Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி ராசிக்காரர்களுக்கு கபாலி யோகம் பட்டையைக் கிளப்புமா? மோடி ராசிக்காரர்களுக்கு ஃபாரின் டூர் யோகம் இருக்கா?


ரஜினியின் மகர ராசிக்காரர்களே...

இந்த துர்முகி தமிழ் புத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்கும், கபாலீஸ்வரர் அருளால் அதிர்ஷ்டம் அடிக்குமா?  எனப் பார்ப்போம்...

"மனதில் சரியெனப்பட்டதை தயங்காமல் செய்பவரே...! செவ்வாய், உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறந்துள்ளதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் கம்பீரம் கூடும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். கமிஷன் மூலம் பணம் வரும். 

சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சின்னச் சின்ன வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.  
உங்கள் ராசிக்கு 6-ல் சந்திரன் இருக்கும்போது, புது வருடம் பிறந்துள்ளதால், சில சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். பயணங்களும், செலவுகளும் துரத்தும். சிலருக்கு வேற்று மாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.  வருடம் முழுவதும் ராகு 8-லும், கேது 2-லும் நீடிப்பதால், காலம் அறிந்து செயல்படுவது அவசியம். செலவுகள் தொடரும். சிலருக்கு அயல்நாடு சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். கணவன் - மனைவிக்கு இடையில், சிலர் பிரச்னை ஏற்படுத்தப் பார்ப்பார்கள். சிறு சிறு விபத்துக்கள் ஏற்படக்கூடும். வழக்கு விவகாரங்களில் எச்சரிக்கையுடன் செயல்படவும். சிலருக்கு புண்ணிய தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும்.

வருடம் முழுவதும் உங்கள் ராசிநாதன் சனிபகவான் லாப வீட்டில் தொடர்வதால், அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் உயரும். ஓரளவு சேமிப்புக்கும் இடமுண்டு. பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டில் திருமணம், வளைகாப்பு, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ரசனைக்கு ஏற்ப புது வீடு வாங்குவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி அமையும். மனைவி வழியில் மரியாதை கூடும். சிலருக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.


01.8.16 வரை குருபகவான் 8-ல் மறைந்திருப்பதால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சேமிக்க இயலவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். ஆனால், 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நுழைவதால், வீண் குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். திடீர் பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சச்சரவுகள் குறையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால், அடுக்கடுக்கான வேலைகளால் அவதிப்படுவீர்கள். உங்களுடைய உழைப்புக்கு மற்றவர்கள் உரிமை கொண்டாடுவார்கள். .

வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சந்தை நிலவரத்தை அவ்வப்போது கவனித்து அதற்கேற்ப செயல்படுங்கள். வேலையாட்களின் குறை, நிறைகளை பொறுமையாக சுட்டிக் காட்டி திருத்துங்கள். விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மூலிகை, கட்டட உதிரி பாகங்கள், துணி, புரோக்கரேஜ் வகைகளால் லாபம் அடைவீர்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும்.  

உத்தியோகத்தில், உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள்.     

மாணவ-மாணவிகளுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. கலைத் துறையினரின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

மொத்தத்தில் இந்த துர்முகி வருடம், மாறுபட்ட அணுகுமுறையால்  உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.

பரிகாரம்

அஷ்டமி திதி அல்லது திங்கட்கிழமைகளில், சமயபுரம் சென்று, மாரியம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்; இன்னல்கள் குறையும்.

பஞ்ச் :

செல்வாக்கு கூடும் ( எப்ப குறைஞ்சுது...)

அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் ( பிடிக்கிறதும் பிடிக்காததும் உங்க இஷ்டம்...)

குழப்பங்கள், தடுமாற்றங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். (இது குழப்பமா இருக்கே...)

திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். ( இன்னுமா...?)

 

மோடியின் விருச்சிக ராசிக்காரர்களே...

இந்த துர்முகி தமிழ் புத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்கும், வெளியூர் செல்லும் யோகம் உள்ளதா, உள்ளூரில் செல்வாக்கு கூடுமா குறையுமா? எனப் பார்ப்போம்...

"சவால்களை ஏற்று சாதிப்பவர் நீங்கள்! உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே ஆட்சி பெற்று இருக்கும்போது புத்தாண்டு பிறந்ததால், இடையூறுகளைக் கடந்து சாதிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். ஆனால், சனியின் சேர்க்கை இருப்பதால், அலர்ஜி, ரத்தசோகை, முன்கோபம் வந்து செல்லும்.

உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வருடம் பிறக்கும்போது சூரியனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால், எதிர்ப்புகள் இல்லாமல் போகும். இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசாங்க காரியங்கள் சாதகமாகும்.

வருடம் முழுவதும் ஜன்மச் சனி தொடர்வதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையில் சிலர் குழப்பம் ஏற்படுத்தப் பார்ப்பார்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பது, தேவையற்ற சங்கடங்களைக் குறைக்கும்.

01.8.16 வரை குரு 10-ல் தொடர்வதால், வேலைச் சுமையால் அசதி, சோர்வு வந்து நீங்கும். விலை உயர்ந்த நகை, பணத்தை இழக்க நேரிடும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குருபகவான் லாப வீட்டில் அமர்வதால், தடைகள் நீங்கும். வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவீர்கள். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நிறைவேறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். மூத்த சகோதர வகையில் ஆதரவு பெருகும். ஆனால், 17.1.17 முதல் 09.3.17 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் உங்களுடைய ராசிக்கு 12-ல் மறைவதால், திடீர் பயணங்களும் சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.

வருடம் முழுவதும் ராகு 10-ல் தொடர்வதால், கடினமான காரியங்களையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். நிர்வாகத் திறன் கூடும். குடும்பத்தில் அமைதி திரும்பும். சில அவமானங்கள் ஏற்படக்கூடும். திறமையும் உழைப்பும் இருந்தும் உரிய பலனைப் பெற முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.
கேது 4-ம் வீட்டிலேயே தொடர்வதால், அவ்வப்போது தன்னம்பிக்கை குறையும். தாயாரின் உடல்நலம் பாதிக்கக் கூடும். கடன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். மின்சார சாதனங்கள் பழுதாகும். அரசு காரியங்கள் தாமதமாகும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.

வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொண்டு கூடுதல் லாபம் அடைவீர்கள். பெரிய முதலீடுகள் இப்போதைக்கு வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராடவேண்டி இருக்கும். உணவு, இரும்பு, கன்சல்டன்சி, ரியல் எஸ்டேட் மற்றும் மர வகைகளால் ஆதாயம் உண்டு. சித்திரை, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் திடீர் லாபம் உண்டு.  

02.8.16 முதல் உத்தியோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை குறையும். என்றாலும் ராகு 10-ல் நிற்பதால், மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். சில நேரங்களில் வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணம் ஏற்படும். அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டாம். சித்திரை, ஆவணி, புரட்டாசி, தை மாதங்களில், தள்ளிப்போன பதவி உயர்வும் சம்பள உயர்வும் உங்களைத் தேடி வரும்.

மாணவ-மாணவிகளுக்கு, படிப்பில் கூடுதல் உழைப்பு தேவை. விளையாட்டு, பொது அறிவுப் போட்டிகளில் பாராட்டும் பரிசும் கிடைக்கும். கலைத்துறையினரின் தடைப்பட்டு கிடந்த படைப்புகள், இப்போது ரிலீஸாகும். அதேநேரம், வீண் பழிகளும் விமர்சனங்களும் அதிகரிக்கும். அதற்காக வருந்த வேண்டாம்.
மொத்தத்தில், இந்தப் புத்தாண்டு ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு வேலைச் சுமையையும், பரபரப்பையும் தரும் என்றாலும், உங்களுக்கென்று தனி அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்

சதுர்த்தசி அன்று ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று, அங்கு அருளும் ஸ்ரீ மகுடேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடுங்கள். விக்கினங்கள் நீங்கும்.

பஞ்ச் :

சவால்களை ஏற்று சாதிப்பவர் நீங்கள்! (ஆமா..ஆமா..ஆமா)
இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். ( தெரியுமே பாஸ்...)
திடீர் பயணங்கள் அதிகரிக்கும். (வழக்கம் போல)
இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவீர்கள். (அட...)
வீண் பழிகளும் விமர்சனங்களும் அதிகரிக்கும். (சமாளிப்போம் தலைவா...)

வெயிட் ப்ளீஸ்...

விஜயகாந்த் ராசிக்காரர்களுக்கு குழப்பம் நீங்கி தெளிவு பிறக்குமா?

சோனியா ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு திரும்புமா?

நாளைக்குப் பார்க்கலாம்...

பின்குறிப்பு: ராசி பலனை கணித்தவர் ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன். இதில் இடம்பெற்ற தலைப்பு, முன்னுரை, பின்னுரை, பஞ்ச் ஆகியவற்றுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close