Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிலிர்க்க வைத்த உஜ்ஜயினி ஸ்ரீ மகாகாளர்!

ஆன்மிக பயணம் 17

 - வி.கிருத்திவாசன், சென்னை-15

ஜ்ஜயினி- த்வாதசலிங்க க்ஷேத்ரம், சப்த மோட்சபுரி, 51 சக்தி பீடங்களுள் ஒன்று எனப் பல பெருமைகள் கொண்ட அற்புத திருத்தலம். அவந்தி என்றும் பெயர் உண்டு. குப்தர்கள் மற்றும் மௌரியர்களின் தலைநகராகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமும்கூட!

நானும் என் கணவரும் போபால் சென்று, அங்கிருந்து ரயில் மூலம் உஜ்ஜயினிக்கு வந்தோம். இந்த க்ஷேத்திரத்தில் மட்டும் அதிகாலை நடக்கும் ஸ்மசான சாம்பல் அபிஷேகம் மிகச் சிறப்பானது. அதைக் காண வேண்டுமென்ற மகா ஆவலில் அங்கே சென்றோம்.

முதலில், நாங்கள் அங்கே பார்த்தது சாந்தீபனி ஆஸ்ரமம். இந்த முனிவரிடம்தான் ஸ்ரீகிருஷ்ணர், பலராமர் ஆகியோர் கல்வி கற்றனர். மூவாயிரம் வருடப் பழைமை வாய்ந்த ஓவியங்களை இங்கே பார்த்து அதிசயித்தோம்.

அடுத்ததாக நாங்கள் சென்றது சித்தவட் எனும் இடம். இங்குள்ள ஆலமரம் புகழ்பெற்றது. அதில் மஞ்சள் கயிற்றைச் சமர்ப்பித்து, எடுத்துக் கட்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்றார்கள். நானும் அப்படி மஞ்சள் கயிறு கட்டி எடுத்து வந்தேன்.

அடுத்து, நாங்கள் பர்த்த இடம் ஹரிகுஹா. பட்டினத்தாருக்குச் சீடராகி, திருவிடைமருதூரில் ஞானம்பெற்று உய்ந்த பர்த்ருஹரி தவம் செய்து ஆராதித்த சிவன், இங்கே குகை ஒன்றினுள் கோயில் கொண்டுள்ளார். தொடர்ந்து, கால பைரவ் கா மந்திர் கோயிலில் அதிசய பைரவரைத் தரிசித்துவிட்டு, மகாகாளியைத் தரிசிக்கப் புறப்பட்டோம்.

உஜ்ஜயினி காளி கோயில் காளி மந்திர் என்று அழைக்கப்படுகிறது. தன் வாய் தாம்பூலத்தை ஆட்டிடையன் வாயில் உமிழ்ந்து, அவனை உலக மகாகவி 'காளிதாஸ்’ ஆக்கியவள் இந்தத் தாய். செந்தூரம் பூசிய அழகிய குண்டுக் கன்னங்களுடன் உருண்டை முகம், சிறிய கிரீடத்தில் கருணையும் அன்பும் பொங்கித் ததும்பும் மிக அழகான கண்களுக்குச் சொந்தக்காரியாகத் திகழும் இவளைத் தரிசிக்கும்போது, அவளின் தீட்சண்யத்தில் நாம் ஒவ்வொருவரும் அந்தக் காளியின் தாஸனாகிப் போவோம்.

அடுத்த இடம் சென்று தரிசிக்க வேண்டும் என்பதால், அரை மனதாய் அவள் சந்நிதியிலிருந்து வெளியே வந்தோம்.

அடுத்ததாக நாங்கள் சென்றது... செவ்வாய் பிறந்து வளர்ந்து, கிரக பதவி பெற தவமிருந்து வழிபட்ட சிவன் குடிகொண்ட மங்கள்நாத் மந்திர். இங்குள்ள மண்ணும் செவ்வாய் கிரக மண்ணும் ஒரே தன்மையுடையது என்று சொல்கிறார்கள். இங்குள்ள சிவபெருமானை தரிசித்தால் செவ்வாய் தோஷம் நீங்கும என்கிறார்கள்.

அடுத்து, முக்கிய தீர்த்தக் கட்டமான 'ராம்காட்’ சென்றோம். போனமுறை, கும்பமேளா நேரத்தில் இங்கே வந்திருந்தோம். அப்போது, இங்கேதான் ஸ்நானம் செய்தோம். இது 51 சக்தி பீடங்களில் ஒன்று. குனித்த புருவமும், கோவைச் செவ்வாயில் குமிழ் சிரிப்புமாய், அந்தப் பனித்த சடைக்காரனின் பத்தினி இங்கே அருள்பாலிக்கிறாள். இவளின் இந்த இனிய முக தரிசனம் காண அல்லவா நாம் இரண்டாம் முறை இங்கே ஈர்த்து வரப்பட்டோம் என்று பெருமிதமாக இருந்தது. அவளும், ஏதோ நம்மைக் காணத்தான் காத்திருந்தது போல, கண்கள் விரித்து, முகம் முழுக்கப் புன்னகையுடன், ஆனந்த மயமான ரூபமாய்க் காட்சி தந்தாள். அவளைக் கண்டதும், அந்த ஆனந்தம் எனக்குள் பரவியது. அப்படி ஒரு சாந்நித்தியமும் அதிர்வலையும் நிரம்பியது அவளின் சந்நிதி. மேலே அன்னபூரணி, நடுவில் ஹர்சித்தி, கீழே காளி என ஒரே கருவறையில் மூன்று ரூபம் இங்கே!

 

இதையடுத்து நாங்கள் சென்றது, 'படாகணேஷ்’. போனமுறை நாங்கள் இங்கே வந்தபோது, எங்களுக்குத் தரிசனம் தராது 'ஒளிந்து’ கொண்டுவிட்டார் அவர். ஒளிந்துகொள்ளும் உருவமா அது? பெயருக்கு ஏற்றாற்போல் 'படா’வான அவரின் உருவம், கண்களுக்குள் அடங்கினால்தானே? கேமிராவுக்குள்ளும்தான்!!

அடுத்து, உஜ்ஜயினியில் மிகவும் புகழ்பெற்ற ஸ்ரீ மகாகாளேஷ்வர் கோயிலுக்குச் சென்றோம். அகன்ற தெருக்கள் வழியாக நடந்தோம். எங்கும் போல இங்கும் பூஜைப் பொருட்கள், இத்யாதி விற்பனைக் கடைகள் தெருவின் இருபுறமும் உள்ளன.

கோயிலுக்கு வந்துவிட்டோம். வாசலிலிருந்து உள்ளே செல்ல ரொம்ப தூரம். நடந்துகொண்டே, ஒவ்வொன்றாய் ரசித்துப் பார்த்துக்கொண்டே, உஜ்ஜயினி மகாகாளரின் பெருமைகளையும் கேட்டுக்கொண்டே வாருங்களேன்!

பாற்கடலைக் கடைந்து அமுதம் வந்ததும், அதைப் பறிக்க வந்த அசுரர்களிடமிருந்து குரு, சந்திர, சூரியர்கள் கலசத்தைக் காத்து, மாற்றி மாற்றி எடுத்துச் செல்கையில்... ஹரித்வார், நாசிக், ப்ரயாக், உஜ்ஜயினி ஆகிய இடங்களில்  அமிர்தம் தளும்பிச் சிதறியது. அதை மையமாக வைத்தே இங்கே கும்பமேளா நடைபெறுகிறது. அதுவும், உஜ்ஜயினி கும்பமேளா 'ஸிம்ஹத் மேளா’ என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறது.

இங்கு வேதப்ரியன் என்பவர் தன் மகன்கள் நால்வருடன் யாகம், ஹோமம், யக்ஞம், தவம் என நேம நிஷ்டையாக இருக்க, அருகில் ரத்னமாலா பர்வதத்தில் துஷானன் என்ற துஷ்டன் மக்களைத் துன்புறுத்தி, நற்காரியங்களைத் தடுத்து வந்தான். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதப்ரியனிடம் வந்து முறையிட்டனர். அவர், 'சிவனே கதி என நாம் வழிபாட்டைத் தொடருவோம். அவன் நம்மைக் காப்பான்’ என்றார். மக்களின் பூஜைகள் தொடர்ந்தன. இதை அறிந்த துஷானன் அவர்களை அழிக்க வந்தான். அப்போது, அங்குள்ள குளத்திலிருந்து பயங்கரச் சத்தத்துடன், ஒளிப் பிழம்பான ஜோதியாய் சிவன் தோன்றினார். துஷானனையும் அவனைச் சார்ந்தவர்களையும் ஒருசேர அழித்தார். தேவர்கள் சந்தோஷ மாரி பெய்ய, பக்தர்கள் அவர் காலடியில் வீழ்ந்து, இதே இடத்தில் என்றும் எழுந்தருள வேண்டினர். அதன்படி, 'மகாகாளர்’ என்ற நாமத்துடன் இங்கே 'ஜோதிர்லிங்க’மானார் ஈசன்.

இதுதான் இந்தக் கோயில் தல வரலாறு.

உஜ்ஜயினி என்றதும் விக்ரமாதித்தனும், அவனது நவரத்னங்களும் நினைவுக்கு வருவர். பல மன்னர்கள் பக்தி செய்து செலுத்திய பலவகை ரத்னாபரணங்கள் நிறைந்த இக்கோயிலைக் கொள்ளையடித்த 'இல்டுமிஷ்’, லிங்கத்தைப் பெயர்த்து, கோடி தீர்த்தத்தில் விட்டெறிந்து, கோயிலையும் இடித்து, மசூதி எழுப்பினான். ஆலயம் இருந்த இடம் தெரியாமல் 500 ஆண்டுகள் கழிந்தன. பின்னாளில் மராட்டியத் தலைவன் 'ரானோஜி சிந்த்யா’ உஜ்ஜயினியை ஆண்டபோது, கோடி தீர்த்தத்தில் மகாகாளரை மீட்டெடுத்து, நவநிர்மாணம் செய்து பிரதிஷ்டை செய்தார்.

இந்த நகரில் பரம்பரையாக வாழும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, 'ஜெய் மகாக்காள்’ என்றே வணக்கம் கூறிக்கொள்கிறார்கள். அந்த அளவுக்கு, அவர்கள் ரத்தத்தில் கலந்த, பாசமும் நேசமும் பெற்றவராக இருக்கிறார் ஸ்ரீமகாகாளர்.

நாங்கள் கோயிலுக்குள் இருந்த கோடி தீர்த்தத்தை அடைந்தபோது பிரமித்துப்போய் நின்றோம். சுமார் 500 ஆண்டுகளாக ஸ்ரீமகாகாளர் 'ஜலவாசம்’ செய்தது இங்குதான். அங்கிருந்த வயதான கோயில் சிப்பந்தி ஒருவர், நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகிறோம் என அறிந்ததும், 'ராமேஸ்வரத்துக்கு எப்படிப் போவது? எங்கு தங்குவது?’ என்றெல்லாம் விசாரித்தார். நாங்கள் சொன்ன விவரங்களைக் குறித்துக்கொண்டார். அப்போதே, ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதரை தரிசித்த திருப்தி அவர் முகத்தில். இதுதான் நம் பாரதத்தின் ஒவ்வொரு உயிரின் அடிநாதம்! இதனை எங்கள் யாத்திரைகளில் எங்கும் உணர்ந்திருக்கிறோம்; ஆச்சரியப்பட்டு, ஆனந்தப்பட்டிருக்கிறோம்.

பிறகு, ஸ்ரீமகாகாளரை தரிசிக்க கியூவில் நின்றோம். மக்கள் கூட்டம் உள்ளே இன்னும் நகர நகர... ஆஹா..! இப்போதுதான் ஸ்வாமி தெரிகிறார். அற்புதம்..! ஆனந்தம்..! ஹே! சம்போ மகாதேவா! சாம்ப சதாசிவா! இந்த அற்பப் பிறவிகளுக்கும் உன் கர்ப்பக்ருஹத்தில் நுழைய ஒரு சந்தர்ப்பம் பிச்சையிட்டாயே என்று பரவசம் பொங்க, அவரைக் கண்ணாரத் தரிசித்தோம்.

பொதுவாக, வட இந்தியக் கோயில்களில் சிவலிங்கத் திருமேனியை அழகாய் பூவால், சந்தனத்தால், விபூதியால் அலங்காரம் செய்வர் என்றாலும், இங்கே ஸ்ரீ மகாகாளருக்குச் செய்யும் அலங்காரம் தனிச் சிறப்பானது. 'பாங்க்’ எனும் பொருளை முதலில் ஸ்வாமி திருமேனியில் அப்பி, அதன்மேல் முந்திரி, திராட்சை, செர்ரி, பாதாம், குங்குமப்பூ, சந்தனம் இவற்றால் இமை, கண், மூக்கு, வாய், நெற்றிக்கண், மீசை, விபூதிப்பட்டை எனப் பாங்காக அலங்காரம் செய்கிறார்கள்.

ஸ்வாமி தரிசனம் முடிந்ததும், அவருக்கு எதிரே இரு கூர்மையான கொம்புகள் விரிய அமர்ந்திருக்கும் வெள்ளி நந்தியைத் தரிசித்துவிட்டு, வெளியே வந்தோம்.

தொடர்ந்து, உஜ்ஜயினி கடைத் தெருக்களில் சுற்றிப் பார்த்துவிட்டு, தங்கியிருந்த அறைக்கு வந்து சேர்ந்தோம்.

மறுபடியும், அதிகாலை 1.30 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து, 2.30 மணிக்குக் கோயிலுக்குச் சென்றோம். ஸ்ரீமகாகாளரின் விபூதி அபிஷேகம் காணவே இந்த ஏற்பாடு. நாங்கள் அங்கே சென்ற நேரத்தில், எங்களுக்கு முன்பே வந்து உட்கார்ந்து, படுத்துத் தூங்கி, காத்துக் கிடந்தோர் ஏராளம். 4.30 மணிக்குக் கோயில் நடை திறக்க, உள்ளே சென்றோம். நீண்ட நேரம் ஸ்வாமிக்கு விபூதி அலங்காரம் செய்தார்கள். அலங்காரத்தின் நிறைவில் ஸ்வாமியின் பாணம், ஆவுடை எங்கும் விபூதி அபிஷேகம். சுற்றிலும் நெய் தீபங்கள் மட்டும் ஒளிர, அந்த வெளிச்சத்தில் இறைவனின் தரிசனத்தைக் கண்டபோது, கண்கள் பெற்றதன் பலனை அன்றுதான் உணர்ந்து சிலிர்த்தோம். ஆனந்தமான இந்த அரிய காட்சியை காணத்தான் இத்தலம் வந்தோம். நினைக்கும்போதெல்லாம் இக்காட்சி நீங்காது நிறைந்திட, மனத்துள் அதைப் பூட்டிப் பத்திரப்படுத்திக்கொண்டு ஊர் திரும்பினோம்.

பரவசப்படுத்திய வைஷ்ணவிதேவி!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close