Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கண்கண்ட தெய்வம் கனகதுர்கா!

ஆன்மிக பயணம் 7 

- டாக்டர் டி.சுகுமார், சங்கராபுரம்.

 படைத்தல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் ஆகிய ஐந்தொழில்களையும் நிகழ்த்திடும் அந்த சிவப் பரம்பொருளுக்கும் இயங்கிட சக்தி தேவை. சக்தியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தவே அந்த மகாதேவனும் தனது இடப்பாகத்தை அன்னைக்குத் தந்தார். நாம்கூட ''சக்தி இருந்தால் செய்; இல்லாவிட்டால், சிவனே என்று கிட!'' என்று சொல்வது உண்டு.

தீய சக்தியை அழித்து தர்மத்தை நிலைநாட்ட அன்னை எழுந்தருளிய பல சக்தி பீடங்கள் நிறைந்தது நம் பாரத நாடு. அத்தகைய புகழ்பெற்ற தலங்களில் ஒன்றுதான் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா ஆலயம். அங்கே சென்று வருவது நிம்மதி, மனநிறைவு ஆகியவற்றுடன் சிலிர்ப்பையும் தருக்கூடியது.

விஜயவாடா நகரின் மத்தியில், இந்திரகேலாத்திரி குன்றில் சுயம்புவாக எழுந்தருளி, தங்க விமானத்தின் கீழ் அருள்பாலிக்கும் கனகதுர்கையைத் தரிசிக்க நாங்கள் குடும்பத்துடன் சென்றுவந்த அனுபவம் நினைக்கும்போதெல்லாம் சிலிர்ப்பைத் தரக்கூடியது.

கடந்த மே மாதம் புதுடில்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டோம். சரியாக 6 மணி நேரப் பயணத்தில் விஜயவாடா சந்திப்பு வந்துவிடுகிறது. ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றின் அருகில் நியாயமான தொகையில் தரமான தங்கும் விடுதிகள் பல உள்ளன.

சிறிது ஓய்வுக்குப் பிறகு, விஜயவாடாவைச் சுற்றிக் குளிர்காற்றை வீச வைக்கும் ஜீவநதியாம் கிருஷ்ணா நதிக்கரையை அடைந்தோம். நீண்ட அழகிய பாதுகாப்பான படித்துறை. பாதுகாப்புக்குச் சங்கிலி அமைத்திருக்கிறார்கள். அன்னையை மனத்தில் நினைத்து ஆலய திசை நோக்கி நமஸ்கரித்து மூழ்கி எழுந்ததும், புதிதாகப் பிறந்த உணர்வு ஏற்படுகிறது நம்முள்! பின்னர், ஆங்காங்கே உள்ள நன்னீர்க் குழாய்களில் நீராடி உடைமாற்றிய பின்பு, பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து அருளும் அம்பிகையின் இடம் தேடி, பசுவைத் தொடரும் கன்றாய்ப் புறப்பட்டோம்.

 

ஏற முடிந்தவர்கள் படி ஏறிச் செல்லலாம். மலை அடிவாரத்தில், ஆலயத்தின் நிர்வாகத்தால் இயக்கப்படும் வாகனங்கள் உண்டு. அதில், சுமார் 10 நிமிடங்களில் ஆலயத்தை அடையலாம். அதற்கு முன், எங்கள் ரகு மாமா சொன்ன ஆலயக் கதையைக் கேட்போமா?

''இந்திரகீலா என்ற முனிவர் மலை உருவில் தவம் புரிய, மகிஷாசுரன் அவரின் தவத்தைக் கெடுத்ததோடு, மற்றவர்களையும் துன்புறுத்தி வந்தான். எனினும், முனிவரின் கடும் தவம் தொடர்ந்தது. முனிவரின் தவத்தை மெச்சி அங்கே தோன்றிய அம்பிகையிடம், தன் தலையை இருப்பிடமாகக் கொண்டு அப்பகுதியை காத்தருள வேண்டும் என்று வேண்டினார் முனிவர். பிள்ளையின் குறை தீர்க்க, அசுரனான துஷ்டனைக் கொன்று, மகிஷாசுரமர்த்தினியாகி வெற்றிவாகை சூடி அங்கேயே குடிகொண்டாள் அம்பிகை. அன்றுமுதல் இன்றுவரை விஜயவாடாவையும், மக்களையும் காத்து ரட்சித்து வருகிறாள் அன்னை கனகதுர்கா.

பாசுபத அஸ்திரத்தை சிவபெருமானிடம் வேண்டி, விஜயனான அர்ஜுனன் பெற்ற இடம் இது என்பதால் விஜயவாடா எனப் பெயர் வந்தது என்பார்கள்'' என்று மாமா கதையை முடிக்கவும், நாங்கள் பயணித்த சிற்றுந்து ஆலயத்தை அடைந்தது.

வரிசையாக நிறையக் கடைகள். அவற்றைப் பார்த்துக்கொண்டே அர்ச்சனைத் தட்டு வாங்கி, பக்தர்களின் வரிசையை அடைந்தோம். செவ்வாய், வெள்ளியில் கூட்டம் அதிகம் இருக்கும் என்றார்கள். அப்படியான நேரங்களில் ரூ.100 செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யலாம். தரிசனம் செய்யச் செல்லும் வழியில் லட்டு தருகிறார்கள். பக்தர்களின் வரிசையை நெருங்கும்போதே தங்க விமானம் தகதகவென ஒளிவீசுவதை பார்க்கலாம்.

சில நிமிடங்களில், வீரமும் கருணையும் கலந்து நம்மை அருள் செய்து காக்கும் அன்னையின் தரிசனம் நமக்குக் கிடைக்கிறது. சுமார் 4 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் எட்டுக் கரங்களிலும் ஆயுதம் ஏந்தி, மகிஷாசுரனை மிதித்து, ஒளிவீசும் ஆபரணங்களுடன் வண்ண மலர்களால் தொடுத்த மாலைகளைச் சூடி நிற்கும் அன்னையைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் இருந்தது. நகரவே மனம் இல்லை.

என்ன செய்வது? நமக்குப் பின் நிற்கும் ஆயிரக்கணக்கானோர் அருள்பெற வேண்டும் அல்லவா? வைத்த கண் வாங்காமல் அன்னையைப் பார்த்துக்கொண்டே நகர்ந்தோம்.

நமது அறியாமை என்னும் ஆணவம் நீங்கி, மாயை என்னும் திரை விலகிடவும், கன்மம் என்னும் வினைகளை மகாதேவனாகிய சிவபெருமான் சுட்டெரித்து, மீண்டும் பிறவாநிலை வழங்கிடவும் அன்னையிடம் கோரிக்கை வைத்து, விடைபெற்று வெளியில் வந்தோம்.

அங்கே பிரசாதம் தந்துகொண்டிருக்க, அதைப் பெற்றுக்கொண்டு மெள்ள நடந்து ஸ்ரீமல்லேஸ்வர ஸ்வாமி ஆலயத்தை அடைந்தோம்.

எல்லா உயிர்களுக்கும் தாய், தந்தையாகி நின்று, அவற்றைக் காப்பவன் அல்லவா ஈசன்? எண்குணத்தான் அவனின்றி அசைவது ஏதுமில்லை அல்லவா? அப்படிப்பட்ட இறைவனைக் கண் குளிர தரிசித்தோம். பரவசம் ஆனோம்.

பின்னர், சுற்றுப்புறப் பரிவார தெய்வங்களை வணங்கி, படிக்கட்டுகள் வழியே காலார நடந்து கீழே இறங்கினோம். வழிநெடுக கடைகள். வேண்டிய பொருட்களை வாங்கிக்கொண்டு, விடுதியை அடைந்தோம்.

ஊருக்குப் புறாப்படத் தயாரானபோது, உடன்வந்த ரகு மாமா, ''இங்கே தசரா (நவராத்திரி) மிகவும் விசேஷம்! விழாவின் 10 நாட்களும்... அன்னையை திரிபுரசுந்தரி, அன்னபூரணி, காயத்ரி, லலிதா, சரஸ்வதி, மகாலட்சுமி, மகிஷாசுரமர்த்தினி, ராஜராஜேஸ்வரி எனத் தினமும் பல்வேறு அலங்காரங்களில் தரிசிக்கலாம். அதைக் காணக் கண் கோடி வேண்டும்'' என்று சிலாகித்தார். ''அடுத்த முறை வரும்போது, மலைக்கோயிலில் உள்ள பாணக நரசிம்மரையும் தரிசிக்க முடிந்தால் இன்னும் விசேஷம்!'' என்றார்.

அதற்கேற்பத் திட்டமிட்டு வரவேண்டும் என முடிவு செய்து, அங்கிருந்து கிளம்பத் தயாரானோம்.

நீங்கள் எப்போது புறப்படுகிறீர்கள், கனகதுர்கா அன்னையை தரிசிக்க?

அமைவிடம்: சென்னை- டில்லி, கல்கத்தா ரயில் பாதையில், சென்னையிலிருந்து 400 கி.மீ. தூரத்தில் விஜயவாடா உள்ளது. விமானம், பேருந்து வசதியும் உண்டு

சிவனும் நாராயணனும் பின்னே அன்னபூரணியும்!.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close