Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏ.ஆர். ரஹ்மானின் ஆதர்ஷ வழிப்பாட்டு ஸ்தலம்!

 ''ஆற்றுப் படுகையிலே ஆன்மிக 
ஊற்றுப் படு ஞான ஏற்றமுடன் 
தேற்றி வருவார்க்குத் தெம்பளித்தே 
போற்ற வாழும் தவராஜ அலிவலியே..''
 
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை கோரை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஷேக் தாவூத் காமில் ஒலிவுல்லாஹ் தர்காவை வியந்து பாடப்படும் வரிகள் இவை.  
 
நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கலைநயம் மிக்க தர்கா இது. மதங்களை கடந்து மனங்கள் சங்கமிக்கும் வழிப்பாட்டு ஸ்தலம். உலக அளவில் புகழ்மிக்கது. ஆண்டுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு வருகை புரிந்து பிரார்த்தனை செய்கிறார்கள். 600 ஆண்டுகளை கடந்த இந்த எழில்மிகு தர்கா மதச்சார்பின்மைக்கு உதாரணமாய் திகழ்கிறது.
 
கருப்பையா கோனார் என்ற விவசாயி தனது வயலில் உழவு ஓட்டிக் கொண்டு இருந்தபோது,  ஏர் கொழுமுனை கீறி, ஓரிடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. அன்று நள்ளிரவு அவரது கனவில் அராபிய தோற்றமுடைய பெரியவர் ஒருவர் தோன்றி, ''நீ உழுத இடத்தில் வெகு காலத்திற்கு முன்பு அடக்கமாகி இருக்கிறேன். என் பெயர் ஷேக் தாவூத் காமில.'' என அவர் தெரிவித்ததாகவும், இங்கு தர்கா எழுப்புவதற்காக கருப்பையா கோனார் தனது நிலத்தை இப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்களிடம் கொடுத்தாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி, கீற்றுக்கொட்டகையால் தர்கா எழுப்பட்டது. ஷேக் தாவூத் காமில், இஸ்லாம் மார்க்கத்தை பரப்புவதற்காகவும், வணிகம் செய்வதற்காகவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  அரேபியாவில் இருந்து இங்கு வந்து வாழ்ந்த இறைநேசர். அவர் இங்கு பெரும் மகானாக வாழ்ந்திருக்கிறார் என்கிறார்கள் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.  
 
இந்த தர்கா நீண்டகாலம் கீற்றுக்கொட்டகையாகவே இருந்திருக்கிறது. தஞ்சையை ஆண்ட அச்சுத்தப்ப நாயக்கர், யானையில் அமர்ந்து கோரையாற்றின் கரையோரம் வந்தபோது, யானை மதம் பிடித்து ஓடும் போது கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக மன்னர் உயிர் தப்பினார். யானையால் எழுந்திருக்க முடியவில்லை. யானையை எழுப்ப பல முயற்சிகள் செய்தும் பலனில்லை. அப்போது, இப்பகுதியைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், தர்காவில் இருந்து சந்தனம் கொண்டு வந்து யானையின் நெற்றியில் பூசியதும் யானை எழுந்து நின்றது. நெகிழ்ந்துப் போன மன்னர், தர்காவில் பிரமாண்டமான எழில்மிகு கட்டடத்தை உருவாக்கினார் என்கிறது இதன் வரலாறு. 
 
ஆண்டுதோறும் இஸ்லாமிய அரபி மாதத்தில் இங்கு நடைபெறும் பெரிய கந்தூரி விழா வெகு விமர்சையானது. லட்சக்கணக்கான மக்கள் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள். முதல்நாள்  பூ பல்லக்கு ஊர்வலம் மற்றும் புனித கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 9-ம் நாள் நள்ளிரவு வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் 
மிகவும் கோலாகலமாக சந்தனக்கூடு ஊர்வலம்  நடைப்பெறும். அப்பொழுது கோரையாற்றங்கரை வண்ண விளக்குகளால் ஒளி வெள்ளத்தில் மிளிரும். கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ஷேக் தாவூத்  காமில் ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும்.
 
இவ்விழாவிற்கு தேவையான, பல லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ள சந்தனத்தை இந்துக்கள் வழங்குவது மரபு. அனைத்து தரப்பு மக்களும் இதில் கலந்து கொண்டு பூச்சொரிவார்கள். 14-ம் நாள் கொடியிறக்கத்துடன் கந்தூரிவிழா நிறைவுபெறும். விஷ்வ கர்மா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தர்காவில் சிறப்பு வழிபாடு செய்து வழங்கும் கொடி இது. கந்தூரி விழா தொடங்கியதிலிருந்து நிறைவுபெறும் வரை நாள்தோறும் இந்துக்கள், ஷேக் தாவூத் காமில் ஆண்டவரை பிரார்த்தனைசெய்து அரிசி வழங்குகிறார்கள். இதனை கொண்டுதான் நிறைவுநாள் அன்று புலவு விருந்து நடைபெறுகிறது. 
 
இப்படியாக பல வகைகளிலும் மதநல்லிணக்கம் தழைத்தோங்கும் வழிப்பாட்டு ஸ்தலமாக முத்துப்பேட்டை தர்கா திகழ்கிறது.
 
இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானின் ஆதர்ஷ வழிப்பாட்டு ஸ்தலம் இது. இவர் இசையமைத்த முதல் திரைப்படமான ரோஜா படத்தின் பாடல் கேசட்டுகளை இங்கு வைத்து பிரார்த்தனை செய்ததோடு, இங்கு அமர்ந்து அவரே நேரடியாக விற்பனை செய்தார். அன்று முதல் இன்று வரை,  தான் இசை அமைக்கும் திரைப்படத்தின் பாடல் கேசட்டுகளை இங்கு வைத்து பிரார்த்தனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆண்டுக்கு 5, 6  முறை இங்கு வந்து வழிபாடு செய்வதுடன், நூற்றுக்கணக்கான ஏழை எளியவர்களுக்கு விருந்தளிக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். 
 
 - கு. ராமகிருஷ்ணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close