Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஆன்மிக பொக்கிஷம்’ ஆவுடையார்கோயில்!

ஆன்மிக பயணம்  14

- நெ.சௌந்தரராஜன், சென்னை-114

றைவனைக் காண முடியுமா? அவன் அருள் கிட்டுமா? அவன் அன்புக்கு நாம் பாத்திரமாக முடியுமா? - இப்படி எண்ணும் அன்பரா நீங்கள்? அப்படியென்றால், ஒருமுறை ஆவுடையார்கோயில் சென்று மாணிக்கவாசகரை அவசியம் தரிசித்து வரவும். ஆம் அன்பர்களே... இங்கே இறைவன் அருவமாக இருக்கிறான். அதனை உணர்ந்த மனிதன் இங்கே தெய்வமாகக் காட்சியளிக்கிறார்.

ஆவுடையார்கோயில் கல் வேலைப்பாட்டைக் காணக் கண்கள் கோடி வேண்டும். அப்பப்பா... அங்கே சென்ற என்னை புல்லரிக்க வைத்தான் அதிவீரராம பாண்டியன். என்னை மட்டுமா? ஆங்கிலேயனே இங்குள்ள கல் வேலைப்பாட்டைப் பார்த்து வியந்து, 'இவை கற்களா அல்லது இரும்பா?’ எனப் பரிசோதித்துப் பார்த்தானாம்.

இந்தக் கோயில் வேலைப்பாடுகள் இன்று பலருக்கும் உபயோகப்பட்டு வருகின்றன. பட்டு நெசவாளர்கள் தமது பட்டுப் புடவை டிசைனுக்குத் தேவையான மாடலை இங்கிருந்து எடுத்துச் செல்கின்றனர். மாணிக்கவாசகரின் வாழ்க்கை வரலாற்றை அஜந்தா ஓவியங்கள்போல் சுவரில் தீட்டியுள்ளார்கள். அன்னப்பறவை நான்கு யானைகளைச் சுமந்துகொண்டு ஆகாயத்தில் பறக்கிறது. பொதுவாக, அன்னப்பட்சி பாலையும் நீரையும் சேர்த்து வைத்தால் பாலை மட்டும் அருந்தும் எனக் கேள்விப்பட்டு இருக்கிறோம். மிக மென்மையான பறவை அது என்பர். ஆனால், யானையைவிட பலம் பொருந்தியது என இங்குள்ள ஓவியம் சொல்கிறது. மனத்தை லேசாக மாற்றினால், பக்குவப்படுத்தினால் எத்தகைய கடுமையான வேலையையும் எளிதாகச் செய்யலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்த ஓவியம்.

இங்கேயுள்ள அம்பாளைக் காண்பதற்கு அம்பாள் சந்நிதியில் 36 துவாரங்கள் உள்ளன. அந்தத் துவாரங்கள் வழியே நம் பார்வையைச் செலுத்தினால், உள்ளே இருப்பது ஒன்றும் நமக்குத் தெரியாது. ஆனால், ஒரு துவாரத்தில் நம் இரண்டு கண்களையும் செலுத்தினால், உள்ளே இருக்கும் அம்பாளின் பாதத்தைக் காணலாம். 'இறைவனை அடையப் பல வழிகள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீ என்னை அடையலாம்’ என்பதே இதன் தத்துவம்.

இங்கே அம்பாள் சந்நிதியில், நம் தலைக்கு மேலே ஸ்ரீசக்கரம் உள்ளது. அம்பாளுக்கு நைவேத்தியம், தீப ஆராதனை காட்டும்போது மாணிக்கவாசகருக்கும் நைவேத்தியம் தீப ஆராதனை ஒரே நேரத்தில் நடக்கிறது. ஸ்வாமி- அம்பாளுக்கு நம்பூதிரிகள், மற்ற சந்நிதியில் கோயில் அர்ச்சகர் பணி செய்கின்றனர். இது இக்கோயிலுக்கு மேலும் ஒரு சிறப்பு!

இங்கேயுள்ள சிற்பங்களில் குதிரைகளின் பல வகைகளும், அவற்றின் ஆபரணங்களும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இங்கே ஸ்வாமிக்கு நைவேத்தியமாக பாகற்காய், சுண்டைக்காய், வத்தக்குழம்பு வைக்கிறார்கள்.

அக்கால மாணவர்களுக்கு ஆஸ்ரமத்தில் இதைத்தான் உணவாக தந்தார்களாம். அதையே இங்குள்ள இறைவனுக்கு இன்றும் படைக்கின்றனர். கசப்பை அருந்தியவர்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது இந்த நைவேத்திய தத்துவம்.

இங்கு பிரதோஷம் கிடையாது. ஆனால், அடியேன் பிரதோஷ நேரத்தில் அபிஷேகம், அலங்காரம், வஸ்திரம், நைவேத்தியம் படைத்தேன். ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம்.

இந்த இடத்தில் இங்கே தெய்வமாக வீற்றிருக்கும் மாணிக்கவாசகர் பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும்.

அதிவீரராம பாண்டியனின் அமைச்சராக இருந்தவர் மாணிக்கவாசகர். இவர் திருவாதவூரில் பிறந்தவர். இவரின் தமிழ், தேனைப் போல இனிக்கும். அதைத் திருவாசகம் உணர்த்தும். இவரது பெருமையை உலகுக்குத் தெரிவிக்க, நரிகளைப் பரிகளாக்கி சிவபெருமான் நடத்திய திருவிளையாடல் எல்லோரும் அறிந்ததுதான். அதற்குக் காரணமான திருத்தலம் இந்த ஆவுடையார்கோயில்.

வாதவூரார் வாங்கி வந்த பரிகள் நரிகளாக மாறி ஊளையிட, கோபம் கொண்ட மன்னன் அவரைத் தண்டிக்க... இறையருளால் வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தப்பு செய்துவிட்டோமோ என்று அஞ்சினான் மன்னன். பின்னர் உண்மையை உணர்ந்து, வாதவூராரைத் தன்னிடமே மந்திரியாக இருக்க வேண்டினான். ஆனால், அவர் மறுத்துவிட்டார். 'என் மனம் இறைத் தொண்டு செய்ய நாடுகிறது’ என்று கூறி, திருப்பெரும்துறையான ஆவுடையார்கோயிலுக்கு வந்தாராம்.

இங்குள்ள ஒரு மண்டபத்தின் மேற்கூரையில் தட்டையான பத்து கற்களை எந்தவிதப் பிடிப்பும் இல்லாமல் பதித்துள்ளார்கள். 'இது எப்படிச் சாத்தியம்?’ எனக் கேட்டேன். கற்களின் விளிம்பில் கம்பிகள் போல் செதுக்கி, பின்பு இணைப்புக் கற்களில் துவாரம் போட்டு இணைத்துள்ளார்களாம். பாண்டிய நாட்டுச் சிற்பிகளின் உளியின் கூர்மையும், புத்தியின் கூர்மையும் என்னை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றன.

வரைபடத்தில் இந்தியாவின் தென் பகுதி கூர்மையாக இருக்கும்; இங்கே பிறந்தவர்களின் அறிவும் கூர்மையாக இருக்கும். அன்று இந்தச் சிற்பிகள் கற்களில் செதுக்கிய மிக நுட்பமான வேலைப்பாட்டைப் பார்த்து மேல்நாட்டவர் வியந்தனர். இன்றைய சிற்பிகளின் (நம் பிள்ளைகள்) மென்பொருள் தொழில்நுட்பத்தில் மிக நுட்பமான வேலையைக் கண்டு மேலைநாட்டவர் வியக்கிறார்கள். இவர்களுக்குப் பின்னால் ஒளிந்து இருப்பது இந்த மண்ணின் இறையாண்மை.

என்ன... நீங்களும் ஆவுடையார்கோவில் கிளம்பிவிட்டீர்கள்தானே?

பரவசம் தரும் யமுனோத்திரி யாத்திரை!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close