Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேடுகிறோம்... கயிலைநாதனை!

ஆன்மிக பயணம் 11

 - எஸ்.கணேசன் மற்றும் ஆர்.ரவிச்சந்திரன், மெல்போர்ன், ஆஸ்திரேலியா

நான் ஆஸ்திரேலிய குடிமகன். பெயர் கணேசன். 2000-ஆம் வருடம் முதல் அங்கே குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கடந்த ஆண்டில் நான் மேற்கொண்ட புனித யாத்திரையின் அனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

2012-ஆம் வருடம், மே மாதம் 27-ஆம் தேதி கயிலாயம் செல்லும் குழுவுடன் செல்ல, மார்ச் மாதமே பயண ஏற்பாட்டாளரிடம் முழுத் தொகையும் செலுத்தி எங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டோம். அந்தக் குழு, வைகாசி விசாக பௌர்ணமி அன்று மானசரோவர் ஏரியில் தங்கி சிறப்பு பூஜை மற்றும் யாகங்கள் செய்யத் திட்டமிட்டிருந்தது. இந்த புனித யாத்திரைக்காக ருத்ராட்ச மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து, 48-வது நாள் யாத்திரையை துவக்கினோம்.

நானும் நண்பர் ரவியும் 2012 மே 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு விமானத்தில் மெல்பர்னில் இருந்து இந்தியா நோக்கிப் புறப்பட்டோம். மறுநாள் (19-ஆம் தேதி) காலை 6.30 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரை வந்தடைந்தோம். அங்குள்ள ஒரு ஹோட்டலில் குளித்து முடித்துத் தயாரானதும், நேராக பத்துமலை முருகனை தரிசிக்க சென்றோம்.

பத்துமலை முருகன் கோயில் ஒரு மலை மீது இயற்கையாக அமைந்த குகையில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். தைப்பூசத்துக்காக மலேசிய அரசாங்கம் அரசு விடுமுறை அளிப்பது சிறப்பு. நாங்கள் மலை அடிவாரத்தில் உள்ள பிரமாண்ட முருகப்பெருமானை தரிசித்த பிறகு படிக்கட்டுகள் வழியாக ஏறி, குகைக்குள் அருள்பாலிக்கும் முருகனுக்கு அர்ச்சனை செய்து, எங்களது புனிதப் பயணம் நல்லபடியாக அமைய வேண்டிக்கொண்டோம்.

தொடர்ந்து, 'புடு ராயா’ என்ற இடத்தில் அமைந்திருக்கும் வரஸித்தி விநாயகப் பெருமானை தரிசிக்கச் சென்றோம். இதுவும் மலேசியாவில் உள்ள மிகப் பிரபலமான கோயில்தான். இந்த புடு ராயாவில்தான் கோலாலம்பூரின் மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து மலேசியாவின் எல்லா மாநிலங்களுக்கும் மற்றும் சிங்கப்பூருக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விநாயகப் பெருமானை வணங்கியபிறகு, கோலாலம்பூர் வந்தோம். இரவு 8.30 மணிக்கு விமானம் ஏறி, அடுத்த இரண்டு மணி நேரத்தில்... அதாவது, இரவு 10.30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தோம்.

சென்னையில் இருந்து இரவு 11.30 மணிக்கு காரில் மதுரைக்குப் புறப்பட்டோம். மதுரை செல்லும் வழியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, சமயபுரம் மாரியம்மன் தரிசித்து மகிழ்ந்தோம். பிறகு ஸ்ரீரங்கம் ரங்கநாதர், விராலிமலை முருகனை தரிசித்துவிட்டு மாலை 4 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தோம்.  

23.5.2012 புதன்கிழமை மதுரையில் இருந்து பெங்களூருக்குப் புறப்பட்டோம். 24.5.2012 அதிகாலை அங்கிருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்து சேர்ந்தோம்.

டெல்லி ஏர்போர்ட்டில் விமான நிலைய ஊழியரின் தவறான வழிகாட்டுதலாலும், செக்யூரிட்டி சோதனை செய்யும் இடத்தில் மிக நீண்ட வரிசை இருந்ததாலும் நாங்கள் பயணிக்க வேண்டிய விமானத்தைத் தவறவிட்டோம். அங்கிருந்த ஜெட் ஏர்வே ஊழியரிடம் விசாரித்ததில், காட்மாண்டுவுக்கு இனி நாளைதான் விமானம் புறப்படும் என்றும், மேலும் ஒரு நபருக்கு 6000 ரூபாய் வீதம் பணம் செலுத்தி புதிய போர்டிங் பாஸ் வாங்கவேண்டும் என்றும் சொல்லிவிட்டார். அதனால், அடுத்த நாள் காலை 10.30 மணிக்கு காட்மாண்டு செல்லும் விமானத்தில் பயணிக்க புதிய டிக்கெட் வாங்கிக்கொண்டு, ஏர்போர்ட் அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்துத் தங்கினோம் நானும் நண்பர் ரவியும்.

ஹோட்டலில் இருந்தபடி எங்கள் பயண ஏற்பாட்டாளரின் நேபாள் ஏஜெண்டுக்கு போன் பண்ணி, நாங்கள் மறுநாள் காலை காட்மாண்டு வருவது பற்றிக் கூறினோம். அவர்கள் ஓர் அதிர்ச்சியான தகவலை எங்களிடம் கூறினார்கள். அதாவது, ''நீங்கள் கயிலை யாத்திரை செல்வதற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால் காட்மாண்டு வரவேண்டாம். திரும்பிச் சென்றுவிடுங்கள்'' என்றார்கள். ''நாங்கள் பல ஆண்டு கனவுகளோடு பல ஆயிரம் மைல்கள் கடந்து வந்திருக்கிறோம். எங்களால் திரும்பிச் செல்ல முடியாது. நாளை காலை காட்மாண்டு வருகிறோம் எங்களுக்கு எப்படியாவது பர்மிட்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள்'' என்று சொல்லி போனை வைத்துவிட்டோம்.

மறுநாள் (25-ஆம் தேதி) நண்பல் 12.30 மணிக்கு காட்மாண்டு திரிபுவன் விமான நிலையத்தில் வந்திறங்கினோம். அங்கே பணம் கட்டி, ஒரு மாத காலம் நேபாளத்தில் தங்குவதற்கான multiple entry உடன் கூடிய விசா எடுத்துக்கொண்டு, ஏர்போர்ட்டை விட்டு வெளியில் வந்தோம். எங்களை Shree Astra Trakன் மேனேஜர் ஆஸிஷ் வரவேற்று, நேராக சீன எம்பஸிக்கு அழைத்துச்சென்றார். கயிலாஷ் செல்ல எங்களுக்கு எதனால் பர்மிட் கிடைக்கவில்லை என்று அங்கே கேட்டதற்கு, ''ஒரு வாரத்திற்கு முன்பு மானசரோவர் ஏரிக்கரையில் சிங்கப்பூரைச் சேர்ந்த இரண்டு பேர் தலாய்லாமாவுக்கு ஆதரவு தெரிவித்தும், சீன அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்தும் உடலில் ஆல்கஹாலை ஊற்றித் தற்கொலை செய்துகொண்டு, உயிரை தியாகம் செய்துவிட்டார்கள். அதனால் சீன ராணுவம் இந்தியர்களைத் தவிர, மற்ற எல்லா வெளிநாட்டவர்களுக்கும் கயிலாஷ் செல்ல பர்மிட் கொடுப்பதை நிறுத்திவிட்டது. உங்களுக்குக் கொடுத்த பர்மிட்டையும் ரத்து செய்துவிட்டார்கள்'' என்றார்கள். அதாவது, நாங்கள் ஆஸ்திரேலிய குடிமகன்கள் என்பதால் எங்களுக்கு பர்மிட் கிடைக்கவில்லை. எங்களைத் தவிர அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய வெளிநாடுகளில் இருந்து வந்த ஏராளமான யாத்ரீகர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நிலைமை எப்போது சரியாகும் என்று தெரியவில்லை என்றும் சொல்லிவிட்டார்கள். அதனால், நோபாளத்திலேயே நாங்கள் தங்கியிருக்க வேண்டியதாயிற்று.

இதற்கு அடுத்த நாள் (26-ஆம் தேதி) சென்னையில் இருந்து ரயில் மூலம் வந்த, எங்கள் குழுவில் பயணிக்கப் பதிவு செய்த பக்தர்கள் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுடன் நாங்களும் சேர்ந்து உள்ளுரில் பயணிக்க ஏற்பாடுகள் செய்தார்கள்.

அன்றைய தினமே இரண்டு டீலக்ஸ் பஸ்களில் காட்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் ஆலயத்துக்கு எங்களை அழைத்துச்சென்றார்கள். இங்கேயுள்ள சிவலிங்கம் நான்கு திசைகளிலும் நான்கு முகத்தோடு உச்சியின் ஐந்தாவது முகமும் கொண்டுள்ளது சிறப்பு! இந்த ஐந்து  முகங்களும் பஞ்ச பூதங்களோடு தொடர்புடையவை. பசுபதிநாதரை ஒருமுறை தரிசிப்பது மூன்றரைக் கோடி புனித யாத்திரை செல்வதற்கு சமமாகும் என்று சொல்கிறார்கள். சிவபெருமான் முதன்முதலில் இந்த பூவுலகில் லிங்க வடிவில் தோன்றியது இங்கேதான் என்றும் சொல்லப்படுகிறது. நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், 8-வது நூற்றாண்டில் இங்கு விஜயம் செய்த ஆதிசங்கரர், பூஜை முறைகளை ஒழுங்குபடுத்தினார்; தென்னிந்தியாவில் இருந்து அர்ச்சகர்களை வரவழைத்துப் பசுபதிநாதருக்கு பூஜைகள் செய்வித்தார். இப்போதும் இங்குள்ள அர்ச்சகர்கள் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்களே!

பிறகு, அங்கிருந்து புத்த நீலகண்டா என்று அழைக்கப்படும் ஸ்ரீ ஜலநாராயணரை தரிசிக்க அழைத்துச் சென்றார்கள். இங்கே நீர் நிறைந்த தெப்பத்தில் ஆதிசேஷன் மீது 18 அடி நீளமுள்ள நாராயணர் ஆகாயத்தைப் பார்த்தபடி படுத்திருக்கிறார். ஆரஞ்சு வண்ண உடையில் மிக அழகாக கம்பீரமாக காணப்படுகிறார். சிறிது குனிந்து பார்த்தால் நாராயணரின் 'மிரர் இமேஜ்’ நீரில் தெரிகிறது. பக்கத்தில் உள்ள சிறிய ஓடையில் இருந்து இந்தத் தெப்பத்துக்கு நீர் வருகிறது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிப்பே ஏற்படவில்லை எங்களுக்கு! அன்றைய தின புனிதப் பயணம் இதோடு நிறைவுற்றது. தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.

இரவு 8 மணிக்கு, ஸ்ரீ அன்னபூரணி யாத்ரா சர்வீஸ் நிறுவன மானேஜர், கயிலை யாத்திரை செல்லும் எல்லா சிவனடியார்களையும் அறிமுகம் செய்துவைத்து ஒவ்வொருவருக்கும் ஒரு ருத்ராட்ச மாலையை அணிவித்து வாழ்த்தினார். என்னையும் ரவியையும் அறிமுகப்படுத்தும்போது, நாங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து கயிலை யாத்திரைக்கு வந்திருப்பதையும், பர்மிட் இல்லாததால் யாத்திரையைத் தொடர முடியவில்லை என்றும் கூறினார். எல்லா சிவனடியார்களும் எங்கள் நிலைமைக்காக வருத்தமும் அனுதாபமும் தெரிவித்தனர். எங்களுக்காகக் கயிலைநாதனை பிரார்த்தனை செய்வதாகவும் கூறினார்கள். மிகவும் நெகிழ்வாக இருந்தது.

27-ஆம் தேதி அதிகாலை, சிவனடியார்கள் கயிலை யாத்திரைக்குப் புறப்பட்டனர். நாங்கள் கண்ணில் நீர்மல்க அவர்களை வாழ்த்தி அனுப்பிவைத்தோம். பிறகு 10 மணிக்கு மானேஜர், என்னையும் ரவியையும் Shree Astra Trak office-க்கு அழைத்துச் சென்றார். அவர்கள் ஆலோசனைபடி பர்மிட்டுக்கு அப்ளை பண்ணிவிட்டு, அடுத்த நாள் காலை நானும் ரவியும் முக்திநாத் யாத்திரையைத் தொடங்கினோம்.

28-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு காட்மாண்டு விமான நிலையத்தில் இருந்து போக்ரா ((pokara) ) வந்து, அங்கிருந்து ஜோம்சோம் (Jomsom) என்ற இடத்துக்கு இன்னொரு விமானத்தில் சென்றோம். Jomsom விமானநிலையம் காளி கண்டகி நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த புனித கண்டகி நதியில்தான் சாளக்ராம கற்கள் கிடைக்கின்றன. ஒவ்வொரு சாளக்ராமத்திலும் விஷ்ணு குடியிருப்பதாக ஐதீகம். ஒரு சாளக்ராமத்தை வணங்குவது ஒரு கோடி சிவலிங்கத்தை வணங்குவதற்கு சமம் என்று சிவபெருமானே சொல்லியதாகப் புராணங்கள் சொல்கின்றன.

அன்று இரவு, அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கினோம். மறுநாள், முக்திநாத் சென்றோம். இந்த ஆலயம் அன்னபூர்ணா மலைத் தொடரில் அமைந்துள்ள மிகமிக அமைதியாக இடம். வெறும் காற்றின் ஒலியும், மரங்கள் சலசலக்கும் ஓசை மட்டும்தான் கேட்கிறது. கோயிலைச் சுற்றியுள்ள 108 தீர்த்தங்களில் நீராடி மகிழ்ந்தோம். இறுதியாக, ஆலயத்தின் பின்புறம் உள்ள கல்யாணி தீர்த்தத்தில் நீராடி, வேறு உடை உடுத்தி முக்திநாதனை தரிசிக்கச் சென்றோம்.

முக்திநாதரை நம் கைகளால் தொட்டு பூஜைகள் செய்யலாம். நாங்களும் முக்திநாதரை அவ்வாறு வணங்கிவிட்டு, பிரிய மனம் இல்லாமல் திரும்பினோம். பிறகு, அந்தப் பகுதியில் உள்ள குப்தேஷ்வர் ஆலயம் (சிவன் கோயில்), விந்துவாசினி (அம்மன் ஆலயம்) ஆலயம், லேக் வாராகி அம்மன் ஆலயம் ஆகிய மூன்று ஆலயங்களையும் தரிசித்துவிட்டு, தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம்.

30-ஆம் தேதி அதிகாலை காட்மாண்டுவுக்கு காரில் புறப்பட்டோம்.  வழியில், மணக்கமானா அம்மன் கோயிலுக்கு சென்றோம். இக்கோயில் மலை உச்சியில் உள்ளது. இந்த அன்னைக்கு ஆடு, கோழி, பலி இடுகிறார்கள். அம்மனை தரிசித்துவிட்டு மாலை 6 மணிக்கு காட்மாண்டு வந்தோம்.

கயிலை யாத்திரைக்கு வந்து, வேறு எங்கெல்லாமோ தரிசனம் செய்து முடித்தோம். ஆனால், கயிலைமலையானை தரிசிக்க மட்டும் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதனால், வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் உள்ள பல்வேறு புகழ்பெற்ற திருத்தலங்களை தரிசித்துவிட்டு ஆஸ்திரேலியா திரும்பினோம்.

கயிலைமலையானைத் தரிசிக்கும் வாய்ப்பு, எங்களுக்கு மிக விரைவில் கிட்டும் என்றே நம்புகிறோம்!

ஹிந்தி நை ஆத்தா?!

எடிட்டர் சாய்ஸ்

MUST READ