Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்டியோர் துயரை அந்தக் கணமே தீர்த்துவைக்கும் அனுமன்..!

குளத்தில் கண்டெடுக்கப்பட்ட வரப் பிரசாதி போரூர் ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்,மூல நட்சத்திரத்தின் மூலவரான அனுமனுக்கு மார்கழி மாதத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடுவது வழக்கம்.

ஸ்ரீ சிவ ஆஞ்சநேயர் திருக்கோவில் சென்னை, கிண்டி பூந்தமல்லி சாலையில் போரூர் காரம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மாதம் 21 ஆம் தேதியிலிருந்து 27 நட்சத்திரங்களுக்கும் சகசர நாமம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சென்ற 17 ஆம் தேதியிலிருந்து அனுமனுக்கான லட்சார்ச்சனை ஆராதனையும் அபிஷேகமும் நடைபெற்றது. நேற்று அனுமன் பஞ்சமுக தொற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சைவ, வைணவ சங்கமமாய் விளங்கும் இத்தலத்தின் வரலாறு கேட்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

கோயிலின் வரலாற்றுக்கு செல்வோம்….

மந்திராலய மகான் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் முந்தைய அவதாரமான ஸ்ரீ வியாசராஜ தீர்த்தரால் சென்னையில் போரூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆஞ்சநேயர் இருக்கிறார் என்பது நம்மில் எத்துனை பேருக்குத் தெரியும்?

ராகவேந்திரர் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். வியாசராஜர் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்தவர். தலைக்கோட்டை யுத்தத்தில் விஜய நகர சாம்ராஜ்ஜியம் தோற்கடிக்கப்பட்ட பிறகு ஹம்பி ஷேத்ரத்திலிருந்து ஸ்ரீ வியாசராஜ தீர்த்தர் கால்நடையாகவே பாரதமெங்கும் புனிதப்பயணம் மேற்கொண்டார். அப்படி அவர் பயணம் செய்த பொது 600 க்கும் மேற்பட்ட ஆஞ்சநேயர் சிலைகளை நாடு முழுவதும் பிரதிஷ்டை செய்தார் என்பது வரலாறு. அடுத்தடுத்து நிகழ்ந்த படை எடுப்புக்களினால் அவர் பிரதிஷ்டை செய்த பல விக்ரகங்கள் காணாமல் போய்விட்டன. நூற்றுக்கும் குறைவான விக்ரகங்களே தப்பித்துள்ளன.

வியாசராஜ தீர்த்தர் அப்படி ஒவ்வொரு ஊராக வந்தபோது, போரூர் என்ற இடத்திற்கு வந்தார்.

தனது ஞான திருஷ்டியால் அவ்வூரில் ராமர் சிவனை வழிபட்டதை உணர்ந்த வியாசராஜ தீர்த்தர் தான் நினைத்திருந்த ஆஞ்சநேய சுவாமியை பிரதிஷ்டை செய்ய போரூரை இட பொருத்தமான இடம் இருக்க முடியாது என்று கருதி, இங்கு ஒரு குளக்கரையில் அனுமனை பிரதிஷ்டை செய்தார். அப்படி ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அழகான அளவற்ற சக்தி வாய்ந்த மூர்த்தம்தான் இந்த ஸ்ரீ சிவவீர ஆஞ்சநேயர்.

வலது கரம் பக்தர்களுக்கு “அஞ்சவேண்டாம்…. நான் இருக்கிறேன் காப்பதற்கு” எனும்படி அபய ஹஸ்தம்.

இடது கரத்தில் சௌகந்திகா மலர், வாலில் மணி. பகைவர்கள் தீண்ட முடியாத படி அதர்வண வேத மதிரப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இவை மூன்றும் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த ஆஞ்சனேயரிடம் மட்டுமே பார்க்கமுடியும்.

அந்நியர்களின் படையெடுப்பினாலனுமர் விக்ரகம் காணாமல் போயிற்று. விக்ரகத்தை காணாது திகைத்த ஊர்மக்கள், படையெடுப்பினால் சேதப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டிருக்கும் என்று முடிவுக்கு வந்துவிட்டனர். ஆனால் அனுமன் இருந்ததோ குளத்தினுள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குளத்தை தூர் வார முற்பட்டபோது, இந்த விக்ரகம் வெளியே வர ஊர் மக்களுக்கு எல்லையில்லா ஆனந்தம். இதை மண்டக்குளம் என்று அழைக்கிறார்கள். இதிலிருந்து நீர் எடுத்து தான் ராமர் சிவா பூஜை செய்தார் என்று கூறப்படுகிறது. கண்டெடுத்த அனுமன் சிலையை அருகிலிருந்த ஆல மரத்தடியில் வைத்து வழிபட்டார்கள்.

அண்டியோர் துயரை அந்தக் கணமே தீர்த்துவைத்ததால் அனுமனின் புகழ் பரவ தொடங்கியது. எவரைக் கொண்டு எதனைப் பூர்த்தி செய்வது என்று அவனுக்கு தெரியாதா?

இந்த சிவவீர ஆஞ்சநேய சுவாமிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. ஆஞ்சநேயரைத் தவிர மேலும் பல விக்ரகங்கள் இங்கு உண்டு. செல்வ விநாயகரை வணங்கி ஆலயத்தை வலம்  வரும் நமக்கு உற்சவ மூர்த்திகளான சீதா, லக்ஷ்மண சமேத இராமரும், அருகில் அனுமனும், காட்சி தந்து பரவசப்படுத்துகிறார்கள். பக்தர்கள் தங்கள் கரங்களாலேயே வெண்ணெய் சாற்றி வழிபடுவதற்கு ஸ்ரீ திவ்ய நாம சங்கீர்த்தன அனுமாரை நிர்மாணித்துள்ளனர்.

கோயில் அமைந்துள்ள இடம் சிறியது தான் என்றாலும், சுற்றுப்புற பிரகாரத்தில் லக்ஷ்மி ஹயக்க்ரீவர், தன்வந்திரி பகவான், பள்ளி கொண்ட சிவன், பைரவர் ஆகியோர் தனித் தனியாக அருள் புரிகிறார்கள். மேலும் நிருத்ய விநாயகர், தம்பதி சமேத தக்ஷிணாமூர்த்தி, பள்ளி கொண்ட ரங்கநாதர், காயத்ரி தேவி, அஷ்ட பூஜை துர்க்கை, முருகன் ஆகியோரும் இங்கே உண்டு.

இத்தலத்தில்  மட்டைத் தேங்காய் பிரார்த்தனை மிகவும் பிரசித்தம். நமது கோரிக்கையை வேண்டுகோளாக்கி மட்டைத் தேங்காயை வாங்கி வந்து கோயிலில் கொடுத்தால் சுவாமியிடம் வைத்து அதற்கு எண்கள் அமைத்து தருவார்கள்  அதை கோயிலிலேயே வைத்துவிடவேண்டும். வேண்டுதல் நிறைவேறியவுடன் மட்டையை உரித்து தேங்காயை உடைத்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்கிறார்கள். நியாயமான வேண்டுதல்கள் ஒரு மண்டலத்திற்குள் நிறைவேரிவிடுவதாக ஆலயத்தில் சொல்கிறார்கள்.

பரிகார சக்தி


திருமணத் தடை, புத்திர பாக்கியமின்மை, கடன் தொல்லை, செய்வினை தோஷங்கள், குடும்பத்தில் ஒற்றுமையின்மை, உத்தியோகப் பிரச்னை ஆகியவற்றை தன்னின் தரிசிப்பவர்களுக்கு இந்த  சிவவீர ஆஞ்சநேயர் தீர்த்துவைக்கிறார்.

திறந்திருக்கும் நேரம் : காலை 7.30 முதல் 10.30 வரை. மாலை 5.30 முதலோ 8.30 வரை.

முகவரி : ஸ்ரீ சிவ வீர ஆஞ்சநேயர் திருக்கோயில், ஆஞ்சநேயர் கோயில் தெரு, மாருதி நகர், போரூர், சென்னை 600 116. தொலைபேசி : 98842 40679, 92834 40557

போரூர் காவல் நிலையம் அருகே மவுண்ட் பூந்தமலை சாலையில் கோபாலகிருஷ்ணா தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கவேண்டும்.

(or) வடபழனி - போரூர் ஸ்டாப்பில் போரூர் ஜன்க்ஷனுக்கு முன்பாக காரம்பாக்கத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து 5 நிமிட நடை தூரத்தில் கோவிலை அடைந்துவிடலாம்.

-க.தனலெட்சுமி, ர.நந்தகுமார்
(மாணவ பத்திரிகையாளர்கள்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close