Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அன்புமணி ராசிக்காரர்களுக்கு மாற்றம் முன்னேற்றம் சாத்தியமா? அஜித் - விஜய் ராசிக்காரர்களுக்கு தெறிக்கவிடுமா?


அன்புமணியின்  மேஷம் ராசிக்காரர்களே..

இந்த துர்முகி புத்தாண்டு எப்படியிருக்கும்? பெரிய மாற்றங்களும் முன்னேறங்களும் உண்டா எனப் பார்ப்போம்...


"நாலும் தெரிந்த அனுபவசாலி நீங்கள்!  உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறந்துள்ளதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வழக்கு சாதகமாகும்.

செவ்வாய் 8-ல் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும் அதனால் ஆதாயமும் கிடைக்கும். சகோதர ஒற்றுமை வலுப்பெறும். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ஆவணி மாதம் பிற்பகுதிவரை செவ்வாயுடன் சனியின் சேர்க்கை இருப்பதால், சிறுசிறு விபத்துகள், உடல்நலக் குறைவு, வீண்பகை போன்றவை வந்துசெல்லும். வீடு, மனை வாங்குவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

வருடம் பிறக்கும்போது உங்கள் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் புதனும் சேர்ந்திருப்பதால், அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். பூர்வீகச் சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

01.08.16 வரை குரு 5-ம் வீட்டில் இருப்பதால், மனக் குழப்பங்கள் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

ஆனால், 02.08.16 முதல் 16.01.17 வரை மற்றும் 10.03.17 முதல் 13.04.17 வரை குரு உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால், மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அவ்வப்போது மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். 17.01.17 முதல் 09.03.17 வரை குரு அதிசாரத்திலும் வக்ரகதியிலும் உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களிடம் மரியாதை கூடும்.

வருடம் முழுவதும் அஷ்டமத்து சனி நீடிப்பதால், அடிக்கடி மனச் சஞ்சலம் ஏற்படும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
26.8.16 முதல் 18.9.16 வரை சுக்ரன் 6-ல் சென்று மறைவதால், வாகன விபத்து, வழக்கால் நெருக்கடிகள், வாழ்க்கைத் துணைக்கு உடலநலக் குறைவு ஏற்படக்கூடும். வருடம் முழுவதும் ராகு 5-ல் இருப்பதால் பிள்ளைகளை அனுசரித்துப் போகவும். அவர்களின் படிப்பு மற்றும் திருமண விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.

ஆனால், கேது 11-ல் இருப்ப தால், ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். வேற்று மொழியைச் சேர்ந்தவர்களால் நன்மை உண்டாகும்.

வியாபாரத்தில், கடினமாக உழைத்து ஓரளவு லாபம் பெறுவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். இப்போதைக்கு பெரிய முதலீடுகள் வேண்டாம். கட்டட உதிரிபாகங்கள், கடல்வாழ் உயிரினம், பெட்ரோ கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. ஆனி, புரட்டாசி, தை, மாசி ஆகிய மாதங்களில், நண்பர்களது உதவி யால் வியாபாரத்தை விரிவுபடுத்த சந்தர்ப்பம் உண்டாகும்.
உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளைப் போராடியே பெறவேண்டி இருக்கும். ஒருசிலருக்கு, பணியின் காரணமாக அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

மாணவ - மாணவிகள், பாடத்தில் கவனம் செலுத்துவது அவசியம். போட்டிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டாகும். கலைத்துறையினரே! போட்டிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

மொத்தத்தில் இந்த துர்முகி வருடம் சூழ்ச்சிகளையும், சிக்கல் களையும் தந்து உங்களை அச்சுறுத்தினாலும், இறுதியில் உங்களை வெற்றி பெற வைப்பதாக அமையும்.


பரிகாரம் :  திருவாதிரை திருநாளில் உத்தரகோசமங்கை தலத்துக்குச் சென்று ஸ்ரீமங்களேஸ்வரி உடனுறை ஸ்ரீமங்களேஸ்வரரையும், மரகத நடராஜரையும் வழிபட்டு வாருங்கள்; நலம் உண்டாகும்.

பஞ்ச்:

* மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும்.(சமாளிப்போம்..)
* இப்போதைக்கு பெரிய முதலீடுகள் வேண்டாம்.(அப்புறம் எப்பத்தான்...)
* போட்டிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். (பாஸ் மார்க் வாங்கிடலாமோ..)
 
அஜித் - விஜயின் கடக (ஒரே ராசியா....!) ராசிக்காரர்களே... இந்த துர்முகி ஆண்டு உங்களுக்கு எப்படி அமையும் என்று பார்க்கலாமா...?

"தாயை தெய்வமாகப் போற்றுபவர்களே!  புத்தாண்டு பிறந்தபோது உங்களின் யோகாதிபதியான செவ்வாய் பூர்வ புண்ணியஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருந்ததால், அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்து பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு விரயஸ்தானமான 12-ம் வீட்டில் பிறப்பதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.

வருடம் முழுவதும் 5-ம் இடத்திலேயே சனி அமர்ந்திருப்பதால், மனதில் குழப்பமும் தடுமாற்றமும் இருந்தபடி இருக்கும். பிள்ளைகளை அனுசரித்துப் போகவும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வருடம் பிறக்கும்போது சூரியனும் புதனும் வலுவாக இருப்பதால், எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்தப் பிணக்குகள் நீங்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும்.

3.12.16 முதல் 15.1.17 வரை செவ்வாய் ராசிக்கு 8-ல் மறைவதால், வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் மனவருத்தம் வந்து போகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். 8.11.16 முதல் 3.12.16 சுக்ரன் 6-ல் மறைவதால், வாகனப் பழுது, சிறுசிறு விபத்துகள், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், கழுத்து வலி வந்து செல்லும்.   1.8.16 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால், மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பண வரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உடல் நலம் சீராகும். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். ஆனால், 2.8.16 முதல் 16.1.17 வரை மற்றும் 10.3.17 முதல் 13.4.17 வரை குரு ராசிக்கு 3-ல் அமர்வதால், பண விஷயத்தில் கறாராக இருங்கள். புது முயற்சிகள் தாமதமாகி முடிவடையும்.

வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். ஆனால், 17.1.17 முதல் 9.3.17 வரை குரு அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 4-ல் அமர்வதால், தாயின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அவசரப்பட்டு எந்தக் காரியத்திலும் இறங்க வேண்டாம். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.

வருடம் முழுவதும் ராகு 2-லும் கேது 8-லும் நீடிப்பதால், குடும்பத்தில் சலசலப்புகள் வரும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். சந்தேகத்தால் நல்ல நட்புகளையும் இழக்க நேரிடும்.  

வியாபாரத்தில் சிறு சிறு நஷ்டங்கள் வந்து போகும். எதிர்பார்த்த ஆர்டர் தாமதமாக வரும். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். தொழில் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். ஏற்றுமதி - இறக்குமதி, லாட்ஜிங், வாகன உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். சித்திரை, வைகாசி, புரட்டாசி ஆகிய மாதங்களில் லாபம் வரும். கடையை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில், உங்களுக்கு நெருக்கமாக இருந்த அதிகாரி மாற்றப்படுவார். புது அதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்ளாமல் செயல்பட வாய்ப்பு இருக்கிறது. வேலைச்சுமையும் அதிகரிக்கும். எதிர்பாராத இடமாற்றம் உண்டு. வைகாசி, புரட்டாசி, மார்கழி மாதங்களில் அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த சலுகைகளும், விரும்பிய இடத்துக்கே வேலை மாற்றமும் உண்டாகும்.

மாணவ-மாணவிகளே! படிப்பு மட்டுமல்லாமல் மொழியறிவுத் திறனிலும் கவனம் செலுத்துவீர்கள். அறிவியல் சம்பந்தமான இடங் களுக்குச் சென்று வரும் வாய்ப்பும் உண்டாகும். சிலருக்கு பள்ளி மாற வேண்டி இருக்கும்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயம் அடைவீர்கள். உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சிறு சிறு கசப்பான அனுபவங்களைத் தருவதாகத் திகழ்ந்தாலும், அனுபவ அறிவால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.


பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், அழகாபுத்தூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ படிக்காசுநாதரை, பிரதோஷ நாளில் தரிசித்து வணங்குங்கள். நன்மைகள் உண்டாகும்.

பஞ்ச்:

மனதில் குழப்பமும் தடுமாற்றமும் இருந்தபடி இருக்கும்.(எல்லாருக்கும்தான்..)
அனுபவ அறிவால் உங்களை முன்னேற வைப்பதாக அமையும்.(எல்லாமே பாடம்தானே..)
வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். (புதுசா யோசிக்கணுமோ..)
 
வெயிட்டிங்...

ஐஸ்வர்யா ராய் ராசிக்காரர்களுக்கு ஐஸ்வர்யம் உண்டாகுமா?
கமல் ராசிக்காரர்களுக்கு அடுத்த சாதனை என்ன?
நாளைக்குப் பார்ப்போம்...

பின்குறிப்பு: ராசி பலனை கணித்தவர் ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன். மேற்கோள் குறிக்குள் சொல்லப்பட்ட விஷயங்களைத் தவிர, இதில் இடம்பெற்ற தலைப்பு, முன்னுரை, பின்னுரை, பஞ்ச் ஆகியவற்றுக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close