Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐந்து மதங்களைத் தாங்கி நிற்கும் ராமகிருஷ்ணர் மடம்!


சென்னை மயிலாப்பூரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது ஶ்ரீராமகிருஷ்ணர் மடம். இங்கே அமைந்திருக்கும் கோயில் கட்டடம், ஐந்து மதங்களின் பெருமைகளைத் தாங்கி நிற்கிறது எனச் சொன்னால் ஆச்சர்யமாக இருக்கிறதா? அந்த ஆச்சர்யத்தைக் காண மடத்தின் உள்ளே செல்வதற்கு முன்பு, சென்னையில் ராமகிருஷ்ணர் மடம் உருவான வரலாறை கொஞ்சம் பார்ப்போமா?

மேற்கு வங்கத்தில் உள்ள காமார்புகூர் கிராமத்தில் பிறந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், கொல்கத்தாவில் உள்ள தஷிணேஸ்வர காளி கோயிலில் வாழ்நாளில் பெரும் பகுதியை செலவிட்டார். மதங்கள் யாவும் ஒரே கடவுளை, பரம்பொருளை அடைவதற்கான பல வழிமுறைகள் என உணர்ந்தார். அதையே இந்த உலகத்துக்கு உணர்த்த முயன்றார். அந்தப் பொறுப்பை சுவாமி விவேகானந்தர் சிறப்பான முறையில் நிறைவேற்றினார்.

சுவாமி விவேகானந்தர் தம்முடைய குருதேவரின் பெயரில் நாடெங்கிலும் பல இடங்களில் ஶ்ரீராமகிருஷ்ண மடங்களை நிறுவி, ஆன்மிகப் பணிகளும், மக்கள் நலப் பணிகளிலும் ஈடுபடச் செய்தார். அவர் இரண்டு முறை சென்னைக்கு விஜயம் செய்திருக்கிறார். முதல்முறை வந்தபோதே சென்னை மக்களைப் பெரிதும் ஈர்த்தார். பின்னர் அமெரிக்காவில் நடைபெற்ற சர்வசமய மாநாட்டில் கலந்துகொண்டு, உலகப் புகழ் பெற்ற நிலையில் மறுபடியும் சென்னைக்கு வந்தபோது, சென்னை மக்கள் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு வழங்கியதுடன், ஶ்ரீராமகிருஷ்ணரின் பெயரில் சென்னையிலும் ஒரு மடம் ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சுவாமி விவேகானந்தர், தம்முடைய சக துறவியான சுவாமி ராமகிருஷ்ணானந்தரை சென்னைக்கு அனுப்பி,  ஶ்ரீராமகிருஷ்ணர் பெயரில் மடம் ஏற்படுத்தச் செய்தார்.

முதல் மடம் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்தது. பின்னர் மடம் மயிலாப்பூரில் ஒரு கட்டடத்தில் இயங்க ஆரம்பித்தது. ஶ்ரீராமகிருஷ்ணர் சர்வசமய சமரசத்தை போதித்தவர் என்பதால், அவருடைய பெயரில் செயல்படும் மடத்தில் சர்வசமய சமரசத்தைப் போற்றும் வகையில் ஒரு தியான மண்டபம் ஏற்படுத்த நினைத்து, 1994-ம் ஆண்டின் இறுதியில் அப்போது சென்னை மடத்தின் தலைவராக இருந்த ஸ்வாமி ஸ்மரணானந்தர், அதற்கான பணிகளை முன்னெடுத்துச் செய்தார். 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற இந்த ஆலயம், சர்வசமய ஆலயம் (universal temple) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலின் கட்டட அமைப்பில் ஹிந்து, புத்த, சமண, கிருஸ்தவ மற்றும் மொகலாய ஆலயங்களின் அமைப்பும் சின்னமும் கொண்டிருப்பதைக் காணலாம்.

நுழைவாயிலில் இருந்து பார்க்கும்போதே,கோயிலின் முழு அமைப்பையும் 102 அடி உயரமுள்ள கர்ப்பகிரக மண்டபத்தின் மேல் உள்ள விமானத்தையும் காணலாம். கோயிலின் முன் முகப்பு,  ஆக்ரா மற்றும் டெல்லியில் உள்ள மொகலாய நினைவுச் சின்னங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது.


மதப் பாகுபாடு இல்லாமல் ஶ்ரீராமகிருஷ்ணர், சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர், ஆதிசஙகரர், புத்தர், ராமாநுஜர் போன்ற மகான்களின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதுடன், மக்கள் நலப்பணிகளையும் ஆற்றிவருகிறது.

ஜாதி மத பாகுபாடு இல்லாமல், மனித மனங்களை ஒன்றிணைக்கும் அற்புதப் பணியைச் செய்துவருகிறது ஶ்ரீராமகிருஷ்ண மடம்.


- எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: தி.குமரகுருபரன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ