Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்னைக்கு நெனைச்சா, நாளைக்கு பெருமாளைப் பாக்கலாம்!

'நாம நெனைச்சா மட்டும் பத்தாது. பெருமாளைப் பாக்கணும்னா பெருமாள் நெனைச்சாதான் பாக்கமுடியும்' என்று சொல்லிக்கொண்டிருந்தார் பக்கத்து வீட்டுக்காரர். அதற்கு, மேல் வீட்டுக்காரர், 'அதெல்லாம் அப்போ... இப்போ எப்ப வேணும்னாலும் பெருமாளை வந்து பாக்கலாம். இன்னைக்கு நீங்க நெனைச்சா, நாளைக்கு பெருமாளைப் பாக்கலாம்' என்று விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தார்.

நமக்கும் இந்தத் தகவல் ஆச்சர்யம் தரவே அதுபற்றி  விசாரித்தபோது கிடைத்த மகிழ்ச்சியான தகவல்கள் இங்கே...

திருப்பதியை அடுத்த திருமலையில் உள்ள வெங்கடேச பெருமாளை தினமும் சுமார் 50 ஆயிரம் பேர்  தரிசனம் செய்கிறார்கள். ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடக மாநில பக்தர்கள் மட்டுமின்றி, வட இந்தியாவிலிருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே போகிறது. சனி, ஞாயிறு அரசு விடுமுறை நாட்களில் ஒரு லட்சம் முதல் ஒண்ணரை லட்சம் பக்தர்கள் வருகின்றனர். இதனால், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் நீண்ட க்யூ வரிசைகளில் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வந்தது.

இதையடுத்து, ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடு, 'பக்தர்கள் இரண்டு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கக் கூடாது. அவர்களது தரிசன முறையை மாற்றி அமையுங்கள்' என்று கேட்டுக்கொண்டார். இதைத் தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி டி.சாம்பசிவ ராவ், பக்தர்களின் தரிசன முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

இதன்படி நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் சிறப்பு தரிசன 300 ரூபாய் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை 5,000 இருந்து 20,000 டிக்கெட்டுகளாக உயர்த்தினார். இதனால் பக்தர்கள் இரண்டு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. போதாக்குறைக்கு  டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும் புக் செய்து கொள்ளும் வசதியையும் செய்து கொடுத்து விட்டார்.

காலை 10 மணி, 11 மணி, 12 மணி, பிற்பகல் 1 மணி, 2 மணி, 3 மணி, 4 மணி என பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ற நேரத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த 20 ஆயிரம் டிக்கெட்டுகளையும் 28 நாட்கள், 15 நாட்கள், 7 நாட்கள், 3 நாட்கள் என தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக விநியோகிப்பதால் டிக்கெட்டுகளை பக்தர்கள் எளிதாகப் பெற்றுக்கொள்ள முடிகிறது. 300 ரூபாய் தரிசனம் பகல் முழுவதும் நடைபெறுகிறது. இந்த ஏற்பாட்டினால் திருமலையில் நடைபெறும் 'தள்ளுமுள்ளு' பெரிய அளவில் குறைந்துள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அதே வேளையில் 50 ரூபாய் கட்டணம் செலுத்தி சுதர்சன டிக்கெட் பெற்றவர்கள் மாலை 5 மணிக்கு மேல் தான் சுவாமியை தரிசிக்க முடியும் என்றும் அறிவித்துவிட்டார்.

சுதர்சன டிக்கெட்டுகளைப் பெற்றவர்கள் முன்பு போல் காலை, மதியம், மாலை வேளைகளில் தரிசிக்க முடியவில்லையே என ஏகத்துக்கும் வருத்தம் தெரிவிக்கின்றனர். போதாக்குறைக்கு திருமலையிலுள்ள லெப்பாக்சி அருங்காட்சியகத்திலிருந்து ரொம்பவும் சுற்றிக்கொண்டு போய் சுவாமி தரிசனம் செய்ய வேண்டி இருக்கிறது. காலங்காலமாக இருந்த சுதர்சன டிக்கெட்டுகள் முறையை ஏன் மாற்றினார்கள்? என பலரும் வருத்தம் தெரிவிக்கின்றனர். சுதர்சன டிக்கெட்டுகளை பலரும் 60 நாட்களுக்கு முன்பே புக் செய்து இருந்தாலும், பயணம் போக முடியாவிட்டால் கூட கவலைப்பட மாட்டார்கள். எனவே, மீண்டும் 50 ரூபாய் தரிசனத்தை முன்பு போலவே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அடிக்கடி திருமலைக்கு வரும் பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கூடுதல் லட்டு

மேலும், திருப்பதி என்றாலே லட்டு பிரசாதம் ரொம்பவே பிரசித்தம். போலியான தரகர்களிடமிருந்து லட்டு வாங்க சிரமப்படுவதைத் தவிர்க்கவும், பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலும், ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதன்படி, பக்தர்கள் அனைவருக்கும் தலா 2 லட்டுகள் கூடுதலாக வழங்கப்படுகிறது. கூடுதலாக வாங்கும் இந்த லட்டு ஒன்றின் விலை 25 ரூபாய் என்பது மற்றுமொரு இனிப்பான செய்தி.

பார்த்து ரசிக்க...

திருமலை, திருப்பதி செல்லும் பக்தர்கள், பிரதானக் கோயிலான திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல், வராகஸ்வாமி கோயில், வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், பத்மாவதி கோயில், கோவிந்தராஜா கோயில், சீனிவாசமங்காபுரம் போன்ற ஏனைய முக்கியமான கோயில்களுக்கும் சென்று வருவது நல்லது.

ஆன்மிக அம்சங்களை தரிசித்தபின், பயணிகள் இங்குள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவுக்கு செல்லலாம். இங்கு பலவகை விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. 'ஷிலாத்தோரணம்' என்றழைக்கப்படும் பாறைத்தோட்டமும் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும்.

திருப்பதியில் சர்க்கரை பொங்கல் மற்றும் திருப்பதி லட்டு போன்றவற்றை சுவைக்காமல் திரும்பக்கூடாது என்பது பயணிகளும், பக்தர்களும் நன்கு அறிந்ததே. ஆந்திர மற்றும் தமிழக உணவுமுறைகளின் கதம்பமான அம்சங்கள் திருப்பதி உணவு வகைகளில் மணப்பதை பயணிகள் சுவைத்து தெரிந்துகொள்ளலாம்.

நீங்களும் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, மற்ற நாட்களில் உங்கள் பயணத்திட்டங்களை அமைத்துக்கொண்டு வெங்கடேசப் பெருமாளின் அருள் பெற்று வாருங்கள்.

-எஸ்.கதிரேசன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close