Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பரவசப்படுத்திய வைஷ்ணவிதேவி!

ஆன்மிக பயணம் - 16

 - உஷா ராஜகோபாலன், மும்பை

நாங்கள் தற்போது மும்பையில் வசிக்கிறோம். 1986 முதல் 2012-ஆம் ஆண்டு வரை நாங்கள் டெல்லியில் இருந்தோம். அப்போது நாங்கள் பலமுறை ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவிதேவி கோயிலுக்கு யாத்திரை சென்றுள்ளோம். அதில், எங்களுடைய முதல் யாத்திரையிலும், 1997-ல் மேற்கொண்ட யாத்திரையிலும் நிகழ்ந்த சிலிர்ப்பூட்டும் ஆன்மிக அனுபவங்கள் சிலவற்றை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

1991-ல், என் கணவரின் ஆபீஸிலிருந்து வைஷ்ணவிதேவி கோயிலுக்கு யாத்திரை அழைத்துப் போவதாக தகவல் வந்தது. நாங்களும் எங்கள் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டோம். டிசம்பர் 10-ஆம் தேதி நாங்கள் டெல்லியிலிருந்து கிளம்ப வேண்டும். டெல்லி மற்றும் காஷ்மீரில் அப்போது கடுங்குளிர் ஆரம்பித்துவிட்டது. எங்களின் இரண்டாவது மகனுக்கு ஒரு வயது. அவனுக்கு ஆஸ்துமா பிரச்னை வேறு இருந்தது. நாங்கள் கவலையுடன் எங்கள் குடும்ப டாக்டரை அணுகிக் கேட்டபோது அவர் சிரித்துக்கொண்டே, 'அன்னையைப் பார்க்கத்தானே போகிறீர்கள்? அவள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுச் செல்லுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்'' என்றார்.

இதற்குப் பின் எங்களது அடுத்த கவலை தொடங்கியது. நாங்கள் அப்போதுதான் எங்கள் சொந்த வீட்டுக்குக் குடியேறியிருந்தோம். குடிபுகும் முன் கிரஹப்பிரவேசம் செய்தது, இரண்டாவது மகனின் முதல் ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடியது, வீடு வாங்குவதற்கு வாங்கிய கடன்... என எங்களின் கையிருப்புப் பணம் கணிசமாகக் குறைந்திருந்தது. நாங்கள் கிளம்பும் நாளன்று எங்களிடம் வெறும் ரூ.300-தான் இருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

புதிய இடம்; முதல் முறை போகிறோம்; சிறு குழந்தைகள்; கடுங்குளிர். அனைத்தையும் நினைத்து மிகுந்த கவலையுடன்தான் கிளம்பினோம். ''அம்மா வைஷ்ணவி தாயே! உன்னைப் பார்க்க முதன்முறையாக வருகிறோம். எங்களிடம் போதிய பணமும் இல்லை; குடும்பச் சூழ்நிலையும் சரியில்லை. எங்களுடைய பயணம் நல்லபடியாக நடக்கவும், பணத் தட்டுப்பாடு ஏற்படாமலும் நீதானம்மா காப்பாற்ற வேண்டும்!'' என மனதார வேண்டிக்கொண்டோம்.

நாங்கள் யாத்திரை புறப்பட்ட நேரம், பஞ்சாபில் தீவிரவாதம் நிலவியதால், நாங்கள் எல்லோரும் பஸ்ஸில் கலவர முகத்துடன் அமர்ந்திருந்தோம். பஸ் பஞ்சாபைத் தாண்டும் முன், ஓரிடத்தில் யாரோ கல் எறிந்ததால், பஸ்ஸின் முன் கண்ணாடி உடைந்துவிட்டது. மேலும், குளிர் காற்று வேகமாக வீசியதால், டிரைவர் மிகுந்த சிரமத்துடன் எங்களை கட்ரா என்னும் இடத்தில் கொண்டு சேர்த்துவிட்டு, கண்ணாடியைச் சரிசெய்யப் போய்விட்டார்.

நாங்கள் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்துக் குளித்து, உடை மாற்றித் தயாராகி, மலையேற ஆயத்தமானோம். மேலே ஏறுவதற்கு முன், ஒவ்வொரு குடும்பத்துக்கும் சாப்பாட்டுக்கான செலவை ஒரு நபருக்கு ரூ.50 என்ற கணக்கில் எங்கள் குழுத் தலைவர்கள் பிரித்துக் கொடுத்தனர். நான், என் கணவர், இரு குழந்தைகள் என்ற கணக்கில் எங்களுக்கு இரண்டு வேளைக்கு உடனடியாக ரூ.400 தந்தனர். நானும் என் கணவரும் ஸ்வாமி தரிசனம் செய்யும் வரை சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம்.

கடினமான 14 கி.மீ. பாதையில் குழந்தைகளையும், அவர்களுக்கான பொருட்களையும் தூக்கிக்கொண்டு நடந்தே சென்றோம். மேலே போனவுடன்தான் தெரிந்தது, ஒவ்வொரு யாத்ரீகருக்கும் நம்பர் உள்ள சீட்டு தேவை என்று! எங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் எப்போதோ ஏறி தரிசனம் பண்ணிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். என் கணவரோ, 'நான் பெரிய குழந்தையுடன் வெளியில் நிற்கிறேன். நீ முதலில் போய் தரிசனம் பண்ணிவிட்டு வா! பிறகு நாங்கள் செல்கிறோம்’ என்றார்.

நானும் சிறிய மகனைத் தூக்கிக்கொண்டு, வரிசையில் போய் நின்றேன். சிறிதுநேரம் கழித்துத் திரும்பிப் பார்த்தால், பின்னால் நீளமான வரிசை. நான் உடனே என் பின்னால் நின்றவரிடம் சொல்லிவிட்டு, என் கணவரைத் தேடிக்கொண்டு வந்தேன். முன்பு நாங்கள் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தில் அவரைக் காணவில்லை. அவரை அங்கே இங்கே என்று தேடி, ஒருவழியாகக் கண்டுபிடித்து நிலைமையை விளக்கி, 'நாம் சேர்ந்தே போவோம்’ என்று அழைத்துக்கொண்டு சென்றால், தரிசன இடத்தில் எந்த வரிசையும் இல்லை; ஒருவரையும் காணோம். அத்தனை நீளமான வரிசையில் நின்றிருந்தவர்கள் அதற்குள்ளாகவா தரிசனம் முடிந்து போய்விட்டார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. எல்லாம் ஒரு பத்து நிமிடத்திற்குள் நடந்து முடிந்த மாய நிகழ்வாகத் தோன்றியது.

பிறகு, அங்கிருந்த கோயில் ஊழியரிடம் எங்களிடம் சீட்டு இல்லை என்பதைச் சொன்னோம். அவர் தமிழ்க்காரராக இருந்ததால், எங்களை எந்த மறுப்பும் இன்றி, உள்ளே செல்ல அனுமதித்தார். அப்போது ஆரத்திக்கான நேரம் ஆகிவிட்டதால், நாங்கள் உள்ளே சென்றதுமே, கதவை மூடிவிட்டார்கள். உள்ளே போய் மிகவும் ஆனந்தமாக, குடும்ப சகிதமாக தரிசனம் செய்தோம்.

ஆனால், எனக்கு இதிலும் ஒரு ஏமாற்றம் ஏற்பட்டது. மற்ற கோயில்களைப் போல் நான் இங்கேயும் கடவுளின் உருவத்தை எதிர்பார்த்துப் போனேன். ஆனால், இங்கே பிண்ட ரூபத்தில்தான் அம்பாள் இருக்கிறாள் என்கிற விஷயம் எனக்குத் தெரியாது. வெளியில் வந்த பின்புதான், அதுதான் மூலவர் என்று தெரிய வர, அப்படியே திரும்பி அம்பாளிடம் வேண்டிக்கொண்டேன்... ''அம்மா! கஷ்டப்பட்டு ஏறி வந்தும், உன்னை நன்றாக தரிசித்த திருப்தி எனக்கு ஏற்படவில்லை. கூடிய சீக்கிரம் என்னை மீண்டும் வரவழைத்து தரிசனம் கொடு! திரும்பவும் இந்தக் கடின பயணத்தை நடந்தே மேற்கொள்ள எனக்கு நீதானம்மா உதவ வேண்டும்!''

ஹோட்டலுக்குத் திரும்பிய பின், எங்களுக்குச் சாப்பாட்டுச் செலவுக்காக மேலும் ரூ.600 கிடைத்தது. ரூ.300 உடன் கிளம்பிய நாங்கள் திரும்பும்போது, செலவு செய்தது போக ரூ.1000 வரை எடுத்துக்கொண்டு திரும்பினோம். யாராவது ஆன்மிகப் பயணத்துக்குச் சென்றுவிட்டு, கொண்டுபோன பணத்தைவிட மூன்று மடங்கு அதிக பணத்துடன் வந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எங்களுக்குக் கிடைத்தது, அம்பாளின் கருணையே கருணை!

அதன்பின், நான் வருடாவருடம் வைஷ்ணவிதேவி யாத்திரை செல்ல ஆரம்பித்தேன். 1997-ஆம் வருடம், எனக்கு மிகவும் ஆபத்தான நிலையில் ஆபரேஷன் ஒன்று செய்யப்பட்டு, உயிர் பிழைத்ததே பெரிய விஷயமாகிவிட்டது. அப்போது வேண்டிக்கொண்டு, ஜூன் மாதம் என்னுடைய இரண்டு தோழிகளின் குடும்பத்துடன் யாத்திரை சென்றேன்.  

வழக்கம்போல் மலை மேலே ஏறியதும், உள்ளே நுழைவதற்கு முன் நானும் தோழி நளினியும் மற்றவர்களை அங்கேயே நிறுத்திவிட்டு, பாத்ரூம் சென்றோம். திரும்பி வந்து பார்த்தபோது, அவர்களை அங்கே காணவில்லை. எங்கள் நம்பர் சீட்டு அவர்களிடம் இருந்ததால், அங்கிருந்த ஊழியரிடம் 'எங்களுடன் வந்தவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள்’ என்று சொல்லி, நாங்களும் உள்ளே போய்விட்டோம். ஆனால், உள்ளேயும் அவர்களைக் காணவில்லை. சிறிது தூரம் போனதும், அங்கே ஓரிடத்தில் சண்டி ஹோமம் நடந்துகொண்டிருந்தது.

எங்களை பூர்ணாஹூதியில் கலந்துகொள்ளச் சொன்னார்கள். மிகுந்த பக்தியுடனும் சந்தோஷத்துடனும் அதைச் செய்துவிட்டு, இன்னும் சிறிது தூரம் நடந்து போனால், அங்கே அம்பாளின் உண்டியலைத் திறந்துகொண்டிருந்தார்கள். எங்களையும் அதற்குச் சாட்சியாக நிற்கச் சொன்னார்கள். அதில் பங்கேற்ற பின், உள்ளே சென்று தரிசனம் செய்தோம். அப்போது அங்கிருந்த பண்டிட்ஜி, அம்பாளின் துப்பட்டாவில் வளை, பூ, குங்குமம் எல்லாம் வைத்து என்னிடம் கொடுத்து, 'இதை உன் பூஜையில் வைத்துக்கொள்’ என்றார். தோழி நளினிக்கும் அதே போல் ஒன்று தந்தார். மிகவும் திருப்தியாக ஐந்து நிமிடத்துக்கு மேல் ஆற அமர நின்று தரிசனம் பண்னிவிட்டு வெளியே வந்தால், தோழி சியாமளா, அவளின் குடும்பத்தினர், நளினியின் பிள்ளை எல்லோரும் நாங்கள் அவர்களை விட்டுச் சென்ற அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் எங்களை 'எங்கே போனீர்கள்?’ என்று விசாரிக்க, நாங்கள் அவர்களை விசாரிக்க... அப்போது என்னதான் நடந்தது என்பது இன்றளவும் எனக்குப் புரியாத மர்மமாகவே இருக்கிறது.

எங்களுக்குரிய நுழைவுச்சீட்டு அவர்களிடம் இருந்ததால், மறுபடியும் ஒருமுறை அவர்களோடு கோயிலுக்குள் சென்று, தரிசித்துவிட்டு வந்தோம்.

இப்போதும், அந்தப் பயணத்தின்போது கோயிலில் தரப்பட்ட பிரசாதத்தை எங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடுகிறேன்.

என் வாழ்வில் பல தருணங்களில் கடவுளின் அருகாமையையும், பராமரிப்பையும் உணர்ந்திருந்தாலும், இந்த வைஷ்ணவிதேவி யாத்திரைகளையும், அப்போது நிகழ்ந்த சம்பவங்களையும் என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது!

மலைக்க வைத்த மலை உச்சிப் பயணம்!

எடிட்டர் சாய்ஸ்

MUST READ