Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிசயிக்க வைத்த கங்கா ஆரத்தி!

ஆன்மிக பயணம் 18

- புவனேஸ்வரி பிரபாகரன், கரூர்

மது வாழ்க்கை சிவனைச் சுற்றியே சுழலத் தொடங்குகிறது. 'சிவமே ஆயுள்! சிவமே ஜீவன்! சிவமே மோட்சம்!’ என்று சொல்வார்கள். சிவனுடனான ஐக்கியம் நமக்குச் சிறு வயதிலிருந்தே தொடங்கிவிடுகிறது. அதாவது, திருநீறு பூசிக்கொள்ளும்போதே தொடங்கிவிடுகிறது. எப்படி சிவனுடன் நாம் ஐக்கியமாகிறோம் என்பதைவிட, சிவமே ஒரு வாழ்க்கை முறையாக நமக்கு அமைந்துவிட்டமையால், சிவன் வேறு, நாம் வேறு என்கிற சிந்தனையே மறைந்துவிடுகிறது.

நான், என் கணவருடன் இமயமலையில் உள்ள யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனிதத் தலங்களைத் தரிசிக்க, 2006-ஆம் ஆண்டு 'சார்தாம்’ யாத்திரை புறப்பட்டோம். கரூரிலிருந்து சென்னை வந்து, அங்கிருந்து ரயிலில் ஹரித்துவாருக்குக் கிளம்பினோம்.

செப்டம்பர் 1-ஆம் தேதி விடியற்காலை 5 மணிக்கு ஹரித்துவார் வந்து சேர்ந்தோம். கங்கை நதி, மலையிலிருந்து தன் பயணத்தைத் தரையை நோக்கிச் செலுத்தும் இடம்தான் இந்த ஹரித்துவார்.

இங்கு தினமும் மாலை 6 மணிக்கு கங்கை நதிக்கு ஆரத்தி எடுக்கும் சடங்கான 'ஹர்க்கிபைரி’ நடக்கிறது. நித்தமும் ஒரு விழா போல இது நடந்தேறுகிறது. கங்கைக் கரையில் நின்றுகொண்டு, கீழிருந்து தொடங்கி கடிகாரச் சுற்றாக பலமுறை ஆரத்தி தீபத்தை கங்கையை நோக்கிக் காண்பிக்கின்றனர் அர்ச்சகர்கள். மகாவிஷ்ணுவின் பாதம் பத்ரிநாத்தில் தொடங்கி ஹரித்துவாரில் முடிவதாக ஐதீகம். ஆகையால், ஆரத்தி தீபம் கீழிருந்து மேலாக, அதாவது மகாவிஷ்ணுவின் பாதத்திலிருந்து தொடங்கி தலை வரை காண்பிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். இதைத்தான் 'ஹர்க்கிபைரி’ என்று குறிப்பிடுகிறார்கள்.

ஹரித்துவாரில் மானஸாதேவி கோயில்தான் பல பேருக்குத் தெரியும் என்றாலும், அங்குள்ள ம்ருத்யுஞ்சய மகாதேவ் கோயில், கண்டிதேவி, அஞ்சனாதேவி, சன்கல் சக்தி பீடம், பாவன்தாம் பாரதமாதா மந்திர் (இந்தியாவிலேயே பாரத மாதாவுக்கு இங்குதான் கோயில் அமைந்துள்ளது) வைஷ்ணவிதேவி மந்திர், குருகுல் மகா வித்யாலயா, நீல்தாரா, பிரம்ம குண்டம், சப்த சரோவர், கீதா பவன், பீம் கோடா ஆகிய சிறுசிறு கோயில்களும் பார்க்கத் தகுந்தவைகளே! ஆதலால், நாங்கள் அத்தனை சிறு கோயில்களையும் கண்டு இறைவனுடைய அருள் பெற்றோம்.

மானஸாதேவியின் அருளைப் பெற மலைமேல் ஏறிச் செல்லவேண்டும். ரோப் கார் வசதி இருந்ததால், நாங்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டோம். மானஸாதேவி கோயில் அருகிலேயே சண்டிமாதா மற்றும் ஹனுமாரின் தாயான அஞ்சனாதேவியின் கோயிலையும் தரிசித்தோம்.

ஹரித்துவார் கடைவீதி மிகப் பெரியது. இங்கு எல்லாப் பொருள்களும் கிடைக்கின்றன. நாங்கள் எங்கள் மலைப் பயணத்துக்குத் தேவையான கையுறை, காலுறை, மங்கி குல்லா, ஸ்வெட்டர் மற்றும் ரெயின் கோட் ஆகியவற்றை இங்கே வாங்கிக்கொண்டோம்.

செப்டம்பர் 3-ஆம் தேதி காலை 9 மணிக்கு டேராடூன் வழியாக உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள சயான் செட்டி என்ற இடம் சென்று, அங்கே தங்கினோம். 4-ஆம் தேதி காலை யமுனோத்ரிக்குக் கிளம்ப ஆயத்தமானோம். சிறிது தூரம் வேனில் சென்று, குதிரை மேலேறி யமுனோத்ரி வந்தடைந்தோம். பாரதத்தின் புண்ணிய நதிகளில் ஒன்றான யமுனையின் பிறப்பிடம்தான் இந்த யமுனோத்ரி. இங்கே வெந்நீர் ஊற்று உற்பத்தியாகிறது. குளிர்ந்த நீரும் வெந்நீரும் கலந்து ஒரு தொட்டியில் விழுமாறு செய்திருக்கிறார்கள். அங்கே அனைவரும் அமர்ந்து குளித்தோம். எங்கள் பயணக் குழுவுடன் வந்த 11 பேரும் அங்கு நீராடினோம்.

அந்த யமுனை வெந்நீர் ஊற்றில் அரிசியை மூட்டையாகக் கட்டித் தொங்கவிட்டு மூன்று நான்கு நிமிடங்களில் அதைச் சோறாக்கி, அதையே யமுனை அன்னைக்கு நிவேதனமாகப் படைக்கிறார்கள் பக்தர்கள். யமுனை நதியில் குளித்துவிட்டு கங்கை, யமுனை, சரஸ்வதி, ஆஞ்சநேயர் முதலான தெய்வங்களை தரிசித்து, குதிரை மேல் ஏறி கீழ் நோக்கிப் பயணமானோம்.

உயர்ந்த மலைகள், அவற்றிலிருந்து விழும் அருவிகள், ஆழத்தில் அமைதியான யமுனை நதி எனப் பார்ப்பதற்கு ரம்மியமான சூழ்நிலை அது. மனது உயர்ந்த எண்ணங்களை ஆழமாக நேசிக்கும்போது எண்ணங்கள் தெளிவாக இருக்கின்றன. ஆன்மிகத்தில் மனது லயிக்க வயது ஒரு தடையில்லை என்றாலும், பெரும்பாலான பாரத மக்களுக்கு 50 வயதிலிருந்துதான் ஆன்மிக எண்ணங்கள் கருக்கொள்ள மனசு ஒத்துழைக்கிறது.

குதிரை மேல் பயணிப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. குதிரை ஓட்டியும் நம்கூட வருவதால், நம் மனத்துள் ஏற்படும் பயம் சற்றுக் குறைகிறது. வெள்ளிக் கூம்பைப் போல் இருக்கும் பல மலை முகடுகளைப் பார்த்தபோது, இது நாம் மேற்கொண்ட பயணத்திலேயே சிறப்பான பயணம் என மனது சொன்னது.

மறுநாள் (5-ஆம் தேதி) அன்று காலையில் சீக்கிரமாகப் புறப்பட்டு, உத்தரகாசி என்ற இடத்துக்கு வந்தோம். இங்கே மலை மேல் ஏறினால், ஒரு குகைக்குள் கோயில் ஒன்று இருக்கிறது. அந்தக் கோயிலின் பெயர் ஸ்ரீபிரகடேஸ்வரர் கோயில். குகையில் தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அன்று பிரதோஷம் ஆதலால், சிவனை தரிசிக்க சரியான தருணம் எங்களுக்குக் கிடைத்தது. உத்தரகாசியில் விஸ்வநாதர் ஆலயம், பராசக்தியின் சூலம் ஆகியவற்றையும் தரிசித்தோம். இங்கும் கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்தார்கள். அதையும் கண்டு பரவசமானோம்.

செப்டம்பர் 6-ஆம் தேதி, கங்கோத்ரியை நோக்கி எங்கள் புனிதப் பயணம் தொடங்கியது. மலை மேல் செல்லும்போது மனோரி என்ற அணைக்கட்டைப் பார்த்து ரசித்தோம். வழி நெடுக இயற்கைக் காட்சிகளும், சுத்தமான காற்றும் எங்கள் மனத்தை வருடிச் சென்றன. ஆப்பிள் தோட்டங்களில் ஆப்பிள்கள் நிறைய காய்த்துக் கிடந்தன. நாங்கள் சென்ற நேரம் ஆப்பிள்கள் கனியாக உருவாகும் நேரம் என்பதால், அத்தனை மரங்களும் சொல்லிவைத்தாற்போல் ஆப்பிள் காய்களால் நிரம்பி வழிந்தன.

கங்கோத்ரிக்குச் செல்லும் வழியில் கங்கையின் அன்னைக்குக் கோயில் எழுப்பியுள்ள இடத்தைச் சென்று பார்த்தோம். அங்கும் வெந்நீர் ஊற்று இருப்பதால், அங்கேயே நாங்கள் எல்லோரும் குளித்தோம்.

பிறகு, கங்கை நதி பிறந்த இடமான கங்கோத்ரி சென்று, அங்கு கங்கை நதியில் நீராடினோம். அங்கு கங்கா மாதாவின் ஆக்ரோஷத்தைக் காண முடிந்தது. மிகவும் வேகமாகவும், குளிர்ந்த தன்மையாலும் சற்றே பயத்தை ஏற்படுத்தினாலும், 'கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்’ என்ற கூற்றுக்கிணங்க, இந்த ஆக்ரோஷமான கங்கைதான் காசியில் சாந்தமாகச் சென்று நம் பாவங்களுக்கு விமோசனம் அளிக்கிறாள் என்ற பேருண்மை விளங்கியது. அங்கு கங்கையில் மூழ்கி நீராட முடியாது என்பதால், சிறிய வாளி மற்றும் சிறு 'மக்’கின் துணைகொண்டு குளித்துவிட்டு, கங்கை நீரை (மிகவும் தூய்மையாக இருப்பதால்!) அவரவர் கொண்டுவந்த பாத்திரங்களில் நிரப்பிக்கொண்டோம். இந்தத் தண்ணீர் எத்தனை தலைமுறையானாலும் கெடாது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

நாங்கள் குளித்த இடத்தின் அருகிலேயே பகீரதன் தவம் செய்த 'பகீரத சிவா’ என்ற கற்பலகை பார்த்தோம். இங்குதான் பகீரதன் தவம் செய்து, கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கங்கோத்ரியின் கீழிருந்து பார்த்தால், பல மலை முகடுகள் சூரியனின் கிரணங்களால் பொன்னென மின்னின. இயற்கையே கடவுள் என்ற கூற்றுக்கு எங்களுக்கு அங்கே விடை கிடைத்தது.

மேலும் அங்கேயுள்ள பராசரர் சமாதி, கங்கை, யமுனை, சரஸ்வதி, அனுமார் ஆலயங்களைத் தரிசித்ததோடு, அங்கிருந்த கடைகளையும் பார்த்துவிட்டு, அடுத்த நாள் கேதார்நாத் செல்ல ஆயத்தமானோம்.

உத்தரகாசியிலிருந்து கேதார்நாத் சென்றோம். கேதார்நாத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில், உயரமான இடத்தில் அமைந்த லிங்கம் இதுவாகும். கேதார்நாத் செல்லும் வழியில் ருத்ர பிரயாகை என்னும் இடத்துக்குச் சென்றோம். அங்கு அலக நந்தா, மந்தாகினி நதிகள் ஒன்றாகக் கலக்கும் இடத்தைப் பார்த்தோம்.

ருத்ர பிரயாகையிலிருந்து ராம்ப்பூர் வழியாக சீதாப்பூர் வந்து சேர்ந்தோம். கேதார்நாத்தின் அடிப்புறம் சீதாப்பூர் அமைந்துள்ளது. இங்கே தங்கிவிட்டு மறுநாள் (8-ஆம் தேதி) கௌரிகுண்ட் என்ற இடத்துக்குப் பயணமானோம். கௌரிகுண்ட்டிலும் வெந்நீர் நீரூற்று இருந்தது. அங்கு குளித்துவிட்டு, கேதார்நாத் சென்றோம்.

கௌரிகுண்ட்டிலிருந்து 14 கி.மீ. தொலைவில் கேதார்நாத் அமைந்துள்ளது. இந்த 14 கி.மீ. தொலைவு என்பது மலை மேல் ஏறும் பயணம் ஆதலால், டோலி அல்லது குதிரை மேலேறிதான் செல்ல முடியும். எங்களைப் போன்ற வயதானவர்களுக்கு டோலியே சரியான பயணத் தீர்வாகும் என்பதால், நாங்கள் அதைத் தேர்வு செய்தோம்.

ஒரு டோலியை நான்கு பேர் சேர்ந்து தூக்கிக்கொண்டு மலை மேல் ஏறிச் செல்வார்கள். இதில் பயணம் செல்வதை பழைய கால பல்லக்கில் செல்வதைப் போன்று ஒப்பிடலாம். டோலி மலைமேல் ஏற ஏற, எங்களுடைய மனமும் சிவனைப் பிரார்த்தித்துக் கொண்டது. 'அகமும் புறமும் சிவமேயாம், ஊனும் உயிரும் சிவமேயாம், வாழ்வும் வளமும் சிவமேயாம்...’ என்று மனம் பாடத் தொடங்கியது.

விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் தத்தம் பாதையில் கடவுளை ஆராய்ச்சி செய்தாலும், அஞ்ஞானம் இன்னமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் மலைமேல் ஏறி சிவலிங்கத்தைத் தரிசிக்கப் போகிறோம் எனும்போது, மெய்ஞ்ஞானம் சற்றே சுடர் விட்டு மனத்தில் எரியும். சிவனைப் பார்த்துத் திரும்புகையில், வாழவேண்டும் என்ற உந்துதலால் நமக்கு அஞ்ஞானம் மீண்டும் மனத்தில் துளிர்விட்டுவிடுகிறது.

கேதார்நாத்தை அடைய குதிரையில் சென்றாலும், டோலியில் சென்றாலும் குறைந்தபட்சம் 4 மணி நேரம் ஆகிறது. டோலியிருந்து இறங்கி, இன்னும் மேலே ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று கோயிலை அடைந்தோம். கோயில் உள்ளே பஞ்ச பாண்டவர் சிலைகள், ராதா கிருஷ்ணா, நந்திதேவர் சிலைகள் இருக்கின்றன. அந்தச் சிலைகளுக்கு முன் கேதாரீஸ்வரரின் லிங்கம் கல் வடிவத்தில் அமைந்திருக்கிறது. இந்த லிங்கத்தை அவரவர் கையால் நீருற்றி அபிஷேகம் செய்யலாம். எங்கள் குழு சார்பாக பூஜை செய்த பண்டாரி, ஒவ்வொருவரும் தனித்தனியாக பூஜை செய்யும்படி ஏற்பாடு செய்திருந்தார். கேதாரீஸ்வரர் லிங்கம் இருக்கும் இடம் சற்றே சிறியதாக இருப்பதால் எல்லோரும் மிக விரைவாக பூஜையை முடித்தோம். அக்கோயிலின் பின்புறம் ஆதிசங்கரர் முக்தி அடைந்த இடம் உள்ளது. சலவைக்கல்லில், அவர் வைத்திருந்த தண்டம் செய்து வைத்திருந்தார்கள். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, மீண்டும் சீதாப்பூர் வந்தடைந்தோம்.

அடுத்த நாள் காலை, சீதாப்பூரிலிருந்து பத்ரிநாத் செல்ல ஆயத்தமானோம். பத்ரிநாத் செல்லும் வழியில் ஜோஷிமட் வந்து சேர்ந்தோம். இங்கிருந்து பத்ரிநாத் செல்ல ஒருவழிப் பாதை அமைத்திருக்கிறார்கள். போலீஸ் காவல் போட்டு வண்டிகளை ஒழுங்குபடுத்தி அனுப்புகிறார்கள். இந்தப் பகுதியில் நிலச் சரிவுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த கைதேர்ந்த வண்டி ஓட்டுநர்கள் எத்தகைய இயற்கை இடர்ப்பாட்டையும் சமாளித்து வண்டி ஓட்டிச் செல்லப் பழகியிருக்கிறார்கள். நாங்கள் பத்ரிநாத் சென்றடைய மாலை 4.30 மணி ஆகிவிட்டது. பனிமூட்டமும் குளிரும் அதிகம் இருந்ததால், அறையில் இளைப்பாறினோம்.

மறுநாள் (10.9.2006) பத்ரிநாத் கோயிலுக்குச் சென்று பத்ரிநாதனை வழிபட்டோம். கோயிலைப் பலமுறை சுற்றி வந்து மனதார தரிசித்துவிட்டுக் கிளம்பினோம்.

பிறகு, பத்ரிநாத்திலிருந்து ரிஷிகேஷ் செல்லப் பயணமானோம். வரும் வழியில் ஜோஷிமட்டில் ஆதிசங்கரர் தவம் செய்த இடம், நிறுவிய மடம், 2400 வருடத்திற்கு முந்தைய கல்ப விருட்சம், துர்கா கோயில், நரசிம்மர் கோயில் ஆகிய இடங்களையும் பார்த்தோம். பத்ரி நாராயணனை பனிக் காலங்களில் இங்குதான் தரிசிக்க முடியும் என்ற தகவலைக் கேள்விப்பட்டோம்.

தொடர்ந்து, நந்த பிரயாகை சென்றடைந்து, அங்கு இரவு தங்கினோம். அங்கிருந்து தேவ பிரயாகை சென்று, 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகிய ரகுநாத் நாராயணன் கோயில் சென்று வழிபட்டோம். தொடர்ந்து, வசிஷ்டர் குகை சென்று, அங்கே புட்டபர்த்தி சாயிபாபா தீட்சை பெற்றதாகச் சொன்ன இடத்தைப் பார்த்தோம். 50 வருடங்களாக தவம் செய்து வரும் ஒரு மகானை அந்தக் குகையில் பார்த்து, அவரிடம் ஆசி பெற்று, ரிஷிகேஷ் பயணமானோம்.

ரிஷிகேஷில் முக்கியமான கோயில்கள் அனைத்தையும் பார்த்துவிட்டு, அங்கிருந்து டில்லி சென்று, ரயில் மூலம் கரூர் திரும்பினோம்.

மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது, எங்களின் இந்த வட இந்திய யாத்திரை!

சிலிர்க்க வைத்த உஜ்ஜயினி ஸ்ரீ மகாகாளர்!

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close