Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயகாந்த் ராசிக்காரர்களுக்கு குழப்பம் நீங்குமா? சோனியா ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு திரும்புமா?


விஜயகாந்தின் துலாம் ராசிக்காரர்களே...

இந்தப் புத்தாண்டு உங்களுக்கு குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்குமா எனப் பார்ப்போம்.

"இன்ப துன்பங்களை சமமாகக் கருதுபவர் நீங்கள்! உங்கள் ராசிக்கு 9ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறந்ததால், மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிரபலங்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். புது பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். திருமண பேச்சுவார்த்தை சாதகமாகும்.
வருட ஆரம்பத்தில் உங்களுடைய ராசியதிபதி சுக்ரன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், மகிழ்ச்சி உண்டாகும். ஆனால், சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால், வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள், கணவன், மனைவிக்கு இடையில் மனவருத்தம் வந்து நீங்கும்.

வருடம் முழுவதும் பாதச் சனி தொடர்வதால், குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவுகள் ஏற்படும்; பொறுமை அவசியம். வழக்குகள் தள்ளிப் போகும். எவருக்கும் சாட்சிக் கையெழுத்துப் போடவேண்டாம். பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். பூர்விகச் சொத்தில் கவனம் தேவை. மறதியால் விலையுயர்ந்த பொருட்களை இழக்க நேரிடும்.

குரு பகவான் 01.08.16 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருப்பதால், பிரபலங்கள் மற்றும் நல்லவர்களின் நட்பால் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பழைய நகையை மாற்றி, புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆனால், 02.08.16 முதல் 16.01.17 வரை மற்றும் 10.03.17 முதல் 13.04.17 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைவதால், வீண் விரயம், ஏமாற்றம், எதிலும் தடை தாமதங்கள் வந்து செல்லும். கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உண்டாகும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது கனவுத் தொல்லை அதிகரிக்கும். 17.01.17 முதல் 09.03.17 வரை குரு பகவான் அதிசாரத்திலும், வக்ர கதியிலும் ஜன்ம குருவாக வருவதால், உடல் நலனில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் சச்சரவுகள் வரக்கூடும்.

வருடம் முழுவதும் ராகு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திலேயே தொடர்வதால், செல்வம், செல்வாக்கு கூடும். கொடுத்த பணம் திரும்ப வரும். ஷேர் மூலமாகவும் பணவரவு உண்டு. சகோதர வகையில் ஒற்றுமை வலுப்படும். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். தள்ளிப்போன திருமண முயற்சிகள் கூடிவரும். உடல் ஆரோக்கியம் சீராகும். பிற மொழி பேசுபவர்களால் யோகம் உண்டாகும். ஆனால், கேது 5-ல் இருப்பதால், வீண் குழப்பங்கள், பிள்ளைகளால் பிரச்னைகள் தோன்றும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம்.


27.01.17 முதல் வருடம் முடியும் வரை சுக்ரன் ராசிக்கு 6-ல் மறைந்திருப்பதால், சளித் தொந்தரவு, தலைவலி, மூச்சுப் பிடிப்பு வந்து செல்லும். மின்சார சாதனங்கள் பழுதாகும். வாழ்க்கைத் துணைக்கு வயிற்று வலி, தைராய்டு பிரச்னை வந்து போகும். வியாபாரத்தில், புதிய முதலீடுகள் செய்வீர்கள். சிலர், கடையை சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கமிஷன், ஸ்பெகு லேஷன், அழகுசாதனப் பொருட்கள், கம்ப்யூட்டர் உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். ஆடி, ஆவணி, மார்கழி, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும்.

உத்தியோகத்தில், வேலை அதிகரிக்கும். ஆடி, ஆவணி, மார்கழி மாதங்களில் அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும். மாணவ-மாணவிகளுக்கு விரும்பிய கல்விப் பிரிவில், எதிர்பார்த்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மதிப்பெண் கூடும். கலைத் துறையினருக்கு பெரிய நிறுவனங்களின் வாய்ப்புகள் வரும்.


மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களுக்கு சின்னச் சின்ன ஏமாற்றங்களை தந்தாலும், சாதனைகள் படைக்கத் தூண்டுவதாக அமையும்.


பரிகாரம் : சனிக்கிழமை அன்று, காஞ்சியில் அருளும் ஸ்ரீபாண்டவதூத பெருமாளை, துளசி மாலை அணிவித்து வணங்கி வாருங்கள்; சங்கடங்கள் குறையும்.


பஞ்ச் :
*  மாறுபட்ட அணுகுமுறையால் முன்னேற்றம் காண்பீர்கள் ( இருக்கட்டும் இருக்கட்டும்...).
* செல்வம், செல்வாக்கு கூடும்.(வாக்குல சேஃப்டி முக்கியம் பாஸ்...)
* புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.(அப்படின்னா போனவங்களை விட்டுத் தள்ளுங்க...)
* வீண் குழப்பங்கள் இருக்கும் ( அட, இது இல்லாம நாம எப்புடி...)
 
சோனியாவின் மிதுன ராசிக்காரர்களே...

துர்முகி தமிழ் புத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்கும், ஆளுமையை அதிகரிக்குமா, செல்வாக்கை மீட்டுத் தருமா எனப் பார்ப்போம்....


"எதிலும் யதார்த்தத்தை விரும்புபவர் நீங்கள்! சூரியன், புதன் மற்றும் சுக்ரன் சாதகமாக இருக்கும் நேரத்தில் இந்த வருடம் பிறந்துள்ளதால், உங்களுடைய நிர்வாகத் திறமை அதிகரிக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். பணப் புழக்கம் அதிகமாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு புதிய வேலை கிடைக்கும். 


உங்கள் ராசியிலேயே வருடம் பிறந்துள்ளதால், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். தோலில் நமைச்சல், தேமல், நரம்புச் சுளுக்கு வரக்கூடும்.  

வருடம் முழுவதும் சனி ராசிக்கு 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால், புதிய திட்டங்கள் நிறைவேறும். எதிரிகளும் நண்பர்களாவார்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சொந்த ஊரில் மதிப்பு கூடும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.


செவ்வாய் 6-ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும் போது வருடம் பிறப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.  
ராகு 3-ம் வீட்டிலேயே தொடர்வதால், உங்கள் உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும். பிரச்னைகளுக்கு உரிய தீர்வைக் காண்பீர்கள். தடைப்பட்ட காரியங்கள் நல்லபடியாக முடியும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், கேது 9-ல் இருப்பதால், தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அவருடன் கருத்து வேறுபாடுகளும் ஏற்படக்கூடும். பிதுர்வழிச் சொத்தில் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.  26.10.16 முதல் 2.12.16 வரை செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் அமர்வதால், சொத்துப் பிரச்னைகள், சகோதர வகையில் மனத்தாங்கல், பழைய கடனை நினைத்த கவலைகள் வந்து செல்லும். 

14.10.16 முதல் 7.11.16 வரை சுக்ரன் 6-ல் மறைவதால், கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபங்கள், பிள்ளைகளால் செலவுகள் வந்து போகும். 


01.08.16 வரை குருபகவான் உங்களுடைய ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். 02.08.16 முதல் 16.01.17 வரை மற்றும் 10.03.17 முதல் 13.04.17 வரை குரு ராசிக்கு 4ல் அமர்வதால், உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். அவ்வப்போது மன இறுக்கம் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற நேரிடும். ஆனால் 17.01.17 முதல் 9.03.17 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 5ல் அமர்வதால், மனத் தெளிவு உண்டாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் நல்லபடி முடியும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

வியாபாரத்தில், புது முதலீடுகள் செய்து விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்கள் உங்களுக்குக் கட்டுப்படுவர். சந்தை நிலவரத்தை அறிந்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். கட்டுமானப் பொருட்கள், பெட்ரோ கெமிக்கல், போர்டிங், லாட்ஜிங் வகைகளால் லாபம் அதிகரிக்கும்.
வருடம் முழுவதும் குரு சாதகமாக இல்லாததால், உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உண்டாகும். சக ஊழியர்களின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்வீர்கள். மூத்த அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சிலருக்கு உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். சித்திரை, புரட்டாசி, கார்த்திகை, பங்குனி மாதங்களில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. 

மாணவ-மாணவிகள் கடினமாக உழைத்து உயர்கல்வியில் வெற்றி பெறுவர். கலைத் துறையினருக்கு, புகழ் பெற்ற நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, உங்களை கடினமாக உழைக்க வைப்பதாக இருந்தாலும், தன்னம்பிக்கையால் தலை நிமிரச் செய்வதாக அமையும்.


பரிகாரம் : உங்களின்  ஜென்ம நட்சத்திர நாளன்று, சிதம்பரம் அருகிலுள்ள புவனகிரிக்கு சென்று,  அங்கு அருளும் ஸ்ரீராகவேந்திரரை, நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்; நன்மைகள் கூடும்.


பஞ்ச் :
* நிர்வாகத் திறமை அதிகரிக்கும். (பார்க்கலாம்...)
*  உங்களைப் பற்றிய வதந்திகள் அதிகமாகும். ( அதெல்லாம் சாதாரணமப்பா...)
* சக ஊழியர்களின் இரட்டை வேடத்தை புரிந்துகொள்வீர்கள் (இப்பவாச்சும்...)
* தன்னம்பிக்கையால் தலை நிமிர்வீர்கள்.(நம்பிக்கைதானே எல்லாமே...)
 
வெயிட்  ப்ளீஸ்...
அன்புமணி ராசிக்காரர்களுக்கு மாற்றம் முன்னேற்றம் சாத்தியமா?
அஜித், விஜய் ராசிக்காரர்களுக்கு தெறிக்கவிடுமா!
 
பின்குறிப்பு: ராசி பலனை கணித்தவர் ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன். இதில் இடம்பெற்ற தலைப்பு, முன்னுரை, பின்னுரை, பஞ்ச் ஆகியவற்றுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close