Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பத்ரிநாத்... பரவசம்!

 

- கே. யதுகுல ஜோதி, மதுரை

மக்களின் உள்ளமானது எப்போதும் அருள்மயமான சிந்தனை களால் நிரம்பியிருக்க வேண்டும் என்பதால்தான், ஆலய வழிபாடு களையும், புகழ்பெற்ற ஆலயங்களையும் அமைத்துத் தந்தார்கள் நம் முன்னோர். ஒவ்வொரு மனிதனுக்கும் உடலுக்கு உணவு போல் அவனது ஆத்மாவுக்கு இறைச் சிந்தனை அவசியம் அல்லவா?

அப்படியான தெய்வச் சிந்தனைகள் இமைப்பொழுதும் நம் நெஞ்சை நீங்காதிருக்க, புண்ணிய க்ஷேத்திரங்களும் அவற்றை நாடிச் செல்லும் புனிதப் பயணங்களும் உதவும். அந்த வகையில், ஆழ்வார்கள் பெருமக்கள் போற்றிப் பரவிய திவ்ய தேசங்களைத் தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பும் அனுபவமும் அற்புதம்!

திவ்ய தேசங்கள், எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணரின் இருப்பிடமான வைகுண்டத்தின் கூறுகள் என்பார்கள். 108 திவ்ய தேசங்களில் திருப்பாற்கடலும் திருப்பரமபதமும் பூவுலகில் காண இயலாதவை. பூவுலகில் உள்ள 106 திவ்ய தேசங்களில்... சாளக்கிராமம் (கண்டகி நதி தீரத்தில் உள்ளது) தவிர, 105 திவ்ய தேசங்களையும் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது, பூர்வஜென்மத்துக் கொடுப்பினையே! அவற்றுள், கண்டங்கடிநகர் எனும் தேவப் பிரயாகை, திருப்பிரிதி எனும் ஜோஷிமட் மற்றும் பத்ரிநாத் ஆகிய மூன்றும் தேவபூமி எனச் சொல்லப்படுகிற இமயமலையில் உள்ளன. இந்த திவ்யதேசங்களைத் தரிசிக்க, ஓர் இனிய நாளில் நான், என் மகன், என் மகள் மூவரும் மதுரையிலிருந்து விமானம் மூலம் டில்லி சென்றடைந்தோம்.

அங்கிருந்து டிராவல்ஸ் மூலம் ஹரித்துவார், ரிஷிகேஷ் வழியாக தேவப்பிரயாகையைச் சென்றடைந்தோம். ஸ்ரீநீலமேகப் பெருமாள் என்ற புருஷோத்தமனும், புண்டரீகவல்லித் தாயாரும் கோயில் கொண்டிருக்கும் அற்புதமான தலம் அது. மதுரையிலிருந்து கொண்டு சென்ற மல்லிகை மற்றும் பல மலர்களையும் பெருமாளுக்குச் சமர்ப்பித்து வணங்கினோம்.

விமானப் பயணம் என்பதால், மலர்கள் புத்தம் புதிதாகவே இருந்ததைப் பார்த்து உடன் இருந்தவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். பெரியாழ்வாரின் பாசுரம் ஒன்று தமிழில் கல்வெட்டில் பதிக்கப்பட்டிருந்தது. அப்பாசுரத்தையும் பாடி மகிழ்ந்தோம். பிரயாகையில் அலகநந்தாவும், பாகீரதியும் சங்கமிக்கும் காட்சி மெய்சிலிர்க்கச் செய்தது. அங்கேயே காலை உணவை முடித்துகொண்டு புறப்பட்டோம்.

வண்டி செல்லும் வழிநெடுக, அலகநந்தா நதியின் ஆர்ப்பரிப்புப் பாய்ச்சலைக் காணமுடிகிறது. மிகக் குறுகலான மலைப்பாதையில், மணிக்கு 20 கி.மீ. வேகத்திலேயே எங்களது வாகனம் பயணித்துக் கொண்டிருந்தது. வலப்புறத்தில் பிரமாண்டமான மலைச்சுவர்கள், இடப்புறம் பார்த்தாலோ... தலை கிறுகிறுக்க வைக்கும் அதல பாதாளம்! அச்சமும் ஆச்சரியமுமாகத் தொடர்ந்தது அந்தப் பயணம்! எங்கும் பசுமை, நதியின் பிரவாகம், மலையின் கம்பீரம்... எனக் காணக் கண்கொள்ளாக் காட்சி அது!

வழியில் ஒரு நீர்வீழ்ச்சி அருகில் வண்டியை நிறுத்தி, அங்கேயே மதிய உணவை முடித்துக் கொண்டோம். வெள்ளியை உருக்கி விட்டதுபோன்று விழுந்த அருவி நீரை அவரவர் சாப்பாட்டுத் தட்டிலேயே பிடித்து அருந்தியது புது அனுபவமாக இருந்தது. அருவித் தண்ணீர் சுவையோ சுவை!

ஒருவழியாக எல்லோரும் மதியச் சாப்பாட்டை முடித்ததும், வண்டி புறப்பட்டது. அடுத்து, திருமங்கை ஆழ்வாரால் திருப்பிரிதி என்று அழைக்கப்பட்டதும், தற்போது 'ஜோஷிமட்’ என்று அறியப்படுவதுமான தலத்தைத் தரிசிக்கப்போகிறோம் என்ற ஆவலுடன் அமர்ந்திருந்தோம். ஆனால், ஓட்டுநர் ஒரு தகவல் சொன்னார். 'நமது பயண அட்டவணையில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி மட்டும்தான்’ என்றார்.

எனக்குள் ஏமாற்றம். எனினும், அவன் அருள் இருந்தால் மீண்டும் வந்து தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று மனத்தை தேற்றியபடி, அந்தத் தலம் இருக்கும் திசை நோக்கி மனத்தால் வணங்கிப் பிரார்த்தித்துக்கொண்டேன். எங்களது வாகனம் சிறிது தூரம் சென்றிருக்கும், திடீரென்று ஒருவர் எழுந்து, ''என் பர்ஸைக் காணோம்! சாப்பிட்ட இடத்திலேயே விட்டுவிட்டேன்போலும்; வண்டியைத் திருப்புங்கள்!'' என்றார். கிட்டத்தட்ட ஒன்றரை கி.மீ தூரம் வந்துவிட்டோம். வண்டி திரும்பக்கூடிய பாதையா அது? எனவே, ஓர் ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, பர்ஸைத் தொலைத்தவரையும் அவருக்கு உதவியாக மற்றொருவரையும் அனுப்பி வைத்தோம்.

அவர்கள் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வந்து சேர்ந்தனர். வண்டி மீண்டும் புறப்பட்டது. அடுத்து சிறிது தொலைவு செல்வதற்குள் மீண்டும் வண்டி நின்றது. வெளியே எட்டிப் பார்த்தால், மலையிலிருந்து கற்களும் பாறைகளுமாகச் சரிந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு கல்லிலும் அம்மி, ஆட்டுரல் செய்யலாம்போல் இருந்தது! பாதை முழுவதும் கற்களும் மண்ணுமாக நிறைந்து தடை ஏற்படுத்திவிட, மேற்கொண்டு பயணிக்க முடியாத நிலை. 'ஆண்டவா... இது என்ன சோதனை’ என்று எல்லோரும் பரிதவித்துப் போனோம். ஆனாலும், சற்று நேரத்திலெல்லாம் ராணுவத்தினர் வந்து பாதையைச் சீர்செய்து கொடுத்தனர். எங்களின் பயணம் தொடர்ந்தது.

நாங்கள் 'ஜோஷிமட்’ எனும் இடத்தை அடைவதற்குள் மணி 6 ஆகிவிட்டது. அதற்குமேல் பயணிக்கவேண்டாம் என்று கருதி, ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டார். அங்கேயே தங்கவேண்டிய நிலை. அதன் காரணமாக அந்த இடத்தில் சாளக்கிராம சொரூபனாய்க் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீநரசிம்மரையும், பரிமளவல்லி நாச்சியாரையும் தரிசித்து மகிழ்ந்தோம்.

திருமங்கை ஆழ்வார் பாடியருளினாரே... 'ஓதி ஆயிரம் நாமங்கள் உணர்ந்தவர்க்கு உறுதுயர் அடையாமல் ஏதமின்றி நின்றருளும் நம்பெருந்தகையிருந்த இமயத்துள்’ என்று. அந்தப் பரம்பொருளை தரிசிக்கும் இந்த பாக்கியம்... இயற்கை ஏற்படுத்திய தடையால் கிடைத்ததா அல்லது இறைச் சித்தத்தால் நிகழ்ந்ததா? எது எப்படியோ மிகப் பரவசமான தரிசனம்!

இந்த இடத்தில் இருந்து சுமார் 19 மைல் தூரம் பத்ரிநாத். மீண்டும் காலை 6 மணிக்குப் புறப்பட்டு பத்ரிநாத்தை அடைந்தோம். சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்தி விடுகிறார்கள். அந்த இடத்திலிருந்து பெரும்பாலான பக்தர்கள், டோலியில் பயணிக்கிறார்கள். என் அருகில் ஒரு பெண்மணி வந்தாள். வயது 60 இருக்கும். முதுகின் பின்னால் கூடை மாதிரி கட்டியிருந்தாள். அந்தக் கூடையில் நாற்காலியில் உட்காருவதுபோல காலைத் தொங்கப்போட்டு உட்கார்ந்துகொண்டால், அந்தப் பெண்மணி நம்மைச் சுமந்து செல்வாள். எனக்குச் சம வயதான பெண்ணொருத்தி, ஒருவரைச் சுமந்து செல்லும் வலிமை பெற்றிருக்கிறாள் என்றால், என்னால் நடந்துசெல்லவும் முடியாதா என்ன? மேலும், அந்த வயதான பெண்ணைச் சுமக்கவைக்கவும் எனக்கு மனமில்லை. நடக்க ஆரம்பித்துவிட்டேன்.

அலகநந்தா நதிக்கரையில்தான் பத்ரிநாத் உள்ளது. ஆரம்பத்தில் இமயமலை ஏறும்பொழுது பார்த்துப் பரவசப்பட்ட காட்சிகள் இங்கேயும். ஒரு தைரியத்தில் நடக்க ஆரம்பித்துவிட்டாலும், போகப் போக எனக்கு மிகவும் சோர்வாக இருந்தது. கண்ணைத் திறந்தால் மயக்கமாகிவிடுவேனோ என்று பயம். என் மகளின் தோளைப் பிடித்துக்கொண்டே பாலத்தைக் கடந்தேன். ஸ்ரீபத்ரிநாதர் சந்நிதியில் கூட்டம் அதிகம். என்னாலோ கண்ணைத் திறக்கக்கூட முடியவில்லை. இவ்வளவு தூரம் வந்தும் இறைவனைப் பூரணமாகத் தரிசிக்கமுடியாமல் போய்விடுமோ என்று கலங்கிப் போனேன்.

என் மகள், தரிசனம் முடிந்து வெளியே வரும் பாதையில் என்னை நிறுத்தினாள். அங்கிருந்தவரிடம் எனது நிலையை எடுத்துக் கூறி, அந்த வழியிலேயே அதாவது பக்தர்கள் தரிசனம் முடித்து வெளியேறும் வழியில் சென்றால் எளிதாக இருக்கும் என்பதால், அதற்கு அனுமதி வேண்டினாள். அவரும் புரிந்துகொண்டார். 'சல்’ என்று ஒற்றை வார்த்தையில் அனுமதி கொடுத்தார்.

உள்ளே... ஸ்ரீபத்ரிநாராயணனை அருகில் இருந்து தரிசிக்கும் பெரும் பாக்கியம் கிடைத்தது. கண்களில் நீர் வடிய வடிய, கண்களை மூடி மனத்துக்குள் பாசுரம் பாடியபடி, வணங்கிக்கொண்டே இருந்தேன். எனது மகளோ, 'இவரைப் பார்க்கத்தானே எல்லாச் சிரமங்களையும் கடந்து வந்திருக்கிறோம். கண்களைத் திறந்து நன்றாகத் தரிசியுங்கள்’ என்றாள். கண் திறந்தேன், என் கடவுளைத் தரிசித்து மகிழ்ந்தேன். அங்கிருந்த பட்டாச்சார்யருக்கும் எங்களைப் 'போ’ என்று சொல்ல மனமில்லை. கொஞ்சம் நேரம் மனமொன்றி வழிபட அனுமதித்தார். ஆசைதீர அந்த ஆண்டவனைத் தரிசித்து முடித்து, தித்திக்க தித்திக்க வணங்கி, கைநிறைய பிரசாதமும், மனம் நிறைய திருப்தியுடனும் வெளியே வந்தோம்.

வண்டியில் அமர்ந்து டில்லியை நோக்கிப் புறப்பட்டோம். தேவ பூமி எங்களை வழிஅனுப்பிக் கொண்டிருந்தது. ரிஷிகேஷைத் தாண்டி ஹரித்துவார் அருகில் வந்துகொண்டிருந்தோம். மலையை விட்டு இறங்கிவிட்டோம் என்றும், டில்லி செல்ல நள்ளிரவு ஆகும் என்றும் வீட்டுக்குத் தகவல் சொன்னோம்.

அன்று ஆடி அமாவாசை என்பதால், அங்கே பெருங்கூட்டம். லட்சக்கணக்கான மக்கள் பூமியிலிருந்து திடீரென்று முளைத்தெழுந்தது போன்று கூட்டம், கூட்டம், கூட்டம்! பைக்குகளிலும், இன்னும் பிற வாகனங்களிலுமாக ஒன்றுக்கு மூவராக அமர்ந்துகொண்டு, 'பம்பம் போலோ, பம்பம் போலோ’ என்று கத்திக்கொண்டே சென்றனர். எங்கள் வண்டியைப் போன்று நூற்றுக்கணக்கான வண்டிகள் முன்னும் பின்னுமாக ஏராளமான வண்டிகள் தேங்கி நின்றன. ஒரு பர்லாங்கூட எங்களால் முன்னேற முடியவில்லை. பஸ்ஸை விட்டு இறங்க முடியவில்லை. இறங்கி எங்காவது அமைதியான இடத்திற்கு ஓடவேண்டும்போல் இருந்தது.

மதியம் சாப்பிட்டதுதான்..! இரவு முழுவதும் பசி, தாகத்துடன் பஸ்ஸுக்குள்ளேயே துவண்டுபோய்க் கிடந்தோம். மறுநாள் விடிந்தது. அப்போதும் கூட்டம் குறைந்தபாடில்லை. அமாவாசையாதலால் இரண்டு நாட்களுக்கு இன்னும் கூட்டம் சேரத்தான் செய்யும் என்றனர். காலை மணி 10 ஆகிவிட்டது.

எங்கள் பஸ்ஸில் எங்களைத் தவிர மற்ற எல்லோரும் மறுநாள் காலையில் டில்லி சென்று, அங்கிருந்து அவரவர் ஊருக்குச் செல்ல ரயில் டிக்கெட் எடுத்திருந்தனர். நாங்கள் இருந்த இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் உள்ளது என்றும், அங்கிருந்து 3 ரூபாய் டிக்கெட் எடுத்து ஹரித்துவாருக்குச் சென்றுவிட்டால், அங்கிருந்து டில்லிக்கு (70 ரூபாய் டிக்கெட்) செல்லலாம் என்றனர்.

எனவே, எல்லோரும் பஸ்ஸை விட்டு இறங்கினர். 15 நாள் 'புரொகிராம்’ என்பதால் ஒவ்வொருவரும் இரண்டு, மூன்று சூட்கேஸ்கள் வைத்திருந்தனர். அவரவர் லக்கேஜ்களைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு ஜனநெரிசலில் சிக்கி, பசியுடன் 2 கி. மீ. நடந்து சென்றனர். ஆனால், நாங்கள் ஐந்து நாட்கள் டில்லியில் தங்க வேண்டியிருந்ததால், எங்கள் லக்கேஜ்களை டிராவல் ஆபீஸில் எடுத்துக் கொள்ளலாம் என்று பஸ்ஸிலேயே விட்டுவிட்டுக் கிளம்பினோம்.

ஹரித்துவார் செல்லும் ரயிலில் கூட்டம் அதிகம். எங்களால் ஏறமுடியவில்லை. இரண்டு ரயில்களை விட்டுவிட்டோம். பிறகு, ரயில்வே அதிகாரி ஒருவரிடம் எங்கள் நிலைமையை விளக்கிச் சொல்ல, அவர் அடுத்து வந்த ரயிலில் ஏறுவதற்கு உதவி செய்தார். ஆனாலும், உள்ளே ஒருவர் காலை ஒருவர் மிதித்தபடிதான் எங்கள் பயணம் தொடர்ந்தது.

ஒருவழியாக, ஹரித்துவாரை அடைந்தோம். அங்கு, இரவு 10 மணிக்கு மேல் டேராடூனிலிருந்து ஒரு ரயில் வந்தது. ஏறினோம். எல்லோரும் அன்ரிசர்வ்ட். மீண்டும் சிரமமானதொரு பயணம். மறுநாள் காலை 9 மணிக்கு டில்லி வரும் வரை, மிகவும் கஷ்டப் பட்டுவிட்டோம்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, கும்பமேளா போன்ற நாட்களில் வடஇந்திய பயணங்களைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். மற்றபடி, இந்தப் பயணத்தில் பங்கு பெற்றவர்கள் அனைவரும் இதில் கிடைக்கும் பரவச உணர்வை இந்த ஜென்மத்துக்கும் மறக்கமுடியாது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ