Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலைகள் கடந்து மகேசன் தரிசனம்... - வெள்ளியங்கிரி யாத்திரை!

ஆன்மிகப் பயணம் 3

- ரவிகரன் ரணேந்திரன்

 

ஈழத் தமிழ் மாணவனான எனக்கு, பல்லாயிரக்கணக்கான ஆண்டு நாகரிக மாற்றங்களையும் வென்று தமிழரிடம் நிலவுகிற விருந்தோம்பலின் பிம்பங்களாக, இங்கே எனக்குக் கிடைத்த நண்பர்கள் பலர். அவர்களில் இருவர் மட்டும், தென்கயிலாயமான வெள்ளியங்கிரிக்கு என்னுடன் வந்து, இந்தக் கட்டுரையில் பயணிக்கப் போகிறார்கள். ஒருவன் திருச்சியைச் சேர்ந்த நிர்மல் குமார்; மற்றவன் தேனியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்.

வைகாசி மாதத்தின் ஒரு வெள்ளிக்கிழமை. எங்களது மூன்றாம் ஆண்டுக்கான இறுதி அரையாண்டுப் பரீட்சைகள் முடிந்திருந்தன. எனது ஒன்பது வயதிலிருந்தே, பார்த்திபனுக்குப் பராபரன் பாசுபதமளித்த இடமான வெள்ளியங்கிரி மலையின் மகிமைகள் பற்றி ஏராளமாக அறிந்திருந்தேன். அந்த நினைவுகளூடாக ஈசன் என்னை அடிக்கடி ஆட்கொள்ள, ஒரு மதிய உணவு வேளையில் முடிவெடுத்து, மாலையிலேயே சென்னை கோயம்பேட்டிலிருந்து கோவை நோக்கிப் பயணித்தோம், அதிகாலையில் கோயம்புத்தூரை அடைந்தோம். காலை பத்தரை மணியளவில் கோவை பேருந்து நிலையம் வந்து, பூண்டி நோக்கிச் செல்கிற பேருந்தில் ஏறினோம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு, வெள்ளியங்கிரி அடிவாரப் பகுதியை அடைந்தோம்.

அங்கே, மலையேறும்போது பயன்படுத்தக்கூடிய மூங்கில் தடிகள் விற்கிறார்கள். ஒன்று பத்து ரூபாய். ஆளுக்கொரு தடி வாங்கிக்கொண்டு, அடிவாரத்திலிருந்த கோயில் நோக்கிச் சென்றோம். அங்கு பிள்ளையார், முருகன், பார்வதி, வெள்ளியங்கிரி ஆண்டவர் அனைவரையும் வழிபட்டு அனுமதி வாங்கினோம். எவ்வளவுக்கெவ்வளவு இந்த மலையின் புனிதங்கள் குறித்துக் கேள்விப்படிருந்தேனோ, அதே அளவுக்கு இந்த மலையேற்றத்தின் கடினத் தன்மைகள் பற்றிய செய்திகளையும் கேள்விப்பட்டிருந்தேன். உயிர் நண்பர்கள் உடன் வரும்போது நட்சத்திரங்களும் பயணச் சத்திரங்கள் ஆகிவிடுமே..! எது நடந்தாலும் மூவரும் இணைந்து முகம் கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து முதல் அடியை எடுத்துவைத்தோம். அதற்கு மேல், எம்மை அழைத்த எம்பெருமான் பார்த்துக்கொள்வான் என்று ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டோம்.

வாழ்வில் மறக்கமுடியாத, எண்ணிலடங்காத அனுபவங்களை எல்லாம் ஒரே நாளில் அடையப்போகிறேன் என்று அறியாமலே, சிவன் கழல் வணங்கி ஏறத் தொடங்கிய நேரம் பிற்பகல் 1 மணி. ஒரு பத்து படிகள் ஏறியிருப்போம். மேலிருந்து ஒரு குரல்... ''தம்பி! இப்போது ஏற ஆரம்பித்தால் போய்ச் சேர இரவாகிவிடும்..!''

தலையை நிமிர்த்திப் பார்த்தோம். வயோதிகர் ஒருவர் நின்றிருந்தார். 'தனிமையில் இரவுப்பொழுதை மலையில் கழிப்பது ஆபத்து. இரவுதான் பக்தர்கள் மலையேற ஆரம்பிப்பார்கள். அவர்களுடன் செல்லலாமே..!'' என்று கூறியபடி கீழிறங்கினார் அவர். இது போன்ற சம்பவங்கள் வழிநடத்தல்களாக இருக்கும்; இன்னும் சில நேரங்களில் சோதனைகள் போன்றிருக்கும். இந்தச் சம்பவத்தை மூவரும் சோதனையாகவே உணர்ந்தோம். வயோதிகரை வணங்கிவிட்டு, 'மலை உச்சியில் ஈசனைக் காணும் வரை நாம் கீழிறங்கக்கூடாது’ என்று முடிவெடுத்தோம். மீண்டும் தொடங்கியது எங்கள் பயணம்.

முதல் மலை, கிட்டத்தட்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான செங்குத்து சாய்வுப் படிகளைக் கொண்டிருந்தது. மதிய நேரமாதலால் பகலவனும் எம் பாதங்களை அதிகம் சோதித்தான். படிகளின் செங்குத்து, எம் வேகத்தை மட்டுப்படுத்த, கதிரவன் பார்வையோ எம்மை வேக நடை போட வைத்தது. வெள்ளியங்கிரி மலையின் ஏழு மலைகளும், நமது உடலின் ஏழு சக்கரங்களையும் பிரதிபலிக்கிறது என்று ஏற்கெனவே வாசித்திருந்தேன். குண்டலினி யோகப் பயிற்சியில், அதன் ஆரம்ப கட்டத்தில் புலனடக்கம், இடைவிடா உழைப்பு, தீவிர இறைபக்தி என்பவனற்றின் ஒருங்கிணைந்த பிரயோகம் சார்பளவில் மிகவும் அதிகம் தேவைப்படும் எனவும் கேள்விப்பட்டதுண்டு. முதல் மலையில் நாங்கள் பெற்ற அங்க நீர்க் குளியல் அதை உறுதிப்படுத்தியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேர மலை ஏற்றத்துக்குப் பிறகு, வெள்ளைப் பிள்ளையார் கோயிலை அடைந்தோம். பிள்ளையாரிடம் ஆசி பெற்றுத் தொடர்ந்தது எங்கள் பயணம்.

இரண்டாவது மலையில் பயணிக்கையில் மீண்டும் ஒரு குரல்... ''மூன்று பேரும் தனியாகவா செல்கிறீர்கள்?''

நிமிர்ந்து பார்த்தோம். ஓர் அடியார் மேலிருந்து கீழ் நோக்கி இறங்கிக்கொண்டிருந்தார். அவரின் நெற்றியை அலங்கரித்த திருநீற்றுக் கடலோடும், வாயோரம் முணுமுணுத்த 'சிவ... சிவா’ மந்திரத்தோடும் எங்களது மானசிக வணக்கங்களை ஏற்றுக்கொண்டார். ''ஆம் ஐயா!'' என்று ஒருங்கே விளித்தோம்.

''மேலே புலி, கரடி போன்ற விலங்குகளின் ஆபத்து அதிகம். இரவில் குளிரும் தாங்கமுடியாது. இப்படித் துணையில்லாமல் செல்கிறீர்களே!'' என்று சொல்லிக்கொண்டே இறங்கினார். அதுவரை எவ்வித பயமுமின்றிச் சென்ற எங்களை 'புலி, கரடி...’ என்ற வார்த்தைகள் சற்றே தடுமாற வைத்தது உண்மைதான்.. ''மச்சான்! இப்பவே கைபேசியில் சமிக்ஞை இல்லடா! மேல என்ன நடந்தாலும் ஊர் உலகுக்கு அறிவிக்கவும் முடியாது'' என்று தனது பங்குக்கு கிலியேற்றினான் ராமகிருஷ்ணன். சில நிமிட மௌன ஓய்வுக்குப் பிறகு, 'நமசிவாய’ என ஜெபித்துக்கொண்டு மலையேறத் தொடங்கினோம். எங்கிருந்துதான் எங்களுக்கு அப்படியரு புத்துணர்ச்சி கிடைத்தது என்று கூறமுடியவில்லை. நமசிவாய என்கிற பதப் பிரயோகத்தைப் பயன்படுத்தியதில், அப்படி ஒரு உற்சாகம் எங்களது தேகத்தில்!

அடர்ந்த காடு, உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் வருடிய தென்றல், சுற்றித் திரிந்த பிராணிகள், துணிவை வாரி வழங்கியபடி உடன் வரும் நண்பர்களின் நட்பு மொழிகள் அனைத்தும் கலந்து, புதுவித உற்சாகத்தை அளிக்க, இன்பமாக கழிந்தது ஐந்தாவது மலை வரையிலான பயணம். பெயர் தெரியாத ஏராளமான பிராணிகள் எங்களது நிழற்படக்கருவியில் சிக்கின. இரண்டாவது மலையில் பாம்பாட்டி சுனையிலும், மூன்றாவதில் கைதட்டி சுனையிலும் தண்ணீர் பாட்டிகளில் நீரை நிரப்பிக்கொண்டோம். அமுதமோ இது என்று கேட்கிற வகையில் அற்புத சுவையாக இருந்தது சுனை நீர்.

இதன் பின்னரான மலைப்பயணத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தினோம். மேலும், மூன்றாவது மலையில் அமைந்துள்ள படிகள் செதுக்கப்பட்ட வழுக்குப் பாறைகளில் பக்தர்கள் நடக்கும்போது கவனம் தேவை. நான்காவது மலை விபூதி மலை. ஏராளமான பக்தர்கள் நிலத்தைத் தோண்டி விபூதி சேகரித்திருக்கிறார்கள் என்பதை அங்கிருந்த குழிகள் எடுத்துக்காட்டின. என்னைப் பொறுத்தவரை, அவை குறிஞ்சித் தாய் உடலில் ஏற்படுத்தப்பட்ட காயங்கள். அதனால், நாங்கள் அதைச் செய்யவில்லை. அந்த மண்ணைத் தொட்டு எமது நெற்றியில் பூசிக்கொண்டோம்.

நான்காவது மலையைக் கடந்து ஐந்தாவது மலையில் செல்கையில் நேரம் மாலை 5 மணி. நல்ல குளிர் ஆரம்பித்தது. சிவன் பெயரைச் சொல்லிக்கொண்டே தொடர்ந்து வேகமாக நடந்தோம். அதுவரை இருந்த உயரமாக வளர்ந்த மரங்களைக் கொண்ட காடுகளின் வாசம் இங்கே இல்லை. மிக நீண்ட தூரத்துக்கும் பார்வையைச் செலுத்தக்கூடியதாக இருந்தது அந்தப் பகுதி. தன் பக்தர்களுக்காக குறிஞ்சித்தாய் தன் முல்லைத் தோழிக்கு விடை கொடுத்துவிட்டாள் போலும்!

ஏதாவது மலையின் இறுதியில் ஒரு வளைவைத் தாண்டிச் செல்கையில் மேகங்கள் எம்மோடு உரசிக்கொண்டு நின்றன. என்னவென்று சொல்வது அந்த இன்பத்தை! இதுவல்லவோ சொர்க்கம் என்று துள்ளிக் குதித்தோம். காட்சிகள் பலவற்றை நிழற்படக்கருவியில் சேகரித்தோம். மலைச்சரிவின் ஓரமாகத் தொடர்ந்து நடக்கையில், திடீரென ஓர் இரைச்சல்! சரிவில் இருந்த மரங்கள் பேயாட்டம் ஆடின. உருகுகிற பனிக்கட்டிகள் கொண்டு எமது தேகத்தில் அடித்தது போன்ற வலி. பாதையோரம் இருந்த மரத்தின் கிளை ஒடிந்து விழுந்தது. சூறைக்காற்றில் நிலத்தில் இருந்த மண் எழும்பிச் சுழன்றது. அருகில் இருந்த பாறைகளுக்குப் பின்னால் காற்று அடிக்கும் திசைக்கு எதிர்ப்புறமாக காதைப் பொத்திக்கொண்டு ஒளிந்துகொண்டோம். நா தன்னிச்சையாக நமசிவாய என உச்சரித்தது. பத்து நிமிடங்களுக்குப் பிறகு நிலைமை சீரானது.

வேகமாக நடந்து ஆறாவது மலையில், ஆண்டி சுனையில் குளித்தோம். தேகத்தில் ஒட்டியிருந்த களைப்பு சொல்லாமல் கொள்ளாமல் ஓடித் தப்பியது. உடை மாற்றிக்கொண்டு, ஏழாவது மலை ஏறத் தயாரானோம். அப்போது நேரம் இரவு 7 மணி. எம்மிடம் இருந்தது ஒரே ஒரு மின்சார தீவட்டி வெளிச்சம். எனவே, அதன் உதவியோடு வேகமாக ஏழாவது மலையில் ஏறிவிடுவதென உத்தேசம். ஆனால், ஏழாவது மலை இன்னும் சற்றுக் கடினம் என்பதை எமது முதல் இரு அடிகள் உணர்த்தின. அங்கே கடும் இருள்; படிகள் இல்லை; முற்றிலும் பாறைகள்! நிர்மல் மின்தீவட்டி வெளிச்சத்தைக் கொண்டு முன்னே செல்ல, குளிர் சுழற்காற்றால் சற்றே உடல் உபாதைக்கு உள்ளாகியிருந்த ராமகிருஷ்ணனை அவன் பின் போகச் செய்து, மூன்றாவதாக நான் பின்தொடர்ந்தேன். பத்து நிமிடத்துக்குப் பிறகு, மூவரும் ஓரிடத்தில் நின்று மூச்சு வாங்க ஓய்வெடுத்து உரையாடினோம்.

மீண்டும் நடக்க ஆரம்பிக்கையில், ''மச்சான், தீவட்டி வெளிச்சம் இயங்கவில்லை'' என்றான் நிர்மல். பொறியியல் மாணவர்கள் என்கிற அகந்தை எம்மை ஆட்கொள்ள, மேலும் பத்து நிமிடம் மூவரும் அதைச் சோதித்துப் பார்த்தோம். என்ன தவறு என்று தெரியவில்லை. இறுதியில், வெள்ளியங்கிரி ஆண்டவரையே வழிபட்டோம். அவரும் எம்முடன் விளையாட எண்ணினார் போலும்! தீவட்டி வெளிச்சம் இயங்கவில்லை. எத்தனை மணி நேரம் ஆனாலும் உச்சியைச் சென்றடைவது என முடிவெடுத்து, மெதுவாக நடக்க ஆரம்பித்தோம்.

காரிருளில், அந்த மலைப்பாதையில் வெறுங்காலில் பயணம் செய்வது என்பது மிகவும் சவாலாக இருந்தது. பாதையைக் கண்டறிய முடியவில்லை. உச்சி தெரிந்ததால், அதை நோக்கி நடந்தோம். திடீரென உலகத்தையே கழுவினாற்போன்று ஒரு பெரிய வெளிச்சம். பார்வை பறி போகாதிருந்தது பெரிய ஆச்சரியம்! ஆமாம்... மின்னல். மொத்த உலத்துக்கும் மின்சாரம் கொடுக்க அந்த ஒரு மின்னலே போதும் போலிருந்தது. மீண்டும் மீண்டும் மின்னல்கள் வானத்தைக் கூறுபோட்டன. நூற்றுக்கணக்கிலான தொடர் மின்னல்களை அன்றுதான் கண்டேன். அந்த வெளிச்சத்தில் பாதை தெளிவாகத் தெரிய, தொடர்ந்து நடந்தோம். ஆனால், ஒவ்வொரு மின்னலுக்கிடையில் தொடர்ந்த இடியின் பயங்கரச் சத்தம் எங்களை நிலைகுலையச் செய்தது.

ஏழாவது மலையில் முக்கால்வாசி தூரம் கடந்திருப்போம். மின்னல்களும் போராடி ஓய்ந்தன. மீண்டும் பாதையில் தொடர்ந்து நடப்பதில் சவாலை எதிர்கொண்டோம். திடீரென்று என் காலை யாரோ உரசியது போன்றிருந்தது. முதலில் அது பிரமை என்று நினைத்த நான், அது தொடரவே, சந்தேகமுற்றேன். அப்போது கால்களுக்கு இடையில் யாரோ புகுவது போலிருந்தது. நெஞ்சிலிருந்த இதயம் வயிற்றுக்கும் கழுத்துக்கும் இடையில் ஓடி விளையாடியது போன்ற ரசாயன மாற்றம் உடலில்! என் வாய் அப்போது 'அம்மா’ என்று கத்தவில்லை; 'ஐயனே’ என்று கத்தியது. தாயிற் சிறந்த தயாபரன் அல்லவோ அவன்! நானும் நண்பர்களும் ஒருங்கே பார்க்க, என் கால்களைக் கடந்து முன்னோக்கி ஓடினார் பைரவர் (நாய்). அங்கிருந்து உச்சி வரை எம்மை அழைத்து சென்றது அவர்தான்.

மலை உச்சியை அடைந்ததும், எம் தேகங்கள் சுமந்த சோகங்கள் அனைத்தும் மறைந்தன. எம்பெருமானை லிங்க வடிவில் அங்கே கண்டபோது ''மெய்யே! உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்'' என்று தழுதழுத்தது நா. அன்றிரவு உச்சிப் பாறையின் கீழுள்ள குகையில் தங்கினோம். மின்சாரம் இல்லாமல், கொசுத் தொல்லை இல்லாமல், சிவனின் திருவடியில் நல்ல உறக்கம்!

அதிகாலையில் சூரிய உதயம் கண்டு, அரை மணி நேர தியானம் முடித்துக் கீழ் நோக்கி இறங்க ஆரம்பித்தோம். எனது வாழ்வில் என்றுமில்லாத எல்லையில்லாத இன்பத்தை அன்று பெற்ற சுகம் அடைந்தேன். அந்த மலை உச்சியில் பெற்ற திருநீறு, இன்று வரை பரீட்சைகள், நேர்முகத் தேர்வு என எதிலும் எனக்கு ஏராளமான வெற்றிகளை வழங்கிக்கொண்டே இருக்கிறது.

திகில் பயணமும் திகட்டாத பேரின்பமும்..!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close