Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹிந்தி நை ஆத்தா?!

ஆன்மிக பயணம் 10

- கே.செல்வி, ஈரோடு-1

ரோடு ரயில் நிலையம். 2012 ஆகஸ்ட் 8-ஆம் தேதி, காலை 8 மணி. வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் புறப்படத் தயார் நிலையில் இருந்தது.

நாங்கள் 7 பேர் (எல்லோருமே பெண்கள்) பலவித உணர்வுகளுடன், கூடவே ஒருவித பரவசத்துடன் வழியனுப்ப வந்த கணவன்மார்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டிருந்தோம். அவர்களில் இருவர் மட்டும் சற்றுக் கவலையுடன், ''ஆண் துணை இல்லாமல் ஷீர்டி வரை இவர்கள் பத்திரமாய்ப் போய்த் திரும்ப வேண்டுமே...'' என்று நினைத்தபடி நின்று கொண்டிருக்க, என் கணவரும் தம்பியும் மட்டும், ''பாகிஸ்தானுக்கே போனாலும் பத்திரமாய்த் திரும்பிவிடப் போகுதுக, ஷீர்டி என்ன பெரிய விஷயம்'' என்று தைரியத்துடனும், விரக்தி(?)யுடனும் சொன்னார்கள். கடைசியாக, எந்தெந்த ஸ்டேஷன்களில் வண்டி எவ்வளவு நேரம் நிற்கும் என்கிற குறிப்புகள் அடங்கிய பேப்பரைக் கொடுத்துவிட்டு, ''உங்களால் யாருக்கும் எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று முடித்தார்கள், எங்கள் வீட்டு ஆண்கள்.

ஒருவழியாக ரயில் புறப்பட, எங்கள் அனைவர் முகத்திலும் குதூகலச் சிரிப்பு. பின்னே... வீட்டு விடுதலையாகும் சிட்டுக் குருவிகள் போல் கிளம்பியேவிட்டோம்தானே?

ஈரோட்டிலிருந்து ஜோலார்பேட்டை வரை வெஸ்ட்கோஸ்ட்டில் பயணம். புதன் காலை சென்னையிலிருந்து புறப்படும் ஷீர்டி எக்ஸ்பிரஸில் மதியம் 1.30 மணிக்கு ஜோலார்பேட்டை சந்திப்பில் ஏறிக் கொள்வது, வியாழன் மதியம் 12 மணிக்கு ஷீர்டி சென்று சேரும் வண்டி அங்கேயே நின்றுவிடும். அந்த ரயிலிலேயே மறுநாள் வெள்ளி காலை 8 மணிக்கு ஏறி, சனிக்கிழமை காலை 6 மணிக்கு ஜோலார்பேட்டை வந்து, அங்கிருந்து ஈரோடு வந்து சேர்வது - இதுதான் எங்கள் பயணத்திட்டம்.

நான், என் தம்பி மனைவி, அவள் தோழிகள் இருவர், அவள் அம்மா, என் சம்பந்தி, அவர் நாத்தனார் ஆக 7 பேர். ஆண்கள் யாரும் இல்லை. எனவே எங்களைக் கேள்வி கேட்க யாரும் இல்லை! அடடா, என்ன ஒரு சுதந்திரம்! அவரவர் மனதில் தோன்றுவதை எல்லாம் வெளிப்படையாகப் பேசிச் சிரித்து, தனிப்பட்ட பிரச்னைகளைக் கூடப் பகிர்ந்துகொண்டு, ஆலோசனைகள், அறிவுரைகள் சொல்லியும், பெற்றும், கேலி செய்து கொண்டும்... ஆஹா! எத்தனை அருமையான, இனிமையான பயணம்! ஒருவருடனும் ஒருவருக்கும் எள்ளளவு கூட மனத்தாங்கல் இல்லாமல், ஒத்த கருத்துடன், இனிமையில் நனைந்த நினைவுகளால் நிறைந்த பயணம் மேற்கொண்டோம்.

எங்கள் எல்லோருக்குமே ஷீர்டிக்கு இதுவே முதல் பயணம். யாருக்குமே இந்தி தெரியாது. ஆங்கிலம் ஓரளவுக்கு! ரயில் பயணத்தில் மொழிப் பிரச்னை ஏற்படவில்லை. ஷீர்டி ஸ்டேஷனில் இருந்து ஹோட்டல் செல்ல வாடகை வண்டியைப் பேசுவதில் இருந்துதான் பிரச்னை ஆரம்பித்தது. ஆங்கிலம் அவர்களுக்கு சுத்தமாக தெரியவில்லை. கடைசியில் சக பயணி ஒருவரின் உதவியுடன் சமாளித்தோம்.

ஹோட்டலில் இருந்து அவர்கள் வண்டியிலேயே கோயில் வரை கொண்டு விட்டார்கள். செல்போன், கைப்பை எல்லாம் உள்ளே அனுமதி இல்லை என்பதால் ரூமிலேயே வைத்து விட்டோம். செல்போன் இல்லாததால், எங்கேயாவது கூட்டத்தில் பிரிந்துவிட்டால்கூட, இன்ன இடத்தில் வந்து நின்று கொள்ளுங்கள் என்று பேசி வைத்துக்கொண்டோம். ஆனால், அதற்கெல்லாம் அவசியம் ஏற்படவில்லை.

பாபாவின் திருமேனியை அடக்கம் செய்து, அந்த மேடையின் மேல் பாபாவின் பெரிய பளிங்குச் சிலையைப் பிரதிஷ்டை செய்து இருக்கிறார்கள். இது சமாதி மந்திர் என்று அழைக்கப்படுகிறது. வரிசையில் சுமார் 2 மணி நேரம் நின்று உள்ளே நுழைந்தோம்.

'சாயிநாத் மகாராஜ் கீ ஜெய்’ என்ற முழக்கம் பக்தர்களிடம் இருந்து விண்ணதிரக் கிளம்பியது.

சாயி சத் சரிதத்தில் புகழ்பெற்ற வாசகம் ஒன்று உண்டு.

''என் பக்தன் மூவாயிரம் மைலுக்கு அப்பால் இருந்தாலும், சிட்டுக்குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போல, அவனை இழுத்து வந்துவிடுவேன்!''

இதோ... உன்னையும் அப்படி இங்கு இழுத்து வந்துவிட்டேன் பார்த்தாயா என்பது போல பாபா கருணை பொழியும் கண்களுடன், சிரிப்புடன், ஆஜானுபாகுவாய் அமர்ந்திருக்கிறார். அந்த நொடியில் கண்ணீர் பொங்க, வைத்த கண் வாங்காமல், எத்தனையோ பிறவிகள் தோறும் நமக்குத் தாயாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய் நம்மைக் காக்கும் அந்தக் கருணைப் பெருங்கடலைத் தரிசிக்கிறேன். இந்தக் கணம் நிஜம்தானா? சத்குருவின் ஆசீர்வாதமும், அனுமதியும் இல்லாமல் யார் அவரைத் தரிசிக்க இயலும்? இந்த பாக்கியத்தைப் பெற என்ன தவம் செய்தேன்? என்ன பக்தி செய்தேன்?

ஏதுமில்லை! உண்மையிலேயே தகுதி ஏதும் இதுவரை இல்லை. ஆனால், இனிமேல் வளர்த்துக்கொள்ள முடியும். சத்குருவின் போதனைகளை வாழ்வில் கொஞ்சமாவது கடைப்பிடிக்க உண்மையாய் முயற்சி செய்ய வேண்டும். சாயி சத் சரிதம் படிக்க வேண்டும். சத் சரிதம் ஒரு புனித நூல் மட்டுமல்ல, பக்தி சிரத்தையும் நம்பிக்கையும் உள்ளவர்களுக்கு ஒரு மந்திரப் பெட்டகமும்கூட! அதன் மூலம் பாபா உங்கள் கேள்விகள், குழப்பங்களுக்கு பதிலளிப்பார். ஆனால் அன்புடன், பக்தியுடன், மரியாதையுடன் அணுக வேண்டும். சரியாகப் புரிந்து கொள்ளவும் தெரிய வேண்டும். அதேபோல் கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமானால், சப்தாகம் செய்யலாம். 7 நாட்களுக்குள் முழு நூலையும் பாராயணம் செய்வதுதான் சப்தாகம் என்பது.

இந்த இடத்தில் ஒரு சிறிய விளக்கம்... நான் ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டேன் என்பதற்கு!

ஷீர்டி சென்று வந்த என் பெரிய தம்பியின் மனைவி, எனக்கு பாபாவின் சிலை ஒன்றும், சத்சரித நூலும் பரிசளித்தாள். அப்போது பாபாவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஈடுபாடும் கிடையாது. சிலையைப் பூஜை அறையில் வைத்ததோடு சரி. சிலைகள் வைத்திருந்தால் அதற்கு முறைப்படி வழிபாடுகள் செய்ய வேண்டும் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். அதன் பின்னரே பாபா சிலைக்கு ஒரு நாள் நீராட்டிப் பொட்டிட்டு, தீப, தூப வழிபாடுகள் செய்தேன். ஓரிரு நாட்கள் கழித்து ஒரு கனவு கண்டேன்.

அதில் ஒரு வடநாட்டுக் கோயிலில் நான் நின்று கொண்டிருக்கிறேன். அது துவாரகாமாயி என்று யாரோ சொல்கிறார்கள். ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள், தீபச் சுடர் போல நெருப்பு தெரிகிறது. அணையா தீபம் என்று சொல்கிறார்கள். ஒரு மேடையில் பலவகை உணவுகள் ஒன்றாகக் கொட்டப்பட்டிருக்கின்றன. 'நான் எடுத்துக் கொள்ளலாமா?’ என்று கேட்கிறேன். 'உங்கள் பங்குக்கு ஏதாவது வைத்துவிட்டுப் பிறகு எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்கிறார்கள். பழமும், சர்க்கரையும் கொண்டுவந்து கொடுக்கிறேன். அவ்வளவுதான், விழித்துக்கொண்டேன்.

எனக்கு துவாரகாமாயி என்பது எந்த ஊர், இடம் என்று தெரியவில்லை. துவாரகையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். திடீரென்று சாயிபாபா சம்பந்தப்பட்ட இடமோ என்று தோன்றியது. அதுவே வியப்பான விஷயம்தான். ஏனெனில், எனக்கு அப்போது ஷீர்டியைப் பற்றி எதுவுமே தெரியாது. ஓடிப்போய் சத் சரிதத்தைக் கையில் எடுத்துப் பிரிக்கும்போதே, துவாரகாமாயி கோயிலின் புகைப்படம் அச்சாகியிருந்த அதே பக்கம் வந்தது. எனக்கு அப்படியே 'ஜிவ்’வென்றாகிவிட்டது. அதுமட்டுமல்ல, அன்றைய தினமே தினமலரின் 'அன்புடன் அந்தரங்கம்’ பகுதியில் எழுத்தாளர் இந்துமதி, ஒரு வாசகரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது ''சத்சரித நூலில் ஏதோ ஒரு பக்கத்தை எடுத்துப் படியுங்கள். உங்கள் கேள்விகளுக்கு அதில் விடை கிடைக்கும்'' என்று எழுதியிருந்தார். உடனே ஓடி, மறுபடியும் சத்சரிதத்தை எடுத்துப் பிரித்தால், நம்ப மாட்டீர்கள்... பாபா தன் அடியவர் ஒருவரிடம் ''துவாரகாமாயி பற்றித் தெரியுமா?'' என்று கேட்கும் அந்த நிகழ்ச்சி வந்தது. அவ்வளவுதான். அன்றிலிருந்து பாபா என்னை முழுமையாக ஆட்கொண்டார்.

ஷீர்டி செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்றே நான் நம்பியதில்லை. அப்படியிருக்க, ஷீர்டியில் பாபாவின் சந்நிதானத்தில் அவர் முன் நிற்கும்போது, என் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

சமாதி மந்திரிலிருந்து வெளியே வந்து 'குருஸ்தான்’ என்றழைக்கப்படும் வேப்ப மரத்தடியை வலம்வந்து வணங்கினோம். சாய்பாபாவின் குருநாதர் இருந்த இடமென்றும், பாபா இந்த இடத்தில்தான் முதன்முதலாய் ஷீர்டி மக்களுக்கு 16 வயது இளைஞனாகக் காட்சியளித்தார் என்றும் நம்பப்படுகிறது. சாய்பாபா உடுத்தியிருந்த உடைகள் உட்பட அவர் பயன்படுத்திய பொருட்களை இங்குள்ள மியூசியத்தில் காணலாம்.

அங்கிருந்து வெளியே வந்து துவாரகாமாயி சென்றோம். துவாரகாமாயிதான் பாபா வாழ்ந்த இடம். சமாதிமந்திரை விடவும் புனிதமானதாய் மதிக்கப்படுகிறது. இங்குதான் 'துனி’ எனப்படும் அணையா நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. இதில் கிடைக்கும் சாம்பலே 'உதி’ எனப்படும் உன்னதமான பிரசாதம். துனியில் போட மட்டைத் தேங்காய், நவதானியங்கள், சாம்பிராணி முதலியவை இங்கு கடைகளில் விற்கிறார்கள். குருஸ்தானில் சாம்பிராணி போடுவதும், துனியில் மட்டைத் தேங்காய் முதலியவைகளைப் போடுவதும் நமது கர்மவினைகளையும், துயரங்களையும் எரித்து சாம்பலாக்கும் என்பது நம்பிக்கை.

அருகிலேயே 'சாவடி’. அங்கும் சென்று தரிசித்துவிட்டு கொஞ்சம் 'ஷாப்பிங்’ முடித்து, சாவடி ஊர்வலம் பார்த்தோம். பாபாவின் படத்தை சமாதி மந்திரிலிருந்து பல்லக்கில் வைத்து எடுத்து வந்து தாரை, தப்பட்டைகளுடன் கோலாகலமாய் ஊர்வலம் வந்து, முதலில் துவாரகாமாயியிலும், பின் சாவடியிலும் வைத்துப் பூஜை, சடங்குகள் நிகழ்த்தி, பிறகு... சமாதி மந்திரில் கொண்டு வைக்கிறார்கள்.

மறுநாள் காலை 4 மணிக்கு நடைபெறும் காகட் ஆரத்தியில் கலந்துகொண்டோம். இதற்கு ஆன்-லைனில் புக் செய்து கொள்ளலாம். மிகவும் விசேஷமான இந்த ஆரத்தியை நேரடியாய் சமாதி மந்திரில் இருந்து பார்ப்பது ஒருவிதமான ஆனந்த அனுபவம் என்றால், இதே காகட் ஆரத்தியை துவாரகாமாயியில் அமர்ந்து, அந்த இளங்காலை நேரத்தில் இனிமையான ஆரத்திப் பாட்டைக் கேட்டபடியே டி.வி-யில் பார்த்து அனுபவிப்பது அற்புதமான, வித்தியாசமான அனுபவமாகும்.

காகட் ஆரத்தி முடிந்து வெளியே வந்தோம். மனமெங்கும் நிறைந்து வழிந்த மகிழ்ச்சியுடன் பாபாவிடம் மீண்டும், மீண்டும் தரிசனம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டே சொந்த ஊருக்குப் பயணமானோம்.

பின்குறிப்பு : உங்கள் பயணத்துக்காக சில குறிப்புகள்:

1. ஷீர்டி எக்ஸ்பிரஸில் Pantry Car  இல்லை. ஆகவே தேவையான உணவு வகைகளை எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.

2. சால்வை வாங்கிக் கொடுத்தால் பாபாவின் சமாதியின் மீது அதை வைத்து எடுத்து நம்மிடம் தருவார்கள்.

3. சமாதி மந்திர் வளாகத்துக்குள்ளேயே மியூசியம், சத்சரித பாராயண ஹால், லெண்டித் தோட்டம், நந்தா தீபம், பாபாவின் அடியவர்கள் சிலருடைய சமாதிகள் இருக்கின்றன. ஹனுமார் கோயில், கண்போபா கோயில், லக்ஷ்மிபாய் சிந்தே வீடு போன்ற சில இடங்களும் ஷீர்டியில் தரிசிக்க வேண்டியவை.

4. இரண்டு இரவுகளாவது (புதன், வியாழன் உத்தமம்) தங்கி இருப்பதுபோல் திட்டமிட்டுக் கொண்டால் நிறைவாக தரிசித்து வரலாம்.

சபரிமலையில் சிலிர்ப்பான பயணம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close