Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சமஸ்கிருத சேவைக்கு பத்மபூஷண்!


வ்வொரு துறையிலும் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டு, இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு சமஸ்கிருதத்தில் சிறந்த சேவை ஆற்றியதற்கான பத்மபூஷண் விருது நாவல்பாக்கம் ராமானுஜ தாதாசார்யாருக்கு வழங்கி கௌரவித்து உள்ளது மத்திய அரசு.

இன்றைய திருவண்ணாமலை மாவட்டம்,  நாவல்பாக்கம் என்ற கிராமத்தில் 1928-ம் ஆண்டு,  கிருஷ்ணஸ்வாமி தாதாசார்யார்-ராஜலக்ஷ்மி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். வேதங்களைப் பாராயணம் செய்வதிலும், சாஸ்திரங்களைக் கற்பதிலும் ஆர்வம் உள்ளவர்கள் நிறைந்த நாவல்பாக்கத்தில் பிறந்த ராமானுஜ தாதாசார்யாருக்கும், சிறு வயதில் இருந்தே வேத சாஸ்திரங்களைப் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.

சிறு வயதில் தன் தந்தையிடம் வேத சாஸ்திரங்களைப் படித்தவர், பின்னர் தேவநாத தாதாசார்யாரிடம் படித்தார். திருப்பதி சமஸ்கிருத பாடசாலையில்,  பல்கலை நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஶ்ரீ பெரும்புதூரில் இருந்த சமஸ்கிருத கல்லூரியில் சேர்ந்து, நியாய, தர்க்க, மீமாம்ஸ, வேதாந்த சாஸ்திரங்களில் பயிற்சி பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதுகூட, விடுமுறைநாட்களில் நாவல்பாக்கம் சென்று, தேவநாத தாதாசார்யாரிடம் பாடங்களுக்கு சம்பந்தமில்லாத நூல்களையும் கற்பதில் ஆர்வம் காட்டினார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சிரோண்மணி பட்டம் பெற்றார்.

அதற்குப் பிறகு சென்னை ஓரியண்டல் நூலகத்தில் சேர்ந்து சமஸ்கிருத நூல்களை பதிப்பிக்கும் பணியிலும், தொடர்ந்து பூனா டெக்கான் கல்லூரியில் சமஸ்கிருத அகராதி தயாரிக்கும் பணியிலும் சிறப்பாகப் பணியாற்றினார். பின்னர் திருப்பதி கேந்திரிய வித்யா பீடத்தில் விரிவுரையாளராகவும், வித்யாபீடம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டபோது துணைவேந்தராகவும் பணியாற்றி உள்ளார்.

இவர் சென்னை ஓரியண்டல் நூலகத்தில் பணி செய்து கொண்டிருந்தபோது, அங்கே வருகை புரிந்த காஞ்சி மஹாஸ்வாமிகள், இவருடைய பணியைப் பற்றி அறிந்து, பரிபூரண ஆசி அருளினார்.

பணியின்போதும்கூட கிடைக்கும் நேரத்தில் எல்லாம் சாஸ்திரங்கள் சம்பந்தமான பல நூல்களை எழுதுவதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். விமர்சன நூல்கள், சாஸ்திர தத்துவங்களுக்கு விளக்க நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் என்று இவர் எழுதி இருக்கும் நூல்கள் ஏராளம். குறிப்பாக 17-ம் நூற்றாண்டில்,  வங்காளத்தைச் சேர்ந்த கதாதர் என்பவர் சாஸ்திரங்களுக்கு எழுதிய விளக்கவுரை மிகவும் கடினமாக இருந்ததால், கதாதரி என்ற அந்த நூலுக்கு எளிமையான முறையில் வியாக்கியானம் செய்திருக்கிறார்.

சமஸ்கிருத மொழிக்கு இவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி, 1986-ம் ஆண்டு சமஸ்கிருத மொழி பணிகளுக்காக ஜனாதிபதி விருது பெற்றார். எத்தனையோ விருதுகளும் பட்டங்களும் இவருக்கு கிடைத்தாலும், அதனால் சற்றும் பெருமை கொள்ளாமல் தன்னடக்கத்துடன் சாஸ்திரங்களை படிப்பதிலும், அது தொடர்பான நூல்களை எழுதுவதிலும் மட்டுமே தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

இவருடைய சமஸ்கிருத ஞானத்தை கௌரவிக்கும் வகையில்,  பிரெஞ்சு அரசாங்கம் இவருக்கு செவாலியர் விருது தந்து பாராட்டியது. தற்போது இந்திய அரசு, இந்த ஆண்டுக்கான பத்மவிபூஷண் விருது வழங்கி கௌரவித்து உள்ளது.

இன்று 88 வயதாகிவிட்டபோதிலும்,  இந்த விருதுகளை எல்லாம் கடந்து இன்றைக்கும் தம்மை எழுத்துப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் ராமானுஜ தாதாசார்யார். கடினமான வேத சாஸ்திரங்களை எளிமைப்படுத்தி தருவதிலேயே தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் அவருடைய சீரிய பணிகள் தொடரட்டும்.

-எஸ்.கண்ணன்கோபாலன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ