Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பரவசமூட்டிய பனிக் கிண்ணம்!

ஆன்மிக பயணம் 19

 - பானு பெரியதம்பி, சேலம்

த்குரு ஜக்கி வாசுதேவின் வழிநடத்தலோடு கேதார்நாத், கங்கோத்ரி, பத்ரிநாத் ஆகிய வட இந்தியத் திருத்தலங்களுக்கு யாத்திரை செல்லும் பாக்கியம், 2004-ஆம் ஆண்டு எங்களுக்குக் கிடைத்தது. கேதார்நாத், கங்கோத்ரி சென்ற பின் பத்ரிநாத் சென்றோம். வழியில், சீக்கியர்களின் புனிதத் தலமான 'ஹேம் குந் சாஹிப்’ (Hem Kund Sahib)  சென்றோம். அந்த இறையனுபவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில், கடல் மட்டத்தில் இருந்து 15,200 அடி உயரத்தில், பனிமலைகள் சூழ்ந்த அழகிய ஏரியில் அமைந்துள்ளது இந்த ஹேம் குந். ஹேம் என்றால் பனி என்றும், குந் என்றால் கிண்ணம் என்றும் பொருள் சொன்னார்கள். சீக்கியர்களின் 10-வது குருவான குரு கோவிந்த்சிங் (1666-1708) இந்த இடத்தில் தியானம் செய்தார் என்பதால், இந்தத் தலம் மிகுந்த சக்தி நிலையில் இன்றும் இருப்பதாகச் சொன்னார்கள். மகாபாரத காலத்தில் பாண்டு மன்னர் இங்கு தியானம் செய்தார் என்னும் புராணக் கதையும் இங்கே சொல்லப்படுகிறது. அரூபமாக பல குருமார்கள் இன்றும் இங்கு வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதை என்னால் அனுபவரீதியாகவும், மனரீதியாகவும் உணரமுடிந்தது.  

நாங்கள் ரிஷிகேஷில் இருந்து பத்ரிநாத் செல்லும் நெடுஞ்சாலையில், கோவிந்த் கட் என்ற இடத்தில் இறங்கிக்கொண்டோம். அங்கிருந்து 13 கி.மீ. மலை ஏறிச் சென்றால்தான், ஹேம் குந்தை அடையலாம். செல்லும் பாதை நன்றாக இருந்ததால், மலையேறும் ஆர்வம் உள்ளவர்கள் நடந்து சென்றனர். நானும் என் கணவரும் மற்றும் பல அன்பர்களும் குதிரையில் ஏறிச் செல்லலாம் என முடிவு செய்தோம். ஆனால், மாலை நேரம் ஆகிவிட்டதால் அத்தனை பேருக்கும் தேவையான குதிரைகள் கிடைக்கவில்லை. எனவே 'கோவிந்த் கட்’டில் இருந்த குருத்துவாராவில் நாங்கள் தங்கினோம். எங்கள் அனைவருக்கும் தங்கும் அறை, கம்பளி, உணவு என எல்லாவற்றையும் அன்போடும் அக்கறையோடும் தந்து உபசரித்தனர் சீக்கிய அன்பர்கள்.

மறுநாள் காலை, அனைவரும் குதிரைகளில் ஏறி 'ஹேம் குந்’ நோக்கிப் பயணித்தோம். இனம், மதம், நிறம் என்ற வேறுபாடுகளையெல்லாம் கடந்து, புனிதப் பயணம் சென்ற எங்களை வழியில் சந்தித்த சீக்கியர்கள் கைகளைக் கூப்பி 'நமஸ்தே’ என்றும், 'நல்லபடியாகச் சென்று திரும்புங்கள்’ என்றும் கூறி, தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியது மனத்துக்கு நிறைவைத் தந்தது. நாங்கள் வழிநெடுக 'நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்தபடி சென்றதால், எங்களின் அருகே நடந்து வந்த சீக்கியர்களின் குழந்தைகளும் 'நமசிவாய’ எனக் கூறிக்கொண்டே நடந்தனர். அதைப் பார்க்கும்போது, 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்ற சித்தாந்தம்தான் எங்கள் நினைவுக்குள் வந்துபோனது.

மதியம் சுமார் 12 மணி அளவில், கங்கேரியா என்ற இடத்தை அடைந்தோம். பல ஹோட்டல்கள், சிறிய சிறிய கடைகள் அங்கே உள்ளன. அங்கிருந்து ஹேம்குந் செல்லும் பாதை செங்குத்தாகவும், பல வளைவுகளைக் கொண்டும் இருந்ததால் குதிரைகள் மெள்ள மெள்ளத்தான் ஏறின. தரிசனம் முடிந்து திரும்பி வரும் சீக்கியர்கள், குதிரை ஓட்டி வருபவரிடம் 'பார்த்து... வளைவுகளில் பத்திரமாக அழைத்துச் செல்’ என்று மிகுந்த அக்கறையோடு கூறிச் சென்றனர். சீக்கியர்கள் மட்டுமின்றி, எல்லா மதத்தவர்களும் அங்கு வருகின்றனர். குழந்தைகள், பெரியவர்கள் எனப் பல வயதினரையும் பார்க்க முடிகிறது. பனிமலையின் அழகையும், குளிர் தரும் சிலிர்ப்பையும் ரசித்துக்கொண்டே ஹேம் குந்தை நெருங்கினோம்.

பொதுவாக, அக்டோபர் மாதத்திலிருந்து குளிர்காலம் முடியும் வரை குருத்துவாரை மூடிவிடுவார்களாம். செப்டம்பர் இறுதியில் நாங்கள் சென்றதால், நல்ல குளிருடன் ஆங்காங்கே பனித் துகள்களையும் மலை உச்சியில் காணமுடிந்தது.

உச்சியை அடைந்ததும் அங்கிருந்த குருத்துவார், அதன் அருகே  அமைந்திருந்த அழகிய ஏரி, சுற்றிலும் பனி மலைகள் என அனைத்தையும் கண்டு ரசித்தபோது குதிரையில் வந்த களைப்பு எல்லாம் பறந்தோடிவிட்டது. உடலிலும் உள்ளத்திலும் அத்தனை உற்சாகம்! அநாவசியமான சத்தம், கூச்சல் ஏதும் இன்றி, மக்கள் அமைதியாகச் சென்றுகொண்டிருந்தனர். அத்தனைக் குளிரிலும், ஏரியில் ஒரு சிலர் மூழ்கி எழுந்தனர்.

ஏரி நீரை எடுத்துத் தலை மீது தெளித்துக்கொண்டு, குருத்துவாராவின் மையத்தில் ஆசனம் என்னும் (டாக்த்) ஓர் உயர்ந்த பீடத்தில் குரு கிரந்த்சாகிப் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றோம். அழகிய துணியால் மூடப்பட்டும், மலர்களால் அங்கரிக்கப்பட்டும் இருந்த அந்தப் புனித நூலுக்குப் பக்கத்தில் சீக்கியர்கள் அமர்ந்து சங்கீதம் இசைத்து பஜனை பாடிக்கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்ததும் புன்னகைத்துத் தலையசைத்து, உள்ளே வருமாறு அழைத்தனர்.

குரு கிரந்த்சாகிப் அருகே சென்று வணங்கி எழுந்தபோது, தலை முதல் பாதம் வரை மின்சாரம் பாய்ந்த போன்ற உணர்வு ஏற்பட்டது. என்ன அருமையான அனுபவம் என் வாழ்வில்..! மானசீகமாக சத்குரு அவர்களுக்கு மனதார நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன். அந்த இடத்தில் அமர்ந்து தியானம் செய்தபோது என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள், உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்கமுடியாது. இமயமலை இது போன்ற உன்னதமான பல ரகசியங்களைச் சுமந்துகொண்டு இருப்பதால்தானே, பாரத பூமி புண்ணிய பூமியாகத் திகழ்கிறது.

மதியம் 2 மணிக்கு மேல் ஆக்ஸிஜன் அளவு குறைய ஆரம்பிக்கும் என்றார்கள். எனவே, கொஞ்சமும் மனமின்றி அங்கிருந்து திரும்ப ஆரம்பித்தோம். அவ்வளவு குளிரிலும் தன்னார்வத் தொண்டர்கள் பலர் அங்கு வந்து செல்லும் யாத்ரீகர்களுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தார்கள். நாங்களும் எங்களது உணவை முடித்துக்கொண்டு, மனம் முழுவதும் சந்தோஷத்தையும், நிம்மதியையும் நிரப்பிக்கொண்டு பனிமலையை விட்டுப் பிரிய மனமின்றி இறங்கினோம்.

இப்போது இந்த யாத்திரையை நினைத்தாலும்கூட உள்ளுக்குள் பரவசம் பொங்குகிறது. மறக்கமுடியாத இனிய ஆன்மிக அனுபவம் ஹேம் குந் தரிசனம்!

அதிசயிக்க வைத்த கங்கா ஆரத்தி!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close