Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புண்ணிய நதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் ஆகாயத் தாமரைகள்!

ஈரோடு: தென்னிந்தியாவின் காசி என அழைக்கப்படும் சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள புனித நதியில் ஆகாயத் தாமரைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள கூடுதுறையில் மிகவும் புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆண்டுதோறும் ஆடி 18ஆம் நாளன்று ஆடிப்பெருக்கின் போது லட்சக்கணக்கான மக்கள் இந்த ஆலயத்தில் ஓடும் முக்கூடல் நதியில் நீராடுவது வழக்கம். இந்த ஆற்றில் காவிரி, பவானி மற்றும் அமிர்த நதி என மூன்று நதிகள் ஒன்றாக ஒன்றிணைவது இந்த ஆலயத்தில் மட்டும்தான். காசிக்கு செல்லமுடியாத பக்தர்கள் நாடி வரும் ஆலயம் இந்த கூடுதுறைதான். இதனால் இந்த ஆலயமானது தென்னிந்திய காசி எனவும், கொங்குமண்டல காசி எனவும் அழைக்கப்படுகிறது.

இவ்வளவு புகழ்பெற்ற, புண்ணியம் நிறைந்த இந்த ஆலயத்தின் முக்கூடல் நதியானது இன்று மிகவும் முகம் சுழிக்கும் நிலையில் உள்ளது. ஆண்டு தோறும் கவனமாக பராமரிக்கப்படவேண்டிய இந்த நதியானது முறையாக பராமரிக்கப்படாமல் இன்று ஆகாயத் தாமரைகளின் இருப்பிடமாகவும், கூடாரமாகவும் மாறியுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீரே தெரியாத அளவிற்கு வெறும் ஆகாயத் தாமரைகள் மட்டுமே காணப்படுகிறது.

இந்த ஆகாயத் தாமரைகள் தண்ணீரை மிகவும் அசுத்தமாக மாற்றுகிறது. மேலும் ஆலயத்துக்கு புனித நீராட வரும் பக்தர்கள் குளிக்க முடியாமல் முகம் சுழிக்கும் நிலையை ஏற்படுத்துகின்றன. இதுமட்டுமின்றி பல்வேறு நோய் தொற்றுதலுக்கும் இந்த ஆகாயத் தாமரைகள் காரணமாகின்றன. தொடர்ந்து எட்டு மாதங்களுக்கும் மேலாக பராமரிக்கப்படாமல் இருந்ததன் விளைவாக இன்று காவிரி ஆற்றில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கும் அதிகமாக ஆகாயத் தாமரைகளாக காட்சியளிக்கின்றன.

இந்த ஆகாயத் தாமரைகள் தவிர ஆற்றில் பல்வேறு பகுதிகளில் ஆலயத்தில் பரிகாரம் செய்யப்படும் பூஜைப் பொருட்கள் ஆங்காங்கே கொட்டப்பட்டு குப்பை கூடமாக  காட்சியளிக்கிறது. இவற்றுடன் விலங்குகளின் கழிவுகளும் ஆற்றில் கொட்டப்படுகின்றன. இந்த ஆகாயத் தாமரைகள் மற்றும் பல்வேறு கழிவுகளால் காவிரி ஆறு முழுவதுமாக மாசடைந்து தன்னுடைய பழைய அழகை முற்றிலுமாக இழந்து காணப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு மற்றும் மழைக்காலங்களில் அருகில் உள்ள தாழ்வான பகுதிகளுக்கு வெள்ளநீர் எளிதில் புகுந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சங்கமேஸ்வரர் கோவிலுக்கு ஆடிப்பெருக்கு மட்டுமின்றி ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களிலும், இதர அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட பல்வேறு விஷேச நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து புனித நீராடுவது வழக்கம். இந்த புனித நதியில் தற்போது பக்தர்கள், நீராடாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது பக்தர்களின் முக்கிய கோரிக்கையே புனித நதியானது விரைவில் சீரமைக்கப்பட்டு, மீண்டும் புண்ணிய நதியாக மாறவேண்டும் என்பதுதான்.
  
செய்தி, படங்கள்: கு.ஆனந்தராஜ்
(மாணவ பத்திரிகையாளர்)

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close