Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சமணர் ஆலயம் தீபங்குடி தீபநாயக ஜினாலயம்!


திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில்,  13வது  கிலோமீட்டரில் அமைந்துள்ளது தீபங்குடி தீபநாயக சுவாமி ஆலயம். இது சமணர்களின் மிக தொன்மையான வழிபாட்டு தலம்.

கி.பி. 900 - 1000 ஆண்டுகளில் இது கட்டப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. சமணர்களின் முதன்மை கடவுளான ரிஷப தேவர்,  இங்கு மூலவராக வீற்றிருக்கிறார். தீபநாயக சுவாமி என்றும் இவரை அழைக்கிறார்கள். சமணர்களின் 24 தீர்த்தங்கரர்களில் ரிஷப தேவர்தான் முதலாம் தீர்த்தங்கரர். கடைசி தீர்த்தங்கரர் மகாவீரர். ரிஷப தீர்த்தங்கரரை ஆதி பகவன் என்றும் சமணர்கள் அழைக்கிறார்கள்.

ராஜராஜசோழனின் சகோதரி குந்தவை நாச்சியார் வணங்கி மானியம் வழங்கியதாக கல்வெட்டு குறிப்புகளில் உள்ளது. கலிங்கத்துப்பரணி பாடிய ஜெயங்கொண்டார் இவ்வூரில் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. தற்பொழுது தீபங்குடியில் 9 சமணர் குடும்பங்கள் வசிக்கின்றன.

இக்கோவிலின் அமைப்பு, வழிபாட்டு முறை, சிறப்புகள் குறித்து இக்கோவில் அறங்காவலர் ஶ்ரீதல பிரசாத்தின் மகன் யசோதரன் விவரிக்கிறார்....


'' இக்கோவிலில் ராஜகோபுரம், கர்ப்பகிரகம், விமானம், அர்த்தமண்டபம், முக மண்டபம், மகாமண்டபம், கொடிமரம் ஆகியவை உள்ளன. கர்ப்பகிரகத்தில் தீபநாயகர் கற்சிலை உள்ளது. எருது வாகனத்தில் பத்மாசனத்தில் தியான நிலையில் தீப நாயக சுவாமி அமர்ந்திருக்கிறார். கர்ப்பக்கிரகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சித் கல் என சொல்லப்படும் ஒரு வகையான செங்கல் பாணியிலான கற்களால் கட்டப்பட்டது. கோவிலின் மற்ற பகுதிகள் பிற்காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கொடிமரத்தை சுற்றிலும் 24 தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. தீபநாயக சுவாமி கர்ப்பகிரகத்தில் எப்பொழுதும் தீபம் எரிந்து கொண்டிருக்கும். சமணர்களில் திகம்பரர், சேதாம்பரர் என இருபிரிவினர் இருக்கிறோம். இக்கோவிலை பொறுத்தவரை திகம்பர வழிப்பாட்டு முறையை கடைபிடிக்கிறோம். மூலவரான ரிஷப தீர்த்தங்கரருக்கு ஆடை, அணிகலன்கள், பூ, பூமாலைகள் அணிவிப்பதில்லை. சேதாம்பரர்கள் வழிபாட்டு கோவில்களில் கடவுளுக்கு அணிகலன்கள் அணிவிப்பார்கள்.இக்கோவிலில் மூலவருக்கு தினமும் காலை பாலாபிஷேகமும், சந்தன அபிஷேகமும் நடைபெறும். மாலையில் அடுக்கு தீப ஆராதனை செய்வோம்.

அட்சய திருதியை அன்று கரும்புச்சாறு, சர்க்கரை பொங்கல் வைத்து பூஜைகள் செய்வோம். ரிஷப தீர்த்தரின் உற்சவ சாமி வீதி உலா நடைப்பெறும். யுகாதி அன்று நவதானியங்கள் வைத்து பூஜை செய்வோம். ரிஷப தீர்த்தங்கரர்தான் இந்த உலகிற்கு முதன்முதலாக விவசாயம் சொல்லிக் கொடுத்தவர் என நாங்கள் நம்புவதால் இங்கு பொங்கல் விழா சிறப்பாக நடைபெறும். மூலவருக்கு பொங்கல் வைத்து வழிபடுவோம்.

தீபாவளி அன்று பகவான் மோட்சம் அடைந்த நாளாக புத்தாடை  அணிந்து கொண்டாடுவோம். கார்த்திகை அன்று இக்கோவில் முழுவதும் தீபம் ஏற்றுவோம். டிசம்பர் மாதம், கடைசி ஞாயிற்றுக்கிழமை நல்ஞான தீப திருவிழா நடைப்பெறும். 1008 விளக்குகள் ஏற்றுவோம். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சமணர்கள் குடும்பத்தோடு இங்கு வந்து வழிபடுவார்கள். தினமும் மூலவருக்கு பஞ்சமந்திரம் பாடுவோம்.

நமோ அரகன் தானம்,
நமோ சித்தானம்,
நமோ ஆயிரியானம்,
நமோ உவஜயானம்,
நமோ லோமய சவ்வ சாகுனம்
என மந்திரம் ஓதுவோம்.


மகாவீர் ஜெயந்தி அன்று இங்குள்ள வர்தமானன் மகாவீரர் தீர்த்தங்கரரின் ஐம்பொன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்வோம்'' என்கிறார் யசோதரன்.

தீர்த்தங்கரர் என்றால் ?

தீர்த்தங்கரர் என்றால் புலன்களையும் கர்மங்களையும் வென்றவர்கள் என்று பொருள். மனிதர்கள் முக்தி அடைவதற்கான வழியை காட்டியவர்கள் தீர்த்தங்கரர்கள். கடவுள் நிலை ஒன்றே... ஆனால் கடவுளர்கள் பலர். மனிதர்கள் அனைவருமே கடவுள் நிலையை அடைய தகுதி உடையவர்களே என்கிறது சமணம்.

இதற்கு நல் ஒழுக்கம், நல் ஞானம், நற்காட்சி ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என ரிஷப தீர்த்தங்கரர் வலியுறுத்துவதாக தெரிவிக்கிறார் மன்னார்குடியைச் சேர்ந்த சமணர் பத்மராஜ் ராமசாமி.

-கு. ராமகிருஷ்ணன்

படங்கள்:  க. சதீஸ்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close