Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த புதுச்சேரி தேவாலயங்களுக்கு பின்னால் இப்படியும் வரலாறு இருக்கிறது!

பிரான்சின் காலனி ஆதிக்க நாடுகளில் ஒன்றாக இருந்தது புதுச்சேரி. அவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறும்போது பிரெஞ்சுக் கலாசாரத்தை மட்டும் அல்லாமல் கலைநயம் மிக்க கட்டடங்களையும் விட்டுச் சென்றனர். அவர்களின் கட்டடக் கலையின் சிறப்புகளை இன்றளவும் சொல்லிக்கொண்டிருக்கின்றன கிறிஸ்தவ தேவாலயங்கள்.
 
ஜென்மராக்கினி மாதா பேராலயம் (சம்பா கோயில்)

பல்வேறு தாக்குதல்களைத் தாண்டி இன்றும் கம்பீரமாக நிற்கும் சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்தத் தேவாலயம், சம்பா கோயில் என அழைக்கப்படுகிறது. பிரெஞ்சு மொழியில் சான் பால் (san paul) கோவில் என அழைக்கப்பட்டு, சம்பா கோவில் என மருவியது. கி.பி 1689-ம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்த சேசு சபை குருக்கள், கடற்கரைக்கு மேற்கே ஓர் இடத்தை வாங்கினார். அதில், பிரான்ஸ் மன்னர் 14-ம் லூயி நிதியுதவியுடன் 1692-ல் இந்தத் தேவாலயத்தை அமைத்தார். அப்போது, புதுச்சேரியின் மீது படையெடுத்து வந்த டச்சுக்காரர்கள், இந்தத் தேவாலயத்தைத் தகர்த்தனர். 1699-ல் அதே இடத்தில் இரண்டாவது முறையாக கட்டப்பட்ட தேவாலயம், மீண்டும் போரில் தரை மட்டமானது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு 1728-ல் ஆரம்பித்து 1736-ம் ஆண்டு வரை மீண்டும் கட்டி முடித்தனர். ஆனால், மூன்றாவது முறையாகக் கட்டப்பட்ட தேவாலயத்தையும் 1761-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் போர் தொடுத்து தகர்த்தனர். பிறகு, தற்காலிகமாக குடிசையில் இயங்கி வந்தது. மீண்டும் 1777-ல் கட்டத்தொடங்கி 1791-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ராணுவ மருத்துவமனை தேவாலயமான 'வால் தி கிராஸ்' வடிவத்திலேயே அமைக்கப்பட்டு இன்றும் அழகாக காட்சி அளிக்கிறது.
 

தூய இருதய ஆண்டவர் பேராலயம்

 

புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே சுப்பையா சாலையில் அமைந்திருக்கிறது தூய இருதய ஆண்டவர் பேராலயம். 1895-ம் இந்த ஆலயத்தைக் கட்ட முடிவெடுக்கப்பட்டது. 1902-ம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டு 1907-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் நூற்றாண்டு விழா,  2008-2009-ம் ஆண்டு நடந்ததும், பசிலிக்காவாக (பேராலயம்) உயர்த்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டது. அதன்படி 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பசிலிக்காவாக உயர்த்தப்பட்டது. புதுவை - கடலூர் மறைமாவட்டத்தில் இதுதான் முதல் பசிலிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அளவில் இதையும் சேர்த்து ஆறு பசிலிக்கா தேவாலயங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள 20 பசிலிக்காவில் இதுவும் ஒன்று என்பது இதன் தனி சிறப்பு.
 
புனித மேரி தேவாலயம் (கப்ஸ் கோயில்)

 


 

புதுச்சேரி கடற்கரையை ஒட்டியபடி அமைந்திருக்கும் இந்தத் தேவாலயமும் பல தாக்குதல்களை சந்தித்திருக்கிறது. பிரெஞ்சு, ரோமன் மற்றும் கிரேக்க கட்டடக் கலைகளின் கலவையில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த ஆலயம். 1674-ம் ஆண்டு புதுச்சேரி வந்த கபுசின்ஸ் சபையைச் சேர்ந்த பிரெஞ்சு பாதிரியார்கள் இந்த இடத்தில் சிறிய அளவிலான பிரார்த்தனைக் கூடத்தை அமைத்தனர். பின்னர், 1739 - 1758-ம் ஆண்டு பெரிய அளவில் கபுசின்ஸ் தேவாலயம் கட்டப்பட்டது. ஆனால், 1761-ம் ஆண்டு நடந்த போரில் இந்த ஆலயம் சூறையாடப்பட்டு, புதுச்சேரியும் ஆங்கிலேயர்களின் வசம் சென்றது. பின்னர், புதுச்சேரி மீண்டும் பிரான்ஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் 1765-1770-ம் ஆண்டு மீண்டும் ஆலயத்தைக் கட்டிமுடித்தனர். அந்த நேரத்தில் பிரான்ஸ் நாட்டில் புரட்சி வெடித்ததால், ஆண்டுக் கணக்கில் பிரார்த்தனை நடத்த முடியாமல்போனது. அதனால், கட்டி முடிக்கப்பட்ட ஆலயத்தை ஆதரவற்றோர் இல்லமாக மாற்றிவிட்டு 1851-ம் ஆண்டு புதிய ஆலயத்தை கட்ட ஆரம்பித்தனர். கடற்கரையை ஒட்டி இது அமைகிறது என்பதால், உப்புக் காற்றைத் தாங்கி நிற்கும் வகையில் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை சுண்ணாம்புக் கலவையில் சேர்த்து சுவர்களை அமைத்தனர். பிரான்சில் உள்ள புனித மேரி ஆலயத்தின் முகப்பில் உள்ளதைப் போன்ற இரண்டு ஸ்தூபிகள் இந்த ஆலயத்தின் முன்பும் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் கபுசின்ஸ் சபையினரால் தொடங்கப்பட்டது என்பதால், கபுபின்ஸ் கோயில் என்றழைக்கப்பட்டு நாளடைவில் கப்ஸ் கோயில் என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது.
 

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் - அரியாங்குப்பம்

 


 

நூற்றாண்டுகளைக் கடந்து விழாக்கோலத்தில் இருக்கும் இந்தத் தேவாலயம் உள்ளடக்கியிருக்கும் வரலாறுகள் ஏராளம். 1690-ம் ஆண்டு பிரெஞ்சு அரசின் அனுமதியுடன் கத்தோலிக்க சிரியர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம்தான், புதுச்சேரியில் கட்டப்பட்ட முதல் தேவாலயம். தானப்ப முதலியார் என்பவரால் இலவசமாக அளிக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டது. மலபார் வியாபாரிகளில் முக்கியமானவரான இவர்தான் இந்தியாவிலிருந்த பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தரகராக இருந்தவர். அப்போது கட்டப்பட்ட இந்த ஆலயத்துக்கு ''உற்பவி அன்னை ஆலயம்'' என்று பெயரிடப்பட்டது. 1689-ம் ஆண்டு கத்தோலிக்க சிரியர்களால் ஏசு சபையினருக்கு இந்த ஆலயம் நிர்வாக மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தரங்கம்பாடியைத் தலைமையகமாகக்கொண்டு இயங்கிய டச்சுக்காரர்களால் பிரெஞ்சு அரசுக்கு எதிராக நடைபெற்ற போரில் இந்த ஆலயம் தரைமட்டமாக இடிக்கப்பட்டது. அதன்பிறகு 1790 வரை புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு அரசுக்கு எதிராக இருந்த டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், மொகலாயர்கள் எனப் பல்வேறு தரப்பினரால் பல முறை இந்தத் தேவாலயம் கடும் தாக்குதல்களை சந்தித்ததோடு, பலமுறை இடிக்கப்பட்டும் இருக்கிறது. மேலும் 1725-ம் ஆண்டுகளில் நிகழ்ந்த தேர் பவனி, பிரெஞ்சுப் புரட்சியின் காரணமாக ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டது. மீண்டும் 1815-ம் ஆண்டு முதல் அனைத்து சாதி மதத்தினரும் பங்கேற்க, பிரெஞ்சு அரசின் விழாவாகவே ஆலயத்தின் தேர் பவனி கொண்டாடப்பட்டது.
 

பிரான்ஸ், கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளின் கட்டடக் கலைகளின் நுட்பத்தையும், கடந்தகால வரலாறுகளையும் ஒரு சேர தாங்கி நிற்கின்றன இந்த ஆலயங்கள்.
 

- ஜெ.முருகன்
படங்கள்: அ.குரூஸ்தனம்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ