Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருச்சி ஐயப்பன் கோவில் குடமுழுக்கு விழா!

திருச்சி: திருச்சி, கண்டோன்மெண்ட் பகுதியில் அமைந்துள்ள  ஐயப்பன் கோவிலின் 4வது குடமுழுக்கு விழா இன்று நடைப்பெற்றது.

திருச்சி, கண்டோன்மெண்ட் பகுதியில்  ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 4வது குடமுழுக்கு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பலவிதமான ஹோமங்கள் வளர்க்கப்பட்டன.

இம்மாதம் 11ஆம் தேதி மாலை கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. 12ஆம் தேதி காலை மகா கணபதி ஹோமம், அங்கூர பூஜை, பிம்பசுத்தி பூஜைகள் நடைபெற்றன. 13ஆம் தேதி காலை உஷ, அங்கூர பூஜைகள், பிராயசித்த ஹோமமும், இதைத் தொடர்ந்து 1008 வலம்புரி சங்குகளைக் கொண்டு சங்காபிசேகமும் நடைபெற்றது. நேற்று தத்து ஹோமம், கலச, உச்ச பூஜைக்குப் பின்னர் மகா அன்னதானம் நடைப்பெற்றது. மாலையில் தீபாராதனை, சயன பூஜை, ஜீவகலச பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை ஹோமம் தொடங்கியது. பிற்பகல் 12.15 மணிக்கு அஷ்டபந்தன வாகன பிரதிஷ்டா எனப்படும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஐயப்பப் பக்தர்களும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.

இந்தியாவின் புண்ணியத் தளங்களிலிருந்து பக்தர்களால் கொண்டுவரப்பட்ட 444 புனிதக் கற்கள், ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சிவனின் பஞ்சபூத தலங்கள், இமயமலை, காசி, ராமேஸ்வரம், நாமக்கல் ஆஞ்சநேயர், சுசீந்திரம், முருகனின் அறுபடை வீடுகள், காவிரி, கங்கை, பம்பை, யமுனா போன்ற புண்ணிய நதிகள், நவகிரக தலங்கள், திருப்பதி, குருவாயூர், சோட்டானிக்கரை, சபரிமலை சன்னிதானத்துக்கு செல்லும் பாதையில் உள்ள முக்கிய இடங்கள் என இவ்வூர்களில் உள்ள கற்களெல்லாம் பக்தர்களின் பார்வைக்கு அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் புனிதக் கற்களை அனைவரும் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். இவற்றை வணங்கினால் நாம் அனைத்து தலங்களுக்கும் ஒரே நேரத்தில் சென்று வந்த பலன் கிடைக்கிறது. பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேற இங்குள்ள சாஸ்தாவை பிரார்த்தனை செய்கிறார்கள்.

இக்கோவிலில் சித்திரை விஷு, பங்குனி உத்திரம், கார்த்திகை மாதப் பிறப்புக் கால பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெறும். கார்த்திகையில் விரதம் துவங்கிய ஐயப்ப சாமிகளும் திரளாக வருகின்றனர். தினமும் சுமார் 1000 பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். விழாக்காலங்களில் சுமார் 10,000 பக்தர்களுக்கும் குறைவின்றி வருகிறார்கள்.

கோவிலுள், ஒவ்வொரு நட்சத்திரத்துக்கான ஆலயங்கள், அந்த நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த மரங்கள் என அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கல்வெட்டுக்கள் மனித வாழ்க்கையின் உண்மையை எடுத்துக் கூறுகிறது. இந்த ஆலயத்தில், சுத்தம் என்னும் சுபிட்ச மொழியும், மெளனம் என்னும் தெய்வீக மொழியும் மட்டுமே பேசப்படுகிறது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

-இரா.த. சசிபிரியா
(மாணவப் பத்திரிகையாளர்)

படங்கள்: தே.தீட்ஷித்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ