Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஶ்ரீராகவேந்தரர் தவ பூமியில் திருமண் பிரசாதம்!

 

ண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயல்வெளிகள். தஞ்சாவூரில் இருந்து கள்ளபெரம்பூர் செல்லும் வழியில் மூன்றாவது கிலோ மீட்டரில், வடவாற்றங்கரையில் ஆலம், அரசு, வேம்பு,  இலுப்பை, தேக்கு, ருத்ராட்ச மரங்களுக்கு இடையே இயற்கை சூழலில் அழகாக காட்சி அளிக்கிறது பிருந்தாவனம்  ராகவேந்தரர் ஆலயம். 

 ராகவேந்திரர் 12 ஆண்டுகள் தவம் செய்த இடம் இது. அங்கு நுழைந்தாலே மன அமைதியும், பரவசமும் ஊற்றெடுக்கிறது. குடும்ப அமைதி, உடல் நலம், கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டி இங்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள். இங்கு பிரசாதமாக விபூதி, குங்குமம் வழங்கப்படுவதில்லை. 'ம்ருதிகை' என அழைக்கப்படும் மண் (திருமண்) தருவது இக்கோவிலின் தனித்துவ அடையாளமாக திகழ்கிறது.

கர்ப்ப கிரகத்திலிருந்து மண் எடுக்கப்பட்டு, பூஜையில் வைக்கப்பட்டு திருமண் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. துளசி தீர்த்தம், அட்சதையும் அதோடு வழங்கப்படுகிறது. அர்ச்சனை, அபிஷேகங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இக்கோவில் வளாகத்தில் பூஜைப்பொருட்கள் உள்ளிட்ட எந்த ஒரு பொருளும் விற்கப்படுவதில்லை. அர்ச்சனை, அபிஷேகம் செய்ய விரும்புகிறவர்கள் தாங்களே கொண்டு வரவேண்டும்.

வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 8  மணிவரை பூஜைகள் நடைபெறும். மற்ற நாட்களில் அதிகாலையிலிருந்து 12 மணிவரை பூஜைகள் நடைபெறும். பூஜை முடிந்து, கர்ப்பகிரகத்தை பூட்டிவிட்டால், அன்றைக்கு மறுபடியும் கர்ப்ப கிரகம் திறக்கப்படமாட்டாது. அடுத்தநாள்தான் பூஜைக்காக திறக்கப்படும். ராகவேந்திரர் இப்பொழுதும் இங்கு தியானத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. அதற்கு இடையூறு செய்யக்கூடாது என்பதால் இந்த மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.

தவம் இருக்கும் ராகவேந்தரர் மீது நேரடியாக வெயில், மழை, பனி, காற்று படுவதற்காக கர்ப்பகிரகம் மேற்கூரை இல்லாமல் வெட்டவெளியில் உள்ளது. இங்கு ராகவேந்திரர் சர்ப்ப வடிவமாக  வீற்றிருக்கிறார். சர்ப்ப பீடத்துடன் கூடிய பிருந்தாவனத்தில் (துளசிமாடம்) துளசிமணி மாலை, சாலிகிராம மாலை அணிவிக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. வியாழக்கிழமை மற்றும் விஷேச நாட்களில் கூடுதலாக தசாவதார மாலை அணிவிக்கப்படுகிறது. உலோகத்தாலான ராகவேந்திரரின்
திருவுருவ கவசம் சூடி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. 

ராகவேந்தரரின் தீவிர பக்தர்கள் பலர் சுயசேவகர்களாக சேவையாற்றுகிறார்கள்.

ராகவேந்தரரின் மகத்துவம் மற்றும் அற்புதங்கள் குறித்து சிலாகிக்கிறார் தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த தீவிர பக்தரான ராகவேந்திரதாசன்.

"என்னோட இயற்பெயர் அழகிரிசாமி. திமுக தலைவர் கருணாநிதிதான் எனக்கு அந்த பெயரை வச்சாரு. சாமி சிலைகளை உடைக்கும் அளவுக்கு தீவிர கடவுள் மறுப்பாளரா இருந்தேன். அப்ப நான் பி. ஏ. படிச்சிக்கிட்டு இருந்தேன். படிப்புல ரொம்ப மோசம். எங்க குடும்பத்துலயும் பல பிரச்னைகள். இந்த கோவிலுக்கு வர்ற வழியில உள்ள ஒரு மரத்தடியில உட்கார்ந்து படிக்குறது வழக்கம். ஆனாலும் கோவிலுக்கு வரமாட்டேன். இந்த கோவிலுக்கு அப்போது வந்துக்கிட்டு இருந்த டிரான்ஸ்போர்ட் அதிகாரி ஒருவர் என்னை கூப்பிடுவார். நான் போக மாட்டேன். ஒருநாள் ரொம்ப கட்டாயப்படுத்தி, 'கோவிலுக்குள்ள வந்து பாரு. மாற்றத்தை உணர்ந்தால், அதுக்கு பிறகு நீயாகவே வா. இல்லைனா, வரவேண்டாம்'னு சொன்னார். எதுக்கும் வந்து பார்ப்போம்னு ஒரு சவாலாகதான் இங்க வர ஆரம்பிச்சேன். வந்த பிறகு ஒருவித அதிர்வலைகளை உணர ஆரம்பிச்சேன். குடும்ப பிரச்னைகள் எல்லாம் தீர்ந்து அமைதி உருவானது. படிப்புலயும் முன்னேற்றம் தெரிஞ்சுது. நல்ல வேலையும் கிடைச்சுது. இங்க தொடர்ச்சியா வந்துக்கிட்டு இருக்கேன். ராகவேந்திர சுவாமியை வேண்டி வியாழக்கிழைகளில் மெளனவிரம் இருந்துக்கிட்டு இருக்கேன்." என்றார்.

இக்கோவிலின் அறங்காவலரும் அர்ச்சகருமான கபிஜன், இக்கோவிலின் தனித்துவ சிறப்புகள் பற்றி நெழ்ச்சியுடன் பேசுகிறார்.

''400 ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரம் அருகே புவனகிரியில் பிறந்து, கும்பகோணத்தில் வளர்ந்த வெங்கண பட்டர், தஞ்சாவூரில்தான் சன்னியாச தீட்சம் பெற்று ராகவேந்திரராக உருவெடுத்தார். அப்பொழுது தஞ்சையை ஆண்ட ரகுநாத பூபால் ஆட்சிகாலத்தில் தஞ்சையில் கடும் பஞ்சம். ராகவேந்திரர் இங்கு 12 ஆண்டுகள் கடும் தவம் இருந்து, தவத்தால் கிடைத்த வலிமையால் பஞ்சத்தை போக்கி, மற்ற தேசங்களுக்கும் அருள்புரிய தேசஞ்சாரம் புறப்படுகிறார். தஞ்சை மன்னருக்கு இன்னல்கள் நேருகிறது. ராகவேந்திரர் தஞ்சாவூரிலேயே தங்கியிருக்க வேண்டும் என மன்னர் பிரார்த்தனை செய்கிறார். ''நான் தவம் இருந்த இடத்தில் பிருந்தாவனம் அமையுங்கள். நான் அங்கு என் சூட்சம சரீரத்தால் என்றென்றும் வாழ்ந்து தஞ்சைக்கு அருள் புரிவேன் என்று கூறிய ராகவந்திரர், இங்கு ஐந்து தலை நாக வடிவில் தோற்றமளிக்கிறார்.

ராகவேந்திரர் இங்கு மட்டும்தான் தவம் இருந்திருக்கிறார். இக்கோவிலில் மட்டும்தான் ம்ருதிகை (மண்) வழங்கப்படுகிறது. ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்திருக்கும் ஆந்திர மாநிலம் மந்திராலயத்தில் கூட ம்ருதிகை வழங்கப்படுவதில்லை. தஞ்சாவூர் பிருந்தாவனம் ராகவேந்திரர் ஆலயம் மட்டும்தான். மிகவும் பழமையான மன்னர் காலத்தில் கட்டப்பட்ட ராகவேந்திரர் ஆலயம்.'' என்றார்.

நடிகர் ரஜினிகாந்த், பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் இடையூறு இல்லாமல் தனிமையில் பிரார்த்தனை செய்வதற்காக நள்ளிரவில் இங்கு ரகசியமாக வந்து சென்றதாக 80, 90-களில் தஞ்சாவூரில் அவ்வபோது பேச்சுகள் கிளம்புவதுண்டு.

அர்ச்சகர் பிரஜனிடம் இது குறித்து கேட்டபோது, கருத்துகூற மறுத்துவிட்டார். ''சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவரது அண்ணன் சத்தியநாராயணன் இங்கு வந்து சிறப்பு பூஜைகள் செய்தார்'' என்ற தகவலை மட்டும் தெரிவித்தார்.

இந்த கோவிலுக்கு தஞ்சாவூரில் இருந்து 27 எண் கொண்ட பேருந்துகளில் செல்லலாம். அரைமணி நேரத்திற்கு ஒரு பேருந்து இருக்கிறது.

-கு. ராமகிருஷ்ணன்

படங்கள்: ம. அரவிந்த்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ