Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலைக்க வைத்த மலை உச்சிப் பயணம்!

ஆன்மிக பயணம் 15

 - ஆனந்தி தியாகராஜன், சென்னை-125

ரந்து விரிந்த நமது பாரத தேசத்தில் நாம் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், மலைப்பிரதேசங்கள், புண்ணியத் திருத்தலங்கள், வரலாற்றுப் புகழ்பெற்ற நகரங்கள் - இப்படி எத்தனை எத்தனையோ! இந்த இடங்களுக்கு அவ்வப்போது நாம் பயணங்கள் மேற்கொள்வது அவசியம்.

பயணங்களால் நாம் பல விஷயங்களை அறிகிறோம். பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. பயணங்களில் ஏற்படும் அனுபவங்கள் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகின்றன. அத்தகைய ஒரு பயணமாகிய கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி செல்வதற்காக 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான், என் கணவர், மகன் மூவரும் புதுடில்லியிலுள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் பயணத் திட்டத்தில் பதிவு செய்தோம்.

எண்ணற்ற கனவுகளுடன் புதுடில்லி அடைந்த எங்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி காத்திருந்தது. 'மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது’ என்ற செய்தி கேட்டு, எங்கள் பயணக் குழுவில் இருந்தவர்களில் இருவரைத் தவிர, மற்றவர்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டனர். அதனால், ஒட்டுமொத்த பயணத் திட்டத்தையே ரத்து செய்துவிட்டதாக டிராவல்ஸ் நிறுவனத்தினர் கூறினர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து நாங்கள் போராட, எங்கள் மூவருடன் அந்த இருவரையும் சேர்த்து, ஒரு இன்னோவா காரை ஏற்பாடு செய்து எங்களை அனுப்பிவைத்தனர் அந்த டிராவல்ஸ் நிறுவனத்தினர்.

எங்கள் பயணம் இனிதே நடைபெற இறைவனை வேண்டிக்கொண்டு, மறுநாள் இரவு 9 மணிக்கு புதுடில்லியில் இருந்து புறப்பட்டோம். சுமார் 224 கி.மீ. பயணம் செய்து, விடியற்காலை உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள ரிஷிகேஷ் வந்தோம். இங்கு கரைபுரண்டோடும் கங்கை நதியும், அதன்மேல் கட்டப்பட்டுள்ள பாலங்கள் 'ராம் ஜுலா’வும், 'லஷ்மண் ஜுலா’வும் ரிஷிகேஷின் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. ரிஷிகேஷை விட்டு அன்று மதியம் புறப்பட்டோம். வழியில், 'தேவ் பிரயாக்’ என்ற இடத்தில் பாகீரதி நதியும் அலகநந்தா நதியும் சங்கமிக்கும் கண்கொள்ளாக் காட்சியை கண்டு ரசித்துவிட்டு, ஸ்ரீநகர் என்ற இடத்தில் தங்கினோம்.

ஸ்ரீநகரிலிருந்து மறுநாள் கிளம்பி ருத்ர ப்ரயாக் வந்தோம். ருத்ர ப்ரயாக்கில் மந்தாகினி நதியும் அலகநந்தாவும் இருவேறு வண்ணங்களில் சங்கமிக்கும் காட்சி நம் மனத்தைக் கொள்ளை கொள்கிறது. பின், அங்கிருந்து 'கௌரிகுண்ட்’ வந்தோம். இங்கிருந்து கேதார்நாத்துக்கு 14 கி.மீ. நடைப்பயணமாக மலையேறிச் செல்ல வேண்டும். கேதார்நாத், உத்தரகாண்ட் மாநிலத்தில் கர்வால் பகுதியில்- இமயமலையில் சுமார் 11,759 அடி உயரத்தில், மந்தாகினி நதி உற்பத்தியாகும் இடத்தில் உள்ளது. மலை ஏறுவதற்குக் குதிரை மற்றும் டோலி வசதிகள் உள்ளன.

நாங்கள் காலை 11 மணிக்கு மலை ஏறத் துவங்கினோம். பாதி வழி ஏறியதும், என் கணவர் குதிரை மேல் போகலாம் என்றார். எனக்கு அதில் விருப்பம் இல்லை. இருந்தாலும், வேறு வழியின்றி குதிரை மேல் ஏறினோம். குதிரைக்குப் பக்கத்தில் அதை வழி நடத்த யாரும் வருவதில்லை. குதிரை தன் போக்கில் மலை ஏறுகிறது. நான் ஏறிய குதிரையோ, பள்ளத்தின் விளிம்பை நோக்கியே சென்று கொண்டிருந்தது. பல நேரங்களில் சரிவில் முன்னங்கால்களை ஊன்றி, அங்கிருக்கும் செடிகளைச் சாப்பிடத் துவங்கியது. அங்கிருந்து பார்த்தால், கீழே கிடுகிடு பாதாளம். பயம் வயிற்றைப் புரட்டுவதற்குக் கேட்கவேண்டுமா என்ன?

நான் போட்ட கூச்சலில், என் மகன் தன் குதிரையை விட்டு இறங்கி வர, பின்பு இருவரும் சேர்ந்து நடந்தே கேதார்நாத்தை அடைந்தோம். அந்தச் சம்பவத்தைச் சொல்லி இப்போதும் என்னை எல்லோரும் கேலி செய்வார்கள்.

மறுநாள் விடியற்காலை, ஆண்டவனைத் தரிசிக்க ஆலயத்துக்குப் புறப்பட்டோம். மங்கிய வெளிச்சத்தில் பனி மூடிய சிகரங்களின் பின்னணியில் கேதார்நாத் ஆலயம் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அந்தப் பெருமானை கண்குளிரத் தரிசித்துவிட்டு மலை இறங்கத் தொடங்கினோம்.

சில்லென்று உடலைத் தீண்டும் குளிரும், பரந்து விரிந்த மலைத் தொடரும், அதன் மேல் தவழ்ந்து செல்லும் மேகக் கூட்டங்களும் இனம்புரியாத பரவச நிலையைத் தந்தன. அன்றிரவு 'சீதாபூர்’ என்ற இடத்தில் தங்கினோம்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கர்வால் பகுதியில் இமயமலையில் சுமார் 11,204 அடி உயரத்தில் பத்ரிநாத் உள்ளது. மறுநாள், சீதாபூரிலிருந்து கிளம்பி ஜோஸிமத் வழியாக பத்ரிநாத்தை நெருங்கிக் கொண்டிருந்தோம். பாதை வெகுவாகச் சீர்குலைந்து கிடந்தது. அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பாதையின் நடுவில் இருந்த ஒரு பெரிய கல்லைத் தவிர்ப்பதற்காக எங்கள் கார் டிரைவர் வண்டியை வலதுபுறமாகத் திருப்ப... பாதையை விட்டு விலகி பள்ளத்தை நோக்கி விரைந்தது கார். சில நொடிகளில் காரின் வலது முன் சக்கரம் சரிவில் இறங்க... 'ஐயோ’ என்று அலறினோம். ஆனால், சரியான நேரத்தில் எங்கள் டிரைவர் பிரேக்கை அழுத்த, வண்டி அப்படியே சரிவில் நின்றுவிட்டது. இடதுபுறத்தில் அமர்ந்திருந்த என் கணவரும், மகனும் கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கிவிட்டனர். எந்த நிமிடமும் கார் சரிந்து, பள்ளத்தில் விழுந்துவிடக் கூடிய நிலைமை.

வண்டியிலிருந்த நானும் மற்ற இருவரும் கீழே இறங்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தோம். கண்ணுக்குத் தெரியாத தெய்வங்களையெல்லாம் மனம் வேண்ட ஆரம்பித்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

எதிர்ப்புறமாக ஒரு வண்டி வந்து எங்கள் அருகே நின்றது. எங்கள் நிலைகண்டு, அதிலிருந்த நான்கு பேரும் கீழே இறங்கி வந்தனர். முதலில், எங்கள் மூவரையும் கீழே இறங்கச் செய்துவிட்டு, எங்கள் டிரைவரை வண்டியின் என்ஜினை இயக்கச் சொன்னார்கள். பிறகு, காரை அப்படியே பிடித்துத் தூக்கி, பள்ளத்திலிருந்து சக்கரத்தை வெளியே எடுத்துப் பத்திரமாகச் சாலையில் நிறுத்திவிட்டு, எதுவும் கூறாமல் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

ஆள் நடமாட்டமே இல்லாத அந்த மலைப் பிரதேசத்தில் கண்மூடித் திறக்கும் நேரத்தில் எங்கிருந்தோ வந்து எங்களைக் காப்பாற்றியவர்கள் யார்? இது, அந்த எல்லாம் வல்ல இறைவனின் கருணையே அன்றி வேறு எதுவாக இருக்கக்கூடும்? அந்த நிகழ்ச்சியை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்ந்து, மெய்சிலிர்க்கிறது.

பத்ரிநாதை நாங்கள் சென்றடைந்தபோது மாலை நேரம் ஆகிவிட்டது. விளக்குகளின் வெள்ளத்தில் பத்ரிநாத் ஆலயம் ஜொலித்துக்கொண்டிருந்தது. கண்குளிர பத்ரிநாதனை தரிசனம் செய்துவிட்டு, அன்றிரவு அங்கு தங்கினோம்.

பத்ரிநாத்தில் நாங்கள் வயதான தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது. அந்தப் பெரியவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. யாருடைய துணையும் இல்லாமல் தனியாகப் பயணம் செய்யும் அவர்களது தன்னம்பிக்கை எங்களை வியக்கச் செய்தது. அவர்கள் எங்களுக்குப் பக்கத்து அறையில்தான் தங்கியிருந்தனர்.

மறுநாள் அதிகாலை 3 மணிக்கு 'நிர்மால்ய’ தரிசனத்துக்காகத் தன்னையும் எழுப்பி அழைத்துச் செல்லும்படி அந்த வயதான அம்மாள் கூறியிருந்தார். ஆனால், மறுநாள் 3 மணிக்கு எழுந்திருக்க மனம் விரும்பினாலும், எங்கள் உடல் ஒத்துழைக்க மறுத்தது. அந்த வயதான அம்மாள் மட்டும் எங்கே எழுந்திருக்கப் போகிறார் என்று நினைத்தோம். அப்போது எங்கள் அறைக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. கதவைத் திறந்து பார்த்தால், அந்த அம்மாள் வெளியே குளிரில் நின்றுகொண்டிருந்தார்.

எங்களுக்கு மிகவும் வெட்கமும் சங்கடமுமாகிப் போய்விட்டது. உடனே என் மகனை எழுப்பிக் கதவைப் பூட்டிக்கொள்ளச் சொல்லிவிட்டு, அவருடன் ஆலயம் நோக்கிப் புறப்பட்டோம். வெளியே நல்ல இருட்டு. நல்ல குளிர். சிறிது தூரம் சென்றதும், பின்னால் காலடியோசை கேட்க... திரும்பிப் பார்த்தால், என் மகன் வந்துகொண்டிருந்தான். பிறகு, எல்லோரும் ஆலயத்துக்கு அருகே இருந்த வெந்நீர் ஊற்றுகளில் ஆனந்தமாக நீராடிவிட்டு, ஆண்டவனின் 'நிர்மாலய’ தரிசனத்தைக் கண்டுகளித்தோம். பிறகு, அந்த சங்குசக்ரதாரியின் சர்வாலங்கார கோலத்தைப் பலமுறை தரிசித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பி பீப்பல் கோடி என்ற இடத்தில் இரவு தங்கினோம்.

மறுநாள், பீப்பல் கோடியிலிருந்து கிளம்பி, கங்கோத்ரி நோக்கிப் பயணித்தோம். கங்கோத்ரி உத்தரகாண்ட் மாநிலத்தில் கர்வால் பகுதியில், இமயமலையில் சுமார் 10,168 அடி உயரத்தில் உள்ளது. இங்கிருந்து 18 கி.மீ. தூரத்தில் இன்னும் உயரத்தில் 'கோமுக்’ என்ற இடத்தில் உற்பத்தியாகிறது பாகீரதி ஆறு. அது, காடு-மேடு கடந்து, கங்கோத்ரி வந்து, பிறகு... வற்றாத ஜீவநதியான கங்கையெனப் பெயர்கொண்டு, வட இந்திய தேசத்துக்கு வளம் சேர்க்கின்றது. கங்கோத்ரியில் பாகீரதி நதிக்கரையில் கங்காதேவிக்கு அழகான கோயில் கட்டப்பட்டுள்ளது. அந்தப் புண்ணிய நதியில் நனைந்து மகிழ்ந்து, பின் அந்த நதிதேவியை வணங்கிவிட்டு அங்கிருந்து கிளம்பி உத்தர்காசி வந்தோம்.

மறுநாள், யமுனோத்ரி செல்வதற்காக முதலில் 'ஹனுமன் சட்டி’ என்ற இடத்திற்கு வந்தோம். இங்கிருந்து 7 கி.மீ. நடைப்பயணமாக யமுனோத்ரிக்கு மலையேறிச் செல்ல வேண்டும். இங்கும் மலையேறுவதற்கு குதிரை மற்றும் 'டோலி’ வசதிகள் உள்ளன. மலைப்பாதையில் 'டோலி’ சுமந்து செல்பவர்கள் வெகுவேகமாக ஏறி இறங்கும் காட்சி நம்மைத் திகைப்பில் ஆழ்த்துகிறது. யமுனோத்ரி இமயமலையில் சுமார் 10,804 அடி உயரத்தில் உள்ளது. இங்கு யமுனாதேவிக்கு அழகான ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு அருகே உள்ள வெந்நீர் ஊற்றில் பக்தர்கள் தாம் கொண்டு வந்த அரிசி மற்றும் உருளைக்கிழங்குகளை மெல்லிய துணியில் கட்டி வைக்கிறார்கள். சிறிது நேரத்தில் அவை நன்றாக வெந்தவுடன், அதை தேவியின் பிரசாதமாக எடுத்துச் செல்கிறார்கள். அந்த அதிசயக் காட்சியைக் கண்டு ரசித்துவிட்டு முசோரி, வாரணாசி வழியாக அன்றிரவு புதுடில்லி வந்து சேர்ந்தோம்.

எங்களுடைய இந்தப் பயணம் எங்களுடைய வாழ்நாளிலே மறக்க முடியாத இனிய பயணமாக அமைந்தது. அதற்காக, எல்லாம் வல்ல இறைவனுக்கு எங்கள் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

'ஆன்மிக பொக்கிஷம்’ ஆவுடையார்கோயில்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close