Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மறக்கமுடியாத திருநாவாய் முகுந்தன்!

ஆன்மிக பயணம் - 20

 - கே.ஜனனி வாசன், சென்னை-15

நானும் என் கணவரும் கேரளாவின் திருத்தலங்கள் சிலவற்றைத் தரிசிக்க ஆசை கொண்டு, 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிளம்பினோம்.

கேரளாவில் உள்ள ஷோரனூரில் இறங்கி, ஜீப் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு, முதலில் 'திருவில்வமலா’ நோக்கிப் பயணித்தோம். இது, பாரதப்புழா கரையில் உள்ள மஹா புண்யக்ஷேத்ரம். வில்வாத்ரி மலைத் தொடரில், ஓர் உயரமான இடத்தில் பரந்த பெரிய கோயில். சுற்றி நிறைய அரச மரங்கள். காடும் மலையும், குளிர்ச்சியும் பசுமையும் நிறைந்திருக்க, அங்கே தெய்விகமும் சேர்ந்திருந்தது.

இக்கோயில் ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீராமஸ்வாமி. 'வில்வாத்ரிநாதர்’ என்றும் பெயர் உண்டு. மகா மகத்துவங்கள் அடங்கிய இந்தத் திருத்தலப் பெருமைகளைப் பற்றி விவரித்துச் சொல்ல ஒருநாள் போதாது. நெஞ்சம் நெகிழ, அங்கேயே நின்றிருக்க வேண்டும்போல் இருந்தது. இருப்பினும், இன்னும் நிறைய திருத்தலங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதால், பிரிய மனமின்றிக் கோயிலை விட்டு வெளியே வந்தோம்.

அங்கே, எங்களுக்கு தரிசனம் தந்தார் அதிசய ஆஞ்சநேயர்! அவருக்கு வடைமாலை அணிவித்து இருந்தார்கள். அவ்வளவு வடைகளும் குண்டு குண்டாக இருந்தன. அவற்றை நாங்கள் பிரமிப்போடு பார்க்க, அந்த வடையை எங்களுக்குப் பிரசாதமாகத் தந்தார் கோயில் அர்ச்சகர். அர்ச்சகரிடம் தொடர்ந்து பேசியபோது, அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள புனர் ஜனனி குகை பற்றிச் சொன்னார். ஆனால், 'இப்போது அங்கே செல்ல முடியாது’ என்று கூறியவர், அந்தக் குகை பற்றிய அற்புதமான தகவல் ஒன்றையும் தெரிவித்தார். அதாவது, கார்த்திகை ஏகாதசி அன்று அந்தக் குகைக்குள் நுழைந்து வந்தால், ஒரு ஜன்ம பாவமும் போகுமாம். முற்காலத்தில், இங்குள்ள பலிபீடத்தின் அருகே உள்ள துவாரம் வழியே பார்த்தால், தங்க வில்வ மரம் தெரிந்ததாம். இப்போது தெரியவில்லை என்றார்.

பிறகு, அங்கிருந்து திருநாவாய் நோக்கிப் புறப்பட்டோம். அங்குள்ள தேவஸம் போர்டு தங்குமிடத்தில் தங்கினோம். மாலை 4 மணிக்கு மேல், கோயிலுக்குச் சென்றோம். பெரிய பரந்த இடம். பெரிய ஆலமரம். இந்த திருநாவாய் கோயிலுக்கும் வில்வாத்ரி நாதர் கோயிலுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாகச் சொன்னவர்கள், அங்கு ஏற்றப்படும் விளக்கு, இங்குள்ள ஆலமர மேடையிலிருந்து பார்த்தால் தெரியும் என்றார்கள்.

இந்தக் கோயிலை ஒட்டி அமைதியாய், அகன்று ஓடுகிறது பாரதப்புழா ஆறு. வற்றாத நதியான இதற்குத் தக்ஷிண கங்கை என்று இன்னொரு பெயரும் உண்டு.

திருநாவாய் கோயில், பெருமாளின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. 6,000 வருட பழைமை வாய்ந்தது. மலையாள திருப்பதிகளில் இங்கு மட்டுமே தாயார் சந்நிதி உள்ளது.

கோயிலுக்குள் விளக்கு வெளிச்சத்தில் குட்டியான நாவாய் முகுந்தன் புன்சிரிப்புடன், சந்தன அலங்காரத்தில் அழகுற விளங்குகிறார். கோயில் நம்பூதிரி பிரசாதம் தர, அதை வாங்கிக்கொண்டு, மகாலட்சுமியைத் தரிசித்தோம். பிறகு, திரும்பவும் நாவாய் முகுந்தனைத் தரிசித்து சிலிர்த்தோம். நாங்கள் சென்ற நேரம், கோயிலுக்குள் ஒரு சில பக்தர்களே இருந்தனர். அதனால் அமைதியாக, நின்று நிதானித்து தரிசிக்க முடிந்தது.

தொடர்ந்து, அருகில் உள்ள வைரங்கோடு பகவதி கோயில் சென்று தரிசித்தோம். இது, 108 பகவதி க்ஷேத்திரங்களில் முக்கியமானது என்றார்கள். அடுத்து, திருப்பரங்கோடு தரிசனம். பெரிய கோயில் இது. தமிழக திருக்கடவூர் போலவே, இங்கும் மார்க்கண்டேயனுக்காக சிவன் யமனை சம்ஹாரம் செய்ததாக ஸ்தல புராணம் சொல்லப்படுகிறது. சந்நிதியில், மேலேயிருந்து தொங்கும் பூச்சரங்கள், பிறை நிலா, வில்வம் அலங்காரங்களின் கீழே சிறிய சிவலிங்கம். இது, பின்னால் ஏற்றப்பட்ட விளக்கின் வெளிச்சத்தில் பளிச்சென்று தெரிகிறது. பக்கத்தில் தாழ்வாரம் போன்ற இடத்தில் பார்வதியையும், இன்னொரு பக்கம் கணபதியையும் தரிசிக்கிறோம்.

நாங்கள் தரிசித்து முடிக்கவும், கோயில் அர்ச்சகரை எங்களை அழைத்து பூ, சந்தனம், தீர்த்த பிரசாதம் தந்தார். அவர் செய்கையில் ஓர் அவசரம். சாயர¬க்ஷ பூஜைக்கு நேரமாகிவிட்டதுபோல! எங்களுக்கும் அவசரம்தான். கேரளாவில் இரவு 8 மணிக்கெல்லாம் கோயில்களில் நடைசாத்திவிடுவார்கள். நாங்கள் இன்னும் இரு கோயில்களைத் தரிசிக்க வேண்டியது இருந்ததால், வேகமாக வெளியே வந்து, அடுத்த கோயிலை நோக்கிப் பயணித்தோம்.

நாங்கள் பயணப்பட்டது மாலை நேரம் என்பதால், பல வீடுகளின் வாசலில், நடுக்கூடத்தில் சாயரக்ஷை விளக்கேற்றி வைத்துள்ளதைப் பார்த்துக்கொண்டே சென்றோம். இதோ... ஆலத்தியூர் கோயிலுக்கு வந்துவிட்டோம். சின்ன கோயில்தான். அங்கே அதிஅற்புதமாய் ஜொலிக்கிறார் ஸ்ரீராமர். பக்கத்தில் சிறிய உருவில் அனுமன். நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகிறோம் என்பதைத் தெரிந்துகொண்ட கோயில் அர்ச்சகர், தமிழக முதல்வர் ஜெயலலிதா இங்குள்ள அனுமனுக்குக் கிரீடம் சமர்ப்பித்ததாகச் சொன்னார்.

எங்களது அடுத்த ஓட்டம் - திருக்கண்டியூர். அதற்குள் நன்கு இருட்டிவிட்டது. கோயிலுக்குச் செல்லும் வழியில் ரோடு மகா மோசம்! சந்திர மண்டலத்துக்கே போனதுபோல் உணர்ந்தோம். கோயிலை நெருங்கியபோது, எதிரே பெரிய குளம். வாசலில் இரு நந்திகள். மூலஸ்தானத்தில், வெள்ளியில் பிறை மற்றும் வில்வம் சார்த்திய, ஒன்றரை அடி உயர சிவலிங்கம். கருவறை உயரமாக இருப்பதால், கீழே இருந்து பார்க்கத் தெளிவாகத் தெரியவில்லை. மூலஸ்தானத்தின் முன் உள்ள படிக்கட்டுகளில் ஏறி தரிசித்தோம்.  

தரிசனம் முடிந்ததும், நாங்கள் தங்கியிருந்த திருநாவாய்க்குப் புறப்பட்டோம். இரவு அங்கேயே தங்கினோம்.

அதிகாலையில் மீண்டும் திருநாவாய் முகுந்தனை தரிசிக்கப் போனோம். அதிகாலை 5 மணிக்கே கோயிலிலிருந்து பாட்டுச் சத்தம் கேட்டது. தெரு முழுவதும் ஜே... ஜே... என மக்கள் கூட்டம். ஆற்றின் படித்துறைப் படிக்கட்டுகளில் ஆண்கள், பெண்களுமாய் நிறையபேர் வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்பு அரிசி, எள், சாத உருண்டை, இலை, பத்ரம், பூ, கிண்ணத்தில் தண்ணீர் என ஒவ்வொருவருக்கும் தந்து, அந்தக் கோயில் ஆட்களே தர்ப்பணம் செய்து வைக்கிறார்கள்.

தர்ப்பணம் முடிந்ததும் பிண்டம், பூ, இலைகளை ஆற்றில் போட்டு, குளித்துக் கரையேறி, ஸ்வாமியை தரிசிக்கிறார்கள் பக்தர்கள். நாங்களும் அவர்களுக்கு நடுவே சென்று ஸ்நானம் செய்து, முகுந்தனை தரிசித்தோம். அந்த அழகு முகுந்தனை விட்டுப் பிரியவே மனமில்லாமல், மீண்டும் எப்போது இங்கே வந்து முகுந்தனைக் காணப் போகிறோமோ என்ற ஏக்கத்துடனேயே ஊர் வந்து சேர்ந்தோம்.

ஓம் நமோ நாராயணாய! ஓம் நமசிவாய!!

பரவசமூட்டிய பனிக் கிண்ணம்!

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ