Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஷ்டபந்தனம்!

அஷ்டபந்தன குடமுழுக்கு- நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிந்த வாக்கியம்தான். எனினும், இந்த அஷ்டபந்தனத்தில் என்னென்ன வகையான மருந்துகளை பயன்படுத்துகிறார்கள், என்னென்ன அளவில் எட்டு  மருந்துகளையும் சேர்க்கவேண்டும்... எனப்போன்ற தகவல்கள் நம்மில் பலருக்கும் தெரியாது.

அஷ்டபந்தனம் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

1. கொம்பரக்கு, 2. சுக்கான் தூள், 3. குங்கிலியம், 4. கற்காவி

5. செம்பஞ்சு, 6. சாதிலிங்கம், 7. தேன்மெழுகு, 8. எருமை வெண்ணெய் ஆகிய எட்டும் சேர்ந்ததே அஷ்டபந்தன கலவை.

கொம்பரக்கு: மரப்பட்டையுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் கொம் பரக்கு தூய்மையானது; கலப்படமற்றது.

சுக்கான் தூள்: இது பல நிறங்களைக் கொண்டது. எனினும், வெள்ளை மற்றும் கபில நிறம் கொண்டவை ஏற்கத்தக்கது. கருமை நிறம் கூடாது. இரும்புச் சட்டியில் இட்டு வறுத்தால், வெடிக்கக்கூடாது; அதுவே சிறந்தது.

குங்கிலியம்: தூசு, தும்பு இல்லாத குங்கிலியம் உகந்தது.

கற்காவி: அழுக்குச் சிவப்பு நிறத்துடன் கட்டியாக இருக்கும். அப்படிக் கட்டிப்பட்டி ருப்பதே சிறப்பானது.

செம்பஞ்சு: வாதாங்கொட்டை நிறம் வாய்ந்தது. பீகார் பக்கத்தில் இருந்து வருவது. இதை 'கோக்தி’ என்றும் சொல்வர்.

சாதி லிங்கம்: அஷ்டபந்தனத்தில் முக்கியமான மருந்து இது.

தேன் மெழுகு: இதில் மஞ்சள் மெழுகு, வெண் மெழுகு என இருவகை உண்டு. வெண் மெழுகு விசேஷமானது!

எருமை வெண்ணெய்: புதிய மண் பானையில் போட்டுவைக்க, ஈரப்பதத்தை பானை உறிஞ்சிவிடும். அதன்பிறகே பயன்படுத்துவர்.

இவை ஆயத்தமானதும், மர உரலில் போட்டு இடிக்கவேண்டும்; கல்லுரல் கூடாது. தேவைக்கு ஏற்ப ஏழு பண்டங்களையும் உரலில் இட்டு, வெண்ணெயை சிறிது சிறிதாகச் சேர்த்து இடிப்பார்கள்.

பொருட்களின் அளவு...

சுக்கான் தூள் - 25 1/2 தோலா

குங்கிலியம் - 9 தோலா

கற்காவி - 7 தோலா

இலிங்கம் - 7 1/2 தோலா

அரக்கு - 3 1/2 தோலா

மெழுது - 3 3/4 தோலா

செம்பஞ்சு - 1 தோலா

எருமை வெண்ணெய் - 7 1/2 தோலா

இவற்றில் ஒவ்வொரு சரக்காக மர உரலில் இட்டு, ஒன்றோடு ஒன்று கலந்து ஒன்றுசேரும்படி இடிக்கவேண்டும்.

இந்த மருந்துகளைக் கலந்து இடிப்பதில் பண்டத் தூய்மை, பண்டங்களின் சேர்மான அளவு, இடிக்கும் கால அளவு மூன்றும் மிக முக்கியம். அத்துடன் இடித்து அஷ்டபந்தனம் தயாரிப்பவர் களின் உடல்-உள்ளத் தூய்மையும் மிக முக்கியம். இடிக்கும்போது, 'சிவ சிவ’ என்றோ, 'நாராயணா’ என்று சொல்லியபடி இடிப்பது சிறப்பு.

அதேபோன்று பிரதிஷ்டையின்போது பீடத்தையும், துணை பீடத்தையும் இணைக்க, 'திரிபந்தனம்’ எனும் முக்கூட்டுப் பொருளே உகந்தது. இதற்கு சுக்கான் தூள், கருப்பட்டிக் கசிவு, முற்றிக் கனிந்த பேயன் பழம் (வாழையி ஒரு வகை) ஆகிய மூன்றும் தேவை.

நற்சுக்கான் கற்களை நன்கு பொடித்துப் பெருஞ்சல்லடையால் சலித்து, அதில் வேண்டிய அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர், வாயகன்ற மண் அல்லது களிம்பு ஏறாத ஒரு பாத்திரத்தில்

இட்டு சூடேற்றுவர். அப்போது சிறிது சிறிதாகச் சர்க்கரையையும், தோல் கருத்த- நன்கு கனிந்த பேயன் பழத்தையும் சேர்த்துப் பிசைந்துகொண்டே வரும்போது, கை சூடுதாங்காத அளவுக்கு பதம் வந்ததும், மத்து முதலான மரக் கருவிகளைக் கொண்டு நன்கு மசிப்பார்கள். கலவையானது நன்கு கூழ் போல் ஆனதும் கற்களுக்கு இடையே பயன்படுத்துவார்கள். கூட்டுமுறை செம்மையாக அமைந்து விட்டால், பிடிமானம் உறுதியாக இருக்கும்.

அஷ்டபந்தன வெண்பா:

கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி

செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது

நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து

ஆக்கல் அட்டபந்தனம் ஆம்

திரிபந்தனம்:

சுக்கான் தூள், சர்க்கரை, தொல் பேயான் நற்கனியும்

ஒக்கக் கலந்தமைத்தல்  உற்றதிரி பந்தனம் ஆம்

(காரைக்குடி- கம்பன் அடிப்பொடி அமரர் சா.கணேசன் அவர்களின் 'கட்டுரைக் களஞ்சியம்’ நூலில் இருந்து...)

 அவினாசி முருகேசன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

நன்றி மறக்காத ஜெயலலிதா...! - மைசூரு முதல் - 81, போயஸ் கார்டன் வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்! - 8
placeholder

சசிகலா. ரத்த உறவு ஏதும் இல்லை; மைசூருவில் உடன் விளையாடியவரும் இல்லை; சர்ச் பார்க்கில் உடன் படித்தவரும் இல்லை; சாதாரணமாக திரைப்பட கேசட் வாடகைக்கு விட்டுக்கொண்டிருந்தவர்... அவ்வளவுதான்..! அவர் எப்படி இந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார்... அவர் எப்படி தமிழ்நாட்டின் ஓர் அதிகார மையம் ஆனார்... அவரின் ஆசி கிடைத்துவிட்டால்போதும், எந்த உச்சத்தையும் தொடலாம் என்ற அளவுக்கு அவர் எப்படி உயர்ந்தார்...? அவர் குடும்பத்தால் தனக்குக் கெட்ட பெயர் என்று தெரிந்தபின்னும், அவரை முற்றும் முழுவதுமாக ஜெயலலிதா கைவிட மறுப்பதன் காரணம் என்ன...? சோ முதல் சுப்பிரமணிய சுவாமி வரை, எவ்வளவோ முயற்சித்துவிட்டார்கள். ஆனாலும், அவர்கள் நட்பைப் பிரிக்க முடியவில்லை என்ன காரணம்...? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், ஜெயலலிதாவைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர் பள்ளிக் காலத்தில் நடந்த சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

MUST READ