Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பரவசப்படுத்திய பஞ்ச துவாரகா!

ஆன்மிக பயணம் 12

 - மைதிலி வைத்தியநாதன், கும்பகோணம்

ஞ்ச துவாரகா- ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் என்று மூன்று மாநிலங்களை சுற்றிவரும் யாத்திரை இது. இந்த அற்புத பயணத்துக்காக 22.9.2012 அன்று கும்பகோணத்தில் இருந்து சென்னை வந்து, மறுநாள் (23-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை, ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் எங்கள் குழுவோடு ஜெய்ப்பூர் பயணமானோம். செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில், பிங்க் சிட்டி என்று புகழ்பெற்ற ஜெய்ப்பூர் நகரை அடைந்தோம். எங்களுக்காகப் பயண ஏற்பாட்டாளர் தேர்வு செய்திருந்த ஹோட்டல் அறைக்கு சென்று குளித்து முடித்து, உணவு அருந்திய பின், ஜெய்ப்பூர் நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.

ஜெய்ப்பூர் நகரம் 17-ஆம் நூற்றாண்டில் ராஜா ஜெய்சிங் என்பவரால் வாஸ்து சாஸ்திரபடி நிர்மாணிக்கப்பட்ட நகரம். பெரிய நுழைவாயிலைக் கடந்து சென்றால், அங்கே உள்ள எல்லா கட்டடங்களும் ஒரே மாதிரி பிங்க் நிறத்தில் அமைந்துள்ளன. ராணிகள் தங்கும் இடமான ஹாவா மஹால், ராஜா, ராணியர் கோடை காலத்தில் வாசம் செய்யக் கட்டப்பட்ட வாட்டர் பேலஸ், திதி, வாரம், நட்சத்திரம், கரணம், யோகம், ஜோதிட சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட கால கடிகாரங்கள் உள்ள ஜந்தர் மந்திர், மகாராஜாக்கள் உபயோகித்த வாட்கள், கேடயங்கள், துப்பாக்கிகள், பீரங்கிகள் மற்றும் சிம்மாசனங்கள், உடைகள் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ள சிட்டி பேலஸ் உள்ளிட்ட இடங்களைப் பார்த்து வியந்து, ஹோட்டலுக்கு திரும்பினோம்.

26-ஆம் தேதி, புண்ணியத் திருத்தலமான புஷ்கர் சென்றோம். பிரம்மாவுக்காக தனிக்கோயில் இங்கே இருக்கிறது. இங்குள்ள குளம் பிரசித்திபெற்றது. மகாமகக் குளம் போன்று மிகப் பெரிய குளம். மொத்தம் 54 படித்துறைகள் உள்ளன. பிரளய வெள்ளத்தில்கூட அழியாத தீர்த்தம் இது. காயத்ரி மந்திரம் தோன்றிய இடம், கஜேந்திர மோட்சம் நடந்த இடம் இது என்கிறார்கள். இங்கு குளமே விஷ்ணுவாகப் போற்றப்படுகிறது. விஸ்வாமித்திரர் இங்கு வந்தபோது, தன் காயத்தையே (உடல்) திரித்து ஜோதியாக்கி தபஸ் பண்ணியதால், பிரம்மா காயத்ரி மந்திரத்தை அருளினார் என்பது ஐதீகம். இங்குள்ள மலைமேல் காயத்ரிதேவி கோயில் கொண்டிருக்கிறாள்.

தொடர்ந்து, புகழ்மிக்க ஆஜ்மீர் தர்கா சென்றோம். காஜா முகமது கரீபே நவாஸ் என்ற இஸ்லாமிய மகானின் ஜீவ சமாதி உள்ள இடமே இந்த தர்கா.

27-ஆம் தேதி முதல், பஞ்ச துவாரகா தரிசனம் புறப்பட்டோம். முதலில் நாங்கள் தரிசித்தது, கங்ரோலி துவாரகா.

துவாரகை மொத்தம் ஒன்பது. அவை: மூல துவாரகா, பேட் துவாரகா, டாக்கூர் துவாரகா, கங்ரோலி துவாரகா, பிரவாச துவாரகா, குசேல துவாரகை, கோமது துவாரகை, நாத் துவாரகை, ருக்மிணி துவாரகை. இவை உதய்பூர் நகரைச் சுற்றி அமைந்துள்ளன. மீராபாய், கபீர்தாஸ், சைதன்ய மஹாபிரபு, வல்லபாச்சார்யர், ராமானுஜர், ஆதிசங்கராச்சார்யர் ஆகியோர் வைத்து பூஜை செய்த விக்ரகங்கள் இந்த பஞ்ச துவாரகையில் உள்ளன.

ருக்மிணி தேவி பூஜை செய்த குழந்தை கிருஷ்ணன் சாளக்ராம விக்ரகம் உள்ள இடமே கங்ரோலி துவாரகை. கண்களைவிட்டு அகலாத கண்ணன் திருவுருவத்தை இங்கே தரிசிக்கிறோம். ருக்மிணி குழந்தை கிருஷ்ணன் விக்ரகத்தை அலங்கரித்து வழிபடும்போது, துர்வாச முனிவர் வருகிறார். அவரை ருக்மிணி கவனிக்கவில்லை. அதனால், 'உனக்குப் பிறகு இந்த விக்ரகத்திற்கு பூஜை இருக்காது’ என்று சாபமிடுகிறார் முனிவர். ருக்மிணி ஓடிவந்து அவருக்குப் பாத பூஜை செய்து, செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்கிறாள். துர்வாசரும் 'கலியுகத்தில் இந்தக் கண்ணன் வெளிப்படுவான்; அப்போது பூஜைகள் நடக்கும்’ என்று ஆசீர்வதிக்கிறார். அதன்படியே வல்லபாச்சார்யர் அந்த விக்ரகத்தைக் கண்டெடுத்து ஸ்தாபிக்கிறார். இங்கே எட்டுக் கால பூஜை உண்டு. அரை மணிக்கு ஒரு முறை பால், வெண்ணெய், ரொட்டி போன்றவற்றை நிவேதனம் செய்கின்றனர்.

இரண்டாவதாக, நாங்கள் தரிசித்தது நாத் துவாரகை. தெற்கில் திருப்பதி போல், இங்கு இந்த நாத் துவாரகை உள்ளது. உதய்பூர் மன்னன் கட்டிய கோயில். பிரபந்தங்களை மக்களுக்கு அளித்த ஸ்ரீ நாத முனிகள் நேரில் வந்து தரிசிக்க எண்ணிய கோயில் இது. அவர் வர இயலாத காரணத்தால், அவர் பெயரில் ஸ்ரீநாத் துவாரகை என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள கிருஷ்ணரின் விக்ரகம் கறுப்பு மேஜிக் கல்லினால் (Black Magic Stone)  ஆனது. இந்தக் கல்லில் அபிஷேகம் செய்வித்தால், தாமரை இலைமேல் பட்ட நீர்போல் மேலே ஒட்டாது. ரொம்ப அழகான, அலங்காரமான மூர்த்தி இவர். இங்கு தரப்படும் பிரசாதங்கள் மெகா சைஸில் உள்ளன. விலையும் ரொம்ப அதிகம். ரூ.100-க்கு குறைந்து பிரசாதம் கிடைப்பதில்லை. எல்லாமே நெய்யால் ஆனவை.

ஸ்ரீநாத் துவாரகையில் திவ்ய தரிசனம் முடிந்தபின் நீண்ட தூரம் பிரயாணம் செய்து, அபு ரோடில் வந்து தங்கினோம்.

28-ஆம் தேதி, ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள அற்புதமான கோடை வாசஸ்தலமான மவுண்ட் அபு சென்றோம். அங்கே பார்த்து முடித்து இறங்கும் வழியில் அம்பாஜி சென்றோம். 54 சக்தி பீடத்தில் முதல் பீடம்தான் இந்த அம்பாஜி. இங்கு மலைக் குன்றே அம்பாளாகக் காட்சி தருகிறது. நாங்கள் சென்ற நேரம், எங்களுக்கு முன் சுமார் 6 லட்சம் மக்கள் தரிசனத்துக்காக காத்திருந்ததால், தூரத்திலிருந்தே மலையையும் கோயிலையும் வணங்கிவிட்டு, நீண்டதூரம் பயணம் செய்து, இரவு ஓர் இடத்தில் தங்கினோம்.

29-ஆம் தேதி, நாங்கள் சென்ற இடம் மாத்ரு கயா. தந்தைக்கும், முன்னோர்களுக்கும் சிராத்தம் தரும் இடம் கயா. தாய்க்கு சிராத்தம் தரும் இடமே இந்த மாத்ரு கயா. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவத்தை இங்குள்ள பிந்து சரோவரில் நீராடி நீக்கிக்கொண்டதாகச் சொன்னார்கள். எத்தனை பேர் குளித்தாலும் அந்தக் குண்டத்தில் உள்ள நீர் தூய்மையாகவே இருக்கிறது. நாங்கள் அனைவருமே அதில் குளித்தோம். தாயை இழந்தோர் அனைவரும் அங்கு சிராத்தம் கொடுத்தனர்.

அடுத்து, நாங்கள் நீண்ட தூரம் பயணம் செய்து, மறுநாள் (30-ஆம் தேதி) துவாரகை வந்து சேர்ந்தோம். இந்த துவாரகையே பிரதான துவாரகா என்றும், கோமதி துவாரகா என்றும் அழைக்கப்படுகிறது. கோமதி நதி கடலுடன் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள துவாரகாபுரி இது. காலயமுனன் என்ற அரக்கன் மதுராவில் அடிக்கடி தொந்தரவு செய்ததால், கிருஷ்ணர் தாம் ஆட்சி புரிய தேவலோக சிற்பி மயன் உதவியுடன் சொர்ணமயமாக ஒரு நகரை நிர்மானித்தார். அதுவே, சொர்ண துவாரகையாகும். துவாபர யுகம் முடியும்போது, அந்தத் துவாரகையை கடல் கொண்டுவிட்டது. பின்னாளில் கிருஷ்ணனின் பேரன் வஜ்ரநாபன் இந்தத் துவாரகையை நிர்மாணித்தான்.

காலையில் கோமதி நதியில் நீராடிய பின், முதலில் நாங்கள் சென்ற இடம் இங்கிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் கடல் நடுவே அமைந்துள்ள பேட் துவாரகா. ரிஷிகள், வெளிநாட்டு தூதுவர்கள், ராஜாக்கள் ஆகியோரைச் சந்திப்பதற்காக கட்டிய அரண்மனை இங்குள்ளது. இங்குதான் குலேசர், கிருஷ்ணனைச் சந்தித்து அவல் வழங்கினார் என்றார்கள். இங்குள்ள கோயிலில் அவல்தான் பிரசாதம். இங்கு சென்றால் நமது வறுமையும் நீங்கும், செல்வம் பெருகும் என்கிறார்கள்.

மறுநாள் (1.10.12) காலை 5 மணிக்கெல்லாம் நாங்கள் புறப்பட்டு மூல துவாரகைக்குப் பயணமானோம். ஸ்ரீ கிருஷ்ணர், சத்யபாமா மற்றும் ருக்மிணியுடன் இங்கு தங்கி, துவாரகாபுரியை எப்படி நிர்மாணிக்கலாம் என்று ஆலோசனை நடத்திய இடம் என்பதால் இதற்கு மூல துவாரகா என்று பெயர் வந்தது என்றார்கள். இது ஒரு சிறிய கிராமம்.

அடுத்ததாக, நாங்கள் பிரவேசபட்டினம் எனும் ஊரில் புன்னகை தவழும் முகத்துடன் மிக மிக அழகாக காட்சிதரும் கிருஷ்ணனை படுத்திருக்கும் திருக்கோலத்தில் தரிசித்தோம். அவரது தலைப் பக்கத்தில் ஒரு குறா மரம் (அரச மரம்) காணப்படுகிறது. அதன் அடிப் பாகத்தில் அதன் வேர் இயற்கையாகவே கிருஷ்ணன் முகம் மாதிரியே அமைந்துள்ளது. அதனடியில் லிங்கம் அமைந்துள்ளது. கிருஷ்ணனின் கால் பாகத்தில் ஒரு வேடன் அம்புடன் வீற்றிருக்கும் சிற்பம் அமைந்துள்ளது. கிருஷ்ணனின் பாதத்தில் அம்பு தைத்திருப்பதும் வரையப்பட்டுள்ளது. இந்த இடமே கிருஷ்ணன் உயிர்நீத்த இடம் என்றார்கள்.

பிறகு, சோமநாத் வழியாக வெகுதொலைவு பயணித்து தினமும் இயற்கை அற்புதங்கள் நிகழ்த்தும் கோலியாக்கை அடைந்தோம்.இங்கே தினமும் கடல் உள்வாங்கிச் செல்லும் ஒரு சிறிய தீவில் கொடிமரம் மற்றும் பஞ்சபாண்டவர்கள் விக்ரகங்களைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். தினமும் காலை 9 மணிக்கு கடல் உள் வாங்க ஆரம்பிக்கிறது. 10 மணிக்குள் சரியாக அந்த தீவு வரை கடல் உள்வாங்கிவிடுகிறது. கரையிலிருந்து 1 மைல் தூரம் இருக்கும் அந்தத் தீவு. நீர் உள்வாங்க, உள்வாங்க எல்லோரும் அதன் பின்னே நடந்து சென்றோம். மிக அற்புதமான தருணம் அது. அங்கே உள்ள கோயில் நிஷ்கலங்க் மஹாதேவ் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

மாலை 3 மணிக்கு மேல் மீண்டும் கடல் வந்து சூழ்ந்துகொள்ளும் என்றார்கள். அதனால், நாங்கள் கரைக்கு திரும்பினோம்.

2-ஆம் தேதி கோலியாக் தரிசனம் முடித்து, தாக்கூர் துவாரகை சென்றோம். ஸ்ரீ கிருஷ்ணர் துலாபாரம் செய்த இடம் இது என்றார்கள். இங்கே அவர் கல்யாண கிருஷ்ணனாக கோயில் கொண்டுள்ளார்.

மறுநாள் (3-ஆம் தேதி) காலை 6 மணிக்கு அங்கிருந்து கிளம்பினோம். அந்த நாள் முழுவதும் பயணம்தான். குஜராத் விட்டு நீங்கி மத்தியப்பிரதேசத்துக்குள் நுழைந்தோம். மகேஷ்வர் என்ற இடத்துக்கு இரவு 7 மணி அளவில் வந்துசேர்ந்தோம்.  இங்கே கஜானன் மஹாராஜ் என்பவரின் அருமையான மடம் இருக்கிறது. புல்வெளி, பூச்செடிகளுடன் கூடிய மிகப்பெரிய மடம் இது. நடுவில் அவருக்கு ஓர் அழகிய கோயில் இருக்கிறது. நமது ரமண மகரிஷி மாதிரியான தோற்றம். அவரைப் போலவே நிறைய ஆன்மிக சேவை செய்திருப்பதாகச் சொன்னார்கள். ஆசிரமத்தை மிகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் பராமரிக்கிறார்கள்.

4-ஆம் தேதி காலை எழுந்து நர்மதை நதிக்கரையை அடைந்து படகில் ஏறி, 3 நதிகள் சங்கமிக்கும் இடம் வந்து சேர்ந்தோம். அங்கே அருமையாக நர்மதை ஸ்நானம் செய்தோம். நீராடி முடித்து மீண்டும் படகில் ஏறி, ஓங்காரேஸ்வர் கோயில் சென்றோம். இங்குள்ள இறைவன் திருமேனியை நாம் மேலிருந்தே அபிஷேகம் செய்யலாம். பூ சொரியலாம். நாங்களும் அவ்வாறே செய்து மகிழ்ந்தோம்.

மாலை 4 மணி அளவில், விக்கிரமாதித்தன் ஆட்சி செய்த உஜ்ஜயினி பட்டினத்தை அடைந்தோம். அங்குள்ள ஹரசித்திமாதா கோயில், மிக அழகான கோயில். பார்வதிதேவியின் மேல் உதடு விழுந்த இடம் இது என்றார்கள். இங்கு தேவியின் திருநாமம் அவந்தீதேவி. விக்கிரமாதித்தன் பூஜித்த தேவி இவள்.

5-ஆம் தேதி காலை 8 மணிக்குப் புறப்பட்டு, நாங்கள் முதலில் சென்றது உஜ்ஜயினியில் இருக்கும் சந்திபாணி ஆஸ்ரமம். இங்குதான் கிருஷ்ணரும் குசேலரும் குருகுல வாசம் செய்தனர். அவர்கள் இருவருக்கும் சந்திபாணி என்பவர் ஆசிரியராக இருந்து அனைத்தையும் பயிற்றுவித்தார் என்றார்கள்.

அடுத்து நாங்கள் சென்றது, ஒயின் அருந்தும் பைரவர் கோயில். இங்கு பூஜைக்கு வருபவர்கள் ஒரு சிறிய பாட்டில் ஒயின் மற்றும் புஷ்பங்கள் நிறைந்த பூஜைத் தட்டை வாங்கி வருகிறார்கள். ஒயினை ஒரு சிறிய வெள்ளித்தட்டில் ஊற்றி பைரவர் வாய் அருகில் கொண்டு செல்கிறார்கள். அதை லேசாக சாய்த்தால்... சரசரவென்று ஒயின் உள்ளே சென்றுவிடுகிறது. பாக்கியை பிரசாதமாகக் கொடுத்துவிடுகிறார்கள். எங்களுக்கு எல்லாமே வியப்பாக இருந்தது.

அடுத்து நாங்கள் சென்றது, விக்கிரமாதித்தன் வழிபட்ட காளி கோயில். இதுவும் ஒரு சக்தி பீடமாகும். பார்வதி தேவியின் இடது முழங்கை விழுந்த இடம் இது என்றார்கள். இங்கு தேவியின் திருநாமம் மங்கள சண்டிகர். அவளைத் தரிசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம். மாலை 4 மணிக்கு உஜ்ஜயினி கடைத் தெருவைச் சுற்றிவந்து, வேண்டியவற்றை வாங்கி கொண்டு, அங்கிருந்த கோபால கிருஷ்ணன் கோயிலையும் தரிசித்துவிட்டு, இரவு 3 மணிக்கு ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, சென்னைக்கு பயணமானோம்.

எங்கள் பஞ்ச துவாரகா யாத்திரை இனிதே நிறைவுற்றது. சென்ற இடத்தில் எல்லாம் அருமையான தரிசனம் கிடைத்ததும், நினைவிலிருந்து மறையாத கோலியாக் கடற்கரையை பார்த்ததும் மறக்கமுடியாதவை.

தேடுகிறோம்... கயிலைநாதனை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close