Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தயாராகிறது திருவண்ணாமலை தீபம்!

திருவண்ணாமலை தீபத் திருநாள் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. தீப ஒளியினால் திருவண்ணாமலையே ஒளிப் போர்வை போர்த்தி பிரகாசிக்கப் போகிறது நாளை முதல் 11 நாட்களுக்கு. வீடுகளில் நாம் விளக்கேற்றுவது போல இல்லை, இங்கே மகாதீபம் ஏற்றப்படுவது.

மகாதீபம் தயாராவது பற்றி தெரிந்து கொள்வோமா...

மகாதீபத்திற்கென்றே, செப்பினால் ஆன கொப்பரை ஒன்றினைப் பயன்படுத்துகிறார்கள். இந்த கொப்பரை நாலரை முதல் ஐந்து அடி உயரமானது. மேலே 4 அடி அகலமும் அடிப்பாகம் 2 அடி அகலமும் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு தீபத்திருநாளிற்கும் இதில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. விளக்கினை போல் எண்ணெய் ஊற்றி திரியிட்டு ஏற்றுவதல்ல மகாதீபம். காடா துணி என்ற ஒரு வகைத் துணி மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இதற்காக சுமார் 2000 மீட்டர் காடா துணி வாங்க்ப்படுகிறது.

மேலும் பக்தர்கள் கொடுக்கும் துணியும் பயன்படுத்தப்படும். சில சமயங்களில் அதுவும் கூட பத்தாமல் போவதுண்டு. மகாதீபம் தூய பசுநெய்யினால் ஏற்றப்படுகிறது. நெய், ஆவின் போன்ற அரசு பால் நிறுவனத் தில் இருந்து கொண்டு வரப்படுகிறது. சுமாராக 350 லிட்டர் நெய் கோவில் சார்பாக வாங்கு கிறார்கள். அது போக பக்தர்கள் காணிக்கையாகவும் பசுநெய் அதிக அளவில் வருகிறது. முந்தைய காலங்களில் அதிக நெய் வரத்து இல்லாததால் 3 நாட்கள் மட்டுமே தீபம் எறியவிடப்பட்டிருந்தது. இப்போது அதிக அளவில் நெய் கிடைப்பதால் 11 நாட்கள் தீபம் ஒளிர்கின்றது.

கொப்பரையில் பசுநெய்யில் ஊறவைத்த காடாதுணியை அடைத்து அதன் மேல் சூடம் வைத்து மகாதீபத்தினை ஏற்றுகிறார்கள். பக்தர்கள் நெய் காணிக்கை அளிக்க சீட்டுத் தருகிறார்கள். நம் இஷ்டப்படி எவ்வளவு நெய் வேண்டுமானாலும் கொடுக்கலாம். நேரடியாக நெய் வாங்கி வந்தும் கொடுக்கலாம் இல்லையெனில் எவ்வளவு நெய் என்று சொல்லி அதற்குரிய கட்டணம் கொடுத்துவிட்டால் பக்தர்கள் பெயரால் அண்ணாமலையாருக்கு கோவில் நிர்வாகத்தினரே வாங்கி பயன்படுத்திக்கொள்வர். பசுநெய் அளித்த ஒவ்வொருவருக்கும் தீபம் முடிந்தப்பின் அண்ணாமலையாரின் மகாதீபப் பிரசாதமாக கொப்பரையில் சேர்ந்த மை தருகிறார்கள்.

மகாதீபத்தினை கண்டாலே புண்ணியம் நம்மைத் தேடி வரும் என்றால் அதனை ஏற்றுபவர் உண்மையில் எவ்வளவு பாக்கியசாலி. நாம் நினைப்பது போல் நினைத்தவரெல்லாம் தீபமேற்ற முடியாது. காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே கார்த்திகை மகாதீபமேற்ற பணிக்கப்பட்டிருக்கிறார்கள். அடிப்படையில் மீனவ குலத்தை சார்ந்த இவர்கள், பர்வத மகாராஜாவின் வம்சாவளியில் வந்ததனால் பர்வதராஜகுலத்தினர் என அழைக்கப்படுகின்றனர்.

அதிலும் திருவண்ணாமலையை பிறப்பிடமாக கொண்ட இந்த குலத்தினர் மட்டுமே தீபமேற்ற வேண்டுமென்பது புராணகாலத்து சம்பிரதாயம். திருக்கார்த்திகை தீபத்திருநாள் முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கும் தினமும் மாலை இவர்கள் கொப்பரையை சுத்தம் செய்து மீண்டும் நெய் மற்றும் துணி வைத்து தீபமேற்றுகிறார்கள். ஒவ்வொரு நாளும் கொப்பரையில் இருக்கும் மையினை சேகரிக்கிறார்கள். மலை ஏறுவதற்கு 3 மணி நேரமாகும்.

இத்தனை சிறப்பாக திகழும் திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் இன்னுமோர் விசேஷம், அர்த்தநாரி தாண்டவமாடுதல். தீபத்திருநாளன்று திருவண்ணாமலையில் மட்டுமே நடக்கும் விசேஷ நிகழ்ச்சி இது.

தீபத்திருநாளின் ஜோதியாய் இருக்கும் திருவண்ணாமலையின் மகாதீபம் அத்தனை சிறப்புகள் கொண்டது. அண்ணாமலையார் அக்கினியாய் உருவெடுத்த திருத்தலம் திருவண்ணாமலை.  தீபத்திருநாளில் மகாதீபம் காண கண் கோடி வேண்டும். வாருங்கள் தீபத்திருநாளில் ஜோதியாய் காட்சி தரும் அண்ணாமலையாரை தரிசிப்போம்.

 -ர.கார்த்திகா
( மாணவப் பத்திரிக்கையாளர்)
 படங்கள்: க.முரளி


 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ