Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று சூரசம்கார பெருவிழா...

   திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இம்மாதம் 24ம் தேதி தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவில். இங்கு நடைபெறும் முக்கிய விழாவில் கந்த சஷ்டி விழாவும் ஓன்று. கடந்த 24-ஆம் தேதி கந்தசஷ்டி விழா விமரிசையாக தொடங்கியது. கந்த சஷ்டியின் 6-வது நாளான இன்று சூரசம்கார விழா நடக்க இருக்கிறது.
  
   சிங்காரவேலனாக சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும்படியும் அறிவுரை கூறினார் வீரபாகு. தன் ஆணவத்தால் அனைத்து படைகளையும் இழந்த சூரன், இறுதியில் மாயப்போர் முறைகளை செய்யத் துவங்கினான். கடலில் சென்று உலகமெல்லாம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான்.அதனால் முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவி, அம்மாமரத்தை  இருகூறாகச் சிதைத்தார். ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றி ஏற்றுக் கொண்டார்.

 சூரசம்காரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில்,சூரனையும் ஆட்கொண்டு பெருவாழ்வு தந்தருள்கிறார். எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு இதுவாகும். அதனால் தான் "வைதாரையும் வாழவைப்பவன் முருகன்” என்று போற்றி வழிபடுவர். கந்தசஷ்டியின் ஆறாம் நாளான இன்று நம் மனதில் இருக்கும் ஆணவத்தையும், அசுர எண்ணங்களையும் விடுத்து, நல்ல எண்ணத்தோடு வாழவேண்டும். முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது.


       
     முருகத்தலங்களில் கந்தஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவை 12 நாட்கள் கொண்டாடுகின்றனர். முதல் ஆறுநாட்களில் சட்டி விரதம், சூரசம்காரம், ஏழாம் நாளில் முருகன்- தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை ஆகியன நடக்கும்.

ஜெயந்திநாதர், சூரனை சம்காரம் செய்தபின்பு பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுகிறார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படுகிறது. அர்ச்சகர் கண்ணாடியில் தெரியும் ஜெ யந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்கிறார். இதை சாயாபிஷேகம் என்பர். “சாயா’ என்றால் “நிழல்’ எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற தன்னை குளிர்விக்கும் விதமாக நடத்தும் அபிஷேகத்தை, முருகப்பெருமானே கண்டு மகிழ்வதாக ஐதீகம். அதன்பின்பு சுவாமி, தன் சன்னதிக்கு திரும்புகிறார். அத்துடன் சூரசம்காரம் நிறைவடைகிறது.

    இன்று சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில், உச்சி கால லட்சார்ச்சனை முடிவடைந்த பின்னர் தீர்த்தவாரி மற்றும் கலசாபிஷேகம் நடைபெறும். விழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்கிறது. மாலை 4.30 மணியளவில் திருக்கோயில் கடற்கரையில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வை காண
 திருசெந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருகின்றனர்.

-இ.லோகேஸ்வரி

எடிட்டர் சாய்ஸ்