Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்று கருணைக்கடல் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி பிறந்த தினம்!

றைத்தேடல் என்பது எல்லை இல்லாத பயணம். இதில் வெற்றி பெற்றவர்கள் தன்னை உணர்ந்த மனிதர்களாகிறார்கள். நல்ல மனிதர்களால் மட்டுமே உலகத்தை உணர்ந்து கொள்ள முடியும். உலகத்தை உணர்ந்தவனே சிறந்த  ஞானியாகிறான் என்பது மகான்களின் வாக்கு.

இப்படி இந்தக் கலியுகத்தில் தன்னையும் உணர்ந்து, தன்னை உலகத்துக்கும் உணர்த்திய மகான்களில் ஒருவர் பகவான் ஸ்ரீரமண மகரிஷி. மகான் மனிதப்பிறவி எடுத்தாலும் கர்மவினையை அனுபவித்தே தீரவேண்டும் என்ற மெய்ப்பொருளை இந்த மனித உலகத்திற்கு உணர்த்தியவர்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை திருத்தலத்தில், நிறைந்தெழும் கருணா மூர்த்தியாக இருந்து நமக்கு வழிகாட்டிய மகான் ரமணர் அவதரித்த புண்ணிய திருத்தலம் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சுழி என்ற தலமாகும்.

திருத்தல சிறப்பு

ரமணரின் ஞான உபதேசங்களை இந்த ஞாலம் உணர பிள்ளையார் சுழி போட்ட இந்த திருத்தலம், பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்கள் 14ல் 10வது தலம் எனும் சிறப்பு வாய்ந்தது. முற்காலத்தில் சந்திரசேன பாண்டியன் தென் தமிழ்நாட்டை ஆண்டு வந்தான். அப்போது ஒரு நாள் மாபெரும் பிரளயம் உண்டாகவே மன்னன் அங்கு அருள்பாலிக்கும் ஈசன் (பூமிநாதர்) திருவடிகளில் தஞ்சம் புகுந்தான். இருகரங்களில் சங்கு, பிரம்பு ஆகியவற்றை ஏந்திய அடியாராகத் தோன்றிய சிவபெருமான்  பூமியில் ஒரு பிலத்தை (துவாரம்) உண்டாக்கி அதனுள் சுழித்து பிரளய வெள்ளத்தை மறையச் செய்தார். சுழித்து இந்த வெள்ளம் பிலம் புகுந்த காரணத்தால் இத்திருத்தலம் திருச்சுழியல் எனப்பட்டது. நாளடைவில் அப்பெயர் சுருங்கி தற்போது திருச்சுழி என  வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வுலகிலுள்ள அருள்மிகு துணைமாலையம்மன் சமேத திருமேனிநாதர் கோயிலுக்கு வடக்கு பக்கம் உள்ள கார்த்திகை வீதியில் தெய்வீக மணம் கமழும் சுந்தர மந்திரம் இல்லம்தான் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்து, இளமைக்காலத்தில் வாழ்ந்த வீடு. இன்றும் அந்த வீடு பழமை மாறாமல் ரமணரின் நினைவுகளை தாங்கி நிற்கிறது. அந்த தெய்வீக இடம் ரமணரின் உறவினர்களால் பரம்பரை, பரம்பரையாக பராமாரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன.

ரமணரின் பிறப்பு

திருச்சுழி அருள்மிகு திருமேனிநாதர் திருவருளால் ஸ்ரீமான் சுந்தரம் அய்யருக்கும், அழகம்மையாருக்கும் 2வது மகனாக 1879ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி திருவாதிரை சுபதினத்தில் ஒரு கண் தெரியாத மூதாட்டியின் உதவியுடன் பிறந்தார். அவர் பிறந்த அடுத்த நிமிடமே கண் தெரியாத மூதாட்டி கண் பார்வை பெற்றுள்ளார். திருவாதிரை தினத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு வேங்கடராமன் என பெயர்  சூட்டியுள்ளனர்.

4வது வகுப்பு வரை திருச்சுழி சேதுபதி பள்ளியில் படித்த வேங்கடராமன், பிறகு மதுரையில் தன் படிப்பை தொடர்ந்து உள்ளார். வேங்கடராமனின் இளம் வயதில்  ஏற்பட்ட அவரது  தகப்பனார் மரணம் அவர் மனதில் பிறப்பு, இறப்பு குறித்த குழப்பங்களை ஏற்படுத்தியது. கண்களை மூடி ஆழ் தியானத்திற்கு சென்ற ரமணருக்கு கிடைத்த தீர்வு, 'எங்கும் எதிலும் நிறைந்துள்ள பரமாத்ம தத்துவமே என்னுள் அழிவற்ற ஆத்மாவாக இருந்து செயல்படுகிறது' என்பதை புரிந்து கொண்ட ரமணர் தம் படிப்பை துறந்து 'நான் எனது தகப்பனாரைத் தேடிக்கொண்டு, அவரின் உத்தரவின்படி இவ்விடத்தைவிட்டு கிளம்பி விட்டேன்' என்று தனது குடும்பத்திற்கு ஒரு கடிதத்தை எழுதிவைத்துவிட்டு திருவண்ணாமலையை  நோக்கி தன் தகப்பன் சிவபெருமானை தேடி தன் பயணத்தை தொடங்கினார். திருவண்ணாமலையை சென்றடைந்த அவர், அண்ணாமலையாரை வணங்கிய பிறகு தனது கட்டுக்குடுமியினை மழித்து மொட்டையடித்துக்கொண்டார். கோயிலின் பின்புறமுள்ள ஐயன் குளத்தில் ஆடைகளைக் களைந்தார். பூணுலை அறுத்தெறிந்தார். தனது வேட்டியிலிருந்து சிறிது துணியை மட்டும் கிழித்து கௌபீனமாக கட்டிக்கொண்டார்.

ரமணராக மாறிய வேங்கடராமன்

திருவண்ணாமலையிலுள்ள விருப்பாட்ச குகையில் அமர்ந்து தான் யார் என்பது குறித்து அறிந்து கொள்ள ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். தியானத்தின் போது தன்னைத் துன்புறுத்தியவர்களுக்கும் அன்பே சிவம் என்று அன்பு வழியில் அறவழி கண்டார். வேங்கடராமன் தன்னைக் காண வந்த கணபதி முனிவருக்கு உண்மையான தவம் என்பதன் பொருளை விளக்கினார். ரமணரது பதிலில் எழுச்சி பெற்ற கணபதி முனிவர், ஆன்மாவிலிருந்து பிறக்கும் அருளை வழங்கி வரும் சுவாமிகளை ரமணர் என்றழைக்கலாமே எனக்கருதினார். ரமணரை தெய்வ அவதாரமாக ஏற்றுக்கொண்டதால், பகவான் என்று அடைமொழி சேர்த்து அவரை பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி என்றழைத்தனர்.

நான் யார்?

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அத்வைத வேதாந்தத்தின் தத்துவ நிலையினை மேற்கொண்டார். எல்லாவற்றிலும் மூல காரணமாய் உள்ள பரம் பொருள் ஒன்றைப் பற்றியும், அதனின்று எல்லாவித ஜென்ம பலன்களும் தவிர்க்கப்பட்டுள்ளன என்பதை இந்த மனித உலகிற்கு உணர்த்தியுள்ளார். நான் எனும் சொல் என் என்ற சொல்லிலிருந்து வேறானதே. ஆன்மா என்பது அழிந்து போகும் உடலன்று என உபதேசித்தார்.

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியுடைய சந்நிதானம் பக்தர்களுக்கு சாந்தத்தையும், ஆனந்தத்தையும் பரப்பியது. உதவி கோர சரணடைந்தவர்களின் ஆன்மாக்களை அவர் புதிய தெளிவு பெறச்செய்தார். மிகவும் நுண்ணிய மனோதத்துவ உள்ளொளியால் தம்மை வந்து அடைந்தோரின் தேவைகளை நன்கு அறிந்து அதற்கு தகுந்தவாறு அருள்பாலித்து அவர்களை களிப்பில் ஆழ்த்தினார். எல்லா ஜீவாத்மாக்களையும் நேசித்தார். புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டபோதும் சிகிச்சையினை ஏற்றுக்கொள்ள மறுத்தார். பிறகு அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிகிச்சையினை ஏற்ற ரமணர் அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்தினை தவிர்த்து தனக்கிருந்த வலியினையும் கடவுளின் பரிசாக ஏற்றுக்கொண்டார். அத்தகைய மகான் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் நாள் அண்ணாமலையாருடன் கலந்து தெய்வமாக காட்சி தருகிறார்.

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஜெயந்தி

இத்தகைய சிறப்புக்களையுடைய பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிக்கு அவர் அவதரித்த திருச்சுழியிலுள்ள குண்டாற்றின் நதிக்கரையில் வட இந்திய ஆலய வடிவமைப்பு முறையில் 'யுனிவர்செல் ரமண மகரிஷி மூவ்மெண்ட்' சார்பில் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. அங்கு பத்மாசன நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் பகவான் ஸ்ரீ ரமணருக்கு இன்று (டிசம்பர் 30ஆம் தேதி) ரமணரின் அட்சத ரமண மாலை முழங்க 135வது ரமண ஜெயந்தி மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது.

நாமும், திருச்சுழி திருத்தலத்தில் பகவான் ஸ்ரீ ரமணரை தரிசிப்போம். ஆன்ம ஞானம் பெறுவோம்.

சு.சூர்யாகோமதி,
(மாணவப் பத்திகையாளர்)

படங்கள் : ரகுநாதன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close