Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சபரிமலையில் சிலிர்ப்பான பயணம்!

ஆன்மிக பயணம் 9

- பி.கிருஷ்ணமூர்த்தி, மும்பை

 17.11.1993. என்னால் மறக்க முடியாத நாள் இது. 'நீ எதைத் தேடி வந்தாயோ, அது நீயே(மட்டும்)தான். உன்னுள்தான் இறைவன் உள்ளான்!’ என்ற தத்வமஸி மந்திரம் எனக்கு உபதேசிக்கப்பட்ட தினம் அது. சபரிமலை யாத்திரையில் இந்தப் பேரின்ப பரவச அனுபவம் எனக்குக் கிடைத்தது.

சபரிமலை யாத்திரைக்காக மும்பையிலிருந்து, 7 வயது நிரம்பிய என் மூத்த மகன் தீபக்குடன் சபரிமலை புறப்பட்டேன். நவம்பர் 13-ஆம் தேதி மும்பை குர்லா டெர்மினஸில் ஏறிய நாங்கள் மறுநாள் திருச்சூர் வந்து சேர்ந்தோம். பிறகு... குருவாயூர், திருப்ரயார், சோட்டாணிக்கரை, குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சங்கோவில் என தரிசனம் செய்து, 17-ஆம் தேதி எரிமேலி வந்தடைந்தோம்.

 

மாலை சுமார் 5 மணி அளவில் பம்பையை நெருங்கினோம். இளந்தூரல் சற்றும் இடைவெளியின்றி சலசலக்க, மாலை நேரமே தெரியாது இருள் கவ்விக்கொண்டது. வயதான பெண் ஐயப்பமார்களை 'டோலி’யில் மேலே செல்லுமாறு எங்கள் குருசாமி பணித்திருந்தார். இருமுடிகளுக்கு ப்ளாஸ்டிக் ஷீட் போட்டுக் கொள்ளணும் என்றும் உத்தரவு. என் பையனை வயதான பெண்மணி ஒருவருடன் டோலியில் அனுப்பிவைத்தோம். ஆனாலும், எனக்கு மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.

குழந்தையை யாருடனோ இருட்டில் தனியே விட்டுவிட்டோமே என்று என் மனம் பதறினாலும், ''கவலைப்படாதே மூர்த்தி! எல்லாம் அவன் செயல்னு விட்டுவிடு!'' என்றார், எங்களுடன் வந்த குமார். முன்னே... என் மகன் டோலியில் அழைத்துச் செல்லப்பட... நான் நடைப்பயணமாக வர... 'இனி, பையனை சந்நிதானத்தில்தான் பார்க்க முடியும். அதுவரைக்கும் எந்த பிரச்னையும் வரக்கூடாது, ஐயப்பா!’ என்கிற சிந்தனைதான் மனம் முழுக்க ஓடியது. நான் வேகமாக மலையேறினேன்.

ஓரிடத்தில், கன்றின் கதறலைக் கேட்டு ஓடிவரும் தாய்ப்பசு போன்ற பிரமை என்னுள் ஏற்பட, அருகிலிருந்த டோலியைக் குனிந்து 'டார்ச்’ அடித்துப் பார்த்தேன். அதனுள், அந்த வயதான பெண்மணி அமர்ந்திருக்க, அவரது கால்களுக்கு இடையில், பாட்டியின் புடவையை தனது பிஞ்சுக் கைகளால் பற்றிக்கொண்டு என் மகன் இருந்ததைக் கண்டு 'பக்’கென்று இருந்தது எனக்கு. டோலி தூக்குபவர்கள் வேகமாக ஓடும்போது, என் மகன் தடுமாறிக் கீழே விழுந்துவிடுவானோ என்று அஞ்சினேன். என் மகனுக்கும் அதே பயம் போல! ''அப்பா! நானும் உன்னுடனேயே நடந்து வந்துடறேனே'' என்றான். அவனை எப்படி அழைத்துச் செல்வது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. முதலில், குழந்தையை நடத்தி அழைத்துச் செல்ல குருசாமியின் அனுமதி கிடைக்காது. இரண்டாவது... பெரியவர்களாலேயே அந்த மழை நேரத்தில் மலையேறுவது என்பது சிக்கலான காரியம்.

எனவே, என் மகன் தீபக் நடந்து வருகிறேன் என்றதும் எனக்கு பயமாகத்தான் இருந்தது. ஒருவேளை, 'என்னால இதுக்கு மேல நடக்க முடியலைப்பா. என்னைத் தூக்கிட்டுப் போ’ என்று அவன் சொல்லிவிட்டால் என்ன செய்வது? அதனால், சட்டென்று முடிவெடுக்க முடியாமல் திணறினேன்.

''குழந்தை நம்மோடு வரட்டும். நீ வேணா பாரேன்... அந்த மணிகண்டன் நம்மை அவன் சந்நிதி வரைக்கும் பத்திரமாக அழைத்துச் செல்வான்'' என்று தைரியம் கொடுத்தார் அருகில் வந்துகொண்டிருந்த நண்பர் குமார். நானும் அவர் தந்த நம்பிக்கையில், டோலியில் இருந்த தீபக்கை இறக்கிவிட்டு என்னுடன் அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

பம்பா கணபதியை அடைந்தபோதும், மழைச்சாரல் விடவில்லை. நசநசத்துக்கொண்டே இருந்தது. எல்லோரும் தலையில் வைத்திருந்த இருமுடியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டோம். என் பையனும்தான்!

அப்போதெல்லாம் ஐயப்பன் சந்நிதானம் செல்லும் வரையிலான மலைப்பாதை அவ்வளவு பாதுகாப்பானது கிடையாது. எல்லா இடங்களிலும் ராட்சதப் புல் முளைத்திருக்கும். அதுபோக, 'கால் போன போக்கில்’ பரவியிருக்கும் மரவேர்கள், செப்பனிடப்படாத பாதை ஆகியவை நம்மை இன்னும் பயமுறுத்தும். கால் வைக்கும் இடம் சரியானதா, சரிவானதா என்பதே தெரியாது. போதாக்குறைக்கு, நாங்கள் சென்ற வேளையில் பெய்துகொண்டிருந்த மழையில் மண் குழைந்து கிரீஸாக மாறிப்போயிருந்தது. நான் ஒரு அடி முன்னே வைத்தால், இரண்டடி பின்னே இழுத்தது. என்னை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்படி பையனிடம் சொன்னேன். அவனும் அவ்வாறே பிடித்துக்கொண்டு என்னுடன் நடந்தான். ஆனாலும், அவ்வப்போது எனக்கு கால் சறுக்கியது.

''அப்பா..! நீ சறுக்கறியே. என் கையைப் புடிச்சுக்கோ!'' என்று அவன் சொன்ன வார்த்தை, அங்கே மூடியிருந்த மாலை நேரத்து இருளை சன்னமாகக் கிழித்தது. அக்கணத்தில்தான், 'நான்’ எனும் அகந்தை இறந்ததை உணர்ந்தேன். அந்த இடத்தில் என் மகன் தந்தையான எனக்கு குருவானான். அவன் சொன்ன வாக்கு தெய்வ வாக்காகவே, அந்த ஐயப்பனே சொன்னது போல்தான் அப்போது எனக்குத் தோன்றியது. அந்த உந்துதலில் தொடர்ந்து நடந்தோம்.

அப்பாச்சி மேடு வந்து போனது. சபரி பீடம் வந்து போனது. மழை காரணமோ என்னவோ, ஒருகட்டத்தில் கூடவந்தோர் நலிந்து நான், என் மகன் உள்பட நால்வர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டோம். மூர்த்தியையும் சேர்த்து எங்களுடன் தனித்துவிடப்பட்ட நான்காமவர் எங்கள் குழுவைச் சேர்ந்த ஸ்ரீதர் ஜவார்கர் என்ற மராட்டிய ஐயப்பன்.

தீபக், கன்னி ஐயப்பனாயிற்றே! அவன், தன்னுடைய ஆல் குச்சியை 'சரங்குத்தி ஆல்’-ல் போடட்டும் என்றெண்ணி, அந்த இடம் நோக்கிய (தற்போதைய மாரக்கூட்ட வலது பக்க மேலெழுந்த பாதை வழி) பாதையில் நடக்க ஆரம்பித்தோம். வழி நெடுக ஆளுயரமாக வளர்ந்திருந்த ராட்சதப் புற்கள் எங்களை மிரட்டின. செல்லும் வழியில் போடப்பட்டிருந்த ட்யூப் லைட்டுகள் எரியவில்லை. நாங்கள் கொண்டு வந்த டார்ச்லைட்தான் பெரிதும் உதவியாக இந்தது. ஒருகட்டத்தில், அதுவும் இருட்டுக்குப் பயந்து மெலிந்து போனது.

அந்த நேரத்தில் கேட்ட எந்த ஒரு சிறு சத்தமும் எங்களுக்கு பயத்தை ஊட்டியது. நாக்கு உலர்ந்தது. ரத்த நாளங்கள் சுருங்கின. கால்கள் பின்னிக்கொண்டன. சலசலவென வானத்திலிருந்து பெய்த மழைத்துளிகள் அங்கே வளர்ந்துவிட்டிருந்த ராட்சதப் புற்கள் மீதும், கீழே விழுந்து கிடந்த இலைச் சறுக்குகளின் மீதும் விழ... அதனால் எழுந்த சலசலப்பு எங்களை அப்படி பயமுறுத்தியது.

சரியாகச் செப்பனிடப்படாததால் நாங்கள் நடந்துசென்ற பாதையில் மேடு- பள்ளம் தெரியவில்லை. எதிரில் என்ன இருக்கிறதென்றும் தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம், பயமறியாத கன்றாக நடந்து வரும் தீபக்கின் தொடர்ந்தேத்தியான கேள்விகளுக்குப் பதிலளிக்க எங்க மூவரில் யாருக்கும் திராணியில்லை. கழுத்தில் அணிந்திருந்த துளசி மணிமாலையைக் கெட்டியாகப் பிடித்தவாறு, மனசுக்குள்ளேயே சரண கோஷம் எழுப்பியபடி நடந்தோம், நால்வரும்!  

மலைப் பாதையில் ஏறிக்கொண்டே இருந்தோம். சபரிகிரிவாசனின் சந்நிதானம் எப்போது வரும் என்பதே தெரியாமல் இருந்தது. 'ஏ! ஐயப்பா! இதென்ன சோதனை! இன்னும் எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் இப்படியே நடக்கவேண்டும்!’ என்று எண்ணியபோது தலை சுற்றிற்று. அந்த 1 கி.மீ. தூரப் பயணம், ஏதோ வாழ்க்கையின் எல்லைக்கே போவது போன்று தோன்றியது.

ஒருவழியாக நேரம் கடந்து, தூரம் கரைந்து, 'சரங்குத்திஆல்’ என்கிற இடம் சற்று தூரத்தில் மங்கலான ட்யூப்லைட் வெளிச்சத்தில் தெரிந்தது. அக்கணமே, ''ஸ்வாமியே... சரணம் ஐயப்பா!'' என்று அடிவயிற்றிலிருந்து குரல் எழுப்பி மெய்சிலிர்க்கக் கோஷமிட்டோம்.

சரங்குத்தி ஆலின் அருகில் படுத்திருந்த வனப்பகுதிச் சிப்பந்திகள் வாட்சைப் பார்த்தவாறு, 'மணி இரவு 9.30 ஆகிறது. இன்னும் இந்தப் பாதையை நாங்கள் திறக்கவில்லையே?’ என்றார்கள். பிறகு, பதினெட்டாம்படி அருகே குழப்பத்துடன் இருந்த எங்கள் குழுவினரைக் கண்டு ஆனந்தித்தோம். பிரிந்தவர்கள், மறுபடியும் இணைந்தோம்.

படித்தேங்காயை உடைத்துவிட்டு, படிகளேறி கொடிமரம் அருகே வர, பளிச்சென்று 'தத்வமஸி’ என்ற மந்திரம் அழைத்தது; அணைத்தது. அதற்கான விளக்கம் புரிந்தவுடன், என் ஐயன் மீது கர்வம் கொண்டேன். இன்றும் எனக்கு அவன்தான் எல்லாம்!

பரவசமூட்டும் பர்வதமலை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close