Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தஞ்சை பெரியகோவில் தேரோட்டம்: பக்தர்களால் திணறியது தஞ்சை!

தஞ்சை:புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலின் தேரோட்டம் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டத்தால் திணறியது தஞ்சை மாநகரம்.

மாமன்னன் ராஜராஜ சோழனால் கி.பி 1010–ம் ஆண்டு கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோவிலில் திருவிழாக்கள் 100 ஆண்டுகள் முன்வரை வெகு சிறப்பாக நடந்துள்ளது.

சோழர் ஆட்சிக்குப் பின்னர் அரியணைக்கு வந்த
நாயக்கர், மராட்டிய மன்னர்கள் சித்திரை திருவிழாவாக 18 நாட்கள் நடத்தினர். இந்த திருவிழாவின் 15–ம் நாளன்று தேரோட்டம் விமர்சையாக நடக்கும்.

தேர் சிதிலமடைந்ததால் கடந்த 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு தஞ்சை பெரியகோவிலுக்கு புதிய தேர் செய்ய ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்ததையடுத்து தஞ்சை பெரிய கோவிலில் 100 ஆண்டுகளுக் குப் பிறகு தேரோட்டம் இன்று நடந்தது.

37 லட்சம் மதிப்பில் 16½ அடி உயரத்துடன் 3 அடுக்குகள் கொண்ட இந்த தேரின் மொத்த எடை சுமார் 40 டன் ஆகும்.

தேரோட்டத்தையொட்டி காலை 5.30 மணிக்கு பெரியகோவிலில் இருந்து அஸ்திர தேவர், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், கமலாம்பாள் சமேத தியாகராஜர், நீலோத்ராம்பாள், சண்டீகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைந்தனர். அங்கு கமலாம்பாள் சமேத தியாகராஜர் சுவாமியை தேரில் வைத்தனர். தியாகராஜருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது. சுரேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஆகம பூஜைகளை செய்தனர்.

அதிகாலை 6.25 மணிக்கு தேர் நிலையில் இருந்து புறப்பட்டது. அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ், மாவட்ட கலெக்டர் சுப்பையன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலரும், மூத்த இளவரசருமான பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்டத் தின்போது மங்கள வாத்தியங்கள், கரகாட்டம், தப்பாட்டம், செண்டை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

தேர் மேலவீதி, வடக்கு வீதி வழியாக வந்தது. தேரோட்டத்தையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தர்மராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தஞ்சை பெரிய கோவில் தேரோட்டத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் இன்று உள்ளுர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

தேரோட்டம் நடைபெறும் 4 ராஜவீதிகளும் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்தி மற்றும் படங்கள்:  கே. குணசீலன்
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ