Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விவசாய வரலாறு சொல்லும் கோவில் களஞ்சியம்!

ன்னர்கள் காலத்தில், கோவில்களை நிர்மாணித்துப் பராமரிக்க, ஒவ்வொரு கோவிலுக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை மானியமாக கொடுத்தனர். அந்த மானிய நிலங்களில் விவசாயம் செய்து அதில் வரும் விளைச்சலில் ஒரு பங்கை கோவிலுக்கு வரியாக செலுத்தவேண்டும். அப்படி கிடைக்கும் அதிகப்படியான தானியங்களை சேமித்து வைக்க கோவில்களில் பெரிய களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டன.

இன்று நம் பாரம்பரிய விவசாய வரலாற்றை சொல்லும் அடையாளச் சின்னங்களாக நிற்கிறது இந்த களஞ்சியங்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டில் இருந்த கோவில் களஞ்சியம் இன்று மக்களுக்குக் காட்சிப் பொருளாக நிற்கிறது. விழுப்புரம் மாவட்டம், ஆதி திருவரங்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆதி திருவரங்க பெருமாள் கோவில் களஞ்சியம் பற்றிய வரலாற்றைத்தான் இங்கு பார்க்க போகிறோம்.

பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள பெருமாள்கோவிலின் ராஜகோபுரத்திற்கு அருகிலே அமைந்துள்ளது இந்தக் களஞ்சியம். இதன் வரலாற்றை கோவில் மண்டபத்தில் அமர்ந்தவாறு சொன்னார், அந்தக் கிராமத்தின் 91 வயதானவரான ஜெயராமன், "வட ஆற்காடு, தென் ஆற்காடு என மொத்தம் 12 காடுகள் இந்த பகுதியில் ஆதிகாலத்தில் இருந்தது. இதில் ஆதி திருவரங்கம் தென் ஆற்காடு முடியும் இடத்திலும், வட ஆற்காடு துவங்கும் இடத்திலும் இருக்கிறது. 'காடு' என்று சொல்லப்பட்ட ஊர்களை இப்போது நாடு என்று சொல்கின்றனர்.

இதில், 'நடுநாடு’ என்பது இந்த பகுதி. இந்த நாட்டை செழிப்பாக வைத்திருந்தது வட பெண்ணையாறுதான் (கோவிலின் வடக்கே பெண்ணையாறு செல்வதால், இதனை வட பெண்ணையாறு என்கிறார்). திருக்கோவிலூரில் இருந்து ஆதி திருவரங்கம் வரையில் கோவிலுக்கு சொந்தமாக ஆதிகாலத்தில் 400 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தது. இது காலப்போக்கில் குறைந்து 100 ஏக்கராக சுருங்கிவிட்டது.

மன்னர்கள் காலத்தில் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட மானிய நிலங்களில் விவசாயம் செய்து, அதில் கிடைக்கும் விளைச்சலில் 'ஆறில் ஒரு பங்கு’ தானியத்தைக் கோவிலுக்கு வரியாக கொடுக்க வேண்டும். அப்படி கிடைக்கும் தானியங்களை சேமித்து வைப்பதற்காக மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான் இந்த களஞ்சியம்.

வரி மூலமாக கிடைக்கும் நெல், வரகு, கேழ்வரகு, கம்பு மாதிரியான தானியங்களை கனத்தம் கட்டி (களஞ்சியத்தின் சேமிக்கும் பகுதியில் தடுப்பு ஏற்படுத்துவது) வைத்திருந்தனர். களஞ்சியத்தினை மூன்று அறைகளாக பிரித்து அமைத்திருக்கின்றனர். இந்த களஞ்சியத்தில் சேமிக்கும் தானியத்தைக் கொண்டு கோவில்களில் வேலை செய்பவர்களுக்கு தானியங்களை சம்பளமாக கொடுத்துள்ளனர்.

எனக்கு விபரம் தெரிந்த பிறகு களஞ்சியத்தில் எந்தவிதமான தானியங்களையும் சேமித்து வைக்கவில்லை. என்னோட தாத்தா காலத்தில் தானியங்களை இந்த களஞ்சியத்தில் சேமித்து வைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த களஞ்சியம் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்கின்றனர். கோவில் மூலஸ்தானம் இருக்கும் பகுதிகளை தவிர மற்றப்பகுதிகள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாக சொல்கின்றனர்.

இந்தக் கோவிலை வளர்த்துக்கட்டும் அளவுக்கு அந்தக் காலத்தில் நடுநாடு வளமாக இருந்திருக்கிறது. எங்கள் நாட்டின் விளைச்சலை சொல்லும் விதமாக இந்தக் களஞ்சியம் நிற்கிறது. இதில் சுமார் 5000 களம் (ஒரு களம் 12 மரக்கால்) தானியங்களை சேமித்து வைக்கலாம் எனத் தாத்தா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது, களஞ்சியத்தில் சேமிக்கும் அளவுக்கு தானியங்கள் இல்லாததாலும், சரியான பராமரிப்பு இல்லாததாலும் களஞ்சியம் சிதைந்துக்கொண்டே வருகிறது. பாரம்பரிய விவசாயத்தோட அருமையை சொல்லும் இந்த களஞ்சியத்தை பாதுகாக்க அரசுகள் நடவடிக்கை எடுத்தா பின்னாடி வர்ற சந்ததிகளுக்கு ரொம்ப பிரயோஜனமா இருக்கும்” என்று கோரிக்கை வைத்தார்.

- காசி.வேம்பையன்

படங்கள்: கா.முரளி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ