Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஞ்ஞானிகள் வியக்கும் 'ஹோமம் தெரபி'


   'சூர்யாய ஸ்வாஹா
   சூர்யாய இதம் நமஹ
   பிரஜாபதேய ஸ்வாஹா
   பிரஜாபதேய இதம் நமஹ'

- இவை அக்னிஹோத்ர மந்திரத்தின் எளிய சொற்களாக விளங்குபவை. வேதங்களில் கூறப்பட்டுள்ள யக்ஞங்களில் மிகவும் எளியது இதுதான். அக்னி ஹோத்ரம் வானிலையை மாற்றுகிறது. அதில் ஈடுபடுபவர்களின் மனத்தையும், பக்குவப்படுத்துகிறது.

அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும் இந்தப் பயன்களை அடைய முடியுமா என்பதை விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்கிறார்கள்.

மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் சிவபுரி என்ற ஊரில் இதற்காக ஓர் ஆராய்ச்சி நிலையமே நிறுவப்பட்டிருக்கிறது. வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சக்தி, வம்ச அடிப்படை, மருத்துவம், விவசாயம் போன்றவை வளம் பெறுவதற்குக் கூறப்பட்டிருக்கும் குறிப்புக்களை இங்கே விஞ்ஞானப் பூர்வமாக ஆராய்கிறார்கள்.

ஜெர்மனியின் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் பிரெடரிக் மாக்ஸ்முல்லர்,  இப்படி குறிப்பிட்டார்:
   'அக்னிம் இதே புரோசிதம் -யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம்
    ஹோதாரம் ரத்னதாதமம்

உலகத்தின் பழம்பெரும் நூலான ரிக்வேதத்தில் வரும் முதல் வாசகம் இது. 'அக்னியை நான் வணங்குகிறேன். யாகத்தின் முதல் தலைவனும், தெய்வீகம் நிறைந்த முதல்வனும், சக்தியைத் தூண்டுபவனும், எல்லாச் செல்வங்களையும் அருளுபவனும் ஆகிற அக்னியை நான் வணங்குகிறேன்.''

ஹோமம் என்பது சாதாரண நெருப்பல்ல. விதிப்படி அதை தயார் செய்ய, குறிப்பிட்ட பொருட்களை உபயோகிக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சக்தியைப் பெற, குறிப்பிட்ட மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.

சிவபுரியில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 2,500 ஆண்டுகளுக்குப்பிறகு, முதன்முறையாக அகல்கோட் மடத்தைச் சேர்ந்த கஜானன் மகராஜ் என்ற பெரியவரால் சோமயக்ஞம் முறைப்படி செய்யப்பட்டது. அந்த யாகத்தில், கூடவே ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டன. விஞ்ஞான ரீதியாகப் பல முடிவுகள் அதிலிருந்து வகைப்படுத்தப்பட்டன.

ஹோமங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறியதும் எளியதுமான ஒன்று அக்னிஹோத்ரம். இது இயற்கையின் விஞ்ஞான வழியில் மனிதனின் மனத்தைப் பண்படுத்துகிறது. இதனால் உடலுக்கும், சில அடிப்படையான பக்குவங்கள் கிடைக்கின்றன. இவை ஆயுர்வேத நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.

அக்னிஹோத்ரம் ஒருநாளைக்கு இரண்டு முறைகள் செய்யப்படவேண்டும். சரியாக சூரியன் உதிக்கும்போதும் சூரியன் மறையும்போதும் செய்யவேண்டும். இயற்கையின் சுழற்சியை ஒட்டி இது செய்யப்படுவதால் சூரியனின் தோற்றமும் மறைவும் இதற்கு உரிய கால அளவுகளாக இருக்கின்றன.
இதைப் பற்றி வாஷிங்டனில் நடைபெற்ற ஆராய்ச்சியின்போது 'சூரியோதயத்தின்போது சக்தி மிகுந்த மின்னணுக்கள், நெருப்பு மின்னல்கள் பூமியை நோக்கி வருகின்றன. இந்த ஒளிவெள்ளத்தின் ஆற்றல் அபாரமானது. தீய பொருட்கள் அந்த உதயத்தில் கருகி அழிந்துவிடுகின்றன. உயிர் கொடுக்கும் சக்தி ஓங்குகிறது. அந்த வேளையில் அக்னிஹோத்ர மந்திரங்களை இசையுடன் கூறுவது அந்தச் சக்தியை தூண்டுகிறது. மாலையில் சூரியன் மறையும் வேளையில் இந்தச் சக்தி மெள்ள மெள்ள சுருங்கி அடங்குகிறது. அப்போதும் இந்த மந்திரம் அதன் இயக்கத்துக்கு ஏற்றபடி அமைகிறது' என்று கண்டறியப்பட்டது.

சூரியனின் சக்தியைப் பொறுத்தே வானிலை அமைந்திருக்கிறது. வானத்தில் பரவி இருக்கும் பல்வேறு மண்டலங்களிலும் அந்தச் சக்தி இயங்குகிறது. வெள்ளம்போல் எலெக்ட்ரான் அணுக்கள் பூமியின் காந்த மண்டலத்தை நோக்கி வந்து சேருகின்றன.

பூமியைச் சுற்றி உள்ள மின்காந்த மண்டலமும் நம் எண்ணங்களையும் உணர்ச்சி அலைகளையும் ஏந்தி நிற்கிறது. மிதமான நிலையில் இதன் வேகம் ஏழு சுழற்சிகள் ஆகும். நாம் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியான நிலையில் தியானத்தில் அமரும்போது, நம் மூளையில் எழும் அலைகளும் அப்போது ஒரு வினாடிக்கு ஏழு சுழற்சிகள் வீதமே இயங்குகிறது. ஆகவே, தியான நிலையில் நாம் இயற்கையான சூழ்நிலைக்குப் பொருந்தி விடுவோம்.

அக்னிஹோத்ரம் செய்ய கூர் உருளை வடிவம் கொண்ட செப்புப் பாத்திரம், காய்ந்த பசுஞ்சாண வறட்டிகள், சுத்தமான நெய், நவதானியங்கள் ஆகும். ரசாயன முறைப்படி புரதச் சத்து மிகுந்த அரிசி, முட்கள் நிறைந்திருக்கும் மரங்களின் சுள்ளிகள் ஆகியவையே ஹோமத்துக்கு உரியவை. காலையும் மாலையும் அக்னி மூட்டப்பட்டு ஹோமம் நிகழ்த்தப்படுகிறது.

வறட்டித் துண்டுகளும், அரிசியும், நெய்யும் அக்னியில் சேர்க்கப்படுகின்றன. விரல் நுனியில் மட்டுமே எடுக்கக் கூடிய அளவு அரிசியை எடுத்து, 'சூர்யாய ஸ்வாஹா, சூர்யாய இதம் நமஹ' என்று முதல் மந்திரம் உச்சரிக்கப்படுகிறது. தொடர்ந்து, 'பிரஜாபதயே ஸ்வாஹா, பிரஜாபதயே இதம் நமஹ' என்று இரண்டாவது மந்திரம் கூறப்படுகிறது. இது உதய காலத்தில் செய்யப்படும் தொடக்கம்.

இதேபோல் 'அக்னயே ஸ்வாஹா, அக்னயே இதம் நமஹ' 'பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் நமஹ' என்று சந்தியா காலத்தில் உச்சரிக்கப்படுகிறது. அப்போது அக்னிஹோத்திர பாத்திரத்தைச் சுற்றி அபரிமிதமான சக்தி அலைகள் உருவாகின்றன. காந்த சக்தி மிகுந்த மண்டலம் உருவாகி, அழிவுச் சக்திகளைத் தடுத்து வளர்ச்சி சக்திகளை அமைக்க உதவி செய்கின்றன. இவ்வாறு அக்னி ஹோத்திரம் வளர்ச்சியையும், செழுமையையும் தூண்டுகிறது. இவை அக்னிஹோத்திரம் செய்யப்படும் இடத்தில் விஞ்ஞான அடிப்படையில் எடுக்கப்பட்ட அளவுகளாகும்.

பூனாவில் உள்ள ஆராய்ச்சிக் கழகத்தில் பாரி ராத்னர், அர்விந்த் மாண்ட்தர் ஆகிய விஞ்ஞானிகள், அக்னிஹோத்ரம் செய்யப்படும் இடத்தில்,  ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவு கணிசமாகக் குறைந்திருப்பதையும், ஹோமப் புகையில் பார்மல்-டி, ஹைட் என்ற உயிரணுக்களுக்கு செழுமையை ஊட்டும் பொருள் நிறைந்திருப்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள்.

சுமார் 30 வருடங்களுக்கு முன்பே அமெரிக்க விஞ்ஞானி ஆன்மெக்ளிப்ஸ்,  ''இன்றைய தொழில் வளர்ச்சியினால் காற்று, மண், நீர் ஆகியவை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவை மூன்றையும் தூய்மைப் படுத்தவேண்டியது மனித குலம் உயிர் பிழைக்க மிகவும் அவசியம். இதற்கு அக்னிஹோத்திரம் உதவுகின்றது" என்று சொல்லி இருக்கிறார்.

அக்னிஹோத்ரம் செய்யப்படுவதற்கு முன்பும் செய்த பின்பும் வானிலையில் உள்ள பண்புகளை 'எலோப்டிக்' சக்தி அளவுமானியின் மூலம் பகுத்து அறிந்திருக்கிறார்கள். அக்னிஹோத்திரம் செய்த பிறகு இந்த சக்தி கணிசமான அளவு உயர்ந்திருப்பதை அவர் கண்டுபிடித்திருக்கிறார்.

சரும நோய்கள், மூச்சு வியாதிகள், இருதய பாதிப்புகள், தொண்டை வியாதிகள் ஆகிய நோய்களில் இருந்து நிவாரணம் தரக்கூடிய மருந்துகள் அக்னிஹோத்திரம் நிகழ்த்தி அந்தச் சூழலிலேயே தயாரிக்கப்படுவதாகவும், இந்த மருந்துகளைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக விளங்குவது அக்னிஹோத்திரம் செய்யப்படும் இடத்தில் இருந்து திரட்டப்படும் சாம்பலே ஆகும் என்றும் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த மருத்துவ நிபுணர், மோனிகா ஜெஹ்லே கூறி இருக்கிறார்.

அக்னிஹோத்திரம் ஹோமாதெரபியைப் போல் செயல்பட்டு, உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்திருக்கிறது. மனம் அமைதிப்படுவதால் ரத்தத்தின் பண்பும் துடிப்பும் மேம்படுகின்றன. வியாதிகளால் வரும் பாதிப்புகள் குறைகிறது. மனதைத் தூய்மைப்படுத்தி.. தன்னம்பிக்கையையும் செயல்திறனையும் வளப்படுத்த உதவுகிறது. அக்னியின் மூலம் வானமண்டலமும் தூய்மை அடைகிறது. அதனால் இயற்கையின் இயக்கத்துக்கு ஏற்ற அளவில் மனமும் இயங்கி அமைதி அடைகிறது.

அக்னிஹோத்திரம் செய்யப்படும் இடத்தில் ஒரு சக்திமண்டலம் உருவாகிறது. இந்த நிலையில் அங்கே வளரும் தாவரங்கள் செழுமையுடன் சத்துக்களையும் பெறுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பே மஹாராஷ்டிராவில் உள்ள,  திராட்சைப் பயிர் பெருக்கத் துறையின் விஞ்ஞானிகள் இதை ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். நாசிக் மாவட்டத்தில் பஸ்வந்த் என்ற கிராமத்தில், திராட்சைப் பயிர்கள் ஆறுமாதத்தில் பெறக்கூடிய வளர்ச்சியையும் செழுமையையும் மூன்று வாரங்களிலேயே அடைந்திருக்கின்றன.

உலகமெங்கும் வானிலை, நீர், மண் ஆகியவற்றை வளப்படுத்தி, மனிதனின் மனதையும் பண்படுத்தி உயிர்கள் வளர உதவி, தாவரங்களையும் செழுமைப்படுத்தும் அக்னிஹோத்திரத்தை வாழ்வளிக்கும் மகாசக்தியாகப் போற்றுவது முற்றிலும் சரிதான்.


- எஸ்.கண்ணன்கோபாலன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close