Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பத்துமலை முருகன் கோயிலில் தைப்பூச தரிசனம்!

தோ.. இந்த தைப்பூச திருநாளில் பத்துமலை முருகனின் தரிசனம் நமக்கெல்லாம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ் கடவுள் முருகன் பெரும்பாலும் மலைகளிலேயே குடி கொண்டிருக்கிறார். அதில் அறுபடை வீடுகள் சிறப்பானது. அதுபோலவே மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயில் உலகப் பிரசித்திப் பெற்றது. அந்தக் கோயிலைப் போலவே திருச்சி - துறையூரிலும் பத்துமலை முருகனாய் அழகன் காட்சி தந்துக் கொண்டிருக்கிறான்.

கூலிப்பட்டி முருகன் கோவில் திருச்சி நகரிலிருந்து துறையூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது அருள்மிகு கோலோச்சும் முருகன் திருக்கோவில். ஒரு சிறிய மலையின் மீது அமைந்திருக்கும் துறையூர் முருகன் கோவில் எண்ணற்ற சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக இருக்கிறது. இந்த கோவில் 600 வருடங்களுக்கு முன்பு சுயம்பாக உருவானதாம். பத்து வருடங்களுக்கு முன் வலம்புரி விநாயகர், ஐயப்பன், சனிஸ்வரர் போன்ற பரிவார தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாட்டில் உள்ளது.

முருக பெருமான் ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன் எழுந்தருளியுளார். இரண்டு பக்கமும் சூரியனும் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி உள்ளனர். சக்தி சூரியன் என்ற பெயரில் சூரியனும், பக்தி சண்டிகேஸ்வர் என்ற பெயரில் சண்டிகேஸ்வரரும் தரிசனம் தருகின்றனர். கருவறையை சுற்றிலும் முருகனின் அறுபடை தளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வலம்புரி விநாயகர், சுவாமி ஐயப்பன், நவகிரகம், நாகதேவதை, பரமேஸ்வரன்-பரமேஸ்வரியை தரிசிக்கலாம். சனி பகவான் கையில் ருத்திராட்சம் ஏந்தி சாந்த ஸ்வருபமாக காட்சி தருகிறார்.

தைப்பூசம், பங்குனி உத்திரம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி-பரமசிவன் மைந்தன் கந்த பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்தன்று இங்கு ஆறுகால பூஜை மற்றும் விஷேச வழிபாடுகள் நடைபெறும். சைவ கடவுளான முருக பெருமானுக்கு சிறப்பு விரத தினமாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. அன்று கோவிலின் அருகே உள்ள மூங்கில் தெப்பகுளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து முருகனுக்கு பூஜை செய்யப்படுகிறது. அத்தினத்தில் இந்த கோவிலில் திருவிழா போல் கொண்டாடுகிறார்கள். பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். பங்குனி உத்திரத்தன்று மயில் காவடி எடுத்து வருவது விஷேசமாக இருக்கிறது. பங்குனி உத்திரத்தன்று ஊர் மக்களே தண்ணீர், மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.

கந்த சஷ்டி அன்று பாலாபிஷேகம் செய்யப்படும் பாலில் கற்கண்டு, குங்கும பூ சேர்த்து காய்ச்சி கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கபடுகிறது. சூரசம்கார விழாவில் முருகபெருமான் பராசக்தி அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது அப்பொழுது மூலவர் முருக பெருமானுக்கு வியர்வை துளிகள் உண்டாகும் என்பது இந்த கோவிலின் விஷேசமாம்.

மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலை போல இந்த கோவிலில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பீடத்துடன் கூடிய 52 அடி உயரமுள்ள முருகன் சிலை வடிவமைத்து உள்ளனர். இச்சிலைக்கு கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த சிலை மலை மேல் அமைக்கப்பட்டதால் 32 அடி உயரத்தில் சிலையும், 22 அடி உயரத்தில் பீடமும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இங்கு உள்ள அறுபடையப்பன் குழுவினர் முருக பெருமான் மேல் அதீத பக்தி கொண்டு உள்ளனர். அவர்கள் ஒரு முறை மலேசியா சுற்றுலா சென்று வந்த பொழுது அங்கே இருந்த முருகன் சிலையினால் கவர பட்டனர். அதேபோல் நம்மூரிலும் ஒரு சிலை அமைக்க வேண்டும் என முடிவு எடுத்து ஆறுபடையப்பன் சிலை அமைப்பு குழு சார்பில், இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெற்று, துறையூர் தனபால் ஸ்தபதி மூலம், 23 அடி உயர பீடம் அமைத்து, அதில், 32 அடி உயர மலேசிய பத்துமலை முருகன் போன்ற வண்ண சிலை அமைக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு ஜுன் மாதம் பூஜை செய்து பணிகளை துவங்கி, கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் முடிக்கப்பட்டு உள்ளது.

தைப்பூச திருநாளில் முருகனை வேண்டுவோம்... எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.

க.கவின் பிரியதர்ஷினி
(மாணவப் பத்திரிகையாளர்)

படங்கள்: தே.தீட்ஷீத்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ