Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சித்ரா பௌர்ணமியில் காட்சி தரும் எட்டுக்குடி கந்தன்!

மிழ் கடவுள் முருகப் பெருமான், திருவிளையாடல்கள் நிகழ்த்தி அமர்ந்தது ஆறு படைவீடு என்றாலும், அவன் அமர்ந்த எண்ணற்ற கோவில்களும், குன்றுகளும் இன்றைக்கும் நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அதில் முக்கியத்துவம் வாய்ந்த, சித்திரைப் பௌர்ணமி அன்று முழுவதும் விழாக்கோலம் பூணக்கூடிய திருத்தலம்தான் எட்டுக்குடி.

குமரன் எட்டுக்குடி வேலவன் மூலவராக விளங்கும் இக்கோவிலுக்கு, சித்திரை பௌர்ணமி அன்று, வருடாவருடம் தனியாக ஊருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்கும் அளவிற்கு நாடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். ஆதி படை வீடு எனப்படும் அற்புத ஸ்தலம் இது. பதினென் சித்தர்களுள் ஒருவரான வான்மீகி சித்தர் ஜீவசமாதி அடைந்த 'பள்ளிப்படை ஸ்தலம்' என்று நாகை மாவட்டத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு.

தெய்வீகச் சிற்பி என அழைக்கப்படும் ஸ்தபதி, பொரவாச்சேரி எனும் ஊரில் முருகனுக்கு சிலை எழுப்பினார். அந்த திருவுருவத்தின் அழகும், பேரொளியும் கண்ட பரந்தச் சோழன் அந்தச் சிற்பியிடம் இனி இதுபோல் ஒரு முருகக் கடவுள் சிலையை நீர் படைக்கக் கூடாது என்று சொல்லி உறுதி பெற்றுக்கொண்டதாகவும், மேலும், ஸ்தபதியின் வலது கை பெருவிரலை வெட்டி எடுத்ததாகவும் கதை உண்டு. அதற்கு பிறகு அச்சிற்பி பயணப்படும் போது தெய்வீகம் தாங்கிய கல்லில் முருகன் அருளால் பெருவிரல் இன்றி அருமையானதொரு சிலை வடிக்க, அதை முத்தரசன் எனும் மன்னன் பிரதிஷ்டை செய்ததே, இன்றைக்கு இருக்கக் கூடிய எட்டுக்குடி கோவில் ஆகும். அதற்கு பிறகு, அச்சிற்பி தன் கண்களையும் இழந்து என்கண் எனும் இடத்தில் மற்றுமொரு முருகக் கடவுளை ஆக்கினான் என்பது ஆன்மிக உலகம் அறிந்த வரலாற்று மெய்.

கந்த புராணத்தில் கண்ட வண்ணம், இங்குள்ள திருமுருகன் சூரபதுமனை அழிப்பதற்கு முன்பாகத் தேவேந்திரனாகிய மயில் மீது ஏறி அமர்ந்துள்ள மூர்த்தமாக உள்ளான். அம்பறாத் தூணியிலிருந்து அம்பை எடுக்கும் நிலையில் உள்ள வீரசௌந்தர்யம் உடையவனாக வீற்றிருக்கும் வேலாயுதக் கடவுள் இங்கு மூலவர். பார்க்கும் கண்களைக் கொண்டு காட்சி தருபவர் எட்டுக்குடி முருகன். பெருமானை குழந்தையாக பார்த்தால் குழந்தையாகவும், முதுமையாக பார்த்தால் முதியவராக, இளமையாக பார்த்தால் இளையவராகவும் காட்சி தரும் சிறப்புடையவர். எல்லாத் தலங்களிலும் தென்புறம் மயிலின் தலைப்பகுதி இருக்கும். இங்கு மட்டும் குமரக் கடவுள் வாகனம் மயிலின் தலை வலது புறமாகத் தலைப்பகுதி தோன்ற நிற்கிறது. தேவேந்திரனாகிய மயில் ஊர்ந்து, சூரசம்காரத்துக்கு முன்னே முருகன் கோலம் கொண்டமையே இதற்குக் காரணம் என்றும் மெய்யன்பர்கள் தெரிவிக்கின்றனர்.

சரி, சித்திரைப் பெருவிழாவிற்கு வருவோம். பிரம்மோற்சவம் தான் முதன்மை உற்சவம். அதில், முதல் நிகழ்வாக பிடாரிக்கு காப்பு கட்டி ஏழு நாள் வீதி உலா, பின் ஐயனாருக்கு ஆராதனை. பின்னர் பத்து நாள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடக்க வேண்டும் என்று வேண்டி முதல் பூஜை ஊருக்கு சுற்றுப்புறத்தில் ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கக் கூடிய, கொக்கரித்த விநாயகப் பெருமானுக்கு நடத்தப்படுகிறது. இதற்கு நிறைபணி உற்சவம் என்று பெயர். அடுத்த நாள் காவல் தெய்வமான இடும்பன் கடம்பனுக்கு அபிஷேகங்கள் நடக்க, விழா அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. அடுத்த நாள் வாஸ்து சாந்தி, கிராமசாந்தி (பைரவர்), மிருத்சங் கிரகானம் (பூமி பூஜை), அன்குரார்பனம், ரட்சாபந்தனம் மயூராயகம் பூஜைகள் நடைபெற்று, பின் முருகரின் வாகனத்திற்கு பூஜையோடு முடிவடைகிறது பூர்வாங்க பூஜைகள்.

அடுத்தது துவங்கும் முக்கிய நிகழ்வு கொடியேற்றம். அன்று முதல் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. யாக கால பூஜை தினமும் நடக்க, ஒவ்வொரு நாளும் சுவாமி புறப்பாடு காண மக்கள் கூட்டம் பக்திப் பரவசத்தோடு கூடுகிறது. முதல் நாள் இரவு இந்திர விமானத்தில் வீதி உலா. இரண்டாம் நாள் காலை புஷ்ப பல்லக்கில் வீதியுலா. மாலை கைலாச வாகனத்தில் வீதி உலா. மூன்றாம் நாள் காலை மஞ்சத்தில் வீதியுலா வர, இரவு வெள்ளி மயில் வாகனத்தில் எட்டுகுடி முருகன் எழுந்தருளுகிறான். சித்திரை பௌர்ணமியின் நான்காம் நாள் நிகழ்வில் மஞ்சத்தில் வீதியுலா வரும் முருகக் கடவுள், இரவு வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதியுலா வர, அடுத்த நாள் தான் இன்னும் சிறப்பு. ஐந்தாம் நாள் காலை மஞ்சத்தில் எழுந்தருள, மாலை துலா லக்கணத்தில் மூலவர் போலவே இருக்கின்ற பெருமான் வசந்த மண்டபத்தில், வசந்த நடனம் ஆடிக்கொண்டே காட்சி தருகிறார். அன்றிரவே இடும்பன் வாகனத்தில் எட்டுக்குடியில் வீதி உலா வருகிறான் குமரன்.

அடுத்த நாளும் மஞ்சத்தில் காலையும், யானை வாகனத்தில் இரவிலும் வீதிக்கு பெருமான் வர, ஏழாம் நாள் புஷ்ப விமானத்தில் காலையிலும், மாலை ஓலைச் சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருவது பக்த கோடிகளை ஆன்மிக அலையில் தவழச் செய்கிறது. மறு நாள் காலை மஞ்சத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் வீதி உலா வர, ஒன்பதாம் நாள் காலை ஆறுமுக வேலன் தேருக்கு எழுந்தருளுகிறான். இரவு தேருக்கு விடை கொடுத்த குமரனுக்கு பிராயச்சித்த அபிஷேகம் நடக்கிறது. சித்திரை பௌர்ணமி விழாவின் சிறப்பு நாளான அன்று மதியம் வெள்ளி மயில் வாகனத்தில் காட்சி தரும் குமரனுக்கு, காவடி அபிஷேகம் துவங்கும். கிட்டத்தட்ட இருநாள், நாற்பத்து எட்டு மணி நேரம் நடை மூடாமல் பக்தர்களின் மெய் அன்பில் குமரன் குளிர்ந்து விடுவான் என்கிறார் கோவில் அர்ச்சகர் பஞ்சாட்சரம்.

அந்த இரு நாட்களில் அர்ச்சனைகள் எழுந்தருளும் விக்ரகத்துக்கும் பூஜை, அபிஷேகங்கள், தீபாராதனைகள் மூலவருக்கும் நடைபெறும்.  நாற்பதாயிரம் காவடிக்கு குறையாமல் வருடா வருடம் இந்நிகழ்வு சிறப்போடு நடைபெற்று வருகிறது. பால் காவடி என்றாலே எட்டுக்குடி எனுமளவிற்கு பெயர் பெற்றது இத்தலம். அதிகம் பால் காவடிகளும், சந்தன, பன்னீர் காவடிகள் குறைவாகவும் வரும். குமரன் மீது இருநாள் செய்த அபிஷேகத்தின் விளைவாக 200 கிலோ வரை வெண்ணெய் இயற்கையாக கிடைக்கிறது. காவடி, அலகுக் காவடி, பால் காவடி, பன்னிர் காவடி, புஷ்ப காவடி, விபூதிக் காவடி, பஞ்சாமிர்தக் காவடி, சந்தனக் காவடி என அதிகபட்சம் எண்பது கி.மீ.க்கும் மேலான தூரத்தில் இருந்து காவடிகள் வந்திருக்கின்றன. இரதக் காவடி எனப்படக் கூடிய மேள தாளத்துடன் வரும் ஊர் மக்களும் இங்கு வருகிறார்கள்.      

அடுத்தது பிள்ளையை தத்துக் கொடுத்தலும், அந்தப் பிள்ளைக்கு திருமணம் ஆகும்போது தென்னம் பிள்ளை கொடுத்து, பிள்ளையை திரும்பப் பெறுதல் சிறப்பாக இத்திருக்கோவிலில் நிகழ்கிறது.  மேலும், எடைக்கு நிகரான பழங்கள், பொருள்கள், நாணயங்கள் தருவது போன்றவையும் எட்டுக்குடியில் சிறப்பானது.

சித்தரை பௌர்ணமி முடிந்த பிறகு, கோவில் யாகசாலை பூர்த்தி, துவாஜா அவரோஹனம், மகா அபிஷேகம், சர்வ ப்ராயசித்தா அபிஷேகம், இறுதி நாள் விடையாற்றி உற்சவம் என எட்டுக்குடி முருகனின் திருவிழா நிறைவடைகிறது.

விழாவெல்லாம் மக்களால் படைக்கப்பட்டதே, மகேசனுக்கு அதுவெல்லாம் கிடையாதே, அவனருளாலே இயங்கும் பொருளனைத்தும் மன நிறைவு அடைந்தால் ஒவ்வொரு ஒவ்வொரு நாளும் திருவிழாவே. ஆடல், பாடல், அபிஷேக அலங்காரம் என தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு காட்சி தருகிறான் எட்டுக்குடி வேலவன்.

-த.க.தமிழ் பாரதன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close