Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்து கோயில் கட்டிய இஸ்லாமியர்! - புதுச்சேரியில் ஓர் சமய நல்லிணக்க அடையாளம்!


காலம் காலமாக மதங்களின் பெயரால் மனிதர்கள் பிரிந்து, சிறு வட்டத்துக்குள் அடைந்து கிடக்கும் நிலையில், அந்த வட்டத்தை உடைத்து 'அனைத்து மதங்களும் ஒன்றே' என்று சொல்லி,  இந்துக் கடவுளான முருகனுக்கு கோயில் கட்டி இருக்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த காலம் சென்ற இஸ்லாமிய சகோதரர் முகம்மது கௌஸ்.

ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள இந்தக் கோயில்,  புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாக மட்டும் இல்லாமல், சமய நல்லிணக்கத்திற்கான அடையாளமாகவும் திகழ்கிறது.

1940-ம் ஆண்டு, பாரம்பர்யமான இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவர் முகமது கௌஸ். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட இவரது முன்னோர்கள், இரண்டு தலைமுறைக்கு முன்பே புதுச்சேரி நகரப்பகுதியில், இந்துக்கள் அதிகம் வசிக்கும் எல்லையம்மன் கோயில் தெருவில் குடியேறினார்கள். சாதி, மதம், இன வேறுபாடுகளைப் பற்றி அறிந்திடாத சிறு வயதிலேயே, கௌஸுக்கு முருகக் கடவுளை மிகவும் பிடித்து விட்டது. அதனால் பெரும்பாலான நேரங்களில் அருகில் இருக்கும் அனைத்துக் கோயில்களுக்கும் சென்று அக்கோயிலின் கட்டடக்கலை, சிற்பங்களின் வடிவமைப்பு போன்றவற்றை ரசித்து அங்கு நேரம் கழிப்பதே வழக்கமாகிப் போனது. பெத்தி செமினார் பள்ளியில் படித்த அவர்,  இந்து கோயில்களுக்கு மட்டுமல்லாமல் தான் சார்ந்த இஸ்லாம் மசூதிக்கும், கிறிஸ்துவ தேவாலயங்களுக்கும் இவர் செல்ல ஆரம்பித்தார். சிறு வயதிலேயே சமய நல்லிணக்கம் கொண்டவரான இவருக்கு,  நாளடைவில் படிப்பில் நாட்டம் குறைந்ததால் எட்டாம் வகுப்போடு பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

அனைத்து மதக் கடவுளையும் இவருக்கு பிடித்திருந்தாலும் ஏனோ முருகக் கடவுளின் மீது மட்டும் இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த சிறு வயதில்,  தன் பெற்றோரால் தன் இடுப்பில் கட்டப்பட்டிருந்த தங்க அரைஞாண் கயிற்றைக் கழற்றி விற்று அந்த பணத்தில் தனக்கு சொந்தமாக செப்பாலான முருகன் தெய்வானை வள்ளி திருவுருவங்களை வடிவமைத்து அதற்கு தினம் அலங்காரங்கள் செய்து சிறிய அளவில் பூஜைகள் செய்து வணங்க ஆரம்பித்தார். முருகன் மீதான காதல் நாளுக்கு நாள் அதிகமானது. அதனால் ஒவ்வொரு வருடமும் மாசி மகத் திருவிழாவின் போது முருகக் கடவுளின் திருவுருவச் சிலைக்கு நன்றாக அலங்காரங்கள் செய்து தன்னுடைய மார்பிலும், தோளிலும், தலையிலும் சுமந்து கடற்கரைக்கு எடுத்துச் சென்று புனித நீராட்டு செய்வார்.

அத்திருவிழாவிற்கு வரும் பொதுமக்கள் அனைவரும், இவரையும் இவரின் முருகர் சிலையையும் ஆச்சர்யமாக பார்ப்பதோடு தரிசித்து செல்வது வாடிக்கையாகிப் போனது. மேலும் கௌஸின் முருகன் சிலையை 'பாய் முருகர்' என்றே புதுச்சேரி மக்கள் அழைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் முருகக் கடவுளுக்கென்று தனியாக ஒரு கோயிலைக் கட்ட வேண்டும் என்ற அவரது ஆசை, வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது.

இந்நிலையில் 1969-ம் ஆண்டு 'துளசி முத்து மாரியம்மன்' என்ற கோயிலைக் கட்டினார். அதன் கும்பாபிஷேக விழாவின்போது அவரின் தந்தை இறந்துவிட்டார் என்ற செய்தி வந்த போதிலும் விழாவை வெற்றிகரமாக முடித்தார். சமய நல்லிணக்கத்திற்காக இவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் பார்த்த அப்போதைய புதுச்சேரி மேயர் 'எதுவார் குபேர்' , கௌஸை அழைத்து,  'உனக்கு மேலும் என்ன உதவிகள் வேண்டும்?' என்று கேட்க, தனது வாழ்நாள் ஆசையான முருகனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்பதைச் சொன்னார். உடனே அவர் அதற்கான அனுமதியையும் உதவிகளையும் அளித்ததோடு 14.12.1970 அன்று புதுச்சேரி கவர்னர் பி.டி.ஜாட்டியுடன் சேர்ந்து கோயிலுக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர், இந்துக்களுக்கான கோயிலைக் கட்டுவதில் பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டி வந்தது. ஆனாலும் அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து கோயிலை கட்டி முடித்தார். 1977-ம் ஆண்டு சித்திரை மாதம் 19-ம் நாள், ஆகம விதிகளின்படி அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்தார். அதன்பிறகு இக்கோயிலுக்கு ஒருமுறை வருகை புரிந்த காஞ்சி சங்கராச்சாரியார், 'கௌசிக பாலசுப்ரமணியர் திருக்கோயில்' என்று பெயர் வைத்தார். அனைத்து மக்களாலும் 'கௌஸ் கோயில்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பயனிகள் அனைவரும் இந்தக் கோயிலைப் பார்க்காமல் செல்வதில்லை.

சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி, வைகாசி மாதத்தில் வைகாசிப் பெருவிழா, ஆடி மாதத்தில் ஆடிக் கிருத்திகை மற்றும் துளசி முத்து மாரியம்மனுக்கு ஆடிப்பூர விழா, கார்த்திகை தீபப் பெருவிழா என வருடம் முழுவதும் நீள்கிறது இக்கோயிலின் திருவிழாப் பட்டியல். 2003-ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் முகமது கௌஸ் மரணமடைந்தார். தற்போது, அவரது மகன் முகமது காதர் கோயிலை நிர்வாகித்து வருகிறார்.

“சிறு வயது முதலே அப்பாவின் கூடவே இருந்ததால் எனக்கும் இந்த முருகக் கடவுளைப் பிடிக்கும். இவரை வணங்குவதையும் இவருக்கான பணிகளைச் செய்வதையும் நான் பெரிய பாக்கியமாகவே நினைக்கிறேன். இன்றும் நான் இஸ்லாத்தில்தான் இருக்கிறேன், மசூதிக்கும் செல்கிறேன். என்னைப் பொறுத்தவரை அனைத்து மதங்களும் கடவுள்களும் ஒன்றுதான். வழிபாட்டு முறைகள் மட்டுமே வேறு வேறாக இருக்கின்றது” என்றார்.

இன்றும் இந்த கோயிலின் உட்பிரகாரத்தில் முகமது கௌஸ் திருவுருவப் படத்தைக் காணலாம். சமயங்களை ஊக்கப்படுத்தி அதன்மூலம் பிரிவினைகளை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கான சவுக்கடியாக கம்பீரமாய் உயர்ந்து நிற்கின்றது 'கௌஸ் கோயில்'.


-ஜெ.முருகன்

படங்கள் : அ.குரூஸ்தனம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close