Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பரவசமூட்டும் பர்வதமலை!

ஆன்மிக பயணம் 8

- பரிமளா ராஜகுமாரன், சென்னை

 

 

அன்றாட வாழ்வில் சில உன்னத மனிதர்கள் வழியாக நல்ல தகவல்களை இறையருள் நமக்கு அனுப்பும்; அவற்றை உணர்ந்து பின்பற்றும்போது, ஆச்சரியமான அனுபவங்கள் நமக்குக் கிடைக்கும் என்பது ஆன்மிகத்தில் திளைத்த ஆன்றோர் வாக்கு. இதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் நான். அத்தகைய தெய்வீக சமிக்ஞைகளை சட்டெனப் பற்றி, எந்த நடைமுறைச் சிக்கல்கள் பற்றியும் யோசிக்காமல், சிரமேற்கொண்டு அப்படியே செயல்படுத்திவிடுவேன். இந்தப் பர்வதமலை மலைப்பயணமும் அந்த வகைதான்!

அது மூன்று வருடங்களுக்கு முந்தைய கோடைகாலம். நானும் என் கணவர் ராஜகுமாரனும் சென்னை, கே.கே. நகரிலிருந்து, மாம்பலத்துக்கு ஆட்டோவில் வந்துகொண்டிருந்தோம். அப்போது என் கணவர் 'பரிகாரத் திருத்தலங்கள்’ என்னும் ஆன்மிக- ஜோதிடத் தொடரை இயக்கிக்கொண்டிருந்தார். நான் அந்தத் தொடரின் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரிந்தேன்.

ஆட்டோவுக்குள் அமர்ந்திருந்த எங்களின் பேச்சு, அந்தத் தொடரின் ஆலயப் படப்பிடிப்பு அனுபவங்களைப் பற்றியும், அடுத்து ஷூட் பண்ணவேண்டிய கோயில்கள் பற்றியும் இருந்தது. மாம்பலத்தில் ஆட்டோவை நிறுத்தி இறங்கிக்கொண்டோம். அப்போது ஆட்டோ டிரைவர் பணத்தை வாங்கிக்கொண்டு, எங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்...

''நீங்க பேசினதுலேருந்து, நீங்க என்ன பண்ணிட்டிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். நான் ஒரு கோயிலுக்கு உங்களைக் கூப்பிடுவேன். கண்டிப்பா வருவோம்னு சொன்னா, அந்தக் கோயிலப் பத்திச் சொல்றேன். வருவீங்களா?''

இப்படிக் கேட்ட அந்த ஆட்டோ டிரைவர், நெற்றி நிறையத் திருநீறும் குங்குமமும் வைத்திருந்தார். பார்ப்பதற்கு ஒரு சிவனடியார் போலவே இருந்தார். அவரின் உரிமையும் கண்டிப்பும் கலந்த அந்தக் கேள்வி, எனக்கு ஏதோ ஒரு இறை சக்தியின் கட்டளைப் போலவே தெரிந்தது. தயக்கத்தோடு என் கணவர் என்னைப் பார்க்க, நான் கொஞ்சமும் தயக்கமின்றி, 'கண்டிப்பா வர்றோம்!'' என்றேன்.

'நீங்க கேமராவோட வாங்க. உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் நான் பண்றேன்' என்றார் அந்த ஆட்டோ டிரைவர்.

சொன்னதோடு நிற்கவில்லை... உடனேயே தன் செல்போனில் பர்வதமலைப் பயணக் குழு ஏற்பாட்டாளர்களிடம் பேசி, எல்லா விவரமும் சொல்லி, எங்களது பயணத்தை உறுதி செய்தார். மறுநாள் நாங்கள் போகவிருக்கும் கோயில் திருவண்ணாமலை அருகில் உள்ள பர்வதமலை என்பது மட்டுமே அப்போது எங்களுக்கு தெரியும். மற்றபடி அந்த மலைக் கோயிலைப் பற்றிய வேறெந்த விவரமும் தெரியாது.

நாங்களும் உடனேயே கேமரா யூனிட்டுக்குப் போன் செய்து கேமராவை புக் செய்துகொண்டோம்.

மறுநாள் காலை 11 மணிக்கு, சென்னையிலிருந்து ஒரு வேனில் புறப்பட்டு, மாலை திருவண்ணாமலையை அடைந்தோம். அங்கிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் தென்பாதிமங்கலம் என்ற இடம் வந்தது. அங்குள்ள தீர்த்ததில் நீராடி, அங்குள்ள பச்சையம்மனுக்கும் கம்பீரமாக வீற்றிருக்கும் காவல் தெய்வங்களுக்கும் பூஜைகள் செய்துவிட்டு, பர்வதமலைப் பயணத்தைத் தொடங்கியபோது, மாலை மங்கி இருள் சூழ்ந்தது. அடிவாரக் கடைகளில் 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறிய டார்ச் லைட்டை, நாங்களும் எங்களைப் போல் குழுமியிருந்த எல்லா பக்தர்களும் வாங்கிக்கொண்டோம்.

கொஞ்ச தூரம் முறையாகக் கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகளில் ஏறினோம். அதன் பிறகு, ஒரே இருட்டு வழிதான்! மலைக் கல் பாதை. பௌர்ணமிதோறும் பர்வதமலைக்கு யாத்திரை சென்ற அனுபவமிக்க குழுவில்தான் நாங்கள் வந்துள்ளோம் என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்தது. அவர்கள் எங்களுக்குத் தைரியம் சொல்லி வழிகாட்டினர். ''நாங்கள் சொல்வதை மட்டும் பின்பற்றியபடி பின்தொடர்ந்து வாருங்கள்'' என்றனர்.

இருளையும் கரடுமுரடான மலைப்பாதையையுமே எங்கள் கண்களும் கால்களும் உணர்ந்தன. சின்னச் சின்னப் புள்ளிகளாக எல்லோர் கையிலும் இருந்த டார்ச் லைட்டின் மிகக் குறைவான வெளிச்சத்தில், 'ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...’ என ஆனந்த முழக்கமிட்டுக்கொண்டே மலையேறியபடி இருந்தோம். வழித்துணையாக பைரவர் வடிவான நாய் ஒன்றும் துணைக்கு வந்தது. அதைக் கண்டு நெகிழ்ந்தேன்.

ஓரிடத்தில், மலைப்பாறையின் பக்கவாட்டுச் சுவர் போல் தோன்றியது. இன்னொரு இடத்தில், இரண்டு பாறைகளுக்கிடையே அகலம் குறைவான தொங்கும் கம்பிப் பாலம் போல் தென்பட்டது. சிறிது தூரம் ஒரு தண்டவாளத்தில் நடப்பது போலிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மேலேறிக்கொண்டிருக்கிறோம் என்பதைத் தவிர, எதையும் துல்லியமாகப் பார்க்க இயலவில்லை. எல்லாம், கால்களும் கண்களும் உணர்ந்தவைதான். இப்படியே சுமார் 8 மணி நேரத்துக்கு எங்கள் பயணம் தொடர்ந்தது.

விடியற்காலை 3 மணி இருக்கும். ''மலைக்கோயிலுக்கு வந்துவிட்டோம்'' என்றனர். அங்கு மின்சாரம் இல்லை; தண்ணீர் இல்லை. இரண்டு சிறிய கோயில்கள். ஒன்றில் மல்லிகார்ஜுனர். இன்னொன்றில் அகிலத்தைக் காக்கும் அன்னையான ஸ்ரீபிரம்மராம்பிகை சிறிய வடிவில் அழகுற வீற்றிருக்கிறாள். கோயில்களில் குருக்களோ பூசாரியோ யாரும் இல்லை. எங்கள் குழுவிலிருந்த ஒரு பெரியவர் சிவனுக்கு நீரால் அபிஷேகம் செய்து சூடமேற்றி, பூஜைகள் செய்து முடித்தார். இங்கே பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் நாம் மலையேறும்போதே கொண்டு வரவேண்டும்.

அடுத்தது, அம்மனுக்கும் அதே பூஜைகளைச் செய்யவேண்டும். எங்கள் குழுவிலிருந்த ஒரே பெண் (சிறுமியான என் மகளைத் தவிர்த்து) நான்தான் என அப்போதுதான் தெரிந்தது. மனமும் மெய்யும் உருக நான் அம்மனைத் தொட்டு நீராட்டி, அலங்காரம் செய்து, கற்பூர ஆரத்தி காட்டிய அந்தத் தருணத்தை இப்போது நினைத்தாலும் என் உடல் சிலிர்க்கிறது. உள்ளத்தில் ஏதோ ஒரு இனம்புரியாத தெய்வீக மணம் சட்டெனப் பரவுகிறது. அந்தப் பரவச நிலையை வர்ணித்துக் கூற வார்த்தைகளும் உண்டோ?

ஆனந்தம்... ஆனந்தம்.. பரிபூரண ஆனந்தமே..!

கடவுளை நாம் உணர்வதும், அவன் நமக்கு உணர்த்துவதும் இம்மாதிரியான பரவச அனுபவமே என்பதை அன்றுதான் நான் முழுமையாக உணர்ந்தேன். மெள்ள மெள்ளப் பொழுது விடியும்போதுதான் நாங்கள் கடந்து வந்த பர்வதமலையின் பாதை எவ்வளவு கடினமானது, எத்தகைய இடர் மிகுந்தது என்பது எங்களுக்கு விளங்கியது. அதைக்கூட வார்த்தைகளில் இங்கு வர்ணிப்பது கடினம்.

புனிதப் பயணங்களில் ஏற்படும் அனுபவங்களிலேயே எல்லாம் வல்ல இறைவனின் எங்கும் நிறைந்த எதிலும் உறைந்த இறைத் தன்மையை நாம் கண்டுகொள்ள முடியும் என்பதை இந்தப் பர்வதமலைப் பயணம் எனக்கு உணர்த்தியது.

எல்லாம் அவன் அருளாலே... அவன் தாள் வணங்கி..!

கண்கண்ட தெய்வம் கனகதுர்கா!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close