Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முக்தி அருளும் முக்திநாத்!

ஆன்மிக பயணம் - 21

 - கே.சுசிலா, மதுரை

முக்திநாத்- முக்தி நல்கும் வைணவ திருத்தலம். நேபாளத்தில் உள்ளது. திருச்சாளக்ராமம் எனும் பெயரும் உண்டு. நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டு சென்று, அங்கிருந்து போக்ரா, ஸோம்சன் வழியாக முக்திநாத்தை அடைய வேண்டும். விமானத்திலும் செல்லலாம்.

முதலில், நாங்கள் சென்றது, காட்மாண்டுவில் உள்ள ஸ்ரீபசுபதிநாதர் ஆலயம். பவித்ரமான பாக்மதி நதிக்கரையில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. கோயில் கருவறைக்கு நான்கு வாயில்கள். கருவறையினுள் எழுந்தருளியுள்ள பெருமானுக்கு நான்கு திருமுகங்கள். எப்போதும் அபிஷேகம் நடைபெற்ற வண்ணம் உள்ளது. கருவறையை நோக்கியபடி, அதன் முன் மிகப் பெரிய நந்தி ஒன்று உள்ளது. பிராகாரத்தில் ஸ்ரீராமபக்த அனுமன் தரிசனம் பரமானந்தமாக இருந்தது. பிரகாரத்துக்குச் சற்று வெளியே 1008 சஹஸ்ரலிங்கங்கள் உள்ளன. சுற்றிவர வசதியாக இதை வரிசைப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.

தொடர்ந்து, ஸ்ரீ நீலநாராயணன் சந்நிதிக்குச் சென்றோம். நீலநாராயணன் பெரிய ஆதிசேஷன்மீது, சிறு குளத்தின் ஜலத்தில் சயன திருக்கோலத்தில், முகத்தில் வசீகரப் புன்னகையுடன் தரிசனம் அளிப்பது நெஞ்சில் நிரந்தரமாகப் பதிந்துவிடுகிறது. அனைத்தையும் பார்த்துவிட்டு, காட்மாண்டு விடுதிக்குத் திரும்பிய எங்களுக்கு ஓர் அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.

'முதல்நாள் சென்ற அக்னி என்ற குட்டி விமானம் சாளக்கிராமம் செல்லும் வழியில் பனியினாலும் மேகக் கூட்டங்களாலும் மறைக்கப்பட்ட மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளாகிவிட்டது. அதனால் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது’ என்ற செய்திதான் அது. எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது.

''நல்ல சந்தர்ப்பம் என்பது ஒருமுறைதான் கிடைக்கும். அதைத் தவறவிடாமல், நல்லவிதமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்'' என்று என் பெரியம்மா அடிக்கடி கூறுவார். அப்படிக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இத்தனை தூரம் வந்தும், ஸ்ரீ முக்திநாராயணனைத் தரிசிக்க முடியாமல் போய்விட்டதே என மனம் கலங்கினோம். 'இப்படித்தான் அடிக்கடி மேகக் கூட்டங்களாலும் பனியினாலும் மலைத்தொடர்கள் மறைக்கப்பட்டுவிடும். எப்போது விலகும் என்று சொல்ல முடியாது’ என விடுதி மேலாளர் கூறினார். எதுவும் யாத்ரீகர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது என்றார்.

அன்றைய தினம், இரவு உணவு உண்ணாமல் அனைவரும் இறைவனை தியானித்துவிட்டுப் படுத்துவிட்டோம்.

எங்கள் அடி மனத்தின் கூக்குரல் அந்த இறைவனின் காதுகளில் விழுந்திருக்கும்போல! ஒரே இரவில் அந்த மாற்றம் நிகழ்ந்தது. நாங்கள் கண்ட பனிமூட்டம், மேகக்கூட்டம் எல்லாம் அடியோடு மறைந்தது. வானம் தெளிவாக மின்னியது.

இதுதான் இறைவனின் திருவிளையாடலோ?

காலையில் நேபாள் ஏர்லைன்ஸ் மட்டும் இயங்க ஆரம்பித்தது. நாங்கள் நேபாள் ஏர்லைன்ஸ் விமானத்தில்தான் பதிவுசெய்து இருந்தோம். இறைவனுக்கு மனதார நன்றி கூறி, விமானத்தில் பயணித்தோம்.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பனிமூடிய சிகரங்களுடன், 'அழகிற்கோர் அன்னபூர்ணா’ என்று கூறும்படி அன்னபூர்ணா மலைத்தொடரின் அழகை ரசித்த வண்ணம் ஜெம்சோம் விமான நிலையத்தை அடைந்தோம். அங்கிருந்து கண்டகி நதி ஓடிவரும் வழியில், ஜீப்பில் சில கெஜ தூரம் பயணம் செய்தோம். நாங்கள் சென்றபோது கண்டகி நதி உறைபனியாக இருந்தது. வெயில் பட்டதும் பொன்னிறமாக மிளிரும் மலைச் சிகர அழகை ரசித்தபடி, அந்த நதி வழியே பயணித்தோம். ஓரிடத்தில் ஜீப் பயணம் முடிவுற்றது. அங்கிருந்து இரு சக்கர வாகனப் பயணம் தொடர்ந்தது. வாகன ஓட்டிகள் எங்கள் கழுத்தில் (குழந்தைகளின் ஸ்கூல் ஐ.டி. போன்று) ஐ.டி-யை மாட்டி, அழைத்துச் சென்றார்கள். ஒரு வண்டியில் இருவருக்கு மட்டுமே அனுமதி. பாதை என்று எதுவும் கிடையாது. மேடு, பள்ளம், கற்கள் நிறைந்த பாதை. சில நேரங்களில் பயங்கரமாகக் காற்று வீசியது.

வாகன ஓட்டியின் துணையோடு முக்திநாதன் வாயிலை அடைந்தோம். சந்நிதியை அடைய 80, 90 படிகள் ஏற வேண்டியிருந்தது. சுற்றிலும் சிகரங்களைத் தழுவிச்செல்லும் மேகக் கூட்டம்; பச்சைப் பசேலென்று நெடிதுயர்ந்த மரங்கள்; அற்புதமானதொரு தேவருலகில் இருப்பது போன்ற உணர்வை அடைந்தோம்.

படிகள் ஏறி, சந்நிதியை அடைந்தோம். சிறு தொட்டிகள் போன்று இரண்டு திருக்குளங்கள் சந்நிதி முன்னால் உள்ளன. கோயிலை ஒரு பெண்மணி நிர்வகித்து வருகிறார். சிறிய சந்நிதிதான். கருவறையில் சாளக்ராம சுயம்பு திருமேனியாக முக்திதரும் ஸ்ரீ முக்திநாராயணன் எழுந்தருளி தரிசனம் தருகிறார். சங்கு- சக்ர கதா ஹஸ்தனாக, ராமானுஜர், கருடன் மற்றும் ஸ்ரீதேவி- பூதேவியருடன் தரிசனம் தருகிறார் அவர். சப்தரிஷிகளும் சனகாதி மகரிஷிகளும் ஆராதித்த எம்பெருமானும், பிறவிகள் கோடி எடுத்தாலும் கிடைத்தற்கரிய பெருமானும் ஆகிய ஸ்ரீமந் நாராயணன் தம்மைத் தரிசிப்பவர்களுக்குத் தவறாது முக்தி அளிப்பதால், 'முக்திநாராயணன்’ என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார் இங்கே.

பெரியாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம் இது.

கோயில் கருவறைக்குள் சென்று, ஸ்ரீசாளக்ராம நாராயணனை மிக அருகில் நின்று, தொட்டு வணங்கினோம். நாங்கள் வாங்கிச் சென்ற வஸ்திரங்களை நாங்களே அவருக்குச் சாற்றி, வழிபட்டோம். வாங்கிச் சென்ற வளையல்களை ஸ்ரீதேவி, பூதேவியர் கைகளில் அணிவித்து, வணங்கினோம். அந்த நேரத்தில், திடீரென்று பனிமழை பெய்யத் தொடங்கியது. உடன் வந்தவர்கள் விரைந்து கீழே இறங்க ஆயத்தமானார்கள்.

கோயிலுக்கு வெளியே சந்நிதியைச் சுற்றி 108 திவ்யதேசங்களின் புஷ்கரணி தீர்த்தத்துக்குச் சமமான 108 கோமுக தீர்த்தங்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் வரிசையாகக் குளித்துக்கொண்டே சந்நிதியைச் சுற்றி வரலாம். அப்போது படம் எடுக்கலாமென நினைத்து கேமராவைத் தேடினால், அது பையில் இல்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்போது, ராணுவப் பணியாளர் ஒருவர் என்னிடம் வந்து, ''உள்ளே சாமி பாதத்தில் வைத்துக் கும்பிட்டுவிட்டு மீண்டும் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டீர்களா என்று போய்ப் பாருங்கள்'' என்றார். அதன்படி, மீண்டும் கோயில் கருவறை உள்ளே சென்று, கடவுள் இருப்பிடத்திலேயே என் கேமராவைத் தேடினேன். ஆனால், அது அங்கும் இல்லை. என் மகன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் வாங்கியதைத் தொலைத்துவிட்டேனே என்ற வேதனையுடன், கோமுக தீர்த்தத்தில் தலையை மட்டும் நனைத்துக்கொண்டு சுற்றி வந்தேன்.

அப்போது என் பத்து வயதுப் பேத்தி என்னிடம், ''நீ இந்த முக்திநாராயணனைக் கல் என்று நினைத்தாயா? கடவுளாக நினைத்தாயா? கல் என்று நினைத்திருந்தால், கேமரா கிடைக்காது; கடவுளாக நினைத்திருந்தால் கிடைக்கும். வா, போகலாம்!'' என்று பெரிய மனுஷி தோரணையில் சொன்னாள்.

அந்த வார்த்தைகள் என் நெஞ்சத்தைத் தைத்தன. சந்நிதி வாசல் வந்தோம். ஆங்கிலோ இந்தியர் ஒருவர் எங்களை நெருங்கி, என்னிடம் கேமராவை நீட்டி, ''நீங்கள் உள்ளே சென்றபோது கேமரா விழுந்ததைப் பார்த்தேன். சுற்றி வந்ததும் தரலாம் என இருந்தேன். இந்தாருங்கள்!'' என்றார்.

பல ஆயிரம் வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்ச்சி என் சரீரத்தில் அப்போது ஏற்பட்டது. அவருக்கு நன்றி சொல்லக்கூட இயலாதபடி என் வாய் அடைத்துப்போனது.

கருவறை முன் நின்று, அமானுஷ்யமான- அற்புதமான அந்த இடத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் திருவுள்ளத்துக்கு மனத்தால் நன்றி கூறி வணங்கிவிட்டு, படி இறங்கினோம்.

என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி இது!

மறக்கமுடியாத திருநாவாய் முகுந்தன்!

எடிட்டர் சாய்ஸ்

MUST READ