Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆறு பேர்... ஆறு நாள்... ஆன்மிகப் பயணம்... அற்புத அனுபவம்!

ஆன்மிக பயணம் 5

- எஸ்.ஹேமலதா, சென்னை

 

ஒரே வகுப்பில் படித்த தோழிகள் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டால்... அவர்களுக்குள் பெருக்கெடுக்கும் உற்சாக ஊற்றுக்குக் கேட்கவேண்டுமா! அந்த வகையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பள்ளி மற்றும் கல்லூரியில் படித்த நான் உட்பட ஐந்து தோழிகளும், என் சகோதரியுமாக ஆறு பேர் ஆறு நாட்களுக்கு ஷீரடி, மந்த்ராலயம், நவபிருந்தாவனம், ஹம்பி ஆகிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டோம்.

சென்னையிலிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10.10 மணிக்குப் புறப்படும் ஷீரடி எக்ஸ்பிரஸில் மார்ச் 20 புறப்பட்டு மார்ச் 21 மதியம் 1 மணிக்கு ஷீரடி போய்ச் சேர்ந்தோம். ஆறு பேரும் அவரவர் வீட்டில் செய்த உணவுகள், கடையிலிருந்து வாங்கிய திண்பண்டங்கள், பழங்கள் ஆகியவற்றை தாராளமாகக் கொண்டு வந்திருந்ததால், வெளியிலிருந்து மினரல் வாட்டர் பாட்டில்கள் தவிர வேறு எதுவும் மூன்று நாட்களுக்கு வாங்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

ஷீரடியில் தேவஸ்தான ரூம்களை இணையதளம் மூலம் முன்பதிவு செய்திருந்ததால், நேரே அங்கு போய், குளித்து ரெடியாகி, மதியம் 3.30 மணிக்கு பாபா தரிசனத்துக்காகச் சென்றோம். அங்கே எங்களுக்கு ஆனந்த ஆச்சர்யம் காத்திருந்தது. இதற்கு முன் நான் என் கணவருடன் சென்றபோது ஒன்றரை மணி நேரமும், என் தோழி மற்றும் அவள் கணவருடன் சென்றபோது இரண்டு மணி நேரமும் வரிசையில் காத்திருந்து சென்றுதான் பாபா தரிசனம் கிடைத்தது. ஆனால், இப்போது கூட்டமே இல்லாததால், நாங்கள் பத்தே நிமிடத்தில் மெயின் ஹாலுக்குச் சென்று, கண்குளிர நிதானமாக பாபாவை தரிசனம் செய்தோம். வெளியே வந்த நாங்கள் மறுபடியும் இன்னொரு 15 நிமிடங்களில் இரண்டாம் முறையாக சாயிபாபா தரிசனம் கிடைக்கப் பெற்றோம். அந்த ஆனந்தத்தை நம்பவேமுடியாமல், எங்களையே கிள்ளிப் பார்த்து நிஜம் என உணர்ந்து மகிழ்ந்தோம்.

அதன்பின் பாபாவுக்குக் காட்டப்படும் ஆரத்தி வைபவத்தை நேரில் காண பிரம்மப் பிரயத்தனம் செய்தோம். யார் யாரிடமெல்லாமோ விசாரித்தோம். சிறப்புக் கட்டணம் ஏதாவது இருந்தால் கொடுத்துவிடுகிறோம் என்றுகூடச் சொல்லிப் பார்த்தோம். ஆனால் அவர்கள், 'அப்படி எந்த சிஸ்டமும் இங்கே கிடையாது. யாராக இருந்தாலும் வரிசையில்தான் வரவேண்டும். அப்படி வரும்போது அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே ஆரத்தி வைபவம் பார்க்க முடியும். இல்லையேல் இல்லைதான்!’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள். நாங்கள் ஆரத்தி பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன்தான் அன்றிரவு தூங்கினோம்.

மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து, 5 மணிக்கு தரிசனத்துக்குச் சென்றால் ஏகப்பட்ட கூட்டம். வரிசையில் சென்று ஒரு மணி நேரம் கழித்து நாங்கள் மெயின் ஹாலை நெருங்கவும் ஆரத்தி ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. நிதானமாக ஆரத்தி தரிசனம் செய்தபின், எங்களில் இருவருக்கு பாபாவுக்கு சாற்றிய சால்வைகளும், ஒருவருக்கு தேங்காயும், மற்றவர்களுக்குப் புஷ்பங்களும் பிரசாதமாக கிடைத்தன. அனைவரும் விழுந்து நமஸ்கரித்தோம். பின் 'உதி’ என்று சொல்லப்படும் விபூதி கவுன்ட்டரில் இருந்து விபூதிப் பிரசாதங்கள் பெற்றோம்.

எல்லாம் முடிந்து வெளியே வர, மணி 6.30 ஆகிவிட்டது. மனத்தில் முழுத் திருப்தி நிரம்பி வழிந்தது. முதல் நாள் மாலையில் இருந்து மறுநாள் காலைக்குள் மூன்று முறை பாபா தரிசனமும், ஆரத்தி பார்க்கும் பாக்கியமும் கிடைத்துவிட்டதே!

மிக்க மகிழ்ச்சியுடன் காலை எட்டரை மணி ரயிலில் புறப்பட்டு இரவு எட்டு மணிக்கு மந்த்ராலயம் வந்து சேர்ந்தோம். இரவு தூங்கிவிட்டு மறுநாள் (மார்ச் 23) காலை (அன்றைய தினம் என் பிறந்தநாளும்கூட!) குளித்து, புத்தாடை அணிந்து நான் பாத்ரூமிலிருந்து வெளியே வர, மற்ற ஐந்து பேரும் எனக்காக ஹேப்பி பர்த்டே பாட்டுப் பாடி ஒரு புடவை பரிசளித்தார்கள். இதுவும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி!

அன்று ஏகாதசி என்பதால், கோயிலில் கூட்டமே இல்லை. வி.ஐ.பி. நுழைவுவாயில் வழியாக இலவசமாகச் சென்று நான்கு முறை ஸ்ரீராகவேந்திரரையும், எதிரே இருந்த ஆஞ்சநேயரையும் தரிசித்தோம். சத்தமே இல்லாத அமைதியான சூழலில் மண்டபத்தில் அமர்ந்து 15 நிமிடங்கள் கண்மூடி நிம்மதியாக தியானம் செய்தோம்.

அதன்பிறகு, மிகவும் திருப்தியுடன் அங்கிருந்து நவபிருந்தாவனம் புறப்பட்டோம். பரிசல் மூலம் மாலை நான்கரை மணிக்கு அந்த இடத்தை அடைந்தோம். சுற்றிலும் மலைகளும், பச்சைப்பசேல் என்ற மரங்களுமாக, பரிசல் பயணம் மிக ரம்மியமாக இருந்தது. பரிசலைவிட்டு இறங்கி சற்று தூரம் சென்று ஆழம் குறைவாக இருந்த இடத்தில் துங்கபத்ரா நதியில் நீராடினோம். அடித்த வெயிலில் வாடிப் போயிருந்த நாங்கள் தண்ணீரின் குளுமையையும், எங்களைத் தவிர யாருமே இல்லாத தனிமையையும் ரசித்தோம். மனமே இல்லாமல் தண்ணீரைவிட்டு வெளியேறி, பிருந்தாவனத்துக்கு அருகில் இருக்கும் ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் நோக்கி நடந்தோம். நடக்கும் வழியின் தனிமையும், அமைதியும் ஓர் அமானுஷ்ய உணர்வைத் தந்தன. ஸ்ரீரங்கநாதர் கோயிலில் 9 நெய் தீபங்களும், ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் 2 நெய் தீபங்களும் ஏற்றி, திருவிளக்கு ஸ்லோகம் சொல்லி, கற்கண்டு நைவேத்யம் செய்து நமஸ்கரித்தோம்.

9 பிருந்தாவனங்களையும் சுற்றி மஞ்சள் வண்ணத்தில் வட்டமாக எல்லைக்கோடு வரையப்பட்டு, அதன் உள்ளே யாரும் செல்லக் கூடாதென்று எழுதி வைத்திருக்கிறார்கள். பிருந்தாவனம் என்று அழைக்கப்படும் துளசி மாடங்களின்மீது கிறுக்கி, அவற்றின் புனிதத்தை யாரும் கெடுத்துவிடக்கூடாது என்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார்கள். மேலும், அங்கே யாரும் அத்துமீறி உள்ளே செல்லாமல் பார்த்துக்கொள்ள ஒரு பெண்மணி காவலுக்கு இருக்கிறார்.

ஒன்பது பிருந்தாவனங்களையும் ஒன்பது முறை பிரதட்சணம் செய்து நமஸ்கரித்த பிறகு, ஓரிடத்தில் அமர்ந்து 15 நிமிடங்கள் தியானம் செய்தோம். அப்போது ஒரு அதிர்வலையை (ஸ்வீதீக்ஷீணீtவீஷீஸீ) உணர முடிந்தது. பிறகு, பரிசல் முலம் வந்த வழியே திரும்பி, கார் மூலமாக இரவு 9 மணிக்கு நாங்கள் தங்கியிருந்த ஹாஸ்பெட் வந்தடைந்தோம்.

மறுநாள் காலை 6 மணிக்குப் புறப்பட்டு ஹம்பி சென்றோம். ராமாயண காலத்து கிஷ்கிந்தையான இங்கே முதலில் மிகப் பெரியதும், பழைமை வாய்ந்ததுமான ஈஸ்வரன் கோயிலுக்குச் சென்றோம்.

பின்னர், துங்கபத்ரா நதிக்கரை ஓரமாக கரடுமுரடான, மேடான பாதையில் சிறிது தூரம் சென்றால், ஒரு ராமர் கோயில் வருகிறது. அங்கு பெரிய பெரிய சிலை வடிவில் ராமர், சீதை, லட்சுமணரோடு சுக்ரீவனும் காட்சி தருகிறார். அது ஓர் அரிதான காட்சி! வாலி வதத்துக்குப் பிறகு ராமர் சுக்ரீவனுக்குக் காட்சி தந்த இடம் இது என்றார்கள். அங்கிருந்து மேலேறிச் சென்றால் ஸ்ரீரங்கநாதர் தாயாரின் மடியில் ஆனந்தமாகப் பள்ளிகொண்ட நிலையில் காட்சி தரும் சிறிய கோயிலை அடையலாம். அங்கிருந்து இன்னும் சில படிகள் மேலேறினால் 'யந்த்ரோத்தாரக அனுமன்’ ஆலயம் உள்ளது. இங்கே, அறுகோண யந்திரத்தின் நடுவே அனுமன் அமர்ந்த நிலையில், கையில் ஜெபமாலையுடன் ராமநாமத்தைத் தாரக மந்திரமாக ஜெபித்தபடி காட்சிதருகிறார். இதுவும் வேறெங்கும் காணமுடியாத அரிய காட்சி!

அதன்பின் 28 அடி உயரம் 20 அடி அகலத்தில், காலை மடக்கி அமர்ந்திருக்கும் 'கடலே காலு’ கணபதியைத் தரிசித்தோம். மிகப் பிரமாண்டமான சிலை. அதைப் பிரதட்சணம் செய்துவிட்டு, மடக்கி இருக்கும் கால் பாதத்தைத் தொட்டுக் கும்பிட்டால், கால் சம்பந்தப்பட்ட எல்லா நோயும் குணமாகும் என்றார்கள்.

தொடர்ந்து, 'ஹஸாரே ராமா’ கோயிலுக்குச் சென்றோம். அதாவது, ஆயிரம் ராமர் சிற்பங்கள் செதுக்கப்பட்ட கோயில் இது. கோயிலின் சுற்றுச்சுவர் மற்றும் தூண்களில் ராமாயண காவியத்தையே சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள். பத்துத் தலைகளுடன் ராவணன் விழுந்துகிடக்கும் காட்சி மிக அற்புதமாக இருந்தது. தவிர, அங்கிருந்த மொத்த சிற்பங்களுமே கண்கொள்ளாக் காட்சி!

அதன்பின்னர், 'பாதாள லிங்கம்’ கோயில் சென்றோம். அங்கே ஒரு 'கைடு’ கையில் டார்ச்லைட் வைத்துக்கொண்டு நமக்கு வழிகாட்டுகிறார். பாதாளத்தில் தண்ணீர் ஓடுகிறது. கும்மிருட்டு. வழுக்கல் வேறு. டார்ச் வெளிச்சத்தில் கல் பதிக்கப்பட்ட இடத்தில் ஜாக்கிரதையாகக் கால் வைத்து நடந்துசென்றால், பிரமாண்டமான பாதாள லிங்கத்தை டார்ச் லைட் வெளிச்சத்தில் தரிசிக்கலாம். அது கொஞ்சம் 'த்ரில்லிங்’ அனுபவமாக இருந்தது.

அதையடுத்து மிகப் பெரிய, பழைமையான கிருஷ்ணன் கோயிலை தரிசிக்கச் சென்றோம். நிறைய சிற்ப வேலைப்பாடுகளை அங்கே காணமுடிந்தது. ஆனால், ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் இல்லை. முகம்மதியர் படையெடுப்பின்போது, பாதுகாப்பு கருதி, கிருஷ்ண விக்கிரகத்தை துவாரகைக்கு அனுப்பிவைத்துவிட்டதாகச் சொன்னார்கள்.

பிறகு, கிருஷ்ணதேவராயர் காலத்து அரண்மனைக்குச் சென்றோம். அரண்மனை வாயிலில், கல்லால் ஆன தராசு முன்பு இருந்ததாம். இப்போது இருபுறமும் உயரமான கல்லும், இரண்டுக்கும் மேலே நீளவாட்டில் ஒரு கல்லும் மட்டுமே உள்ளது. இடையில் இருந்த தராசுத் தட்டுக்கள் இல்லை. இங்கே புரந்தரதாசர் மண்டபம் உள்ளது. அதன் அருகே துங்கபத்ரா நதி பிரவாகமாக ஓடுகிறது. அதில் கால் நனைத்து அமர்ந்து, சிறிது நேரம் இயற்கையை ரசித்தோம். எல்லாம் நிறைவாக இருந்தது.

ஒரே ஒரு குறைதான். மிகப் பழைமை வாய்ந்த பல கோயில்களில் விக்கிரகமோ, அர்ச்சகரோ, பூஜைகளோ இல்லை. கர்நாடக அரசு மனது வைத்தால், இந்தக் கோயில்களில் ஆறு கால பூஜைக்கு ஏற்பாடு செய்யலாம். கொஞ்சம் மெனக்கெட்டுப் புனரமைத்தால் மேற்கூறிய அனைத்து இடங்களையும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளாக்கி, நுழைவுக் கட்டணம் மூலம் மிகப்பெரிய வருமானத்தை அரசு ஈட்ட முடியும். நிறைய வெளிநாட்டவர்கள் சிற்பக்கலையை ரசிக்கவென்றே வருகிறார்கள்.

எல்லாம் முடிந்தபின், ஹாஸ்பேட் வந்து இரவு உணவை முடித்து, அங்கிருந்து ரயிலில் பெங்களூரும், பெங்களூரிலிருந்து சென்னையும் வந்து சேர்ந்தோம்.

பலவித அனுபவங்களையும், ஆனந்தத்தையும், ஆச்சர்யங்களையும் தந்த இந்த ஆறு நாள் ஆன்மிகப் பயணம், என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.

நவ ஜோதிர்லிங்க தரிசனம்!

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close