஓடிச்சென்று ஆழமுள்ள பாழும் கிணற்றைக் காட்டினான்.

நல்லதங்காள் பிள்ளைகளோடு அங்கு போனாள். கணவன் கண்ணில் படுமாறு தாலியைக் கழற்றி கிணற்றுப் படியில் வைத்தாள். அண்ணன் கண்ணில் படுமாறு பாலூட்டும் சங்கை கிணற்று மேட்டில் வைத்தாள். அண்ணி கொடுத்த அழுகல் தேங்காயை ஓர் ஓரத்தில் வைத்தாள்.

ஒவ்வொரு பிள்ளையாக கிணற்றில் தூக்கிப்போட்டாள். ஒவ்வொரு பிள்ளையும் பயந்து பயந்து அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டன. காலைக் கட்டிய பிள்ளையை பிடித்து இழுத்து கிணற்றில் போட்டாள். இப்படி ஆறு பிள்ளைகளைப் போட்டுவிட்டாள்.

மூத்த பிள்ளை நல்லதங்காளுக்குப் பிடிபடாமல் ஓடினான். ‘என்னை மட்டும் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே!’ என்று கெஞ்சினான்.

கிணறு

 

‘தப்பி பிழைத்து அம்மா நான்

தகப்பன் பேர் சொல்லுவேன்

ஓடிப் பிழைத்து அம்மா நான்

உனது பேர் சொல்லுவேன்’

என்று சொல்லி தப்பித்து ஓடினான். ஓடிய பிள்ளையை நல்லதங்காள் ஆட்டு இடையர்களை வைத்துப் பிடிக்கச் சொன்னாள். இடையர்களுக்கு விஷயம் தெரியாது. தாய்க்கு அடங்காத தறுதலைப் பிள்ளை என்று நினைத்து அவனைப் பிடித்துக் கொண்டு வந்து நல்லதங்காளிடம் விட்டு விட்டுப் போய்விட்டார்கள்.

நல்லதங்காள் கதறி அழுத மூத்த மகனையும் பிடித்து கிணற்றுக்குள் போட்டாள். பிறகு தானும் குதித்தாள். நல்லதங்காளும், ஏழு பிள்ளைகளும் இறந்து மிதந்தார்கள். நல்லதங்காளுக்கு 16 அடிக்கூந்தல். அவள் கூந்தல் கிணறு பூராவும் பிரிந்து பரந்து கிடந்தது. பிள்ளைகளும் தெரியவில்லை. கிணற்றுத்தண்ணீரும் தெரியவில்லை. நல்லதங்காளின் கூந்தல் மட்டுமே பூராவும் தெரிந்தது.

நல்லதங்காள் புறப்பட்டு வந்த சில நாட்களிலேயே மானாமதுரையில் நல்ல மழை பெய்தது. பயிர்கள் திகிடுமுகடாக விளைந்தன. நாடு செழிப்பு அடைந்தது. காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளையும் தன் பிள்ளைகளையும் அழைப்பதற்கு புறப்பட்டு வந்தான்.

நல்லதம்பி வேட்டை முடித்து வீட்டுக்கு வந்தான். தங்கச்சியைக் காணவில்லை. தங்கச்சி பிள்ளைகளையும் காணவில்லை. பதறிப் போனான். 

நல்லதங்காள் கிணறு

மூளி அலங்காரியைப் பார்த்து, ’என் தங்கச்சியையும் தங்கச்சி பிள்ளைகளையும் எங்கே?’ என்று கேட்டான். மூளி கூசாமல் பொய் சொன்னாள்.

‘சீரகச் சம்பா சோறு ஆக்கிப் போட்டேன்

பத்துவகைக் காய்கறி வைத்தேன்,

சாப்பிட்டுப் போனாங்க’ என்று பொய் சொன்னாள்.

நல்லதம்பி இதை நம்பவில்லை. பக்கத்து வீடுகளில் போய்க் கேட்டான. அவர்கள் நடந்ததை நடந்தபடியே சொன்னார்கள். பிள்ளைகளைப் பட்டினி போட்டதைச் சொன்னார்கள். அவ்வளவு தான்... நல்லதம்பிக்கு மீசை துடித்தது.  கண் சிவந்தது.  பக்கச் சதை எல்லாம் பம்பரம் போல் ஆடியது. தங்கையைத் தேடி காட்டுவழியே போனான். பதறிப் பதறிப் போனான். நல்லதங்காள் ஒடித்துப் போட்ட ஆவாரஞ்செடிகள் வழிகாட்டின. நல்லதம்பி பாழும் கிணற்றின் பக்கம் வந்தான். உள்ளே எட்டிப் பார்த்தான். அய்யோ தங்கையும் பிள்ளைகளும் செத்து மிதந்தார்கள். நல்லதம்பி ஓங்காரமிட்டு அழுதான்.

தங்கச்சி தங்கச்சி என்று தரையில் புரண்டு அழுதான். அம்மா அம்மா என்று அடித்துப் புரண்டு அழுதான். இப்படி அவன் அழுது புரண்டு கொன்டு இருந்தபோது காசிராஜனும் அங்கே வந்து விட்டான். பிள்ளைகளையும், மனைவியையும் பிணமாகப் பார்த்தான். மனைவியைக் கட்டிக் கொண்டு கதறி அழுதான்.

நல்லதங்காளையும் பிள்ளைகளையும் வெளியே எடுத்து தகனம் செய்தார்கள். நல்லதம்பி தன் மனைவி மூளி அலங்காரியைப் பழிவாங்க நினைத்தான். அவளை மட்டுமல்ல அவள் குலத்தை பழிவாங்க ஏற்பாடு செய்தான். மூளி அலங்காரியின் உறவினர்கள் உட்காரும் இடத்தில் இடிப்பந்தல் போட்டான். இடிப்பந்தத்தை தட்டிவிட்டி எல்லோரையும் கொன்றான். மூளி அலங்காரியையும் அரிவாளால் வெட்டிக் கொன்றான்.

இத்துடன் கதை முடியவில்லை. நல்லதம்பி ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். அதேபோல் காசிராஜனும் ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். இவ்வாறு இரண்டு குடும்பங்களும் கூண்டோடு அழிந்தன. இறப்பதற்கு அடிப்படையான காரணம் என்ன?

வறுமை ஒரு பக்கம். மூளி அலங்காரியின் கொடுமை மறுபக்கம். வறுமை கொடியது, பசி கொடியது, பட்டினி கொடியது, அதைவிடக் கொடியது மனிதத்தன்மையற்ற செயல்.

அண்ணன் தங்கை பாசம் என்றால் இதுவல்லவா? என்று மெச்சிய சிவனும், பார்வதியும் அங்கே தோன்றினர். தற்கொலை செய்த நல்லதங்காள், அவளது பிள்ளைகளை உயிர்பெறச் செய்ததோடு, நல்ல தம்பிகளையும் உயிர்பித்தனர்.

நல்லதங்காள் குழந்தைகள்

அப்போது நல்ல தங்காளும், நல்லதம்பியும், "நாங்கள் இறந்தது இறந்ததாகவே இருக்கட்டும், மனிதப் பிறவி எடுத்து மாண்டவர்கள் மீண்டும் உயிர் பெற்றார்கள் என்ற வரலாறு ஏற்பட வேண்டாம். எனவே, நாங்கள் இறந்ததாக கருதி அருள் புரியவேண்டும்" என கூறினார்கள்.

சிவனும் அவ்வாறு அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். இந்த ஒரே காரணத்துக்காக நல்லதங்காள் தெய்வமாகிவிட்டாள்.

அர்ச்சுனாபுரத்தில் வயல்வெளிக்கு மத்தியிலேயே கோவில் கொண்டுள்ளாள் நல்லதங்காள்.  கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை இன்னொரு சன்னதியில் இருக்கிறது. அருகிலேயே நல்லதம்பியும் வீற்றிருக்கிறார். சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து போய்க் காணப்படுகிறது. நல்ல தங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இங்கேதான் என்று கிராம மக்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 

ஏராளாமானோருக்கு, நல்லதங்காள் குலதெய்வமாக இருக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பொங்கல் திருவிழா நடைக்கிறது.  ஆடி மாதங்களில் நல்லதங்காளின் உறவினர்கள்,  வழித் தோன்றல்களாக வந்தவர்கள், மானாமதுரையில் இருந்து இங்கு வந்து விழாவில் கலந்து கொள்கின்றனர்.  மாதம்தோறும் பவுர்ணமி பூஜையும் நடக்கிறது.

நல்லதங்காள் பட்ட துன்பத்தை இந்த உலகம் மறக்காது. அருள்தரும் அன்னை நல்லதங்காள் திரு அவதார வரலாற்றினை பக்தி சிரத்தையுடன் கேட்டாலோ, படித்தாலோ, சொன்னாலோ பூமியில் பஞ்சம் நீங்கி சுபிட்ச மழை பெய்து வளம் கொழிக்கும் என்பது பெரியோர் வாக்கு.

நல்லதங்காள் அன்னையை வணங்கி, நம்மை அண்டி வருவோர்க்கு தீயன மறந்து நன்மைகள் செய்து வாழ்வில் இன்பம் பெறுவோம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close